எம்.எல்.எம். வியாபாரம் ஏமாற்றா? ஒரு வாசகரின் மனம் திறந்த மடல்!

 எம்.எல்.எம். வியாபாரம்  ஏமாற்றா?  ஒரு வாசகரின்  மனம் திறந்த மடல்!

கார், பங்களா, வெளிநாட்டுப் பயணக் கனவுகளை விதைக்கும் எம்.எல்.எம். வியாபாரம் பற்றி ஒரு வாசகரின் பார்வையில்…

கடந்த மாதம் ஒரு அன்பர் எம்.எல்.எம்மின் (Multi level marketing) மையக் கருத்தைப் புரிந்துகொண்டு அந்தத் தொழிலில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை விளக்கினார்.

என் பெயர் முருகன். நான் சென்னைவாசிதான். ஒரு தனியார் துறையில் நல்ல நிலையில் வேலை செய்துகொண்டிருந்தேன். மாதமானால் நல்ல சம்பளம், வீடு, மனைவி, மக்கள், கல்வி, சுற்றுலா, சொந்தம், பந்தம், கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தேன். ஒருமுறை தற்செயலாக நான் பணியாற்றிய அலுவலகத்தில் வேலையிலிருந்து விலகிய முருகேசன் என்பவரைக் கண்டேன்.

அவர் தற்போது ஒரு பிஸினஸ் செய்துகொண்டிருப்பதாகவும் அதில் அவருக்கு நல்ல வருமானம் கிடைப்பதாகவும், 8 மணி நேரம் வேலைக்குப் போகாமலேயே சில பொருட்கள் விற்பதன் மூலம் அவருக்கு நிறைய கமிஷன் கிடைத்து மாதத்துக்கு ரூ. 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை கிடைப்பதாகவும் தெரிவித்தார். அதோடு அந்த பிஸினஸில் என்னையும் சேரும்படிக் கூறினார்.

அன்று மாலையே ஒரு ஹாலில் மீட்டிங் இருப்பதாகவும் அதில் ஒரு முறை கலந்துகொள்ளச் சொன்னார். நானும் போய்ப் பார்த்தேன். மீட்டிங் முடிந்ததும் ஒரு பார்மைக் காட்டி அதில் கையெழுத்து போடச் சொன்னார். நானும் கையெழுத்துதானே என்று போட்டேன். பிறகு இந்த பிஸினஸில் சேரும் போது 2000 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும். ஆனால் அதற்கு பதில் 4000 ரூபாய்க்கான பொருட்களை உங்கக்கிட்ட கம்பெனி கொடுத்துடுவாங்க. முதலில் இதை நீங்க பயன்படுத்திப் பார்த்துட்டு அடுத்தமுறை நீங்க வாங்கி மற்றவங்களுக்கு வித்தீங்கன்னா உங்களுக்கு 14 பெர்சன்ட் கமிஷன் கிடைக்கும். இதே மாதிரி தொடர்ந்து வித்துக்கொடுத்தீங்கன்னா மாதத்துக்கு 10 லிருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். நீங்க வேலைக்குப் போகணும்ற அவசியமில்லை. அப்படியே நீங்க நாலு பேரை இந்த பிஸினஸ்ல சேர்த்துவிட்டா அவங்க விக்கிற பொருட்களின் கமிஷனும் உங்களுக்கு வந்துக்கிட்டே இருக்கும். அப்புறம் காரு, பங்களா எல்லாம் வாங்கி செட்டிலாகிடலாம்னு ரொம்ப நம்பிக்கையா சொன்னார்.

நான் நடுத்தரத்து குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கும் காரு, பங்களா, பிள்ளைகளோட உயர்ந்த பள்ளிப்படிப்பு, செக்யூர் இன்கம் வேணும்னு வாழ்க்கையை ரிச்சா கழிக்கணும்னு ஆசை வந்துச்சு. அதனால் ஒரு முடிவோட நான் அன்றையிலயிருந்து வேலைக்குப் போயிட்டு பகுதி நேரத்தை அந்தப் பொருட்களை விற்க ஆரம்பித்தேன். இது விஷயம் கம்பெனி நிர்வாகத்திற்கு தெரியவந்து என்னிடம் அது பற்றிக் கேட்டார்கள். இங்கு வேலை பார்க்கும் யாரிடமும் வேலை நேரத்தில் பொருட்களை விற்கக் கூடாது என்று சொன்னார்கள். அந்த நிறுவனத்தில் எனக்கு இருந்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இதை எனக்கு ஏற்பட்ட அவமானமாக நினைத்து நான் அந்த வேலையைவிட்டு வெளியேறி இந்த பிஸினஸிலேயே முழு கவனம் செலுத்தினேன்.

