பத்துமலை பந்தம் | 35 | காலச்சக்கரம் நரசிம்மா
35. இக்கரைக்கு அக்கரை பச்சை
குகன் மணி எஸ்டேட் போர்டிகோவில் கேப் வந்து நிற்க, கனிஷ்காவுடன் இறங்கினாள், மயூரி ! சைனா டவுன் மலைச் சாலையில் இருந்து, பத்து எஸ்டேட் Batu Estate, என்று தமிழிலும், ஆங்கிலத்திலும், மலாய் மொழியிலும், சீன மொழியிலும் வடிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையைத் தாங்கி நின்ற அந்த நுழை வளையத்தினுள் நுழைந்து பாதையில் வண்டி இறங்க தொடங்கியதுமே, கனிஷ்காவின் புருவங்கள் உயர்ந்தன.
“பியூட்டிபுல்..! எவ்வளவு அழகா இருக்கு..!” —என்று வழியெங்கிலும், செயற்கை அருவிகள், குளங்கள், அவற்றில் நீந்திக் கொண்டிருக்கும் நீர்ப்பறவைகள், மயில்கள் தோகைகளை விரித்து கொண்டு சிலிர்த்துக் கொள்வது, முயல்கள் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு ஓடுவது, மான்கள் மருட்சியுடன் திரும்பி இவர்களது காரைப் பார்ப்பது என்று பிரமிப்பின் உச்சக்கட்டத்தில் மிதந்தபடி, இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தாள்.
“இதெல்லாம் உன்னோட லவ்வருடையதா..?” —கனிஷ்காவையும் அறியாமல் அவள் வாயில் கேள்வி பிறந்து விட்டது.
“ஆமாம்..! எல்லாம் குகன்மணியுடையது தான். இதுக்கே இவ்வளவு வாய் பிளக்கறியே..! உள்ளே வந்து அந்த மாளிகையைப் பாரு..! பளிங்குக் கல்லால் இழைச்சிருக்காரு.!” —மயூரி சொல்ல, கனிஷ்காவின் உள்ளத்தில் பொறாமை துளிர்விட்டது.
“சஷ்டி விரதம், கிருத்திகை விரதம்ன்னு இருக்கிற இந்த பத்தாம்பசலி காரைக்கால் அம்மையாருக்கு இப்படி ஒரு வாழ்வா..?”
அவளையும் அறியாமல் தங்களது போட் கிளப் வீடு நினைவுக்கு வந்தது. இதைக் காணும்போது அது ஒன்றுமே இல்லை. போட் க்ளப் வீடு கிடக்கட்டும். அவர்கள் மூதாதையர் சொத்தான பள்ளங்கி பவனம் கூட இவ்வளவு விஸ்தாரமாக எஸ்டேட் நடுவில் இல்லையே..!
ஆங்காங்கே பழ மரங்கள் அடர்ந்திருக்க, விதம் விதமான செடிகளும் மலர்கள் பூத்துக் குலுங்க காணப்பட்டன. அந்த குகன்மணி நல்ல ரசிகன் தான் போலும். குகன்மணியைக் காண வேண்டும் என்கிற ஆவல் பிறந்தது.
வளைந்து நெளிந்து சென்ற பாதையின் இறுதியில் ஒரு மரப்பாலம் தென்பட, அதைக் கடந்ததும், கனிஷ்காவின் கண்களில் பட்டது, அந்த விசாலமான போர்டிகோவிற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பத்து மலை முருகனின் சிலைதான்.
“How stupid..! இவ்வளவு ரொமான்டிக்கா ஒரு தோட்டத்தையும், மாளிகையையும் அமைச்சுட்டு, முகப்புல முருகன் சிலையா வைப்பாங்க..? கிரேக்கக் கடவுளான ஈராஸ் சிலையை வடிச்சிருக்கலாம் இல்லே..! ஈராஸ் காதல், மையல், காமம் மற்றும் சல்லாபத்தின் கடவுள் இல்லையா..! ஈராஸ் இல்லேனா, அட்லீஸ்ட் ரதி மன்மதன் சிலையையாவது வச்சிருக்கலாம். உன்னோட லவ்வர்க்குக் கொஞ்சம்கூட ரசனை இல்லை.” —கனிஷ்கா கேலி செய்தாள்.
