• தொடர்
  • அஷ்ட நாகன் – 13| பெண்ணாகடம் பா. பிரதாப்

அஷ்ட நாகன் – 13| பெண்ணாகடம் பா. பிரதாப்

6 days ago
3175
  • தொடர்
  • அஷ்ட நாகன் – 13| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

புராண, இதிகாசங்களில் நாகங்களைப் பற்றி ஆங்காங்கே சில செய்திகள் காணப்படுகின்றன. நாகங்களைப் பற்றி சில அரிய செய்திகள் நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.அதர்வண வேதத்தில், நாகங்களினால் ஏற்படும் கெடுதல்களுக்கும், காயங்களுக்கும் தடுப்பு முறையாகப் பல அரிய மந்திர, ஔஷத(மருத்துவ) குறிப்புகள் காண கிடைக்கின்றன. இவ்வகையான மந்திரம் மற்றும் மருத்துவ முறைகளை தகுந்த நபரின் மூலம் நேரடியாக கற்றுக் கொண்ட பின்னரே செயல்படுத்திப் பார்க்க வேண்டும்.நாகத்தின் விஷமானது சேகரித்து சுத்திகரிக்கப்பட்ட பின்னர், தோல் நோய்க்கும் மற்றும் தொழு நோய்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது என்று கூறப்படுகிறது.நாகர் கோயிலில் உள்ள ‘நாக ராஜா’ கோயிலில் சில நூறு வருடங்களுக்கு முன்பு நாகங்கள் ஊர்ந்து சென்ற இடத்தில் ஒரு வகையான மூலிகை கொடியை தொழு நோய்க்கு அருமருந்தாக பயன்படுத்தியதாக ஒரு தகவல் உள்ளது.ஆனால், இப்போது அந்த மூலிகை கொடி கோயில் வளாகத்தில் காண கிடைப்பதில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. அதைப் போலவே,சங்கரன் கோயிலில் ‘பாம்பு புற்று மண்’ பிரசாதமாக இன்றளவும் வழங்கப்படுகிறது.இதனால் தோல் நோய்கள் நீங்குவதாக அங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.இன்றளவும் தோல் நோய் உள்ள பலர், தங்களின் தோல் நோய் நீங்கி நலம் பெற நாக வழிபாடு புரிவதை கண்கூடாகக் காணலாம்.

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

 

அறப்பளீஸ்வரர் கோயில்! மாலை நேரம். கதிரவன் மேற்கு வானில் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். கொல்லிமலைக்கே உண்டான குளிர் நிலவியது. கோயிலிலும் பெரிதாக கூட்டம் இல்லை.அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பக்தர்கள் காணப்பட்டனர்.

கொல்லிமலை பழங்குடிகள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டை பெருக்க மாட்டார்கள்.மேலும், இரவு நேரத்தில் தங்கள் வீட்டில் உள்ள உப்பு,நெருப்பு போன்ற பொருள்களை பிறருக்குக் கொடுத்தால் செல்வம் சேராது என்று நம்பி, இன்றளவும் பின்பற்றியும் வருகின்றனர்.

கோயில் பிரகாரத்தில் உள்ள கல் மண்டபத்தில் யோகினி, அரவிந்தன்,நந்தன் மற்றும் முருகேசன் என் நால்வரும் குழுமியிருந்தனர்.

மூவரின் மெளன கீதத்தை கலைக்கும் வகையில் முருகேசன் பேச தொடங்கினான்.

“அரவிந்த்,நான் சித்தர் சாமியை பார்த்து பேசிட்டேன்.அவரு நாளைக்கு உங்க மூணு பேரையும் கூட்டிக்கிட்டு அவரு குடிசைக்கு அழைச்சிட்டு வர சொன்னாரு. ஆனா….” என்று இழுத்து நிறுத்தினான் முருகேசன்.

“என்ன முருகேசன் சொல்லுங்க?” என்று முருகேசனை,அரவிந்தன் அவசரபடுத்தினான்.

“அது…அது…அது வந்து எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை.”

“முருகேசன்,நீங்க பீடிகை போட வேண்டாம்.’ தேங்காய் உடைக்குற மாதிரி’ விஷயத்தை பட்டுனு போட்டு உடைச்சிடுங்க” என்று நந்தன் கூறினான்.

காற்றில் பறக்கும் தன் தலை முடியை அவ்வப்போது ‘யோகின’ தன் வெண்டைக்காய் விரல்களால் கோதி விட்டுக் கொண்டாள்.

அப்போது அவளின் அலைபேசி “ஷஷ்டியை நோக்க சரவண பவனார்” என்ற ரிங் டோன் பாடலோடு ஒலிக்கத் தொடங்கியது.

