பயணங்கள் தொடர்வதில்லை | 3 | சாய்ரேணு
2. கண்ணாடி
ஆங்காங்கு கிழிந்து தைத்திருந்ததைப் போன்று ஜீன்ஸ். விலையுயர்ந்த டீ-ஷர்ட். முதுகில் திம்மென்று ஏறியிருந்த பேக்-பேக். கையில் அதக்கியிருந்த ஐஃபோன். ஒற்றைக் காதில் அணிந்திருந்த ப்ளூடூத். உச்ச டெஸிபலில் பேச்சு. கண்ணைவிட்டு அகலாத குளிர்கண்ணாடி. இளம்பெண்களை மட்டுமே கவனிக்கும் பார்வை.
வெளிநாட்டு இறக்குமதிக் காரில் சென்னை சென்ட்ரலுக்கு வந்து இறங்கிய அந்த மூன்று இளைஞர்களுக்கும் மேற்சொன்ன அடையாளங்கள் பொருந்தின. அவர்களில் நடுநாயகமாக வந்துகொண்டிருப்பவன் ப்ரிஜேஷ்.
ப்ரிஜேஷ்?
சங்கரின் மகன். அவனோடு வரும் இருவரும் – அஜய், ஸ்ரீகாந்த் – அவன் சித்தப்பா, மாமா பிள்ளைகள் என்பதைவிட, அவனுடைய கல்லூரித் தோழர்கள், அவனைப் போலவே செல்வத்தில் மிதப்பவர்கள். கல்வி கல்வியோடு சேருகிறதோ இல்லையோ, செல்வம் நிச்சயமாகச் செல்வத்தோடுதான் சேரும்.
ஒரு சாம்ராஜ்யத்தின் மன்னனாகப் போகிறவன் என்ற பொறுப்பு சிறிதும் ப்ரிஜேஷிடம் காணப்படவில்லை. அந்தச் சாம்ராஜ்யத்தின் இளவரசன் என்ற திமிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தன் சகோதரியின் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தான் செய்ய வேண்டும், குறைந்தபட்சம் அவற்றை மேற்பார்வையிட வேண்டும் என்றெல்லாம் அவன் நினைப்பதுபோல் தெரியவில்லை.
உண்மையில் அவன் அவனுடைய தாய்தந்தையரோடும் சகோதரியோடும்தான் பயணம் செய்திருக்க வேண்டும். சுதந்திரமாக, சந்தோஷமாகப் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த இரயில் பிரயாணத்தைத் தேர்ந்தெடுத்திருந்தான்.
அவர்கள் முன்னால் போய்க்கொண்டிருந்த குடும்பத்தில் இருந்த ஆச்சரிய பாவாடை-தாவணியை விமர்சித்துக் கொண்டே நடந்தவர்கள் பார்வையில் சுப்பாமணி பட்டுவிட்டார்.
“அங்கே பார், சுப்பாமணி!” என்று ஸ்ரீகாந்த் கூவினான். அதற்குள் சுப்பாமணியும் இவர்களைப் பார்த்துவிட்டு இரயிலிலிருந்து இறங்கி இவர்களை நோக்கி வரத் தொடங்கியிருந்தார்.
“ஹாய், சுப்பாமணி!” என்றான் ப்ரிஜேஷ் உற்சாகமாய். அவனுக்குச் சுப்பாமணி என்றால் பூனைக்குட்டி விசுவாசம். அவனுக்கு எது தேவையென்றாலும் ஒரு கால் செய்தால் போதும், சுப்பாமணி பொருளுடன் ஆஜராகிவிடுவார். (பணம் மட்டும் கொடுத்தால் போதும், சுப்பாமணியின் கணிசமான கமிஷனுடன் சேர்த்து.)
சுப்பாமணியின் முகமும் மலர்ந்திருந்தது. “வாங்க, வாங்க பசங்களா! உங்களுக்காக பெஸ்ட் கேபின் அரேஞ்ச் பண்ணியிருக்கேன்” என்றார்.
“காது குத்தாத, சுப்பாமணி! பெஸ்ட் கேபின் அந்த ராட்சஸிக்கில்ல அரேஞ்ச் பண்ணியிருப்ப?” என்று சிரித்தான் அஜய்.
ராட்சஸி யாரென்று உடனே புரிந்தது சுப்பாமணிக்கு. “சேச்சே, அவங்களுக்குக் கூப்பே அரேஞ்ச் பண்ணியிருக்கேன். நமக்கு நாலு பர்த் உள்ள கேபின். அகலமும் நீளமும்… நான் சொல்றதை நம்ப வேண்டாம், உள்ளே வந்து பாருங்க” என்றார்.
“அகலமும் நீளமும் யார் கேட்டா, சுப்பாமணி? கச்சிதமான கர்வ்ஸ்ல என்ன வெச்சிருக்க கேபின்ல?” என்று கண்களைச் சிமிட்டிக் கேட்டான் ஸ்ரீகாந்த்.
“அடப்பாவிகளா, உங்களைவிட வயசில் பெரியவன் நான். என்ன கேட்கறதுன்னு கிடையாது?”
