அவ(ள்)தாரம் | 3 | தேவிபாலா
கொதி நிலையில் இருந்தார் பூதம்! வீட்டுக்குள் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்! அஞ்சு, அப்பா வந்த முதலே கவனித்து விட்டாள்! அவர் முகம் அக்கினிப் பிழம்பாக இருப்பதை பார்த்தாள்.
“ என்னப்பா, ஏதாவது பிரச்னையா?”
“இது ஆஃபீஸ் விவகாரம்மா! நீ உன் வேலையை பாரு!”
பண்ணை வீட்டுக்கு அவர் போன நேரம், அருள், ஒரு பெண்ணுடன் வேகமாக பைக்கில் செல்வதைப் பார்த்து விட்டார். ஏற்கனவே ஆட்கள் தகவல் தந்து விட்டதால், அவனை அடிச்சு தூக்குங்க என உத்தரவு தந்தும், அருள் அவளைத் தூக்கிக்கொண்டு போய் விட்டான்! உள்ளே வந்த பூதம், ஆட்களை சரமாரியாக அடித்து நொறுக்க, சேட்டு மிரள,
“ என்னாச்சு சாப்?”
விவரம் சேட்டுவுக்கு தெரிய, அவனுக்கொரு முதலாளி இருக்க, அவரிடம் மேகலாவை ஒப்படைக்கும் கடமை அவனுக்கு இருக்க, அவன் அவருக்கு ஃபோன் போட, அந்த ஆள் பூதத்தை பிடித்து வாங்க,
“ வாங்கின பணத்தை நான் திருப்பி தந்துர்றேன்! இந்த முறை தப்பு நடந்து போச்சு! இதை நான் சரிக்கட்டறேன்..!”
அந்த மும்பை பார்ட்டி தாறுமாறாக பூதத்தை விளாச, இது வரை யாரிடமும் பேச்சு கேட்காத பூதம், மனசு உடைந்து போய், தலை குனிந்து வீடு திரும்பினார்! மகன் அருள் மேல், கொலை வெறியில் இருந்தார் பூதம்! இதை மகளிடம் சொல்லவும் வழியில்லை! இரவு பத்தரைக்கு, அருள் பைக்கை நிறுத்தி விட்டு ஹாலுக்குள் நுழைய, பூதம் உட்கார்ந்திருந்தார் எரிமலையாக!
அவன் அவரைப் பொருட்படுத்தாமல் நடக்க,
“ நில்லுடா நாயே!”
அவன் கொஞ்சமும் சட்டை செய்யாமல் நடக்க, வேகமாக வந்த பூதம், அவன் சட்டையைப் பிடித்து இழுத்தார்!
“ என்ன வேணும் உங்களுக்கு?”
“ நான் எப்படி அவமானப்பட்டு வந்து நிக்கறேன் தெரியுமா? காரணம் நீதாண்டா! எனக்கு எதிரே நிக்கவே பயப்படுவாங்க! இன்னிக்கு கை நீட்டி ஒருத்தன், கேக்கக்கூடாத கேள்விகளை கேட்டுட்டான்! யாரால?”
“ செய்யற தொழில் கேவலமா இருந்தா, முச்சந்தில வச்சுக்கூட தலைல சாணியை கரைச்சுக்கொட்டுவாங்க!”
“ என்னடா சொன்ன?”
கையை ஓங்கி விட்டார்! உயர்த்திய கையை அந்தரத்தில் பளிச்சென பிடித்தான்!
“ கை ஓங்கற வேலையெல்லாம் வேண்டாம்! மகனா இருந்தாலும் மரியாதை முக்கியம்! தோளுக்கு மிஞ்சினா தோழன்னு ஞாபகம் வரணும்!
“ வீட்டை விட்டு வெளில போடா நாயே!”