“என்னைப் போலவே அவருக்கும் முருகன் பக்தி அதிகம்..!” —மயூரி சொல்ல.. கனிஷ்கா சிரித்து விட்டாள்.
“ரெண்டு பேரும் அலகு குத்திக்கொண்டு காவடி எடுங்க..! அலகு குத்திக்கிட்டா எப்படி கிஸ் பண்ணுவீங்க..?” —என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தாள். கனிஷ்காவின் கேலியை அலட்சியம் செய்தாள் மயூரி.
கனிஷ்கா அந்த மாளிகையின் பிரம்மாண்டத்தைப் பார்த்து உண்மையில் மலைத்துத்தான் போனாள். இவ்வளவு பிரம்மாண்ட மாளிகையை எழுப்ப எவ்வளவு நாட்கள் பிடித்திருக்க வேண்டும்..? வட இந்தியாவின் அரண்மனை போல பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு இருந்தது அந்த மாளிகை.
“மயூரி..! நிஜமாவே இந்த மேன்ஷன் உன் காதலருடையதா… இல்லை இதுல ஒரு போர்ஷன்ல குடி இருக்காரா..?” —கனிஷ்கா கேட்டாள்.
“காதலர்ன்னு இன்னும் நிச்சயம் ஆகலை. நாங்க இதுவரைக்கும் அந்த மாதிரி பேசிக்கிட்டது கிடையாது. ஆனா, என்கிட்டே அக்கறை காட்டறாரு! அவ்வளவுதான்..!” — மயூரி கூற, கனிஷ்கா அவளைக் கேலியுடன் பார்த்தாள்.
“அப்படின்னா நான் அவருக்கு அப்ளிகேஷன் போடலாம்ன்னு சொல்ற..!” —என்றபடி மயூரியைப் பின்தொடர்ந்தாள் கனிஷ்கா.
ஒரு கணம், கனிஷ்காவின் பேச்சால் அதிர்ந்து போனாள் மயூரி. கனிஷ்காவை எச்சரிக்கை செய்வது நல்லது..!
“லுக் கனிஷ்கா..! நீ அடைக்கலம் கேட்டதால் உன்னை இங்கே அழைச்சுக்கிட்டு வந்திருக்கேன். நானே இங்க கெஸ்ட்தான். என்னோட கெஸ்ட் நீ..! அதை உணர்ந்து நடந்துக்க..! குகன்மணி மத்த ஆம்பளைங்க மாதிரி இல்லே..! ரம்பா, ஊர்வசி, மேனகா வந்தாக்கூட அசர மாட்டாரு..! உனக்கு அவரைப் பத்தித் தெரியாது..!”
“அப்படின்னு நினைக்காதே..! பாலிவூட் ஆர்ட்டிஸ்ட் உல்லாஸ் ஜெயின் தெரியும் இல்லே. மதராஸி நடிகைகளுக்குக் கவர்ச்சியே கிடையாதுன்னு சொன்னான். என்னைப் பார்த்ததும், டேட்–டுக்குக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். இந்த மிதுன்ரெட்டி என்ன பிகு செஞ்சான்..? இப்ப என்னோட மடியில விளையாடும் பூனைக்குட்டி. அவன்..! தேஜஸ் கிரிக்கெட் நண்பன், ஸஜீவ் அரோரா, என் வீட்டு வாசல்லயே தவம் கிடக்கிறான். உன்னோட குகன்மணியை ஜஸ்ட் லைக் தட் தட்டிடுவேன்..!” —என்றபடி நடந்தாள்.
“நான் உன்னை வெளியில போகக்கூடாதுன்னு சொல்லியும், ஏன் போனாய் மயூரி..? போய் ஏதாவது பிரச்னையை வாங்கிட்டு வந்திருப்பியே.?” —வெண்கல மணியாக ஒரு குரல் ஒலிக்க, கனிஷ்கா வியப்புடன் திரும்பி நோக்கினாள்.
