பேய் ரெஸ்டாரெண்ட் – 17 | முகில் தினகரன்
சிறிது தூரம் சென்றதும் அந்த டூவீலர்க்காரன் மெல்லக் கேட்டான். “ஏன் சார் நான் வந்து பார்க்கும் போது ரெண்டு பேரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக்கிட்டிருந்தீங்க!…அப்புறம் திடீர்னு.. “அண்ணா…தம்பி”ன்னு பாசத்தோட பேசிக்கறீங்க!…அந்தாளு என்னடா…ன்னா அன்னியன் பட விக்ரம் மாதிரி மாறி மாறி ஆக்ட் பண்றாரு!….என்ன சார் விளையாட்டு இது?”
“அது…வந்து…நான் சொன்னா உங்களுக்குப் புரியாது!…ஏன்னா புரியற மாதிரி எனக்குச் சொல்லத் தெரியாது” என்று கோவிந்தன் சொல்ல,
வண்டியை நிறுத்தி, “கொஞ்சம் கீழே இறங்கறீங்களா?” என்றான் அந்த டூவீலர்க்காரன்.
“ஏம்பா?” கண்களைச் சுருக்கிக் கொண்டு கோவிந்தன் கேட்டான்.
“உங்களை இதுக்கு மேலே கூட்டிட்டுப் போக என்னால முடியாது…ஏன்னா…எனக்கு வண்டி ஓட்டத் தெரியாது” என்று கோவிந்தன் சொன்ன அதே பாணியில் சொல்லி விட்டு “விர்”ரென்று பறந்தான் அவன்.
போகும் அவனைத் திட்டியவாறே காலாற நடந்தான் கோவிந்தன்.
சரியாக இரண்டு கிலோமீட்டர் நடந்ததும் பாதையோரம் சிலர் நின்றிருக்க, “ஏங்க இங்க பஸ் நிக்குமா?” ஒருவனிடம் கேட்டான்.
அவன் எங்கோ பார்த்துக் கொண்டு, “ம்” என்று சொல்ல,
காத்திருந்தான்.
இரவு,
படுக்கையில் படுத்தபடி மேலே சுழலும் மின் விசிறியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கோவிந்தன்.
அவன் மனதில் குவியல் குவியலாய்க் குழப்பங்கள். “சுடலை உடம்புக்குள்ளார இருந்த சிவா…முதன் முதலில் என்னைப் பார்த்ததும்.. “அண்ணா”ன்னு சொல்லிக்கிட்டு வந்து அன்போடதான் பேசினான்!…ஆனா பேசிக்கிட்டிருக்கும் போதே சட்டுன்னு சுடலையா மாறி என்னைத் தாக்கிட்டான்!…அப்படின்னா…அங்கே கோயமுத்தூர்ல இருந்த சிவாவும் அதே மாதிரி ரெண்டு ஆளாய் மாறி மாறி இருக்கானா?…அப்படின்னா…அவன் சிவாவா மாறும் போது என்னை அடையாளம் கண்டு பேசியிருப்பானே?”
சிந்தனைகளை இரவு முழுவதும் தாறுமாறாய் அலைய விட்டுக் கொண்டே கிடந்த கோவிந்தன் அதிகாலையில் உறங்கிப் போனான்.
மறுநாள் காலை முதல் வேலையாய் கோவையிலிருக்கும் திருமுருகனுக்குப் போன் செய்து, தான் சுடலையை சந்தித்ததையும் மேற்கொண்டு அங்கு நிகழ்ந்தவைகளையும் விவரிக்க,
“தட்ஸ் குட்” என்ற திருமுருகன், “அவரை எப்படியாவது இங்கே அழைத்து வர முடியுமா?” கேட்டான்.