“ஹலோ மிஸ்டர் பூதம்! அதை சொல்ற உரிமை உங்களுக்கு இல்லை! இது எங்கம்மா வீடு! இதுல எனக்கும் பங்கு உண்டு! மற்றபடி உங்க நிர்வாகத்துல நான் உள்ளே வரலை! உங்க வீட்டுச் சோத்தை நான் தின்னலை! இதே வீட்ல தனி அடுப்பு வச்சு, நான் தனியா சமைச்சுதான் சாப்பிடறேன்! நான் தனியா உழைச்சு சம்பாதிக்கறேன்!அதுல வாங்கின பைக் தான்! உங்க காரை நான் தொடலை! போடற துணிகள் கூட என் உழைப்புல வாங்கினது தான்! உங்க சொத்துக்கள்ள பத்து ரூபா எனக்கு வேண்டாம்! உங்க கறை படிஞ்ச பணம் எனக்கு தேவையில்லை!”
அவன் குரலைக்கேட்டு அஞ்சு வெளியே வந்து விட்டாள்!
“ எதுக்கு அப்பா கிட்ட சண்டை போடற? பணக்காரனா இருந்து சம்பாதிச்சா, அது கறை படிஞ்ச பணமா?”
“ எப்படீன்னு சொல்லட்டுமா நான்?”
“ அஞ்சு! நீ உள்ளே போ! இங்கே எதுவும் பேச வேண்டாம்! நீ உள்ளே வா அருள்!”
மகனை ஏறத்தாழ இழுத்துக்கொண்டு தன்னறைக்கு சென்று கதவை தாளிட்டார் பூதம்! அஞ்சு குழம்பி போய் வெளியே நின்றாள்!
“ மிஸ்டர் பூதம்! உங்க மகள் எதிரே பேசக் கூச்சமா இருக்கா? நீங்க செய்யற மாமா வேலையை அவளுக்கு நான் சொல்லிடுவேன்னு பயமா? உங்களை தேவ தூதனா நினைக்கற உங்க செல்ல மகள், உண்மை தெரிஞ்சா காறித்துப்புவானு நடுங்குதா ?”
“ போதும்! என்னைக் கொலைகாரன் ஆக்காதே!”
“ இனி மேல் தான் ஆகணுமா? ஒரு பெண் விரும்பி, விபச்சாரத்துக்கு வர்றானா அது வேற கதை! அறியா பெண்களை கடத்தி கொண்டு வந்து, தப்பான எடங்கள்ள விக்கறது என்ன நியாயம்? நீங்களும் ஒரு பெண்ணுக்கு அப்பா தானே? கூசலை?”
“ நிறுத்துடா! நியாய, அநியாயங்களை பார்த்திருந்தா என்னிக்கோ என்னைக் கொண்டு போய்ப் புதைச்சிருப்பாங்க! நான் கெட்டவன் தான்! அப்படித்தான் இருப்பேன்! என் கிட்ட மோதற யாரா இருந்தாலும் நான் விட்டு வைக்க மாட்டேன்! உனக்கும் இது பொருந்தும்!”
“ அப்படியா? நடத்துங்க! என் கண்ல படாம போற தப்புக்களுக்கு நான் ஜவாப்தாரியல்ல! எனக்கு தெரிஞ்சு ஒரு குற்றம் நடக்குதுன்னா நான் விட மாட்டேன்!”
“ கோயில்ல அந்தப்பொண்ணு பேசினப்ப, நீ் சிரிச்சே! அதனால பல பேர் என்னை எதிர்த்தாங்க! இப்ப இவளை மீட்டு எங்கிட்ட மோதியிருக்கே!”
“ ஆமாம்! நான் வீட்டுக்கு வந்த நேரம் உங்க கடத்தல் சங்கதி காதுல விழுந்தது!”
“ நிழலாடினப்ப நெனச்சேன், ஏதோ ஒரு விவகாரம்னு!”
“ நல்ல குடும்பத்துல வாழற, ஒரு சின்ன, படிக்கற மாணவியை கடத்தியிருக்கீங்க! நீங்கள்ளாம் மனுஷனா? இப்படி பணம் சம்பாதிக்கறதை விட பெரிய பாவம் எதுவும் இல்லை! எங்கம்மா செத்தது நல்லது தான்! என் தங்கச்சியும் ஒரு பொண்ணு தான்! மற்ற பெண்கள் வடிக்கற கண்ணீர், உங்க மகளைத்தான் தாக்கும்!”
