வாகினி – 26| மோ. ரவிந்தர்
இந்தக் கலியுகத்தில் உத்தமராக இருப்பவருக்கே ஏகப்பட்ட சறுக்கல்கள் வலி என்றால்? தீய செயலை செய்து கொண்டிருப்பவரின் நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்? தீயோர்க்கு எதுவும் எளிதாகக் கிடைத்து விடும். ஆனால், அது நிலைக்காது நிலைத்து நிற்காது. ‘அரசன் அன்று கொலவான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற ஒரு பழமொழி உண்டு. இன்று தெய்வம் கொல்கிறதோ? இல்லையோ? அவரவருக்கு உண்டான கர்ம வினைப்படி இந்தக் கலியுகத்திலே தண்டனை கிடைத்து விடுகிறது.
கஸ்தூரி இந்த வழி வந்தால் அனேகமாக மீனா வீட்டுக்கு தான் வந்திருப்பாள். கஸ்தூரி எதற்காக இங்கு வந்து, இப்படி ஆடையெல்லாம் கலைந்த கோலத்தில் அழுதுட்டு போறா’ என்று மீனாவிடம் கேட்டுப் பார்க்கலாமே என்ற எண்ணத்துடன் வந்தார், சதாசிவம்.
வந்த இடத்தில் எதிர்பாராதவிதமாக மீனா வீட்டு வாசலில், அன்று ஒரு நாள் காட்டுப் பாதையில் கண்ட அம்பாசிடர் இந்த வீட்டு வாசலில் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
‘ஒரு அம்பாசிடர் காரை வைத்துக்கொண்டு மைனர் மாப்பிள்ளை போல் இந்த ஊரை சுத்தி வந்து விட்டிருக்கிறது இவர்கள்தானா? இவர் தான் கஸ்தூரிக்கு தொல்லையைக் கொடுத்திருக்க வேண்டும். அது என்னவாக இருக்கும் என்ற ஒரு சிந்தனை சதாசிவம் ஆழ்மனதில் ஓங்கி ஒலித்தது.
அதற்கேற்றார்போல், தனஞ்செழியன் நல்லதம்பி வீட்டுக்குள் பேசிக் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் வெளியில் இருந்த சதாசிவத்தின் காதிலும் பலமாக விழத் தொடங்கியது.
கஸ்தூரியிடம் தவறாக நடந்து கொண்டதற்குக் கைகால்கள் உடைந்து, முறிந்து மண்டையில் இரத்தம் சொட்ட ! சொட்ட ! ஒரு ஓரத்தில் அமர்ந்து மயங்கிக் கொண்டிருந்தான், தனஞ்செழியன்.
‘இவன்கிட்ட சினேகிதம் வச்சுக்கிட்டதுக்குச் சரியான பாடத்தைக் கொடுத்துட்டானே. இதுக்கு மேல இவன்கிட்ட வேலை செய்யறதுக்கு நம்ம கிட்ட தெம்பு இல்லடா சாமி. பேசாமல் ஒரு நல்ல வேலையைப் பாத்துக்கிட்டு ஊரை காலி பண்ணிட்டு போயிட வேண்டியதுதான்’ என்ற எண்ணத்துடன் மயங்கிக் கொண்டு இருந்தான், நல்லதம்பி.
“அடேய், என்னடா அவ இப்படிக் கண்ணு மண்ணு தெரியாம என்ன பொளந்து கட்டிட்டா. என்னால எழுந்தரிக்கக் கூட முடியலடா…கொஞ்சம் தண்ணீராவது எடுத்துவந்து கொடுடா, நல்லதம்பி…” என்று மூக்கில் வழிந்த இரத்தத்தை இடது கையால் துடைத்துக் கொண்டே கேட்டான், தனஞ்செழியன்.
“யோவ், உங்ககிட்ட இத்தனை தடவ நா சொல்லியும் கேட்காம, என்னையும் உன் கூடச் சேர்த்து பொலம்ப வச்சிட்டியே. நீ எல்லாம் நல்லா இருப்பியா?” என்று தனஞ்செழியனை திட்ட ஆரம்பித்தான், நல்லதம்பி.