முழு நேரமா நான் அந்த பிஸினஸை எடுத்து செய்தபோதுதான் தெரிந்தது. அதன் கட்டமைப்பே தவறானது என்று. நல்ல வேலையிலிருந்து நல்ல சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி மகிழ்ச்சியாய் வாழ்ந்த எனக்குத் தவறான வழி காட்டப்பட்டதால் நான் இப்போது குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத தர்மசங்கடத்தில் தத்தளிக்கிறேன். இதேபோல் மற்றயாரும் போய் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு அவஸ்தைப்படக்கூடாது என்பதால்தான் இங்கு இதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த பிஸினஸ்தான் MLM எனப்படும் Malti Level Marketing. இது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்த வியாபாரம். குறிப்பாக அமெரிக்கா, சைனா போன்ற நாடுகளிலிருந்து வளரும் நாடான இந்தியாவுக்குள் தன் கடையைப் பரப்பியிருக்கின்றன. இந்தியாவில் குறிப்பாக ஹெல்த்தை பேஸ் பண்ணி சில புராடக்ட்களை அறிமுகப்படுத்தி இதைச் சாப்பிட்டால் இந்த இந்த நோய்கள் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும் எனச் சொல்லி விற்கமுடியும். இந்த பொருட்களை விற்பதற்கு கம்பெனி மீடியாக்களில் விளம்பரங்கள் கொடுப்ப தில்லை. ஏஜென்ட்களை வைத்து மார்க்கெட் செய்வதில்லை. அதற்குப் பதில் தனித்தனி நபர்களை அழைத்து கமிஷனை அதிகப்படியாகத் தந்து அவர்கள் பொருட்களை விற்கவைத்து விடுகிறார்கள். அவர்கள் பொருட்கள் பெரும் பாலும் ஹெல்த்தை மையமாக வைத்து தயாரிக்கப்படுவதால் இந்த எம்.எல்.எம். வியாபாரத்தில் மருத்துவத்துறை சார்ந்தவர்கள்தான் மேல்நிலைக்கு வரமுடியும். அதேபோல் ஹைலெவல் சொஸைட்டியில் இருப்பவர்கள் மேல்நிலைக்கு வரமுடியும்.

ஒரு நபர் இந்த எம்.எல்.எம். பிஸினஸில் சேர்ந்து முதலில் தான் பல ஆயிரங்களுக்கு பொருட்களை வாங்கிப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு அவருக்குத் தெரிந்த நண்பர்கள், நபர்களிடம் விற்கவேண்டும். அதில் சிலரைத் தேர்ந்தெடுத்து இந்த பிஸினஸில் சேர்த்துவிட்டு அவரை இயக்கி அவருக்கு கீழே பல (Downline) பேரைச் சேர்த்துவிட முதலில் இந்த வியாபாரத்தில் சேர்ந்தவருக்கு இவருக்குக் கீழே உள்ள டவுன்லைன் நபர்கள் வாங்கும் பொருட்களின் கமிஷன் இவர் கணக்கில் சேர்ந்துகொண்டே போகும். (இது கம்பெனி சொல்லும் கணக்கு. ஆனால் இதில் உறுப்பினரான ஒவ்வொருவரும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு (1000லிருந்து 3000 வரை) பொருட்களை வாங்கியாக வேண்டும். அப்போதான் கமிஷன் கிடைக்கும்.)

