உண்மையான சேவைக்கு கிடைத்த பரிசு ரூ. 1 கோடி சொத்து, நகைகள்

25 ஆண்டுகள் ஆதரவாக இருந்த ரிக் ஷா ஓட்டுநருக்கு ரூ.1 கோடி சொத்தை உயில் எழுதி வைத்தார் ஒரு மூதாட்டி!  

இவர் தனது வீடு மற்றும் தங்க ஆபரணங்களை அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு ரிக்ஸா ஓட்டுநருக்கு தானமாக உயில் எழுதி வைத்துள்ளார். செய்நன்றி மறவா இந்தப் பெண்ணைப் பார்த்து அனைவரையும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

ஒடிசாவின் கட்டாக் நகரில் வசிப்பவர் 63 வயதான பாட்டி மினாட்டி பட்நாயக். மினாட்டியின் கணவரும், மகளும் கடந்த வருடம் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டதால், கட்டாக்கின் சுதாஹத் கிறிஸ்டியன்சாஹி பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இதே கட்டாக் நகரில் வசிக்கும் அந்த ரிக்ஸா ஓட்டுநரின் பெயர் புத்தா சமால். 53 வயதாகும் இவர் கடந்த சில ஆண்டுகளாக மினாட்டி பட்நாயக் குடும்பத்துக்கு உதவியாக இருந்துள்ளார். 

குறிப்பாக கடந்த ஆண்டு புற்றுநோயால் தனது கணவரான 70 வயதான கிருஷ்ண குமார் பட்நாயக்கை இழந்த பிறகும், அதற்கடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது 31 வயது மகள் கோமல் குமாரி ஒரு தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு மறைந்த பிறகு மினாட்டி மிகவும் மனம் தளர்ந்து போயுள்ளார்.

மன வருத்தத்தில் உணவு உண்ணாமல் உடலையும் வருத்திக் கொண்டுள்ளார். ஆனால், ரிக்ஸா ஓட்டுநர் புத்தாவும் அவரது குடும்பமும் மினாட்டிக்கு உணவு கொடுப்பதில் இருந்து பல்வேறு உதவிகளைச் செய்து அவரை கவனித்து வந்துள்ளனர். இதற்கு கைம்மாறு செய்யும் வகையில் தான் இப்போது தனது சொத்துக்களை ரிக்ஸா ஓட்டுநர் குடும்பத்துக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.

மினாட்டி பேசுகையில், “கடந்த ஆண்டு எனது கணவனையும் மகளையும் அடுத்தடுத்து இழந்த பிறகு, நான் தனியாக, மரணத்திற்காகக் காத்திருந்தேன். என் சொத்துகளாக கருதிய கணவன், மகள் இருவருமே என்னை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இந்த சொத்துகள் எல்லாம் எனக்குத் தேவையே இல்லை.எனக்கு உதவிய புத்தா மற்றும் அவரது குடும்பத்திற்கு அனைத்தையும் தானம் செய்ய முடிவு செய்தேன். கடந்த 25 வருடங்களாக எனக்கும் எனது குடும்பத் துக்கும் புத்தா எவ்வளவோ செய்துள்ளார்

என் மகள் படிக்கும்போது, ​​புத்தா தான் அவளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று அழைத்து வந்தார். என் கணவர் கடைசி வரை புத்தாவை நம்பினார். எனது மகளின் மரணத்திற்குப் பிறகு, எனது மாமியாரோ அல்லது எனது பெற்றோர் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் எனது உடல்நலம் குறித்து விசாரிக்கவோ அல்லது எனது அழைப்புகளுக்கு பதிலளிக்கவோ இல்லை.

நான் ஒரு இதய நோயாளி மற்றும் உயர் இரத்த அழுத்தமும் உள்ளது. இதனை சமாளிக்க உதவுவதும் அவர்கள் தான். புத்தாவின் மனைவி வீட்டு வேலைகளில் உதவுகிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக புத்தா மற்றும் அவரது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். அவர்கள் இத்தனை வருடங்களாக எனக்கு மரியாதை அளித்து என் குடும்பத்தை கவனித்து வந்தனர். 

அவரும் அவர் மனைவியும் என்னை அம்மா என்றும், அவரது குழந்தைகள் என்னை பாட்டி என்றும் அழைப்பார்கள். அவரது எளிமை மற்றும் நேர்மையுடன் ஒப்பிடும்போது சொத்து ஒன்றும் பெரிது இல்லை.

சொத்தை ஒப்படைக்க முடிவு செய்தபோது, ​​என் உடன்பிறந்தவர்கள் மத்தியில் ஒருவித மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால், நான் உறுதியாக இருந்ததால், அவர்கள் எதிர்க்கவில்லை. . அவருக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்க விரும்புகிறேன். புத்தா குடும்பத்துக்கென சொந்தமாக ஒரு தங்குமிடம் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

ரிக்ஸா ஓட்டுநர் புத்தா பேசுகையில், “சொத்து பற்றி நான் கனவிலும் நினைத்த தில்லை. ஆனால் மினாட்டியின் கணவர் இறந்த பிறகு எனது குடும்பத்தினர் அவரை கவனித்துக் கொள்வதில் உறுதியாக இருந்தனர். அவர் உயிருடன் இருக்கும் வரை நாங்கள் கவனித்துக்கொள்வோம். இந்த சொத்தை ஏற்க முதலில் தயக்கம் காட்டினேன். ஆனால் மினாட்டி அம்மா உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டோம்” என்றார்.

இப்படி கைம்மாறு கருதாது செய்த உதவிக்கு கைமேல் பலன் கொடுத்த மூதாட்டியை நினைத்து இந்திய மக்கள் ஒரு பக்கம் ஆச்சர்யத்தில் வியந்தாலும் இன்னொரு பக்கம் எளிமையாக நேர்மையாக அன்பாக உண்மையாக வாழ்ந்த ஒருவருக்கும் 25 ஆண்டுகளைக் கடந்தாலும் மதிப்பும் செல்வமும் கிடைக்கும் என்பது தற்காலத்தில் கிடைத்த சான்று.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...