பத்துமலை பந்தம் | 14| காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 14| காலச்சக்கரம் நரசிம்மா

14. கிராதக குடும்பம்..!

மிதுன் ரெட்டி யின் உயிர், கொடைக்கானல் மலையின் நம்பிக்கை விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த போது, சரியாக மயூரியின் ஹோட்டல் நம்பருக்கு போன் வந்தது. அழைத்தவன் குகன்மணி.

“மயூரி..! நான் குகன்மணி பேசறேன். ஒரு சின்ன ஹெல்ப்..! தமிழ் ஆக்டர் மிதுன் ரெட்டியோட போன் நம்பர் எனக்கு அர்ஜெண்டா வேண்டும். கோலாலம்பூர்ல நடக்கிற ஒரு நட்சத்திர இரவு விஷயமா அவர்கிட்டே உடனே பேசணும்..! எனக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்..! ப்ளீஸ்..!” –குகன்மணி கேட்க, மயூரி யோசித்துவிட்டு, பிறகு பதில் தந்தாள்.

“என் கசின் கனிஷ்காவுக்கு அவரை நல்லாத் தெரியும். ரெண்டு பேரும் சேர்ந்து பல படங்களில் நடிச்சுக்கிட்டு இருக்காங்க. மே பி ஷி நோஸ்..! நீங்க ஒரு ஒருமணி நேரம் கழிச்சு போன் செஞ்சீங்கன்னா, நான் நம்பரை வாங்கித் தரேன்..!” –மயூரி சொல்ல, “தாங்க்யூ.” என்ற குகன்மணியின் குரலில் ஒருவித நிம்மதி தொனித்தது,

திகைப்புடன் போனை கட் செய்தாள் மயூரி..! குகன்மணி அவளது செல்போன் நம்பரைக் கேட்டது இதற்குத்தானா..? இவள் அலட்சியப்படுத்தி அவனுக்கு நம்பரைக் கொடுக்க மறுத்தும், அவன் ஹோட்டல் போர்டுக்கு போன் செய்து இவளிடம் பேசியது, உண்மையிலேயே மிதுன் ரெட்டியின் நம்பரைக் கேட்பதற்கா அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா..? மிதுன் ரெட்டியின் நம்பரை இவளிடம் ஏன் கேட்க வேண்டும்..? பத்திரிகை ஆபீசுக்கு அல்லது சென்னைக்கோ போன் செய்து கேட்டிருக்கலாமே..! சந்தேகமேயில்லை..! குகன்மணியைச் சுற்றி ஏதோ மர்மம் உள்ளது. இவளையே எதற்காகச் சுற்றி சுற்றி வருகிறான்.? இவள் சகோதரி கனிஷ்காவும் மிதுன் ரெட்டியும் காதலர்கள் எனபதைத் தெரிந்து கொண்டுதான், இவளிடம் நம்பரைக் கேட்கிறானா..?

முன்னொரு முறை, கனிஷ்காவின் திருமணத்தை பற்றி இவளது அம்மா சத்தியதேவி கேட்ட போது, அவளுடைய தாய் குணசுந்தரி அலட்சியமாகக் கூறியிருந்தாள்.

“நான் என்ன மதனி அவளுக்கு கல்யாணம் பார்க்கிறது..? அவளே மாப்பிள்ளையைப் பார்த்துக்கிட்டா.! . தன்னோட கூட நடிக்கிற மிதுன் ரெட்டியைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம். அவங்க ஆந்திரா சைடு தான். நம்ம சாதி இல்ல. இருந்தாலும், கோடிகளில் புரளறவங்க . நம்ம அந்தஸ்த்துக்கு ஏத்த இடம்.” –என்று குணசுந்தரி கூறியிருந்தாள். அப்போது மயூரியும் அங்கேதான் இருந்தாள்.

அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவது, இங்கே கோலாலம்பூரில் இருக்கும் குகன்மணிக்கு எப்படித் தெரியும்..? ஏதாவது பத்திரிகையில் படித்திருப்பான். ஆனால் கனிஷ்கா இவளது சகோதரி என்று அவனுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

குழப்பத்துடன் போனை எடுத்து, கனிஷ்காவின் நம்பரை அழுத்தினாள்.

அப்போது, சரியாக அந்த மலைப் பாறையின் குறுகிய ஆறு அடிகளை முடித்துக்கொண்டு, நம்பிக்கை முனையின் விளிம்பில் நின்றிருந்தான், மிதுன் ரெட்டி.. அடுத்த கட்டளையை கூறுவதற்காக வாய் திறக்க முற்பட்டாள், கனிஷ்கா..!

அவள் வாயை திறந்தது, ‘நட’ என்று கூறுவதற்காகவோ அல்லது ‘நில்’ என்பதற்காகவோ இருந்திருக்ககூடும். கனிஷ்காவின் மனதில் என்ன இருந்தது என்பதை அவள்தான் அறிவாள். தனது உயிரை அவளது மனதின் எண்ணங்கள் முடிவு செய்யட்டும் என்று குலை நடுக்கத்துடன் மலை விளிம்பில் தொடர்ந்து நின்று கொண்டிருந்தான் மிதுன். ஓரக்கண்ணால் பின்பாக நோக்கினான். கிடுகிடு பாதாளம், அவனை விழுங்கக் காத்திருந்தது.

‘மகராசி..! என்ன கட்டளையிடப் போகிறாளோ..?’ –கலவரத்துடனும் நடுக்கத்துடனும் மிதுன் நின்றிருக்க, சரியாக சஷ்டி சாமியின் குரல் வேறு, “அவள் உன்னைக் கொன்று விடுவாள்.” என்று செவிகளில் எதிரொலித்துக் கொண்டிருக்க, கனிஷ்கா குரல் எழுப்ப முயற்சித்த போது, சரியாக அவளது மொபைல் ஒலித்தது. அழைத்தது, அவளது கசின் மயூரி. வியப்புடன் போனை எடுத்து பேசினாள்.

“எஸ்..!” –கனிஷ்கா கூற, மயூரியின் குரல் கேட்டது.

“கனிஷ்கா..! மிதுன் ரெட்டி உன் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியம். இப்போ நீ விளையாடிக் கொண்டிருக்கும் ஆபத்தான விளையாட்டை உடனே நிறுத்து.! அவனை நம்பி பலர் கோடிக்கணக்கான பணத்தை போட்டு இருக்காங்க. ! அவன் ஜாதகப்படி உன் கையால் அவன் கொலை செய்யப்படுவான்னு இருக்கச்சே, இப்படி ஒரு விபரீத விளையாட்டை நீ விளையாடினா, நம்ம குடும்ப நிலைமை என்னாகறது..? நீ போலீஸ் கேசுல மாட்டிகிட்டா, நம்ம குடும்ப மானம் கப்பல் ஏறாதா..?”

அதிர்ந்து போனாள் கனிஷ்கா. கொடைக்கானல் மலையில் நடப்பது, கோலாலம்பூரில் இருக்கும் மயூரிக்கு எப்படி தெரியும்..?

“நீ வாயை மூடுடி… பிட்ச்..! எனக்கு அட்வைஸ் செய்யறியா..? உங்கம்மா கேஸுதான் ஏற்கனவே நாறிப்போய் முன்ஜாமீன் கேட்டிருக்காளே..! மூணு பொண்களோட லைஃப்ல அநியாயமா விளையாடிட்டா உங்கம்மா..! நீ எனக்குப் புத்தி சொல்றியா..?” -என்று அலறிவிட்டு போனைக் கட் செய்ய, அந்த கால அவகாசத்தில், மிதுன் ரெட்டி, அவள் அருகே வந்து உட்கார்ந்து அவளது முகவாயை பற்றினான்.