“ சாபமாடா? நீ என்ன முனிவரா?”
“ இல்லை மனுஷன்! இதோட நிறுத்துங்க! எல்லாத்தையும் நிறுத்துங்க! ஏற்கனவே செஞ்ச பாவத்தைக் கழுவவே ஒரு ஜென்மம் போதாது! மேலும் பாவ மூட்டைகளைச் சேர்க்காதீங்க!”
“ போதும்! உன்னை நான் எச்சரிக்கறேன்! இன்னொரு முறை நீ என் வழில குறுக்கே வந்து, நான் நஷ்டமும், அவமானமும் பட்டா, நான் எந்த முடிவையும் எடுக்க தயங்க மாட்டேன்!”
“ அதாவது என்னைக் கொல்லுவீங்க! அப்படித்தானே?”
“ என் மகன்னு கூடப் பார்க்க மாட்டேன்! எனக்கு பிரச்னை வந்தா, என் வழில யார் குறுக்கே நின்னாலும் நான் விட்டு வைக்க மாட்டேன்! இது வரைக்கும் அழிஞ்சவங்க பட்டியல் அதிகம்! அதுல நீ சேர வேண்டாம்னு நான் நினைக்கறேன்!”
“ நான் யாருக்கும் பயப்படாதவன்! உங்களால முடிஞ்சதை நீங்க செய்யலாம்!நான் தள்ளி நிற்கத்தான் நெனச்சேன்! ஆனா பிரச்னைனு வந்த பிறகு நானும் மோதத்தயார்!”
சரக்கென அவரது அறையை விட்டு வெளியேறினான்! பூதம் இன்னும் அதிக சூடாகி, அனல் பறக்க நின்றார்! உடனே அவரது ஆஸ்தான அடியாள் பசவப்பாவை ஃ போனில் அழைத்தார்!
“ பசவப்பா! நான் சொல்ற ஒருத்தனுக்கு நாளைக்கு விடியக்கூடாது!”
“ ஃபோட்டோ அனுப்பி விலாசமும் குடுங்க சார்! முடிச்சிடலாம்!”
“ லொகேஷன் என் வீடு! என் பையன் தான்!”
“ சார்! பண்ணை வீட்டுத் தகவல் எனக்கும் வந்தது! அவசரப்படாதீங்க சார்!”
“ இதப்பாரு! ரத்த சென்டிமென்ட்டெல்லாம் எனக்கு இல்லை! அரசியல், பொது வாழ்க்கைல ஈடுபட்ட பலர், கூசாம இதை செஞ்சதுக்கு சரித்திர அத்தாட்சியே இருக்கு! நான் திப்பு சுல்தான் வழி வந்தவன்!”
“ சார்! இன்னிக்கு சின்ன சங்கதிகளை கூட சோஷல் மீடியா கூர்ந்து கவனிக்குது! நொடில எல்லாமே தடம் புரண்டு போயிடும்! ரெண்டு நாள் ஆறப்போட்டும் உங்க முடிவுல மாற்றமில்லைனா, நீங்க சொல்றதை நானே செய்யறேன்!”
அவர் தன் செல்ஃபோனை வீசி எறிந்தார்!
“ எங்கிட்ட சவால் விட்டு போறியா? உன்னை நான் விட மாட்டேண்டா!”
•
பாரதி வீட்டில் இரவு உறங்கவே பன்னிரெண்டு கடந்து விட்டது! எப்பேர்ப்பட்ட அபாயத்திலிருந்து தன் மகள் மீண்டு வந்திருக்கிறாள் என கௌசல்யா நினைத்து நினைத்து புலம்பினாள்! வாசுகியும் அந்த இரவு அங்கு தான் தங்கினாள்!