அந்த எஸ்டேட் உள்ளே நுழைந்ததில் இருந்து கனிஷ்காவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்த விஷயங்கள் பல இருந்தன. உணர்ச்சிகளைப் பிறர் காணும் அளவுக்கு வெளிப்படுத்தாத, cut throat கனிஷ்கா என்றுதான் திரையுலகத்தில் அவளை அழைப்பார்கள். ஏன்… அவள் காதலன் மிதுன் ரெட்டியே அவளை அப்படிதான் அழைப்பான். தனது உணர்ச்சிகளையே மதிக்காதவள், மற்றவர்களின் உணர்வுகளுக்கு எப்படி மதிப்பு கொடுப்பாள்.?
ஆனால் அங்கே வந்து நின்ற குகன்மணியை கண்டதும், பிரமிப்பின் உச்சாணிக் கொம்பில் சிக்கியிருந்தாள் கனிஷ்கா..! பெண்களின் அழகுக்கு எலிசபெத் டெய்லர், மர்லின் மன்றோ, மதுபாலா, ஐஸ்வர்யா ராய் என்று உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் ஒரு ஆணின் கம்பீரத்துக்கு யாரை கூறுவது..? அனேகமாக இந்த குகன்மணியைதான் இனி கூறவேண்டும்.
உயரமாக ஒரு குன்றை போன்று நின்றிருந்தான். யானையின் துதிக்கைகளை போன்று உறுதியான புஜங்களுடன் கூடிய கைகளை அலட்சியமாக தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் திணித்திருந்தான். அவன் நின்ற விதமே மிடுக்குடன் காணப்பட்டது. கோதுமை நிறமும், தேஜஸ் மிக்க முகமும், செதுக்கியது போன்ற கூர்மையான நாசியும், அடக்கமான காதுகளும், முகவாய்யின் மையத்தில் குழியும், அதில் முளைத்திருந்த ரோமங்களும், தடித்த உதடுகளும், அவள் இதுவரை கண்டிராத கம்பீரம்.
மிதுன் ரெட்டியை இவள் காதலித்ததே அவனது ஸ்டைலுக்குத்தான். ஆனால் குகன்மணி நிற்கும் கம்பீரத்தை பார்த்ததும், மிதுன் ரெட்டியின் ஸ்டைல் வெறும் செயற்கைத்தனமாக தோன்றியது.
அழகு, கம்பீரம், செல்வாக்கு, சொத்து என்று இருக்கும் இந்த குகன்மணி போயும் போயும் மயூரிக்குக் கிடைப்பதா..? விடவே கூடாது..! இவ்வளவு நாட்களாக குகன்மணி இவளது கண்களில் படவில்லை. தெரிந்திருந்தால், இவன்தான் இவளது கனவுக் கண்ணனாகத் திகழ்ந்திருப்பான்.
“இது என் அக்கா கனிஷ்கா..! இவர்தான் இந்த எஸ்டேட் ஓனர் குகன்மணி..! விமானியா இருக்கார். இவரது விமானத்துல பலமுறை நான் சர்வீஸ் செஞ்சிருக்கேன்.” —மயூரி கூற, “நைஸ் மீட்டிங் யு..!” —என்றபடி தனது கையை நீட்டினாள், கனிஷ்கா.
தனது வலது கையை மட்டும் உயர்த்தி, அபயகரம் நீட்டுவதை போன்று ‘ஹாய்’ என்று சொல்லிவிட்டு, மயூரியைப் பார்த்தான்..!
‘நான்தான் சொன்னேன் இல்லே… அவர் அந்த மாதிரி ரகம் கிடையாது..!’ கண்களாலேயே கனிஷ்காவை எச்சரித்தாள், மயூரி.