“ம்ம்ம்…முடியும்…அவன் முழு நேரமும் என் தம்பி சிவாவாக இருந்தால்…சட்டுன்னு சுடலையா மாறினான்னா…என்னைத் தாக்க ஆரம்பிச்சிடுவானே?” என்று கோவிந்தன் சொல்ல, “ஒரு நிமிஷம் என்ற திருமுருகன் சங்கீதா ஆவியிடம் ஆலோசனை கேட்டான்
“அவன் மனதினுள் தான் சிவா என்கிற எண்ணம் இருக்கும் வரை அவன் சிவாவாகத்தான் இருப்பான்!…அது கொஞ்சம் கொஞ்சமாய் மாறும் போதுதான் சுடலையாக மாறுகிறான்!…அதாவது எந்த ஆன்மாவின் ஆக்கிரமிப்பு மனதினுள் அதிகம் உள்ளதோ அதுதான் ஓங்கி நிற்கும்”
“சரி அதுக்கு என்ன பண்ணனும்?” திருப்பிக் கேட்டான் திருமுருகன்.
“அவனை அழைத்து வரும் போது அந்த கோவிந்தன் முழுக்க தங்கள் குடும்பத்தைப் பற்றியும், தங்களுடைய இளமைக்கால நினைவுகளைப் பற்றி மட்டுமே பேசிப் பேசி அவன் மனதினுள் சிவாவின் ஆன்மாவே அதிகமாய் ஊடுருவி இருக்கும்படி செய்தால் போதும்…இங்கே அழைத்து வந்து விடலாம்”
“சரி நான் அந்த கோவிந்தனை அப்படியே செய்யச் சொல்றேன்” என்று சொல்லி விட்டு மீண்டும் கோவிந்தனுடன் பேசிய திருமுருகன் அந்த உத்தியைத் தெளிவாக விளக்கினான்.
“ஓ.கே.சார்…கோயமுத்தூர் வரும் வரை எங்க பழைய கதைகளையே பேசிக் கூட்டிட்டு வந்திடறேன்” என்றான் கோவிந்தன் அரைகுறை நம்பிக்கையுடன்.
அன்று மதியமே சுடலையைச் சந்திக்க, அதே பங்களா வீட்டிற்குச் சென்றான் கோவிந்தன்., போகும் போது மறக்காமல், தானும் சிவாவும் சிறுவயதில் எடுத்த போட்டோக்களை கையோடு எடுத்துக் கொண்டான்.
பங்களா வீட்டிற்கு வெளியே வந்த சுடலை இன்றும் வரும் போதே, “அண்ணா..”என்று அழைத்துக் கொண்டு வர, அப்போது மேலோங்கியிருப்பது சிவாவின் ஆன்மா என்பதைப் புரிந்து கொண்ட கோவிந்தன், ஒரு பழைய புகைப்படத்தைக் காட்டி அவனை மகிழ்வித்தான்.
இருவரும் பாசப்பறவைகளாய் மெய் சிலிர்த்துக் கொண்டிருந்த நேரத்தில், மெல்ல அந்த உண்மையை சுடலை உருவ சிவாவிடம் கோடிட்டான் கோவிந்தன். “சிவா…நீ இப்ப யாரோட உருவத்துல இருக்கறே!ன்னு உனக்குத் தெரியுதா?”
“ஆமாண்ணே ரொம்ப நாளா எனக்கு இந்த விஷயமே புரியலைண்ணே!…கண்ணாடி என்னோட முகத்தைப் பார்த்தா சுடலையோட முகமாய் இருக்கு!…உண்மையான என்னோட முகம் எங்கே போச்சு?!…” பரிதாபமாய்க் கேட்டான் சிவா.
“ம்…கோயமுத்தூர் போயிருக்கு” என்றான் கோவிந்தன்.
“என்னது?…கோயமுத்தூர்ர் போயிருக்கா?…எதுக்கு?”
