தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை

 தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை

அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த விழா ஒன்றில் காஞ்சி சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அப்போது சர்ச்சையானது. தற்போது திமுக தலைமையில் ஆட்சி நடக்கிறது. இந்த நேரத்தில் தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது மாற்றுத்திறனாளிகளைத் தவிர மற்றவர்கள் அனை வரும் எழுந்துநிற்க வேண்டும் என அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்தின் பின்னணி என்ன பார்க்கலாம்.

பா.ஜ.க.வின் தேசியச் செயலர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா தொகுத்த தமிழ் – சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமி அரங்கத்தில் கடந்த ஆண்டுகளுக்கு முன்னாள் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பா.ஜ.க.வின் தேசியச் செயலர் எச். ராஜா, காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது மேடையில் உள்ள அனைவரும் எழுந்து நின்றபோது விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை. ஆனால், நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப் பட்டபோது அவர் எழுந்து நின்றார். இந்தக் காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியானதை அடுத்து இது பெரும் விவகாரமாக வெடித்துள்ளது..

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் தியானத்தில் இருந்த தால் எழுந்து நிற்கவில்லையென்று சங்கரமடத்தின் சார்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மரபல்ல என்று அவர்கள் கூறியதாகவும் சில ஊடகங்கள் தெரிவித்தன.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழறிஞர் பெ.சுந்தரனார் 1891ல் வெளியான தமது ‘மனோன்மணீயம்’ என்ற நாடக நூலுக்கு எழுதிய தமிழ் வாழ்த்துப் பா.

1970ம் ஆண்டு ஜூன் மாதம், கருணாநிதி முதல்வராக இருந்தபோது இது தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

அப்படி ஏற்கும்போது சம்ஸ்கிருதம் போல அழியாத தமிழின் சிறப்பாக சுந்தரனார் குறிப்பிடும் சில வரிகளை நீக்கிவிட்டே அது அதிகாரப்பூர்வ வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல், கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்…” என்பதே அந்த நீக்கப்பட்ட வரிகள்.

தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ் வளர்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநரும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான மா.ராசேந்திரனிடம் கேட்டோம்.

“1970ல் கலைவாணர் அரங்கில் நடந்த ஒரு விழாவில் கலைஞர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பற்றி முதலில் அறிவித்தார். தற்போது கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக ‘நீராரும் கடலுடுத்த’ தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை வைத்ததாகச் சொல்கிறார்கள். சர்சைக்குரிய வரிகளான ‘ஆரியம்போல் உலக வழக் கொழிந்து சிதையா உன்’ என்கிற வரி வடமொழியை ஒப்பிட்டு குறைத்துச் சொல்வதான வரி. தமிழின் மேன்மையைச் சொல்கிறபோது இன்னொரு அழிந்துபோன மொழியைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதில்லையே என்று நாங்கள் சொன்னோம். ஒரு வாழ்த்தில் ஒழிக, அழிக என்பதெல்லாம் இருக்கவேண்டாம் என்று நினைத்தார். அதனால் அப்போது கலைஞர் ரொம்பப் பெருந்தன்மையாக அந்த வரியை நீக்கிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அமைத்தார்.

மனோன்மணியம் சுந்தரனார் இந்தப் பாடலை ‘தமிழ் தெய்வ வணக்கம்’ என்று சொல்லியிருக்கிறார். இதற்கு கி.வ.ஜகந்நாதன் அப்போது ஆனந்த விகடனில் எழுதினார். “மனோன் மணியம் சுந்தரனாரால் ‘தமிழ் தெய்வ வணக்கம்’ என்று பாடியதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். தமிழ் தெய்வமில்லை. அது ஒரு குட்டி தேவைதான்” என்று எழுதினார்.

அதற்கு கலைஞர் மறுத்து எதுவும் சொல்லவில்லை. இந்தப் பாடல் அப்படியே இன்னொரு நிலைக்கு மாற்றப்பட்டது. அதுதான் ரொம்ப முக்கியம். கலைஞர் சொன்னார், “தமிழைத் தெய்வமாக நினைத்து நாங்கள் வணங்க வில்லை. தாயாக நினைத்த வணங்கிறோம்.’’ அப்போதுதான்  கடவுள் வாழ்த்து என்பது தமிழ்த்தாய் வாழ்த்தாக மாறுகிறது. அப்போது இதேபோல மற்ற சில பாடல்களும் தமிழ்த்தாய் வாழ்த்தாக, தமிழ்த் தெய்வ வணக்க மாகப் பாடுவதற்கு உரியதாக வரலாற்றுபூர்வமாக காட்டப்பட்டிருக்கிறது.