இதற்கு ஆசைப்பட்டு பலர் தன் நண்பர்கள், தெரிந்த நபர்களை எப்படியாவது பேசிப் பழகி இந்த வியாபாரத்தில் சேர்த்துவிடுகிறார்கள். இந்த வியாபாரத்தில் சேர்ந்த பலருக்கு இந்தக் கம்பெனிகள் செய்யும் மோசடிகளைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. அதற்குள்ளாகவே தன் கையிருப்புகளை காலி செய்துவிட்டு வேலையையும் இழந்துவிட்டு என்னைப் போலவே தவிப்பதைப் பார்க்க எனக்குப் பாவமாக இருக்கும்.

எம்.எல்.எம். கம்பெனிகள் அவர்கள் விற்கும் பொருளை மிக உயர்ந்த சக்தி வாய்ந்ததாகவும் அது அமேசான் காடு போன்ற அதி உயர்ந்த காடுகளி லிருந்தும், சக்தி வாய்ந்த மூலிகைகளைத் தாங்களே பயிரிட்டு, பதப்படுத்தியிருப்பதாகவும் சொல்லி பத்து ரூபாய் மதிக்கத்தக்க விலையுள்ள பொருளை நூறு ரூபாய் என விலையை உயர்த்தி நூறு ரூபாயில் 60 ரூபாயை கம்பெனி எடுத்துக்கொண்டு மீதி 40 ரூபாயை கமிஷனாகவே தருகிறது.

கம்பெனி, நாங்கள் விளம்பரம் செய்வதில்லை. அந்தச் செலவை கமிஷனாகத் தருகிறோம் என்கிறார்கள். ஆனால் முப்பதினாயிரம் ரூபாய் புராடக்டை விற்ற நேரடி ஒரு நபருக்கு பத்தாயிரம் ரூபாயும் அவரின் மேல் உள்ள வருக்கு ஒரு கமிஷனும் டவுன்லைனுக்கு ஒரு கமிஷனும் தரப்படுகிறது. அப்படியென்றால் அந்தப் பொருளின் உண்மையான விலை எவ்வளவு?

கார். பங்களா கனவில் ரொம்ப பேர் இந்த எம்.எல்.எம். வியாபாரத்தில் சேர்ந்த ஒரு ஆளைக்கூட சேர்க்கமுடியாமல் தான் வாங்கி இழந்த சில ஆயிரம் ரூபாய் பணத்தோடு வெளியேறியவர்கள் உண்டு. ஆனால் இந்த வியாபாரத் தில் தானும் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்துவிட்டு தனக்குக் கீழும் நிறைய நபர்களைச் சேர்த்துவிட்டு புலி வாலைப் பிடித்த கதையாக மாட்டிக்கொண்டு விழிப்பவர்களை என்னால் பார்க்கமுடிந்தது.

இந்த வியாபாரத்தில் சேர்ந்துவிட்டால் பொதுநல விஷயங்களில் நாட்டம் போய்விடும். உறவினர், சொந்தம் பந்தம் அக்கறை இருக்காது. எந்நேரமும் யாரையாவது இந்த பிஸினஸில் மாட்டிவிடுவதிலேயே காலம் கழிந்துவிடும். இந்த வியாபாரத்தால் நஷ்டமடைந்து சோகத்தில் மரணமடைந்தவர்களும் உண்டு. வாழ்க்கையை இழந்தவர்களும் உண்டு.

இந்திய அரசுக்கு இந்தக் கம்பெனிகள் மூலம் நல்ல வரி கிடைக்கிறது. அதனால் யார் எக்கேடு கெட்டால் என்ன? எந்தக் கம்பெனி யாரை ஏமாற்றி னால் என்ன என்று கண்டும் காணாமல் இருக்கிறது.

வெளிநாட்டு எம்.எல்.எம். கம்பெனிகள் கொள்ளை லாபம் அடைவதைக் கண்ட லோக்கல் கம்பெனிகளும் இப்போது இதேபோல் திட்டங்களை போட்டு பணத்தாசை காட்டி மக்களை மூளைச்சலவை செய்யத் தயாராகிவிட்டன.

மக்களே, கார், பங்களா கனவால் இருந்த வேலையை விட்டுவிட்டு, நல்ல வாழ்க்கையை இழந்துவிட்டு நீங்களும் தவிக்கவேண்டாம் என்பதற்காக இந்த என் மனவேதனையை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். நன்றி.

-ஜி.ஆனந்த முருகன், சென்னை

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...