“அந்தப் பேய் ஓட்டல்ல வேலை பார்க்கறதுக்கு!…”
“அய்யய்யோ…” கையை உதறிக் கொண்டு சொன்ன சிவாவின் முகம் மெல்ல மெல்ல இறுகி…அவனுக்குள் சுடலையின் ஆன்மா ஓங்கத் துவங்க, அதைப் புரிந்து கொண்ட கோவிந்தன், சட்டென்று அந்தக் காலத்தில் திருவிழாவின் போது போடப்பட்டிருந்த “உடனடி போட்டோ ஸ்டுடியோ”வில் அவர்கள் இருவரும் ரஜினி கட்அவுட் பக்கத்தில் நின்று எடுத்திருந்த போட்டோவைக் காட்டினான்.
மீண்டும் அவனுக்குள் சிவாவின் ஆன்மா ஓங்கியதும், “சிவா…நீ என் கூட கிளம்பி வந்தேன்னா…அங்க போயி உன்னோட உண்மை முகத்தைக் கொண்டு வந்துடலாம்” என்றான் கோவிந்தன்.
“நெஜமாவா?”
“கண்டிப்பா…”
“அப்ப இங்கியே இருண்ணே…நான் போய் மொதலாளியம்மா கிட்டே ஏதாச்சும் சொல்லி லீவு வாங்கிட்டு வந்துடறேன்”
அவன் வருவதற்குள் திருமுருகனுக்கு போன் செய்து, தாங்கள் வரப் போகும் விஷயத்தை சொல்லி வைத்தான் கோவிந்தன்.
பத்தே நிமிடத்தில் திரும்பி வந்த சுடலை உருவ சிவாவை அழைத்துக் கொண்டு, அடுத்த அரை மணி நேரத்தில் பேருந்து நிலையத்தை அடைந்தான்.
இடையில் அவ்வப் போது சுடலை நிஜத்திற்குப் போக, பழைய புகைப்படம் மற்றும் பேச்சின் மூலம் அவனை சிவாகவே மாற்றிக் கொண்டிருந்தான் கோவிந்தன்.
கோவை செல்லும் பேருந்தில் இருவரும் ஏறியதும், “சிவா..நீ ரொம்ப டயர்டா இருப்பே…நீ வேணா தூங்குப்பா” என்றான் கோவிந்தன்.
“கரெக்டா சொன்னேண்ணே!…உண்மையிலேயே …உடம்பு எவ்வளவு அசதியாயிருக்கு தெரியுமா?” சொல்லி விட்டுக் கண்களை மூடினான் சுடலையாயிருக்கும் சிவா.
“பின்னே?…ஒரு உடம்புக்குள்ளார இரண்டு ஆத்மாக்கள் பூந்து…..விளையாடினா…கொஞ்சம் நஞ்சம் அசதியா இருக்கும்?” தனக்குள் சொல்லிக் கொண்டான் கோவிந்தன்.
ஒரு நெடிய பயணத்திற்குப் பின், ஒரு பாதையோர தேநீர் விடுதியில் அந்தப் பேருந்து நிற்க, “பத்து நிமிஷம் பஸ் நிக்கும்…யூரின் போறவங்க…டீ சாபிடறவங்கெல்லாம் போயிட்டு சீக்கிரம் வந்திடுங்க!” எந்திரம் போல் சொல்லி விட்டு கண்டக்டர் இறங்கி ஓடினார்.
மெல்லக் கண் திறந்த சுடலை, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான்.
“டீ சாப்பிடறியா?” கோவிந்தன் சன்னக் குரலில் கேட்க, அப்போதுதான் தலையைத் திருப்பி தன் அருகில் அமர்ந்திருக்கும் கோவிந்தனைப் பார்த்தான் அவன். பார்த்த மாத்திரத்தில் அவனுக்குள்ளிருந்த சுடலை ஆவேசமானான். “டேய் நீ எதுக்குடா…என் கூட உட்கார்ந்திட்டிருக்கே?”
பேருந்தில் இருந்த அனைவரும் கலவரமாய் அவனைப் பார்க்க, ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், தன்னிடமிருந்த சிவாவின் பழைய ஸ்வெட்டரை எடுத்து, “இந்தா சிவா…குளிருதுன்னா…இதைப் போட்டுக்கோ” என்றான் கோவிந்தன்.