உதாரணமாக, திருக்குறளில் கடவுள் வாழ்த்துப் பாடலை காலையில் நிகழ்ச்சி களில் இறைவணக்கத்துக்குப் பதிலாகப் பாடலாம் என்று சிலர் கருத்துச் சொன்னார்கள். இன்னும் சிலர் தாயுமானவர் பாடல்களிலிருந்து ஒரு பாடலை எடுத்துப் பாடலாம் என்று பாடல் வரிகளையெல்லாம் எடுத்துக் காட்டினார் கள். அது புலவர் குழுக்களுக்கு எல்லாம் போனது.

அப்போது என்ன சிக்கல் நேர்ந்தது என்றால், அரசு நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சி களில் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பார்கள். அதில் போய் நீங்கள் எந்த வகை கடவுள் வணக்கம் பாடினாலும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர் களுக்கு ஒரு சங்கடம் வரும். அந்த வகையில் திருக்குறளைக்கூட முழுமை யாகப் பாடமுடியாமல் போகும்.  அதனால் திருக்குறளை இறைவணக்கம் என்று அரசு நிகழ்ச்சியில் பாடமுடியாத சில இடர்ப்பாடுகள் இருந்தது. திருக் குறள் எல்லா மதத்துக்கும் பொதுவாக இருந்தபோதும் அதில் ‘இறைவனடிச் சேராதார்’, ‘தாளை வணங்கா தலை’ என்று உருவ வழிபாட்டைப் பற்றி அதில் செய்திகள் இருக்கின்றன. உருவ வழிபாடு இல்லாத மதத்தைச் சேர்ந்தவர் களைச் சங்கடப்படுத்தும். அப்படி இல்லாத ஒன்றாக இருக்கவேண்டும் என்ப தாக சர்ச்சைகள் நடந்தது. அப்புறம்தான் இறுதியாக, சுந்தரனார் எழுதிய ‘நீராருங் கடலுடுத்த’ பாடலில் வந்து நின்றார்கள். அதிலேயும் சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியை எடுத்துவிட்டுத்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக இந்தப் பாடலை உருவாக்கினார் கலைஞர்.

தமிழ்த் தெய்வப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றும்போது என்ன நடக்கிறது என்றால், மற்ற எல்லா மதத்தினருக்கும் தமிழ் தாயா என்ற கேள்வி வரும். தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களும் இந்த நிகழ்ச்சிகளில் எழுந்து நிற்கவேண்டும், கொண்டாடவேண்டும். அப்போது தமிழ் எனக்குத் தாய் இல்லை. எனக்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மற்ற மொழிகள்தான் தாய்மொழியாக இருக்கிறது, நான் தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படிச் சொல்ல முடியும் என்று ஒரு கேள்வி வரும் அல்லவா?

அதற்கு ஒரு விளக்கம், தமிழ்மொழி என்பது உங்களுக்குத் தாய்மொழி இல்லை என்பதால் இப்போது நீங்கள் வாழ்த்தவில்லை, வணங்கவில்லை. வேறு எதற்கு வணங்கவேண்டும் என்றால், தாய் என்பவள் வளர்ப்பவள். வயிற்றிலிருந்து பிறந்து வளர்ந்த பிறகும் உயிர் உள்ளவரை உங்களை வளர்த்துக்கொண்டிருப்பவள் தாய். அப்படி ஒரு மனிதனை வளர்க்கிற பொறுப்பு தாய்க்கு மட்டுமல்ல, சமூகத்துக்கும் உள்ளதுதானே. அப்போது அந்தத் தாயைப்போல சமூகம் உங்களை வளர்ப்பதற்கு மொழி பயன்படுகிறது. அப்படி உங்களை வாழ்நாள் முழுவதும் வளர்த்துக்கொண்டிருப்பது தாயைப் போல தமிழ் மொழியும் வளர்க்கிறது. அப்போது நீங்கள் எங்கே இருக் கிறீர்களோ  அந்தச் சுற்றுச்சூழலில் என்ன மொழி இருக்கிறதோ அந்த மொழி தான் உங்களை வளர்க்கிற மொழியாக இருக்கிறது, உங்களை வாழவைக்கிற மொழியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருக்கிற எந்த மொழிக்காரர்களுக்கும் அவர்களை வாழ வைக்கிற மொழியாக, அவர்களை வளர்க்கிற மொழியாகத் தமிழ் மொழி இருக்கிறது. ஆகவே அது தாய்மொழி. அதனால் இங்கே அது தமிழ் வாழ்த்து என்றில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து என்றுதான் இருக்கிறது. அப்படி உங்களை வளர்க்கிற தமிழாகிய தாய்க்கு ஒரு வாழ்த்து, ஒரு வணக்கம் செலுத்துகிற ஒன்றாக இது இருக்கிறது. அந்த வகையில் இது பொறுத்தமான ஒன்று.

