படைத்திறல் பல்லவர்கோன் | 9 | பத்மா சந்திரசேகர்
9. புறப்பட்டது போர்ப்படை!
பல்லவ மன்னரின் சமாதானத்தை நிராகரித்த பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர் வெகு சீக்கிரம் தனது படைகளைத் தயார் செய்தார். சோழ மன்னர் குமராங்குசர் காஞ்சி வந்தடைவதற்குள் ஏற்கனவே தயாராக இருந்த பாண்டிய படை, போருக்குத் தயாரானது.
அன்று அதிகாலை. ஆதவன் உதிக்கும் முன்னரே படை வீரர்கள் வைகைக் கரையிலிருந்த திடலில் கூடியிருந்தனர். அனைவர் கைகளிலும் வாள், வேல், ஈட்டி, வில், அம்பு ஆகிய ஆயுதங்கள் இருந்தன. அந்தத் திடல் முழுவதும் யானைகளாலும், புரவிகளாலும், இரதங்களாலும் நிறைந்திருந்தன. ஒரு பக்கம் நிறைய ரிஷப வண்டிகள் நின்றிருந்தன. வண்டிகளில் தளவாடங்களும், சமையலுக்குத் தேவையான பாத்திரங்களும், உணவுப் பொருட்களுமாக நிறைந்திருந்தன. வீரர்கள் முகங்களில் ஆக்ரோஷமும், கரங்களில் ஆயுதங்களுமாக இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தனர்.
விண்ணிலிருந்த நிலாப்பெண் விடைபெற்று செல்ல, ஆதவன் மெல்ல தனது பொன்னிறக் கதிர்களைப் புவியின் மீது அள்ளித் தெளித்த வேளையில், பட்டத்து யானை அசைந்து அசைந்து வந்து நின்றது. அத்துடன் ஒரு புரவியும் வந்தது. பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர் யானை மீதேறியும், இளவரசர் வரகுணவர்மர் புரவியின் மீதேறியும் வந்தனர்.
வேந்தரும், இளவரசரும் வந்ததும் வீரர்கள் எழுப்பிய முழக்கம் ஆதவனையும் மிரள செய்தது. அந்தத் திடல் முழுவதும் யானைகளின் பிளிறளினாலும், புரவிகளின் கனைப்பினாலும், இரதங்கள் நகரும் ஓசையினாலும், வீரர்கள் எழுப்பிய முழக்கங்களினாலும் ஒன்றோடொன்று போட்டி போட்டு விண்ணை எட்டின.
ஸ்ரீவல்லபர் திடலில் கூடியிருந்த படையைக் கவனித்தார். யானைகள் முகப்படாம் போடப்பட்டு, கம்பீரமாக இருந்தன. சிலவற்றின் முதுகில் அம்பாரி இருந்தது. அவற்றின் முதுகிலிருந்த வீரர்கள் கையில் வில்லும் அம்பும் காணப்பட்டது. அம்பாரியின்றிக் காணப்பட்ட யானைகளின் மீதும், வீரர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் வாள், ஈட்டி, வேல் போன்றவைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
புரவி வீரர்களிலும் பெரும்பாலானோர் கைக்கோளர்களாகவே இருந்தனர். ஒரு கையினால் குதிரையை செலுத்திக்கொண்டே, மறுகையில் வாள், வேல், ஈட்டி ஆகியவைக் கொண்டு போர்புரிபவர்கள்.
இரதங்களில் இருந்த வீரர்கள் வில்லாளிகளாக இருந்தனர். இரத்தத்தை சாரதி செலுத்த, தங்கள் கையிலிருந்த வில்லில் நாண் தொடுத்து, அம்பு எய்தி எதிரிகளைத் தாக்கும் வல்லமை பெற்றிருந்தனர். படை வீரர்களைப் பார்த்துக்கொண்டே, திடலின் மையத்திற்கு வந்தார் ஸ்ரீவல்லபர். வீரர்களைப் பார்த்து பாண்டிய வேந்தர் பேசத்தொடங்கினார்.