அந்த ஸ்வெட்டரைப் பார்த்த்தும், சட்டென்று அவனுக்குள்ளிருந்த சிவா மேலோங்கி வர, “என்னண்ணே?…நீங்க டீ சாப்பிடப் போகலையா?” அன்போடு கேட்டான் சுடலை.
பேருந்திலிருந்த அனைவர் முகத்திலும் ஈயாடவில்லை.
தொடர்ந்து கோவையை அடையும் வரை, இவ்வாறோ பல மலரும் நினைவுகளை சுடலையின் கவனத்தில் கொண்டு வந்து குவித்து, அவனை இறுதி வரையில் சிவாவாகவே உட்காரவைத்திருந்தான் கோவிந்தன்.
கோவையை அடைந்ததும், மீண்டுமொருமுறை திருமுருகனை அழைத்து, “நாங்கள் இருவரும் இன்னும் இருபது நிமிடங்களில் அங்கு வந்து விடுவோம்” என்ற தகவலைச் சொன்னான்.
“ஒரு டாக்ஸி பிடித்து நேரே ரெஸ்டாரெண்டுக்கு வந்திடுங்க!…மேலே இரண்டாவது ஃப்ளோருக்கு வாங்க”
அவர்கள் வந்து சேரும் முன், சிவா உருவத்தில் அங்கு இருக்கும் சுடலையை கான்ஃப்ரன்ஸ் அறைக்குள் அழைத்து உட்கார வைத்து, அவனுடன் இயல்பாய்ப் பேசிப் பார்த்தான். அந்த சம்பாஷனையில் அதிகமாய் சுடலையே அவனுக்குள் இருக்க, “கோவிந்தன் சிவாவின் ஆன்மாவை அங்கே இறுக்கமாய்ப் பிடித்து வைத்திருக்கான் போலிருக்கு!…அதான் இவன் முழுக்க முழுக்க சுடலையாகவே இருக்கிறான்”
“என்ன சிவா?…எப்படி இருக்கு உன்னோட பணியெல்லாம்?” வேண்டுமென்றே திருமுருகன் கேட்க,
சிவா பதில் பேசவில்லை. அவனுக்குள் சுடலையின் ஆன்மாவே பெருமளவில் ஆக்கிரமித்திருந்ததால் குழப்பத்தில் தன்னையே, தன் உடம்பையே குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன சிவா…குனிந்து குனிந்து பார்த்திட்டேயிருக்கே?”
“நான் யார்?” கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டான் சிவாவிற்குள் உட்கார்ந்திருந்த சுடலை.
“நீ…சிவா”
“இல்லை…நான் சுடலை” தலையை இடவலமாய் ஆட்டிச் சொன்னான் அவன்.
“நோ…இன்னும் கொஞ்சம் நேரத்துல இங்க உன்னைப் பார்க்க இங்க வருவான் ஒருத்தன்…அவன்தான் சுடலை” என்றான் திருமுருகன்.
“யோவ்…நான் தான் சுடலை!”ங்கறேன்” கோபமானான் சிவா.
அப்போது திருமுருகனின் மொபைல் ஒலிக்க, எடுத்துப் பார்த்தான். கோவிந்தன். “அய்யா…நாங்க வந்திட்டோம் கான்ஃப்ரன்ஸ் ரூமுக்கு வரவா?”
“நீங்க வர வேண்டாம்..சுடலையை மட்டும் வரச் சொல்லுங்க” என்று சொல்லி விட்டு மொபைலை ஆஃப் செய்த திருமுருகன், “நான் போய் சுடலையை அனுப்பறேன் சிவா” சொல்லி விட்டு வெளியேறினான் திருமுருகன்.
வெளி வராண்டாவில் ஆனந்தராஜும், விஜய்சந்தரும் நின்றிருக்க அவர்களுடன் கோவிந்தனும், சுடலையும் நின்றிருந்தனர்.