அவளின் அலைபேசி திரையில் “மின் கைத்தடி இதழ் ஆசிரியர்” என்று வாசகம் மின்னியது.

அவளும் அலைபேசிக்கு காதை கொடுத்து, பேச ஆரம்பித்தாள்.

“வணக்கம் மேடம்,நல்லா இருக்கீங்களா? நானே உங்கக்கிட்ட பேசணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். நீங்களே லைன்ல வந்துட்டீங்க.என்ன விஷயம் சொல்லுங்க?” என்று ஆரம்பித்தாள் யோகினி.

“ஐ ஆம் ஆல் ரைட் யோகினி.பை த பை நான் உங்கக்கிட்ட இச்சாதாரி நாகங்களைப் பற்றி ஒரு தொடர் எழுத கேட்டிருந்தேனே ! தொடருக்கு தேவையான விஷயங்கள் கிடைச்சுதா? இந்த மாசம் தொடர் ஆரம்பிக்கலாமா?”

யோகினி பதில் அளிக்க வாயெடுத்தாள். அப்போது கோவிலில் இருந்த பக்தர் ஒருவர் கோயில் மணியை தொடர்ந்து அடிக்கவே, “ஹலோ…ஹலோ…” என்று கூறிக் கொண்டே யோகினி அலைபேசியை எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு சற்று தள்ளி தற்காலிகமாக நகர்ந்தாள்.

“முருகேசன் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சொல்லுங்க…” என்று அரவிந்தன் மீண்டும் முருகேசனை நிமிண்டினான்.

“அரவிந்த், உங்க மூணு பேரை பார்த்துட்டு நான் நேரா சித்தர் ஐயாவை தான் பார்க்க போனேன். அவர் என்னை பார்த்த உடனே என் மேல இச்சாதாரி நாகத்தோடு வாசம் வீசுதுன்னு சொன்னாரு. அதான் எனக்கு கொஞ்சம் யோசனையாக இருக்கு” என்று சப்தமில்லாமல் ஒரு அணு குண்டை தூக்கிப் போட்டான்.

முருகேசனின் வார்த்தைகளைக் கேட்ட அரவிந்தனும் நந்தனும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.

முருகேசனின் வார்த்தைகளைக் கேட்ட அரவிந்தனின் முகத்தில் அச்சத்தின் ரேகை படர ஆரம்பித்தது.

நந்தன் மட்டும் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முருகேசனிடம் தன் கேள்வியை முன் வைத்தான்.

“முருகேசன்,நீங்க சொல்றதை பார்த்தாக்க…எங்க மூணு பேர்ல யாரோ ஒருத்தரை இச்சாதாரி நாகம்னு சந்தேகப்படுற மாதிரி தெரியுதே?” என்று நந்தன் கன கச்சிதமாக கேள்வி எழுப்பினான்.

நந்தன் அப்படி கேட்கவும், முருகேசனின் முகத்தில் ஈ ஆடவில்லை !

“என்ன முருகேசன் அப்படி தானே?” என்று மீண்டும் நந்தன் முருகேசனை கேட்டான்.

‘திருடனுக்கு தேள் கொட்டியது’ போல முருகேசன் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் திருதிருவென விழித்தான்.

“சரி ! சரி ! நீங்க ஒண்ணும் பெருசா யோசிக்க வேண்டாம்.இந்த விஷயத்தை இப்போதைக்கு யோகினிகிட்ட சொல்லி குழப்ப வேண்டாம்.முதல்ல நாம நாளைக்கு போய் ஏலக்காய் சித்தரை பார்ப்போம்.அப்புறம் நடக்கறது நடக்கட்டும்” என்று நந்தன்,முருகேசனின் பயம் கலந்த குழப்பத்திற்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்தான்.

அப்போது அலைபேசியில் பேசி முடித்துவிட்ட நிலையில் யோகினியும் அங்கு வந்து சேர்ந்தாள்.

“என்ன முருகேசன். நாளைக்கு ஏலக்காய் சித்தரை பார்க்க போகலாம் தானே?” என்று மிக இயல்பாக யோகினி கேட்டாள்.

முருகேசன் ‘போகலாம்’ என்பது போல தலையசைத்தான்.

அரவிந்தனுக்கு, அவன் கனவில் பாம்பு கனவு வந்ததால் ஒருவேளை தான் ஒரு இச்சாதாரி நாகமாக இருப்போமா? என்ற எண்ணம் தோன்றி அவனை ஆட்டிப்படைத்தது.

மூவரில் யார் இச்சாதாரி நாகம்?

– தொடரும்…

< பன்னிரண்டாம் பாகம்

5 thoughts on “அஷ்ட நாகன் – 13| பெண்ணாகடம் பா. பிரதாப்

  1. கதையின் விறுவிறுப்புக்கு பஞ்சமேயில்லை. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930