“மயூரி..! உன் அக்காவா..? நீங்க ரெண்டு பேரும் பார்த்தா, அசப்புல ட்வின்ஸ் போலத் தெரியறீங்க..! குமுதினிகிட்டே சொல்லி, உன் ரூமுக்கு அடுத்த ரூமை இவங்களுக்குத் தயார் செய்யச் சொல்லு மயூரி..!”
மயூரி தலை அசைத்துவிட்டு, கனிஷ்காவுடன் நடக்க, திடீரென்று குகன்மணியின் குரல் அவர்களை தடுத்தது.
“மிஸ் கனிஷ்கா..! அந்த மாடிப்படிக்கு சைடுல பார்த்தீங்களா..! சலவைக் கல்லில் ஈராஸ் சிலை. கிரீஸ்ல வாங்கினேன்.! The Eros Farnese, a Pompeiian marble image. இந்த சிலையோட பெயர், Colossal Eros of Thespiae by Praxiteles! உங்களுக்குத் தெரியுமா ? Eros is the God of sexual desire, attraction, love and procreation” —குகன்மணி கூறினான். .
“போர்டிகோ முன்னாடி முருகன் சிலை வச்ச காரணம், முருகன்னா அழகுன்னு பொருள். அழகு அமைதியானதா இருக்கணும்..! கட்டுக்கடங்காத உணர்வுகளை உள்ளேயே அடக்கி வைக்கணும்ங்கிறதை உணர்த்த தான், ஈராஸ் சிலையை உள்ளே மறைவா மாடிப்படி பின்னாடி வச்சிருக்கு..!” —என்றபடி அவளை அலட்சியமாக நோக்கினான்.
“ஹோப் யு என்ஜாய் யுவர் ஸ்டே ஹியர்..! மயூரி..! அவங்க எப்பக் கிளம்பறாங்களோ சொல்லு, வண்டி தரேன். வண்டியிலே போய் இறங்கலாம்..!” —குகன் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
“நான் ஈராஸ் பற்றிச் சொன்னது, இவனுக்கு எப்படித் தெரியும்..?” –திகைப்புடன் கேட்டபடி மாடிப்படிகளில் அப்படியே நின்று விட்டாள் கனிஷ்கா.
மயூரிக்கும், முன்னர் பின்னர் அங்கே ஈராஸ் சிலை இருந்ததாக நினைவு இல்லை. ஒருவேளை, இவள் கவனிக்கத தவறி விட்டாளா..?”
“நான்தான் சொன்னேனே. குகன்மணி மர்மமான ஆசாமி..! இந்த எஸ்டேட்ல அவருக்குத் தெரியாம மூச்சுகூட விடமுடியாது..!” –மயூரி சொன்னாள்.
‘அதையும் பார்ப்போமே..! அந்த ஆளை என்னையே சுத்திச் சுத்தி வர வைக்கிறேன்..!’ – மனதிற்குள் சபதமிட்டாள், கனிஷ்கா.
“அப்ப என் கதி..?” —மிதுன்ரெட்டியின் பரிதாபமான குரல் அவளது காதில் ஒலித்தது.
‘அதோ கதி..!’ —என்றபடி தொடர்ந்து படிகளில் ஏறினாள் கனிஷ்கா.
‘இந்த எஸ்டேட், குகன் மணி எல்லாம் எனக்கே..! அங்கேயே தங்கி மூன்றாவது நவ பாஷாண சிலையுடனும், குகன்மணி என்கிற கனவுக் கண்ணனுடனும், காலமெல்லாம் இங்கேயே சுகித்து வாழ்ந்து, கடைசிச் சொட்டு வரை இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.’
புதிய தீர்மானத்துடன் அவள் மாடியை அடைந்தாள். குகன்மணியை அடைவதற்குத் தடையாக யார் இருந்தாலும் அவர்கள் நீக்கப்படுவார்கள். நீக்கப்படவேண்டியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறதோ…? மயூரி, அபி, மிதுன் ரெட்டி…. என்ன செய்யப் போகிறாள், கனிஷ்கா..?
2 Comments
விறுவிறுப்பான, வேகமான நகர்வு!
Great going