“ அம்மா! நீயும் அப்பாவும் எங்களை ரொம்ப கண்டிப்பா, அதே நேரம் பாசமா வளர்த்தீங்க! பெரிசா சுதந்திரம் கூடத் தரலை! இப்ப என்னாச்சு? எத்தனை பெரிய தப்பு நடக்க இருந்திருக்கு? பெண்களைப் பாதுகாக்கறது முக்கியம் தான்! ஆனா ரொம்ப மூடி மூடி வளர்க்கக் கூடாதும்மா!”
பாரதி சொல்லை வாசுகி ஏற்கவில்லை!
“ இல்லைடி! அந்தக் கண்டிப்புதான், நம்மைச் செதுக்கியிருக்கு!”
மேகலா உறங்கி விட்டாள்! காலை அம்மா தான் பதட்டமாக இவர்களை எழுப்பினாள்!
“ பாரதி! உன் பேரு பேப்பர்ல வந்திருக்கு! கோயில்ல நடந்த எதையும் எங்க கிட்ட நீ சொல்லவேயில்லையே?”
வாசுகி பேப்பரை வாங்கிப்பார்த்தாள்!
“ பெரிய தொழிலதிபர் மாத்ருபூதம், ஒரு சாதாரணப் பெண்ணிடம் கோயிலில் வைத்து மன்னிப்பு கேட்டார்! அவருக்கு நியாயத்தை எடுத்து சொல்லி, தெய்வ சன்னதியில் உரிமையை நிலை நாட்டிய வீராங்கனை பாரதி!”
நடந்த சம்பவம் பற்றி முழுமையாக கொஞ்சம் மிகைப்படுத்தியே எழுதி, பூதம், பாரதியின் புகைப்படமும் வெளியாகி, பாரதியை ஒரு கதாநாயகி அந்தஸ்த்துக்கு உயர்த்தி, பூதம் ஒரு பண்பான மனிதர் என அவரை புகழ்ந்து, வெளியாகியிருந்தது!
யூ ட்யூப் திறந்தால் இது வீடியோ படமாகி இருந்தது! சோஷல் மீடியாவில் இது வைரலாகி லைக்குகளை அள்ளிக்கொண்டிருந்தது! வீடியோ வெளியான சில நிமிஷங்களில் பல ஆயிரம் பார்வையாளர்களை பெற்று விட்டது!
“ ஏண்டீ எங்க கிட்ட எதையும் சொல்லலை?”
“ அம்மா! பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு இதை நான் செய்யலை! மீடியா காமிராக்களை ஆஃப் பண்ணத்தான் நான் சொன்னேன்! அவங்க அதையும் மீறி செஞ்சிருக்காங்க!”
“ இந்த மாத்ருபூதம் யாருன்னு உனக்கு தெரியுமாடீ பாரதி?”
“ தெரியும்! நம்ம அப்பாவுக்கு சம்பளம் தர்ற முதலாளி!”
“ ஏண்டீ, தெரிஞ்சுமா அவரை எதிர்த்தே?”
அம்மா குரலில் நடுக்கம்!
“ முதல்ல எதிர்க்கும் போது, வரப்போறது அப்பா முதலாளினு தெரியாது! தெரிஞ்சிருந்தாலும் நியாயத்தை சொல்லாம நான் விட மாட்டேன்! கடவுள் சன்னதில என்ன பாரபட்சம்? அது அப்பா முதலாளினா, உடனே நியாயப்படுத்த முடியுமா? அவரே அதை ஒப்புக்கிட்டு மன்னிப்பு தானே கேட்டார்?”
“ உங்கப்பா வந்து என்ன சொல்லுவாரோனு தெரியலை! அப்பா கிட்ட சொல்ல, நிறைய விஷயம் இருக்கு!”
வாசலில் கால் டாக்சி வந்து நின்றது! அப்பா சிதம்பரம் இறங்கினார்!
“ அப்பா வந்தாச்சு!”