“எனக்கு எப்படிடா தெரியும்? அவ இப்படிப் பண்ணுவான்னு. கஸ்தூரின்னு மான் பேரை வச்சிக்கிட்டு, இப்படி மாடு மாதிரி அடிச்சி தள்ளுவான்னு. அந்தப் பாவி மக, அம்மா வலிக்குதே… ” என்று புலம்பினான் தனஞ்செழியன்.
“ஆமா, இவரு பெரிய ஞானி. இவருக்கு எல்லா விஷயம் முன்னாடியே தெரியும். அப்பவே சொன்னேன், உன்னோட வேலை எல்லாம் வெளியில வச்சுக்கே வீட்ல காட்டாதடான்னு. பாத்தியாடா ! இப்ப மூஞ்சி, முகரை எல்லாம் எப்படி ரத்தம் வழியற அளவுக்கு அடிச்சுட்டு போயிட்டான்னு” என்று மரியாதை இல்லாமல் தனஞ்செழியனை வஞ்சிக்கத் தொடங்கினான், நல்லதம்பி.
இந்த வார்த்தைகளைக் கேட்க கேட்க சதாசிவத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தடுக்க முடியாத கோபம் மண்டையே வெடித்து விடுவதைப் போல் இருந்தது.
“என்ன தைரியம் இருந்தால் என் பொண்டாட்டி மீதே கையை வைக்கப் பார்த்திருப்பீங்க. உங்களை நான் சும்மா விடலாமா…?” என்று எழுத முடியாதா சொற்களால் இருவரையும் பயங்கரமாகத் திட்டிக்கொண்டே, அதே வேகத்தோடு வீட்டின் திண்ணையின் தூணாக இருந்த ஒரு கட்டையைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போய் அந்த வீட்டுக்குள் நுழைந்தார், சதாசிவம்.
இருவரும் நிதானம் தவறி இருந்ததால், வீட்டுக்குள் யார் வருகிறார்கள் என்று கூடத் தெரியவில்லை இருவருக்கும்.
அதேசமயம், இவர்கள் இருவரும் ரத்தவெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பது சதாசிவத்திற்கு வசதியாக இருந்தது. வந்த கோபத்தில் நிறுத்தாமல் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் கோவில் வாசலில் நேர்த்திக் கடனுக்காக உடைக்கப்படும் தேங்காய் உடைப்பதை போல இருவரின் மண்டையிலும் வெறிகொண்டு மாற்றி மாற்றி ஓங்கி அடித்தார், சதாசிவம்.
மின்னல் வெட்டி இருள் தொடங்கி முடிவதை போல் தனஞ்செழியன், நல்லதம்பி இருவருடைய வாழ்க்கையும் அணைக்கப்படும் ஒளி வெளிச்சம் போல் அனைத்து முடிந்தது.
‘பணம், காசு, காமம் மட்டும்தான் இந்த உலகத்தில் வாழ்க்கையா ? அது இல்லாமல் ஒரு மனிதன் வாழக்கூடாதா. ஏன் இப்படி இருக்கிறார்கள் சில மிருக ஜாதிகள். பெண்ணினத்தை இந்தப் பாவிகள் விட்டு வைக்க மாட்டார்களா?’ என்ற விடை தெரியாத கேள்விக்குப் பாயில் படுத்துக் கொண்டே விடை தேடிக் கொண்டிருந்தாள், கஸ்தூரி.
‘அந்த வீட்டுக்குள் எத்தனை தடவை நான் போயிருப்பேன். இதுவரை மீனா என்னை எதுவும் சொன்னதில்லை. இப்படி ஒரு பாவி கிட்ட மாட்டிகிட்டு இருக்காளே. அந்த வீட்டுக்குள் நான் போகும்போது எல்லாம் அந்தப் படுபாவி என்னை இப்படித்தானா பார்த்திருக்கிறான்? நீங்க எல்லாம் என்னடா மனுஷ ஜென்மம். ஒரு பொண்ண பெண்ணாகப் பார்க்க தெரியாதா ?, உங்களைப்போல ஜென்மத்தை சும்மா விடக்கூடாது. உயிரோடு கொளுத்தி புதைத்தாலும் தப்பில்லை. என் வீட்டுக்காரருக்கு இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சிருந்தா, உங்க ரெண்டு பேரையும் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போய் இருப்பார். என் புருஷன் எதுக்கு ஜெயிலுக்குப் போகனும்? இன்னொரு தடவ உங்க ரெண்டு பேரையும் என் கண்ணுல பார்த்தேன். கால்ல கிடக்கிறத கழட்டி அடிச்சி கொன்னுடுவேன்.