“கனிஷ்கா..! எல்லாத்துக்கும் கோவப்படறதை முதல்ல விட்டு தள்ளு. எனக்கும் பணம் கொட்டிக் கிடக்கிறது. உனக்கும் கொட்டிக் கிடக்கிறது. நாம் மத்தவங்க முன்னாடி சந்தோஷமா வாழ்ந்து காட்டலாம். நமக்குன்னு பிள்ளைங்க பொறந்துட்டா, நாம செல்ஃபிஷா வாழ வேண்டியதுதான். மத்தவங்களை பற்றி ஏன் கவலைப்படறே..?” –மிதுன் அவளைச் சமாதானம் செய்ய, மிதுன் மீது இருந்த உக்கிரம் குறைந்து இப்போது, மயூரியின் மீது கோபம் அதிகரித்திருந்தது .

“என்னோட நாலு வயசு சின்னவ..! எனக்குப் புத்தி சொல்கிறாளா..? சென்னையில குடும்ப மீட்டிங் போது அவளைச் சந்திப்பேன் இல்லே.! அப்ப அவளை உண்டு இல்லைன்னு சிண்டைப் பிடிச்சு கேள்வி கேட்கறேன்..!” –என்றவள் மிதுனைப் பார்த்தாள்.

“மிதுன்..! இதுதான் லாஸ்ட் வார்னிங்..! இனிமே ஜோசியன் சொன்னான், அப்பா சொன்னார்னு என்னை கழட்டிவிட நினைச்சே…. உன்னைக் கொன்னுட்டு, நானும் செத்துப் போவேன். இது உறுதி..! வர்ற வீக்கெண்ட் எங்க குடும்ப பண்ணை வீடு குறிஞ்சில குடும்ப மீட்டிங் நடக்க போவுது. அப்ப நம்ம திருமண விஷயத்தை தாத்தா முன்னாடி எல்லார்க்கும் அறிவிச்சுடப் போறேன்..! ஓகே..! கைவசம் இருக்கற படத்தையெல்லாம் முடிச்சுட்டு, நாம கல்யாணம் பண்ணிக்கிறோம்..! ஓகேயா..?” –கனிஷ்கா எழுந்துகொள்ள, மிதுனும் தனது தலையை அசைத்தபடி எழுந்தான்.

தேஜஸ் சரவணபெருமாள் காலில் கட்டுடன் டீவியைப் பார்த்துக்கொண்டிருக்க, டிவி செய்தியில் செய்த அறிவிப்பு அவனது நெஞ்சில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“ஐபிஎல் மேட்சில் காயமுற்று ஓய்வில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் தேஜஸ் சரவணபெருமாளுக்குப் பதிலாக அரியானாவை சேர்ந்த உத்சவ் தாகூர் குழுவில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த பேட்ஸ்மென் ஆன உத்சவ் தாகூர், ஐபில் மேட்சுகளில் சிறந்த முறையில் விளையாடினால், தனக்கென்று நிரந்தரமாக இடத்தைத் தக்கவைத்துக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் முடிந்து, வரும் உலக கோப்பையில் அவர் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கிரிக்கெட் நோக்கர்கள் கருதுகிறார்கள்.” –செய்தி வாசிப்பவர் கூறியதும், வெறுப்புடன் டிவியை அணைத்தான்.

முக்காலி ஒன்றின்மீது இருத்தியிருந்த, கட்டுக்குள் மறைந்திருந்த தனது வலது பாதத்தையே வெறியுடன் கவனித்தான்.

“எல்லாமே நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது, உத்சவ் தாகூர் வரும் வரையில். ஒரு ஜெயிக்க வேண்டிய மாட்சில், தேஜஸ் சற்றே சொதப்பிவிட, மாட்ச் எதிகளுக்குச் சாதகமாகப் போய்விட்டது. அந்தக் கோபத்தில், அடுத்த மேட்சில் உத்சவ் தாகூரைக் கேப்டன் தேர்ந்தெடுக்க, அவன் மாட்சை வென்று தந்ததோடு அல்லாமல், ஒரு செஞ்சுரியையும் போட்டு, பாயிண்ட்ஸ் டேபிளில் குழுவை மேலே உயர்த்தியிருந்தான்.