ஓடிப்போய் அவரை கட்டிக்கொண்டு மேகலா அழ,
“ என்னம்மா? உன் பிறந்த நாளுக்கு நான் இல்லைனு வருத்தமா? உனக்கு நல்ல கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்!”
“ என்னங்க… இன்னிய பேப்பர் பார்த்தீங்களா?”
“ இல்லை கௌசல்யா! நான் பல் தேய்க்கணும்! காஃபி ரெடி பண்ணு முதல்ல! ராத்திரி தூங்கலை!”
அவர் காஃபி குடிக்கும் வரை பொறுமையாக இருந்த மேகலா, நேற்று தனக்கு நேர்ந்த விபரீதத்தை அழுது கொண்டே சொல்ல, அதிர்ந்து போனார் சிதம்பரம்!
“ அந்த பையன் கடவுள் மாதிரி வந்து காப்பாற்றியிருக்கான்! அவசரத்துல அவன் பேரைக்கூட கேக்கலை! அவன் இல்லைனா இவ கதி என்ன? பெண்களை கொண்டு போய் விக்கற கும்பல்! உருப்படுவாங்களா?”
சிதம்பரம் பாதி உயிர் போன நிலையில் இருந்தார்!
“ அப்பா! நீங்க அதிர்ச்சிலேருந்து மீண்டு வாங்க! மேகலாவைத்தான் மீட்டாச்சே! பாரதி பேரு பேப்பர்ல வந்திருக்கு!”
அதற்குள் பாரதிக்கு ஃபோன் மேல் ஃபோனாக வந்து வாழ்த்துக்களை குவிக்க, அப்பா பேப்பர் படிக்க,
“ அப்பா! இவர் உங்க முதலாளி தானே? அவரை எதிர்த்து நியாயம் கேட்டது உங்க மகள்னு அவருக்கு தெரியாதில்லை?”
வாசுகி கேட்க, அப்பா அதற்கும் பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்க,
“ என்னப்பா? பாரதி செஞ்சது உங்களுக்கு பெருமையா இல்லையா? நீங்க அவளை பையன்னு சொல்லி பெருமை படுவீங்களேப்பா?”
வாசுகி சொல்ல, அப்பா எதுவும் பேசாமல் எழுந்து போக,
“ என்னம்மா? முதலாளியை பாரதி எதிர்த்தது, அப்பாவுக்கு பிடிக்கலையா?”
“ அதில்லைடி! மேகலாவுக்கு நடந்தது அவரை பலமா தாக்கியிருக்கு! பெண்களோட மானத்துக்கு ஒரு பங்கம் வர்ற சூழ்நிலயை தாண்டி தன் மகள் தப்பி வந்திருக்கானா, எந்த அப்பாவால அதை தாங்கிக்க முடியும்?”
அப்பா உள்ளே போக, ஃபோன் வந்தது! பூதம்தான்!
“ ஆங்! இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன் சார்! நான் குளிச்சிட்டு உடனே புறப்பட்டு வர்றேன்! போன காரியம் நல்லபடியா முடிஞ்சது சார்!”
சிதம்பரம் குளித்து விட்டு சாப்பிடாமல் அவசரமாக புறப்பட்டார்! அவரிடம் ஒரு பதட்டம் இருந்தது! அதை வீடு முழுக்க கவனித்தாலும் பாரதிக்கு மட்டும் அது வினோதமாக பட்டது!
“ என் நியாயங்களை எப்போதும் பாராட்டும் அப்பாவுக்கு நான் முதலாளியை எதிர்த்து, அது மீடியாவில் வெளிச்சம் போட்டது பிடிக்கவில்லையா? ஏன்?”
3 Comments
Fast interesting one
Maybe the father is also involved in this business sir
மின்கைத்தடி இதழ் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை வெளிவருகிறது?
மின் கைத்தடி வார இதழோ மாத இதழோ அல்ல… அவ்வப்போது பதிவேற்றப்படும். சில தொடர் கதைகள் மற்றும் தொடர்கள் வாரம் தோறும் பதிவேற்றப்படுகிறன்றன…