“ஏன், உன்னால் கொண்டுவர முடியாதா? அப்படி ஒண்ணு இருக்கா என்ன?” என்று கேட்டான் ப்ரிஜேஷ்.
“இதோ பாருங்க, உங்க ஸிஸ்டர் கல்யாணத்துக்குப் போய்க்கிட்டிருக்கோம், புரிஞ்சுதா? கொஞ்சம் அடக்கி வாசிங்க. சமத்தா உள்ள வந்தீங்கன்னா, கச்சிதமான கர்வ்ஸ்ல ஒரு விஷயம் கேபின்ல வெசிருக்கேன். படுத்தினா அது கிடையாது” என்றார் சுப்பாமணி குழந்தைகளிடம் பேசுபவரைப் போல்.
“யே!” என்று கூச்சலிட்டு மூவரும் தடபுடலாக இரயிலில் ஏறினர். சுப்பாமணி காட்டிய கேபினில், ஜன்னல்களுக்கு நடுவே தெரிந்த மேஜையில்… அது. கச்சிதமான வளைவுகளுடன்… வழவழப்பான… அந்தப் பாட்டில்.
“யே!” என்று மறுபடியும் உற்சாகக் கூக்குரலிட்டார்கள் மூவரும்.
•
ப்ரிஜேஷ், அஜய், ஸ்ரீகாந்த் மூவரையும் கேபினில் அமர்த்திவிட்டு, இரயில் கிளம்பியதும் தான் வந்து பார்ப்பதாகக் கூறிவிட்டு, சுப்பாமணி மறுபடியும் இரயிலிலிருந்து கீழே இறங்கினார்.
இதே ப்ரிஜேஷ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன்னைச் சந்தித்ததை நினைத்துக் கொண்டார். எவ்வளவு நடுங்கிக் கொண்டு வந்தான்? எத்தனைப் பெரிய ஆபத்திலிருந்து அவனைக் காப்பாற்றினோம்? ஹும், என்ன பிரயோஜனம்? இன்னும் அவனுக்கு, அவன் குடும்பத்துக்கு நான் வேலைக்காரன்… க்ளோரிஃபைட் சர்வண்ட்! சுப்பாமணிக்கு உடலெல்லாம் எரிந்தது.
அப்போது கையில் ஒரு கனமான பெட்டி, தோளில் இன்னொரு கனமான பேக்குடன் தடுமாறி நடந்து அவர்கள் கம்பார்ட்மெண்ட்டுக்கு அருகில் வந்துகொண்டிருந்த வயதான ஒரு பெண்மணியின்மீது அவர் பார்வை விழுந்தது.
மூக்கில் நழுவிக்கொண்டிருந்த கண்ணாடியைச் சரிசெய்ய முடியாமல், பெட்டியையும் பையையும் சுமந்துகொண்டு அந்த ஸ்பெஷல் கோச்சை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் இராணி கந்தசாமி.
“வயது” என்று நினைத்துக் கொண்டாள். “எழுபதைக் கடந்துவிட்டேன். அது தன் அடையாளத்தைக் காட்டத்தான் செய்யும்.”
இந்த வயது இத்தனை நாளாகத் தன் வேலையைக் காட்டவில்லையே? யார் அவளைப் பார்த்தாலும் “மிஸஸ் இராணி கந்தசாமி, யூ டோண்ட் லுக் அ டே ஓல்டர் தான் ஃபார்ட்டி (நீங்கள் நாற்பது வயதுக்கு மேல் வயதானவராகத் தெரியவேயில்லை)” என்பார்களே! வாக்கிங் செல்கையில் அவளுக்கு ஈடு கொடுக்க நடுத்தர வயதினரே, ஏன், இளைஞர்களே திணறுவார்களே! எவ்வளவு பாரம் ஆனாலும் அநாயாசமாகத் தூக்குவாளே! ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவள் தனியாக வசிக்கிறாளென்று தெரிந்துகொண்டு அவள் வீட்டுக்குத் திருடவந்த மூன்று தடியன்களை அவள் ஒற்றை ஆளாகப் போலீஸில் பிடித்துக் கொடுத்தாளே!
மூன்று-நான்கு ஆண்டுகளாகத்தான் இந்த… அது என்ன வார்த்தை? தள்ளாமை… வந்துவிட்டதா?
இந்த எண்ணம் அவள் மனதில் வந்தபோது கண்ணில் சுப்பாமணி விழுந்தார்.
“இவன்தான்!” என்று எண்ணிக் கொண்டாள் இராணி கந்தசாமி. “இவன்தான் எனக்கு வந்த எல்லாக் கஷ்டத்துக்கும் காரணம்.”
தற்போது அமெரிக்காவில் இருக்கும் தன் மகளை எண்ணிப் பார்த்தாள் இராணி கந்தசாமி. அவளுக்காகத்தானே இதைச் செய்தேன்? அவளுக்கு எதிரான மிரட்டல்களைச் சமாளிக்கவும், அந்த ஆதாரங்களைத் திருப்பி வாங்கவும்தானே நான் அப்படிச் செய்ய வேண்டியதாயிற்று!