இப்போது இவனுக்கு லிகமெண்ட் டேர் ஆகி இருக்க, உத்சவ் உள்ளே நுழைந்துவிட்டான். ஒவ்வொரு முறையும், அம்மா குணசுந்தரி தனது மத்திய அமைச்சர் தோழி ஷைலஜா சேத்தியின் உதவியோடுதான் இவனை டீமில் எப்படியாவது நுழைத்துவிடுவாள். ஷைலஜா சேத்தியின் கணவர் ஆத்மராம் சேத்தி பெரிய தொழிலதிபர். அவரது நிறுவனம்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வங்கியிருந்தது. எனவே இவ்வளவு நாட்களாக எளிதாக டீமில் இடம் பெற்றிருந்தான். லிகமெண்ட் டேர் வடிவில், அதிர்ஷ்டம் உத்சவ் பக்கமாக வீசத்தொடங்கிவிட்டது.

ஆத்திரத்துடன், கையில் இருந்த ரிமோட்டை தனது வலது காலின் மீதே வீசி எறிந்தான். சரியாக, அம்மா குணசுந்தரி உள்ளே நுழைந்தாள். அவளது முகம் சற்றே இருண்டு கிடந்தது. ஆயாசத்துடன் தேஜஸ் பக்கத்தில் சோபாவில் சரிந்தாள்.

“வாட்ஸ் ராங் வித் அவர் ஃபேமிலி..? அப்பா கார் ஷோரூம்ல தீவிபத்து. புதுக் கார்கள் எல்லாம் பத்தி எரிஞ்சுடுச்சு. போன வாரம் தான் ஒரு ஹூண்டாய் அல்கஸார் காரை உனக்கு ஒண்ணு, கனிஷ்காவுக்கு ஒண்ணு சர்ப்ரைஸ் கிஃப்ட் பண்ணறதுக்காக வரவழைச்சிருந்தார். விபத்து நடந்த காலையிலதான் அவை டெலிவரி ஆச்சு..! அப்பா சென்டிமென்டலா ரொம்ப வருத்தப்படறாரு. என்னோட விஷயம் அதை விட மோசம்..! மாநில அமைச்சர் போட்ட மானநஷ்ட வழக்குல முன் ஜாமீன் கொடுக்க மாட்டேன்னு கோர்ட் சொல்லிடிச்சு. என்னை அரெஸ்ட் பண்றதுக்குள்ளாற, நான் உச்ச மன்றத்துக்கு போயி ஸ்டே வாங்கணும். கனிஷ்காவுக்கு பெரிய பட்ஜெட் படம் கை நழுவி போச்சு. அவளுக்கும், மிதுன் ரெட்டிக்கும் வேற எதோ பிரச்சனை. உனக்கும் லிகமெண்ட் டேர்” –என்றாள் குணசுந்தரி.

“லிகமெண்ட் டேரோட மட்டும் இல்லை மம்மி..! என்னோட இடத்தை உத்சவ் பிடிச்சுக்கிட்டான். நீ கொஞ்சம் உன் பிரெண்ட் அமைச்சர் ஷைலஜா சேத்தி கிட்டே சொல்லி, எப்படியாவது, என்னோட இடத்தை திரும்பி வாங்கி கொடும்மா ..! உத்சவ் நிரந்தரமா என் இடத்தை பிடிச்சுட்டா, அப்புறம் என் கதை முடிஞ்சுது..!”

“யூ டோன்ட் வொர்ரி..! நான் சொன்னால் அவ கேட்பா..!” குணசுந்தரி போனை எடுத்து அழுத்த, ஷைலஜா சேத்தி லைனில் வந்தாள்.

