“யாரையும் சும்மா விடாதீர்கள்” அப்பாவி மாணவியின் ஹீனக்குரல்
கோவையில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தால் மாணவி பொன்தாரண தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு பெண் அப்பாவியாக நடந்துகொண்டது மிகவும் வேதனையாக உள்ளது. அதிலும் இவ்வளவு கட்டுப்பாடுகள் உள்ள காலத்திலும் ஒரு பள்ளி நிர்வாகம் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது மிகவும் கொடுமையானது.
பிள்ளைகளிடம் அதிக பாசம் வைத்துள்ள பெற்றோர் அதில் அன்பும் நெருக்க மும் இல்லாமல் இயல்புக்கு மாறாக நடந்துகொண்டிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது.
படிப்பறிவு இல்லாத மாணவியாக இல்லை. படிப்பறிவு இல்லாத பெற் றோராக இல்லை. ஆனால் இப்படி நடந்துகொண்டது மிகவும் வருத்தமடைய வைக்கிறது.
பத்து மாசம் சுமந்து பெற்று வளர்ந்து தரமான கல்வி கற்பித்தும் வெளிப்படையாகப் பேசக் கற்றுத் தரவில்லையே என்கிற கோபம்தான் வருகிறது.
கல்வி கற்பிக்க வரும் ஆசிரியர் தரக்குறைவான எண்ணத்துடன் நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர்களுக்கு நேரடியாகத் தூக்கு வழங்கினாலும் தப்பே இல்லை. இது மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கும்.
பள்ளியின் தலைமை நிர்வாகியே இந்த பாலியல் குற்றத்துக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டது மட்டுமல்லாமல் அந்த மாணவியை மிரட்டியும் கொடூரமாக நடந்துகொண்டிருக்கிறார். அவரை ரோட்டு முச்சந்தியில் வைத்து கல்லால் அடித்தால் என்ன பாவம் வந்துவிடப் போகிறது?
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் மாணவி பொன்தாரணி அந்தப் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார். அந்த மாணவிக்குப் பள்ளி ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியை சில மாதங்களாகவே பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்தி சித்திரவதை செய்துள்ளார்.
இதை அடுத்து மாணவி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது பேருந்தில் இது மாதிரி நடக்கும்போது கண்டுகொள்ளாமல் செல்வாய் அல்லவா? அதே போல் நடந்து செல் என்று அந்தப் பெண்ணுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி உள்ளார்கள். பின் இதையெல்லாம் பெற்றோர்களிடம் சொல்லக்கூடாது என்றும் அந்தப் பெண்ணை மிரட்டி இருக்கிறார்கள். இதனால் இந்த மாணவி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி அந்தப் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றி சான்றிதழ் வாங்கிச் சேர்ந்துள்ளார்.
இருந்தும் நாளுக்கு நாள் அவருடைய மனஉளைச்சல் அதிகமானதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து போலீசார் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து உக்கடம் அனைத்து மகளிர் காவல் துறையினர், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார் உடல் பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நூற்றுக்கணக்கான மாணவர்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காதவரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனத் தெரிவித்து ‘ஜஸ்டிஸ் ஃபார் பொன் தாரணி’ என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் இன்னும் பலர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதுவரை மாணவியின் உடலை வாங்க மறுத்து ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்ஸோ வழக்கு பதியப்பட்டு கைது செய்த பிறகு மாணவியின் உடலைப் பெற்றோர் வாங்கிச் சென்று அடக்கம் செய்தனர்.
மாணவி பொன்தாரணி தற்கொலை செய்துகொண்ட அறையில் ஒரு கடிதத்தை காவல் துறையினர் கண்டுபிடித்து எடுத்தனர். பின் அந்தக் கடிதத் தில் மாணவி ஆசிரியரின் பெயரையும், வேறு சிலருடைய பெயர்களை யும் குறிப்பிட்டு ‘அவர்களை எல்லாம் சும்மா விடாதீர்கள்’ என்று எழுதி இருக் கிறார். இதனையடுத்து போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோத னைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.
யாரையும் சும்மா விடாதீர்கள் என்ற கடிதம் இந்த மாணவிக்கு நடந்த கொடூரத்தை மட்டும் குறிப்பிடவில்லை. வரும் காலங்களில் இதுபோல் தவறு செய்யும் யாரையும் சும்மா விடாதீர்கள். இதுபோல் நடக்கவும் விடாதீர்கள் என்று குறிப்பிடுவதாகவே உள்ளது.
இதுபோன்ற தொடரும் பள்ளி மாணவிகளின் பாலியல் கொடுமைகளைத் தடுக்க பெற்றோர் கண்காணிப்பு குழுவை உருவாக்கி பள்ளிகள் தோறும் கண்காணிக்கச் செய்ய வேண்டும்.
பல பள்ளிகளில் பெற்றோரை உள்ளேயே விடுவதில்லை. கட்டணம் கட்ட மட்டும் அனுமதிப்பார்கள். மற்ற எந்த நாளிலும் மாணவர்களைக் காண பள்ளிக்குள் அனுமதிப்பதில்லை. பள்ளியின் உள்ளே பெற்றோர் சென்று மற்ற மாணவர்களிடம் பேசினால்தானே தன் பிள்ளை இல்லாவிட்டாலும் மற்ற பிள்ளைகளாவது நெருக்கமாகப் பேசுவார்கள்? இந்த வாய்ப்பு மறுக்க பள்ளிப் பணியாளர்களை வைத்து பெற்றோரை உள்ளே விடாமல் உள்ளே என்ன நடக்கிறது என்பதே பெற்றோர்களுக்குத் தெரியாமல் மூடி மறைக்கிறார்கள். இதற்கு சரியான தீர்வு காணாத வரை இந்தக் கொடுமைகளைத் தடுக்க முடியாது. தமிழக அரசு உடனே செயல்பட்டு அரசு, தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் உள்ளே சென்று மாணவர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும்.