எங்கே மறுபடியும் சிக்கல் வருகிறதென்றால், ஒரு மொழியைத் தீண்டத்தகாத மொழியாகப் பல காலத்தில் சொல்லிக்கொண்டே வந்தார்கள். தமிழ் நீச பாஷை. எங்கள் மொழி தேவ பாஷை என்று.

தமிழ் மொழி தீண்டத்தகாத மொழி என்று, மேடையில் அந்த மொழியில் பாடினால் மேடைகளைக் கழிவிவிட்டார்கள். இது கடந்த காலத்தில் நடந்தது. அந்த மொழியை ஆலயங்களுக்குள் கொண்டுசெல்லக்கூடாது, அங்கு போய் பாடக்கூடாது என்று சொன்னார்கள். அப்போது தமிழ் மொழியின்மீது ஒரு தீண்டாமை இருக்கிறதல்லவா. மொழியின் தீண்டாமை என்பது மொழியின் சுயமரியாதையோடு தொடர்புடையது. அந்த மொழிக்கு ஒரு தீண்டாமையைச் சொன்ன, அனுஷ்டித்த, கடைப்பிடித்த சிலர் அந்த மொழியைப் பேசுகிற வர்களிடம் தீண்டாமையைக் காட்டினார்கள். அப்படிப்பட்ட அந்த மொழியில் கடவுள் வாழ்த்து பாடும்போது அந்த மொழித் தீண்டாமை மனம் உங்களிடம் இருக்கிறது. அதனால் அதற்குரிய மரியாதையை, மதிப்பை, வாழ்த்தை சொல்வதில் உங்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. அதனால் அவர்கள் தியானத்துக்குள் போனதாகச் சொல்லலாம்.

இந்த நேரத்தில் அரசுக்கு என்ன வேண்டியிருக்கிறது என்றால் உங்களை வாழ வைக்கிற மொழி, உங்களை வளர்க்கிற மொழிக்கு ஒரு வாழ்த்தைப் பாடச் சொல்வதில் அவர்களுக்கு ஒரு தயக்கம் இருக்குமானால் அதை நிறைவேற்ற அரசாணை போட்டு கட்டாயமாக்குவதற்கான எண்ணம் வருவது அப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இயல்பான ஒன்றுதான். அப்படித்தான் தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது மாற்றுத்திறனாளிகளைத் தவிர்த்து அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் கள். அதில் ஒன்றும் தவறு இருப்பதாகவோ, மற்றவர்கள் மனம் புண்படும் படியாகவோ இல்லை. ஆகவே இதைக் கொண்டாடக்கூடியதாகத் தமிழ்நாட்டு முதலமைச்சர் செய்திருக்கிறார்.

ஒரு மொழியின் பெருமை என்பது அந்த மொழியில் உள்ள சிந்தனைகள். உங்களை ஒரு மொழி வளர்க்கிறதென்றால் ஒரு சிறந்த மானுடனாக, உலகத்தை நேசிக்கிற மனிதராக மாற்றுகிற பணியில் உங்கள் மொழி உங்களுக்குப் பயன்பட்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். இரண்டாவது இருக்கிற நல்லிணக்கத்தைக் கெடுப்பதாக இல்லாமல் எல்லாரையும் சேர்த்து அரவணைத்துக்கொண்டு வாழ்க்கிற வாழ்க்கை உங்களுக்குக் கற்றுத் தந்திருக் கிறதா? அப்படிப் பார்த்தால் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தமிழில் சான்று இருக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாரும் கேளிர். இருட்டறையில் உள்ளதடா சாதி என்கிறார் பாரதிதாசன். சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் சொல்கிறார். இதை வலி யுறுத்திக்கொண்டு வந்திருக்கிற ஒரு சிந்தனை மரபு இருக்கிறதே அந்தச் சிந்தனை மரபைத்தான் நாம் கொண்டாடுகிறோம். அது தமிழில் இருக்கிறதென்பதனால் அது எனக்குத் தாய்மொழியாய் இருக்கிறதென்கிறதால் கூடுதல் பெருமிதமும் பெருமையும் மகிழ்ச்சியும் இருக்கிறது. இந்தப் பெரு மிதத்தோடு நாம் எழுந்து நிற்கவேண்டும்” என்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...