அஷ்ட நாகன் – 12| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 12| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

நாகங்கள் குறித்து பல வகையான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. ஒருவரின் ஜாதகத்தில் ‘ராகு-கேது’ என்கிற இரண்டு கிரகங்களின் இருப்பை வைத்தே அவரின் வாழ்க்கை அமைப்பை கணித்து விடலாம்.திருமணமான ஒரு பெண்ணுக்கு விரைந்து குழந்தை பிறக்க நாக வழிபாடு துணைபுரிகிறது. திருமணமான பெண்கள் ‘அரச மரத்துடன் வேப்ப மரம்’ பின்னி பிணைந்திருக்கும் இடத்தை தினமும் 21 சுற்றுகள் வீதம் 48 நாட்கள் தொடர்ந்து சுற்றி வர மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டும்.அதுமட்டுமின்றி, அரசும் வேம்பும் பின்னி பிணைந்திருக்கும் இடத்தில் எப்போதும் மின்காந்த ஆற்றல் நிரம்பியிருக்கும்.நாக வழிபாடு புரிபவர்கள், அரசும் வேம்பும் அல்லது அரசும் நெல்லியும் பின்னி பிணைந்திருக்கும் இடத்திற்கு கீழ் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்தால் நாகர்களை உணரலாம்.இது முற்றிலும் உண்மை.நம்புங்கள்.

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

 

தன் மீது இச்சாதாரி நாகத்தின் வாசம் வீசுவதாக ஏலக்காய் சித்தர் கூறவும், முருகேசனின் முகத்தில் அச்சம் அப்பிக் கொண்டது.

‘சில தினங்களுக்கு முன்பு தான் ‘கோரக்கர் சித்தர்’ குகைக்கு அருகில் தான் ‘ஐந்து தலை’ நாகத்தை கண்டேன்.அந்த அச்சத்தில் இருந்தே தான் இன்னும் மீளவில்லை.இப்போது தன் மீது இச்சாதாரி நாகத்தின் வாசம் வீசுகிறதென்றால்…எப்படி?’ என்று அவன் தனக்குள் தாறுமாறாக கேள்விகள் கேட்டுக்கொண்டான்.

“எலேய் ! உன்னைத்தான் கேக்கேன்.நீ ஏதாவது பாம்பை புடிச்சியா? இல்ல ஏதாவது பாம்பை அடிச்சியா?” என்று ஏலக்காய் சித்தர் முருகேசனிடம் இயல்பாகவும், உரிமையோடும் கேள்வி எழுப்பினார்.

“சாமி,நான் எந்த பாம்பையும் புடிக்கவுமில்ல ! அடிக்கவுமில்ல ! ‘ஆகாய கங்கை’ அருவிக்கிட்ட ஒரு பட்டணத்து பொண்ணை தண்ணி பாம்பு கடிச்சிடிச்சு.அந்த பொண்ணை காப்பாத்தினேன் அம்புட்டு தான்.மத்தப்படி நான் எந்த இச்சாதாரி நாகத்தையும் பார்க்கலங்க” என்று உள்ளதை உள்ளபடி முருகேசன் கூறினான்.

“டேய் ! கோட்டிக்காரப் பையலே.நீ நினைக்காப்புல இச்சாதாரி நாகங்க ‘நாக’ ரூபத்துல மட்டும் இருக்க மாட்டாக.அவக ‘மனுஷ ரூபத்துல’ மனுஷ இனத்தோட இனமாக கலந்து வாழ்வாக.சில சமயம் நம்ம பக்கத்துலயே அரூபமாகவும் இருப்பாக.ஒருவேளை நீ பார்த்த அந்த பொண்ணு ஒரு இச்சாதாரியாக இருந்தாலும் இருக்கலாம்.”

ஏலக்காய் சித்தர் ‘யோகினி’ ஒரு இச்சாதாரி நாகமாக இருந்தாலும் இருக்கலாம் என்று ஒரு புதிய தகவலை கூறவும்,முருகேசனுக்கு உடம்பெல்லாம் வெலவெலத்து விட்டது.

“என்னலே பலத்த ரோசனையில இருக்க.அந்த பொண்ணுக்கூட வேற யாராவது இருந்தாகளா?”

“ஆமா சாமி.அந்த பொண்ணுக்கூட அரவிந்தன்னு ஒருத்தரும், நந்தன் அப்டின்னு ஒருத்தரும் இருந்தாங்க” என்று கூறிவிட்டு அரவிந்தன் கண்ட கனவு,நந்தன் கழுத்தில் ‘கரு நாகம்’ மாலை போல சுற்றிக் கொண்டது என ஒன்று விடாமல் தான் அறிந்த அத்தனை தகவல்களையும் கூறி இறுதியில் ‘நாக சாஸ்திர ஏடுகள்’ மூலம் அவர்கள் தாங்கள் கண்ட கனவிற்கு விடை காண விரும்புவதாக முருகேசன் ஒரு கோரிக்கையோடு தன் பேச்சை நிறுத்தினான்.

நாக சாஸ்திர ஏடுகள் பற்றி முருகேசன் பேசவும் நாக சாஸ்திர ஏடுகளை பாதுகாக்கும் ‘ராஜ நாகம்’ படம் எடுத்த நிலையில் சற்று தலையைத் தூக்கி ‘புஸ்…’ என்று பலமாக மூச்சு விட்டது.

அது, தன்னை மீறி யாரும் நாக சாஸ்திரத்தை தொட முடியாது என்று எச்சரிக்கை செய்வது போல இருந்தது.