“பாண்டிய நாட்டின் விளைநிலமான வீரர்களே… நீங்கள் இல்லாமல் வெற்றி என்பதில்லை. முதலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டுமொரு முறை போருக்கு புறப்பட்ட உங்கள் அனைவருக்கும் பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபனின் நன்றிகள்” வீரர்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்க, சிறிது நேரம் அவர்களின் மகிழ்ச்சிக்கு நேரமளித்தார். பின்னர் மீண்டும் பேசத்தொடங்கினார்.
“நாம் நமது வீரத்தின் துணை கொண்டு பல்லவர்களின் பகுதிகளை பாண்டியர்களின் ஆளுமைக்குட்படுத்தினோம். அவற்றை திரும்பக் கோரி தூது அனுப்பினார் நந்திவர்மர். பல்லவப் பிரதேசங்களை திரும்ப அளிக்காவிட்டால் போர் என மிரட்டலும் விடுத்தார். அவர்கள் படையுடன் மதுரை வருவதை விட, நாமே முன்னெடுத்து காஞ்சியைத் தாக்குவோம். பாண்டியர்களின் மீது படையெடுத்து, நமது வீரத்தை அவர்களுக்குக் காட்டுவோம்” ஸ்ரீவல்லபர் கூற, மீண்டும் பாண்டிய வீரர்களின் முழக்கம் விண்ணை எட்டியது.
வீரனொருவன் ஒரு பனையோலைத் தட்டுடன் வந்து, அதை படைத்தளபதி அழகனின் கையில் அளித்தான். அதில் வேப்பம்பூ மலைகள் இருந்தன. சாத்தனார் அந்த மாலைகளில் ஒன்றை எடுத்தார்.
“வெற்றியுடன் திரும்புங்கள் வேந்தே” சொன்னபடி வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபருக்கு பாண்டியர்களின் மலரான வேப்பம்பூ மாலையை அணிவித்தார். அதன் பின்னர், அழகன் தட்டை ஸ்ரீவல்லபரிடம் நீட்ட, மாலைகளை ஒவ்வொன்றாக எடுத்து, இளவரசர் வரகுணவர்மர், தளபதி அழகன் மற்றும் சில வீரர்களுக்கு தனது கையால் அணிவித்தார் வேந்தர் ஸ்ரீவல்லபர். மாலைகளை அணிவித்த பின்னர் எட்டிச் சாத்தனாரைப் பார்த்தார்.
“சாத்தனாரே, பலி தயாராக உள்ளதா?”
“தயாராக உள்ளது வேந்தே” சொன்ன சாத்தனார் அருகிலிருந்த வீரனைப் பார்க்க, அந்த வீரன் விரைந்து சென்று எருமைக்கடா ஒன்றை இழுத்து வந்தான். அந்த எருமைக்கடாவின் உடலில் குங்குமம் பூசப்பட்டிருந்தது. கருத்த உடலில் சிவப்பு நிறம் பூசப்பட்டதால், ஒரு புது வண்ணத்துடன் இருந்தது.
“வேந்தே, பலி தயார்” சொன்னபடி வந்த அந்த வீரனைப் பார்த்தார் ஸ்ரீவல்லபர்.
“அழகா… பலி காரியத்தைத் தொடர்ந்து செய்” ஸ்ரீவல்லபர் அனுமதி தர, இரு வீரர்கள் அந்த எருமைக் கடாவை கயிற்றில் பிணைத்து இரண்டு பக்கமும் பிடித்துக்கொண்டனர். ஸ்ரீவல்லபர் கையில் செவ்வரளி மாலை ஒன்றைக் கொடுத்தார் பாண்டிய படைத்தளபதி அழகன். தன்னிடம் கொடுக்கப்பட்ட செவ்வரளி மாலையை அந்த எருமைக்கடாவிற்கு அணிவித்தார் பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர்.