என்னதான் மகளுக்காகச் செய்திருந்தாலும், தன் மனத்தில் தான் செய்ததற்கு எந்தவிதமான குற்ற உணர்வும் ஏற்படாததை எண்ணி ஆச்சரியப்பட்டாள் இராணி. இந்தச் சுப்பாமணி! இவன் மட்டும்தான் எனக்கிருக்கும் ஒரே பயம்.
அதுதான் இந்தத் தள்ளாமைக்குக் காரணமா? என் ரகசியங்கள் தெரிந்த சுப்பாமணி என்ற ஒருவன் இருக்கிறான், இன்னும் உயிருடன் இருக்கிறான், அவன் வேறு ஒருவரிடம் இந்த ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்ற ஒரே எண்ணமா என்னை இப்படி ஆக்கிவிட்டது?
சுப்பாமணி அருகே வந்துவிட்டார். “வாங்க சித்தி” என்று சொல்லிப் பெட்டியையும் பையையும் வாங்கிக் கொண்டார். இரயிலில் ஏற உதவிசெய்து, கேபினுக்கு அழைத்துப் போனார்.
“இந்த லோயர் பர்த் உங்களுக்கு. சௌகரியமா இருக்கில்லையா?”
“இருக்கு” என்ற இராணி கந்தசாமி, சுப்பாமணியைப் பார்த்துப் புன்னகைத்தாள். “சௌக்கியமா சுப்பாமணி?”
“என்னக்கென்ன சித்தி? நல்லா இருக்கேன். சங்கர்-ஸ்ரீனி அஸோஸியேட்ஸ்ல ஈவண்ட் செகரட்டரின்னா சும்மாவா? கணிசமான சம்பளம் வருது. அதோட, எனக்கு வேண்டியவங்க என்னை நல்லா பார்த்துக்கறாங்க. தேவைன்னு சொல்லி வாயை மூடறதுக்குள்ள தேவையானது கிடைச்சுடுது…”
இராணி கந்தசாமி, சுப்பாமணியை உற்றுப் பார்த்தாள். “அப்படி எப்போதும் இன்னொருத்தர் கையை எதிர்பார்க்கறது நல்லதில்லையே, சுப்பாமணி?” என்றாள்.
“அவங்க எனக்கு உதவி செய்யலை சித்தி! செய்த உதவிக்குக் கைம்மாறு செய்யறாங்க, அவ்வளவுதான்” என்றார் சுப்பாமணி ரோஷமாக.
“கைம்மாறு எதிர்பார்த்து உதவி செய்யறதே தப்பு” என்றாள் இராணி.
“சேச்சே! நான் யாரையும் வற்புறுத்தறதே கிடையாது! என்னை நம்பி இத்தனைபேர் இருக்காங்க, தங்களுடைய அந்தரங்கங்களை என்னை நம்பி ஒப்படைச்சிருக்காங்க என்பது பெரிய விஷயம் இல்லையா? அவங்களுக்கு என்னாலான உதவிகளை நான் எப்போதும் செஞ்சுட்டிருக்கேன். அவங்க ரகசியங்களைக் காப்பாற்றிட்டும் இருக்கேன்… அதாவது… கம்பெனி ரகசியங்களைச் சொல்றேன்” என்றார் சுப்பாமணி.
இராணி ஒரு பெருமூச்சுவிட்டாள். “சந்தோஷம்” என்றாள்.
“அமெரிக்கால பாப்பா நல்லா இருக்காளா? என்னையெல்லாம் ஞாபகம் வெச்சிருக்காளா?” என்று கேட்டார் சுப்பாமணி.
“உன்னை மறக்க முடியுமா, சுப்பாமணி?” என்றாள் இராணி கடிபட்ட பற்களுக்கிடையே.
புரிந்துகொண்டவராக, சுப்பாமணி எழுந்துவிட்டார். முகத்தில் புன்னகை விளையாடியது. “எது வேணும்னாலும் என்னைக் கூப்பிடுங்க. நான் கடைசிக் கூப்பேல வரேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
வெகுநேரம் அயர்ந்து அமர்ந்துவிட்டாள் இராணி கந்தசாமி.
காலப்போக்கில் எல்லாம் மறந்துவிடும், எல்லாம் மாறிவிடும் என்று நினைத்தோம். எதுவும் மறக்கவில்லை, மாறவும் இல்லை. அது எனக்குத் தெரிந்தே இருக்கிறது, மெதுமெதுவாக என் சக்தியையும் உயிரையும் குடித்துக் கொண்டுவருகிறது.
தன் கேபினுக்குள் வேறு யாரோ வருவதைப் பார்த்ததும் இராணி கந்தசாமி கலைந்தாள். தன் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொள்ளப் படாதபாடுபட்டாள். தன் கண்ணாடியைக் கழற்றித் துடைத்து அணிந்து கொண்டாள்.
வந்தவர்கள் தங்கள் சாமான்களை எடுத்துவைத்து, பர்த்களில் அமர்வதற்குள் இராணி கந்தசாமி ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
இந்தச் சுப்பாமணி வாயை மூட வேண்டும்… நிரந்தரமாய்!
2 Comments
Interesting one
Fast one