” என்னவே சொல்லுத? நாக சாஸ்திர ஏட்டுக் கட்டையை அவ்வளவு சுலபமா நாம தொட முடியாது.அதுக்கு தகுந்த மந்திரத்தை உச்சாடனம் செஞ்சி,ராஜ நாகத்தோடு அனுமதியோடு தான் நாம அந்த ஏடுகளை தொட முடியும்.”

“சாமி,நீங்க அப்படி சொல்லுக்கூடாது.நான் உங்களை நம்பி வாக்கு கொடுத்துட்டேன்” என்று முருகேசன் ராகம் பாடினான்.

“எலேய் ! முருகேசா…ரொம்ப ராகம் பாடாத.நாளைக்கு காலையில அவக மூணு பேரையும் இங்கன கூட்டுக்கிட்டு வா ! பொறவு நடக்குறது எல்லாம் ‘நாக ராசா’ செயல் ! ‘அஷ்ட நாக லிங்கேஸவரா..’ எல்லாத்தையும் காப்பாத்தய்யா.”

“சாமி அப்போ நான் உத்தரவு வாங்கிக்குறேன்.”

“இப்ப எங்கன றெக்கை கட்டிக்கிட்டு பறக்குறவன்.செத்த இருலே ! கம்பஞ் சோறு ஆக்கி வச்சிருக்கேன்.ஒரு வா சாப்டுட்டு போ.என்னலெ சொல்லுதே?”

“உங்க பேச்சை நான் என்னைக்கு மீறி இருக்கேன்.உங்க கையால் கம்பஞ் சோறு சாப்டுட்டே கிளம்புறேன்.”

முருகேசனின் பேச்சைக் கேட்டு ஏலக்காய் சித்தர் ஒரு மழலையைப் போல புன்முறுவளிட்டார்.

முருகேசனும் அவரின் குடிசைக்கு சற்று அருகிலிருந்த ஒரு ‘மலை வழை’ மரத்தில் இரண்டு தலை இலைகளை பறித்து,கழுவி வைத்தான்.

ஏலக்காய் சித்தர் அவ்வப்போது, சில ஏலக்காய்களை தன் வாயில் வைத்து சுவைத்துக் கொண்டு இருந்தார்.

அவரின் குடிலில் ‘சாடு’ என்று கூறப்படும் பெரிய பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அதில்,கம்பு,சோளம்,மூங்கில் அரிசி,தினை,சாமை மற்றும் வரகு போன்ற தானியங்களை வைத்திருந்தார்.

தன் கையாலே மணக்க மணக்க சூடாக செய்த கம்பஞ் சோற்றை முருகேசனுக்கு ‘அளப்பை’ மூலம் பரிமாறினார்.

‘அளப்பை’ என்பது தேங்காய் ஓட்டில் துளையிட்டு, அதில் மூங்கில் குச்சியை பொருத்தி அதனை கரண்டியாக பயன்படுத்தும் பொருளாகும்.

அவரின் குடிசையில் சில மூங்கில் தட்டுகளும் காணப்பட்டன.

ஏலக்காய் சித்தர், ‘இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே இறைவனோடு வாழும் வாழ்க்கை’ என்ற கொள்கை பிடிப்பை கொண்டவர்.

இருவரும் மகிழ்ச்சியாக கம்பஞ் சோற்றை உண்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது,நாக சாஸ்திர ஏடுகளை பாதுகாக்கும் ராஜ நாகம் மூங்கில் பரணிலிருந்து மெல்ல இறங்கி வந்து முருகேசனை மட்டும் வட்டமாக ஒரு சுற்று சுற்றி விட்டு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தது.

முருகேசன் அச்சத்தின் உச்சத்திற்கு சென்று விட்டான்.

“சாமீ…..” என்று ஏலக்காய் சித்தரை அழைத்தான்.

ஏலக்காய் சித்தர் அந்த ராஜ நாகத்தை ஒரு புடலங்காயை தூக்குவது போல அலாக்காக அப்படியே தூக்கி அந்த மூங்கில் பரணில் விட்டார்.

“நாக ராசா ! அவனே ஏம்லே பயம்புடுத்துத? அவன் நம்ம பையதேன்” என்று ஒரு நண்பனிடம் பேசுது போல பேசினார்.

அதுவும் தற்காலிகமாக மெளனம் காத்த மாதிரி அமைதியாக காணப்பட்டது‌.

“சாமி, நான் கிளம்பட்டுங்களா?” என்று முருகேசன் கூறினான்.

“சரிலே‌…சூதனமாக பார்த்து போயிட்டு வா !” என்றார் ஏலக்காய் சித்தர்.

முருகேசன்,ஏலக்காய் சித்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

அவரும்,அவன் நெற்றியில் திருநீறு இட்டு விட்டு…அவனை ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்‌.

முருகேசனை அந்த ராஜ நாகம் வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தது.

‘கடைசியாக தான் அரவிந்தன்,நந்தன் மற்றும் யோகினி என்கிற மூவரை தானே சந்தித்தோம். ஒருவேளை அவர்களில் யாராவது இச்சாதாரி நாகங்களாக இருப்பார்களா?’ அவன் மனத்தில் எழுந்த கேள்வி,அவனை அப்படியே ஒரு நாகம் போல விழுங்க ஆரம்பித்தது‌.

– தொடரும்…

< பதிணொன்றாம் பாகம் | பதிமூன்றாம் பாகம் >

கமலகண்ணன்

8 Comments

  • Informative and interesting one sir

    • This novel is based on real incidents.Thank you

  • அருமை அய்யா வாழ்க வளத்துடன் மற்றும் நலத்துடன் மிக சிறப்பு

    • மிக்க நன்றி இனிய நண்பரே…மகிழ்ச்சி

  • மர்மங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அருமை.

    • மிக்க நன்றி நண்பரே

  • interesting!!!

    • Thank you very much.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...