அடுத்த கணம் வீரர்கள் ஹோவென ஆர்ப்பரிக்க, ஒரு பெரிய வாளை எடுத்துக்கொண்டு எருமையை நெருங்கினார் அழகன். தனது பலத்தையெல்லாம் இரு கைகளிலும் திரட்டி, ஓங்கி, எருமையின் கழுத்தில் வெட்டினார். அடுத்த கணம், ஊற்றென குருதி கொப்பளிக்க, எருமையின் தலை துண்டானது. வெட்டுப்பட்ட தலை கீழே விழுந்து துடித்து பின் அடங்கியது. தலை வெட்டப்பட்ட உடல் சில கணங்கள் நின்று, பின்னர் கால்கள் மடங்கி கீழே சரிந்தது. போருக்கு புறப்படும் முன்னர் கொடுக்க வேண்டிய பலியைக் கொடுத்து விட்டு, பாண்டியப் படை, பல்லவ சேனையை எதிர்க்க காஞ்சிபுரம் நோக்கி புறப்படத் தயாராக இருந்தது.
“படை புறப்படலாம்” வேந்தர் உத்தரவிட, காலாட்படை வீரர்கள் ஹோவென்ற கூச்சலிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினர். அடுத்து இரதப்படை புறப்பட்டது. அதைத் தொடர்ந்து பாண்டியர்களின் யானைப்படை புறப்பட்டது. அதைத் தொடர்ந்து புரவிகள் வேகநடை போட்டு புறப்பட்டன.
சில நாழிகை நேரத்தில் அந்த திடலின் பெரும்பகுதி படைகள் புறப்பட்டிருந்தன. திடலின் ஒரு ஓரத்தில் சில ரிஷப வண்டிகள் மட்டும் நின்றிருந்தன. ஸ்ரீவல்லபர் அந்த வண்டிகளை நெருங்கினார்.
“தேவையான தளவாடங்கள் உள்ளனவா?”
“உள்ளன வேந்தே” தளவாட அதிகாரி கூறினார்.
“எனில், தாங்களும் புறப்படலாம்” ஸ்ரீவல்லபர் கூற, தளவாடங்கள் இருந்த ரிஷப வண்டிகள் புறப்பட்டன. அடுத்தபடி நின்ற சில ரிஷப வண்டிகளை நெருகினார்.
“உணவுப் பொருட்கள் தேவையான அளவு உள்ளதா?”
“அவசரப் படையெடுப்பாதலால் போதுமான அளவு உணவுப் பொருட்கள் இல்லை வேந்தே. எனினும், போகும் வழியில் சம்பாதித்துக் கொள்ளலாம்”
“எனில், நீங்களும் புறப்படலாம்” சொல்ல கடைசியாக உணவுப்பொருட்களும், சமையல் செய்ய பாத்திரங்களும் இருந்த வண்டி, சமையற்காரர்களை ஏற்றிக்கொண்டு பாண்டியப் படையின் கடைசிப் பிரிவும் பலவர்களுக்கு எதிராக போர் புரியப் புறப்பட்டது.
படைகள் அனைத்தும் புறப்பட்ட பின்னர், கடைசியாக அவர்களைத் தொடர்ந்து பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரும், இளவரசர் வரகுணவர்மரும் புறப்பட்டனர்.
14 Comments
ஒரு போர் தொடங்கும் காட்சியை தத்ரூபமாக கண் முன் கொண்டு வந்துவிட்டது இந்த வார கதையின் பாகம். மிகவும் அருமை. நல்ல வர்ணனை, சிறப்பான விளக்கம். 👏👏
நன்றி ப்பா.. 🙂🙂❤️❤️
அருமை 💐💐💐
நன்றி தம்பி… 🙂🙂
அருமையான எழுத்து நடை 💐💐
நன்றி ப்பா… 🙂🙂
அருமை அக்கா..
நன்றி ப்பா.. 🙂🙂❤️❤️
Superb narration and the preparation for the war scene was flashing in front of me…
Thanks a lot.. 🙂🙂
அருமை அடுத்த அடுத்த அத்தியாயங்கள் இன்னும் அழகு பெறுக!
அன்பும் நன்றியும்… 🙂🙂
Felt I was getting ready to go with the soldiers
Thanks a lot.. 🙂🙂