எங்ககிட்ட பணம் பொருள் இல்லதான். அதுக்காக, கண்ட கண்ட நாயிங்க கிட்டயா போய்ப் பல்ல காட்டி இழிப்போம்’ என்று கண்ணில் நீர் பெருக ஏக சிந்தனையில் ஆழ்ந்து கொண்டே தனது கணவர் சதாசிவத்தின் வாழ்க்கையும் ஒருமுறை நினைத்துப் பார்த்தாள்.
“அம்மா, என் வீட்டுக்காரர் கடை எடுத்து நடத்த போறாரு. அதுக்குக் கொஞ்சம் பணம் தேவைப்படுது உனக்குத் தெரிஞ்சவங்க யார்கிட்டயாவது ஒரு 25 ஆயிரம் ரூபா கடன் வாங்கிக் கொடும்மா. நான் சிறுக சிறுக உனக்கு கொடுத்துடுறேன்” என்று தன் தாய் பரவதம்மாளிடம் கேட்டாள், கஸ்தூரி.
“ஏண்டி, உனக்குத் தெரியாதா? நானே குடிகார மக… உங்க அண்ணே கோதண்டனே வீட்டில வச்சுக்கிட்டு அஞ்சுக்கும் பத்துக்கும் என்ன பாடுபட்டு இருக்கேன்னு. என்ன நம்பி அவ்வளவு பணத்தை யாரடி தருவா?” என்று நாசூக்காகச் சொன்னாள், பரவதம்மாள்.
“அம்மா, உன்னால முடியும். நீ கேட்டா யாரும் இல்லைன்னு சொல்ல மாட்டாங்க. தயவு செய்து கொஞ்சம் வாங்கிக் கொடும்மா” என்று மீண்டும் கெஞ்சினாள், கஸ்தூரி.
“ஏண்டி ஒரு தடவை இல்லைன்னு சொன்னா அத்தோட அந்த வார்த்தையை விட மாட்டியா? அந்தப் போக்கத்த பையனுக்குப் பணத்தை வாங்கிக் கொடுத்துட்டு, அவன் பின்னாடியே போறது யாரு? இவனுக்கு வாங்கித் தரதும். திருடனுக்கு என் வீட்டை காட்டிக் கொடுக்குறதும் ஒண்ணுடி, போனா திரும்பி வராது. நீயாச்சும் அந்தத் திருடன் கிட்ட இருந்து தப்பிக்கிறா வழிய பாரு பாவி மகளே !” என்று தன் மருமகன் சதாசிவத்தை வஞ்சிக்கத் தொடங்கினார், பரவதம்மாள்.
இதையெல்லாம் நினைக்கும் பொழுது கஸ்தூரிக்கு வேதனையாகவும், மன வருத்தமாக இருந்தது. ‘உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பார்கள்.’ நாங்கள் என்னதான் முட்டிமோதி உயர நினைத்தாலும் இந்தச் சமூகம், உறவினர்கள் ஏதோ ஒரு வகையில் எங்களுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
எங்களைப் போன்ற கீழ் சமூகம் மேலே உயர்வதற்கு வேறு வழியே இல்லையா? கடவுளே!’ என்றெல்லாம் நினைக்கும் பொழுது அவள் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டியது.
இறந்தகால நினைவலைகள் எல்லாம் கஸ்தூரியின் நினைவுகளை ஏதோ ஒன்று செய்து கொண்டிருந்தது. அந்தப் பெரும் சுமைகளும் அவள் இரு பூ விழி இமைகளை மூட உத்தரவிட, அவளும் அந்த நினைவுகளோடு மெல்ல தன் உறக்கத்தைத் தேடுவதற்குத் தயாரானாள்.
தொடரும்…
2 Comments
கஸ்தூரியின் கவலைகள் நீங்குமா?
nice