அந்த சுடலைக்குள் சிவாவின் ஆன்மாவே மேலோங்கி நிற்கிறது, என்பதற்கு அடையாளமாய், அவன் உள்ளே வந்தவுடன் ஆனந்தராஜையும் விஜயசந்தரையும் பார்த்து வணக்கம் சொன்னான்.
“சார்…நாம இப்ப என்ன செய்யப் போறோம்?” கோவிந்தன் மூவரையும் மாறி மாறிப் பார்த்துக் கேட்க,
எல்லோரும் திருமுருகனைக் கை காட்டினர்.
“ம்ம்ம்…சொல்றேன்!…சொல்றேன்” என்று அவர்களை அமைதிப் படுத்திய திருமுருகன், “முதலில் இவரை அந்த கான்ஃப்ரென்ஸ் ஹாலுக்குள் அனுப்பணும்!…அங்க அவர் வெய்ட் பண்ணிட்டிருக்கார்” என்று சொல்ல,
“யாரு சார் வெய்ட் பண்ணிட்டிருக்காங்க?” புரியாமல் கேட்டான் கோவிந்தன்.
“ம்…இங்க சிவாவாய் நடமாடிக் கொண்டிருக்கும் அந்த சுடலை”
“சார்…ரெண்டு பேரும் நேருக்கு நேர் பார்த்தா மறுபடியும் சண்டை போட்டுக்குவாங்க சார்” பதறினான் கோவிந்தன்.
“போடட்டும்…அதுக்காகத்தானே அனுப்பறேன்!”
“சார்…என்ன சொல்றீங்க?…ஒரு தடவை நடந்த சண்டையிலேயே ரெண்டு பேரும் ஆள் மாறி…ஆன்மா மாறித் திரியறாங்க…இதுல இன்னொரு சண்டையா?…வேண்டாம் சார்…விபரீதமாயிடும்” பதட்டமாய்ச் சொன்னான் கோவிந்தன்.
“கோவிந்தன்…நான் தெளிவா விசாரிச்சிட்டேன்!…ஒரு பெரிய ரிஸ்க் எடுத்தால்தான் இந்த “ஆன்மா மாறட்டாம்” பிரச்சினைக்குத் தீர்வு வரும்”என்று திருமுருகன் சொல்ல,
அமைதியாய் யோசித்த கோவிந்தன், “சார்…இதுல வேற மாதிரி ஏதாச்சும் பிரச்சினை….?”என்று இழுத்தான் கோவிந்தன்.
“வேற மாதிரிப் பிரச்சினைன்னா?….மரணம் ஏற்பட்டுடுமோ?ன்னு கேட்கறீங்களா?….”
கோவிந்தன் தலையாட்ட,
“கோவிந்தன்…நாம எதுக்கும் தயாராகித்தான் இந்த வேலையைச் செய்யறோம்!…வாங்க கான்ஃப்ரன்ஸ் ஹால்ல என்ன நடக்குது?ன்னு ”சி.சி.டி.வி”ல
பார்க்கலாம்”
எல்லோரும் வேறொரு அறைக்குச் சென்று, அங்கிருந்த மானிட்டரில் கண்களைப் பதித்தனர்.
———————————-
கான்ஃப்ரன்ஸ் அறைக் கதவைத் திறந்து கொண்டு மெல்ல உள்ளே நுழைந்தான் சுடலை. (உள்ளே சிவா)
அங்கே குஷன் நாற்காலியில் அமர்ந்திருந்த சிவா (உள்ளே சுடலை) இவனைக் கண்டதும் ஆவேசமாய்…எழுந்தான்.
இருவரும் ஒரே நேரத்தில் பற்களை “நற…நற”வென்று கடிக்க,
அங்கே நான்கு கண்களில் ரத்தச் சிவப்பு.
இருவரும் ஒரே விநாடியில் ஆக்ரோஷமாய் ஒருவரை நோக்கி ஒருவர் ஓடி வர…..