“ஹை ஷைலஜா..! இப்பத்தான் எனக்கு ந்யூஸ் வந்தது. எங்க ரிப்போர்ட்டர் சொன்னான். அமைச்சரவை மாற்றத்துல, உனக்கு ப்ரமோஷன் கிடைக்கபோறதாமே…. வாழ்த்துகள்.” –என்று இல்லாத ஒரு செய்தியை, கூசாமல் பொய்யாக சொல்ல, ஷைலஜா அதற்கு ஒரு தாங்க்ஸ் வேறு கூறினாள் .

“பைதிவே, என் பையன் லிகமெண்ட் டேரால இந்த முறை விளையாட முடியலை. பட்…. டீம்ல அவனோட இடத்தை பத்திரமா பார்த்துக்க, ஷைலஜா. அந்த உத்சவ் பயல் நிலையா இடம் பிடிச்சுடப் போறான்..!” –குணசுந்தரி குழைய, ஷைலஜா காட்டத்துடன் கூறினாள்.

“சாரி குணசுந்தரி..! தேஜஸ் மேல எனக்கு அக்கறை இல்லையா..? நானே என் கணவர் கிட்டே கேட்டுட்டேன். ஸ்ட்ரிக்ட்லி வி வில் கோ பை ரூல்ஸ் அண்ட் பர்ஃபாமன்ஸ்ன்னு சொல்லிட்டார். ஐம் ஆம் ஹெல்ப்லெஸ்..!” –என்று உடனடியாக போனை கட் செய்தாள். அவளது அவசரத்தைப் பார்க்கும் போது, நட்பைக் கட் செய்து விட்டாளோ என்று குணசுந்தரிக்குத் தோன்றியது.

எரிச்சலுடன் கீழே கிடந்த ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தாள் குணசுந்தரி. ஷைலஜா சேத்தியும், அவளது கணவன் ஆத்மராம் சேத்தியும் இரு புறம் சிரிக்க, அவர்களது மகள் நிகாரிகா, உத்சவ் தாகூரின் வாயில் கேக் ஊட்டிக்கொண்டிருந்தாள். ஆத்திரத்துடன் குணசுந்தரி ரிமோட்டை அழுத்தி டிவியை அணைக்க, தேஜஸ் வருத்தத்துடன் கேட்டான்.

“ஸோ, ஷைலஜா பொண்ணு நிகாரிகா, உத்சவுக்கு ரூட் போட ஆரம்பிச்சுட்டா. இனிமே அவன் நிரந்தரமா டீம்ல இருப்பான். குணசுந்தரி சொன்னா கேட்பாளா, இல்லை, நிகாரிகா சொன்னா கேட்பாளா..?” -ஆத்திரத்தோடு, முக்காலியின் மீது இருந்த காலை எடுத்து சோபாவில் ஓங்கி மோதினான், தேஜஸ்.

“பொறுமையா இரு..! இது ஒரு டெம்பரரி பிரச்சனைதான். உங்க தாத்தா தைப்பூச பூஜையில் ஏதோ தவறு பண்ணிட்டாரு. அதனாலதான் நம்ம எல்லாருக்கும் பிரச்சனை. வர்ற ஞாயிற்றுக்கிழமை குறிஞ்சி பார்ம் ஹவுஸ்ல குடும்ப மீட்டிங் நடக்குது இல்லே… அப்போ பிரச்சனை தீர்ந்துடும். நம்ம குடும்பத்துக்கு மட்டும் இல்லே. உன்னோட மாமா குடும்பத்துக்கும் பிரச்சனை. மாமி சத்யவதி ஸ்கூல்ல மூணு பொண்ணுங்க காணாமப் போயி அவங்க பாடி புதைகுழி ல கிடைச்சிருக்கு. மூணு பேரும் ரேப் அண்ட் மர்டர் செய்யப்பட்டிருக்காங்க. உங்க மாமாவை ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கியாச்சு. அநேகமா அவரை அக்கட்சியிலிருந்து கல்தா கொடுத்துடுவாங்க. தாத்தா நல்லமுத்துவோட தங்கை தேவசேனை மாடியிலிருந்து விழுந்துட்டாங்க. ஆஸ்பத்திரியில் இருக்காங்க… ஆக மொத்தம் நல்லமுத்து குடும்பத்துல எல்லாருக்கும் பிரச்சனை” –குணசுந்தரி சொல்ல, தன்னையும் அறியாமல் கேட்டு விட்டான், தேஜஸ்.

“என் மாமா பொண்ணு, மயூரிக்கு பிரச்னை ஒண்ணுமில்லையா..?” –தேஜஸ் கேட்டான்.

“உங்க தாத்தனுக்கு செல்லப் பேத்தியாச்சே..! அவளுக்கு எப்படிப் பிரச்சனை வரும்..?” –குணசுந்தரி கோபத்துடன் கூறினாள்.

ஷ்டி சாமி மிதுனின் அப்பா கோதண்டராம ரெட்டியிடம் அவரது கம்பெனி கெஸ்ட் ஹவுசில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“கோதண்டம்..! உன் பையன் உயிரோட இருக்கணும்னா அந்தப் பொண்ணு, கனிஷ்கா கிட்டருந்து அவன் விலகித்தான் இருக்கணும். அவன் நல்லதுக்கு தான் சொல்றேன். இனிமே அவனை அவளோட நடிக்க விடாதே..!” –என்று கூற, அப்போது வேலையாள் ஒருவன் வந்து, சஷ்டி சாமிக்குப் போன் வந்திருப்பதை தெரிவித்தான்.

“எனக்கு யாரு போன் பண்ணுவாங்க..? நான் இங்கே இருப்பது யாருக்குத் தெரியும்..?” –என்கிற ஆச்சரியத்தில், அடுத்த அறைக்கு சென்று லாண்ட் லைன் போனை எடுத்தார்.

போனில் ஒலித்த குரலைக் கேட்டு, ஆச்சரியத்திலும் , ஆனந்தத்திலும் திணறினார்.

போனில் குரல் எதோ கூற, தலையசைத்து ஆமோதித்தார். சஷ்டி சாமிகள்.

“ஆமா..! அந்த குடும்பமே கிராதகக் குடும்பம்..!” –சஷ்டி சாமி கூற, எதிர்முனையில் குரல் சற்று இடைவெளி விட்டு, பிறகு கூறியது.

“ஆமாம்..! குடும்பமே கிராதகக் குடும்பம். மயூரியைத் தவிர..! மயூரி சேற்றில் முளைத்த செந்தாமரை..!” –என்றது அந்த குரல்.

-தொடரும்…

< பதிமூன்றாம் பகுதி

ganesh

4 Comments

  • மிக சுவாரசியமாக செல்லும் கதை நல்ல முத்துவும் சஷ்டி சாமியும் எதிர் எதிராக நின்று களத்தில் நிற்கிறார்கள் சட்டி சாமிக்கு துணையாக குகன்மயூரி வருவார்கள் என நம்புவோம் பத்துமலை முருகனை காக்க இந்த மூவரோடு பத்துமலை முருகனும் சேர்ந்து கொள்வான் என்று நினைக்கிறேன் ஒவ்வொருக்கும் விதவிதமான பிரச்சினைகள் எப்படி மீண்டு வர போகிறார்கள் ஆவலுடன் அடுத்த வாரத்திற்கான காத்துக்கொண்டிருக்கிறேன் மின் கைதடி நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் வாரம் ஒருமுறை என வரும் இந்த கதையை அட்லீஸ்ட் வாரம் இருமுறை ஆக மாற்ற முடியுமா பரிசீலிக்கவும் எங்கள் கோரிக்கையை

    • வாரம் ஒரு முறை வெளிவந்தால்தான் படிக்க ஆர்வம் மற்றும் சுவாரஸ்சியமாக இருக்கும்.

      உடன் உடனே படித்தால் ஆர்வம் குறைந்துவிடும்…

      அதனால்…

      கமலகண்ணன்

  • விறுவிறு….

  • Please have the for the next chapter available. It was available previously not anymore.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...