பத்துமலை பந்தம் | 13 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 13 | காலச்சக்கரம் நரசிம்மா

13. நம்பிக்கை விளிம்பு

“என்னைத் தெரியலையாம்மா..! நான்தான் உன் தாத்தா நல்லமுத்துவோட ஆலோசகர்..!” –சஷ்டி சாமி கூற, அவரை குரோதத்துடன் நோக்கினாள், கனிஷ்கா.

“ஆலோசகரா..? எடுபிடின்னு தானே தாத்தா சொன்னார் ! உங்க ஜோசியம், ஹேஷ்யம் எல்லாத்தையும் பள்ளங்கில வச்சுக்கங்க..! என்னோட வாழ்க்கையில விளையாடினீங்க, அப்புறம், உங்களை என்னோட ரசிகர் பட்டாளம் தெருவுல நடக்க விடமாட்டாங்க.” –கனிஷ்கா ஆவேசத்துடன் கூற, அவளை அலட்சியம் செய்தார், சஷ்டி சாமி.

“அம்மா ! உன் குடும்பத்துக்கு இப்ப சிரம தசை தொடங்கியிருக்கு..! அதுதான் உன்னை இப்படியெல்லாம் பேச வைக்குது..! வேணாம்மா..! உங்க தாத்தா கிட்டேயே நான் இது பத்தி பேசிட்டேன். கோதண்டராம ரெட்டி, என்னோட காலேஜுல படிச்சவன் மா..! நானும், அவனும் கெமிக்கல் இஞ்சினீரிங் படிச்சவங்க. எல்லாமே ரசாயனம் செய்ற வேலை தாம்மா. காதல், காமம், குரோதம், லோபம், எல்லாமே..! உடலில் ஓடுற ரசாயனங்களை கட்டுப்படுத்தத்தான் சித்தர்கள், மருந்தை உட்கொண்டாங்க..! உனக்கு நல்ல மாப்பிள்ளை நிச்சயம் கிடைப்பான். வந்ததுதான் வந்தே..! மிதுணையும், சௌரபாவையும் வாழ்த்திட்டு போ..!” -என்றதும், கனிஷ்காவின் கோபம் அதிகரித்தது.

“வூ ஆர் யூ, ஓல்டு மேன் டு அட்வைஸ் மீ..? இது எனக்கும் மிதுனுக்கும் இடையே உள்ள பிரச்னை..! வேற யாரும் இதுல தலையிட முடியாது. என்னோட தாத்தாவே வந்து சொன்னாகூட டோன்ட் கேர் தான்.” –கனிஷ்கா சொல்ல, சஷ்டி சாமி பொறுமையை இழந்தார்.

“கோதண்டராம ரெட்டி..! நீங்க தொடர்ந்து நிச்சயதாம்பூலத்தை நடத்துங்க..! அந்த பொண்ணு பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்கட்டும். அவளோட தாத்தனும், இப்படித்தான் பிடிவாதக்காரன். நினைச்சது நடக்கலேனா கத்திகிட்டே இருப்பான்.” — என்று சஷ்டி சாமி சொல்ல, அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல், மேடையில் ஒளிர்ந்து கொண்டிருந்த குத்துவிளக்கு அருகில் சென்று நின்றாள், கனிஷ்கா.

தனது துப்பட்டாவைக் கையிலெடுத்து, இடுப்பில் பெல்ட் போன்று கட்டிக்கொண்டு, அதன் முனையை, குத்துவிளக்கின் தீபத்தில் காட்டினாள்.

“நான் உயிரோட இருந்தாத் தானே, மிதுனை கொலை செய்வேன்..? அதுக்கு முன்னாடி நானே செத்துட்டா அந்த ஜோசியம் பொய்யாகிவிடும் இல்லே..!” –என்று கதற, அந்த கருமை நிற துப்பட்டா தீப்பற்றிக்கொள்ள, பாய்ந்து வந்து அதைக் கையால் கசக்கி அணைத்தான், மிதுன் ரெட்டி.

“என்ன காரியம் செய்யறே..?” – மிதுன் சொல்ல, அதனை பார்த்த சஷ்டி சாமிக்கு ஏமாற்றம் உண்டானது.

மிதுனுக்கு சனி மிக நீசமாக உள்ளது. நிச்சயம் அவனது ஜாதகத்தில் பத்தினியால் கொலை செய்யப்படுவான் என்று உள்ளது. சௌரபாவை திருமணம் செய்திருந்தால், அவளது தாலி பாக்கியம் அவனைக் காப்பாற்றும். யாருக்கும் தெரியாமல், பண்ணை வீட்டில் நிச்சயதாம்பூலத்தை ஏற்பாடு செய்ய, கனிஷ்கா வந்து நின்றதும் அவருக்கு பகீர் என்றது. இப்போது எரியத் தொடங்கிய கருப்பு துப்பட்டாவை மிதுனே அணைக்கிறான், என்றால் சனியின் முழுமையான பிடியில் அவன் இருக்கிறான் என்றுதானே தோன்றுகிறது.

“உன்னை நான் கொலை செய்வேனா..? ஜோசியம் அப்படிச் சொல்றதுன்னா அதைப் பொய்யாக்க எனக்கு இதுதான் வழி..!” — என்று கண்ணீருடன் அவனது தோளில் சரிய, மிதுன் தனது தந்தையைப் பார்த்தான்.

“நயினா..! ஆனது ஆகட்டும். நான் கனிஷ்காவைத் திருமணம் செஞ்சுக்கறேன். சௌரபாவுக்கு நானே ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்துத் தரேன். விஸ்வாஸ்..! நான் உனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கேன். நீயும் பதிலுக்கு எனக்கு என்ன கைம்மாறு செய்ய போறேன்னு தெரியலைனு சொல்லுவே..! அந்த கைமாறை இப்போ கேட்கிறேன். நீ என்னோட மாமா பொண்ணு சௌரபா-வைத் திருமணம் செஞ்சுக்கறியா..?”– என்றவுடன் விஸ்வாஸ், தலையசைக்க, அப்போது வெகுண்டு எழுந்தாள் சௌரபா..!

“என்னை ஏலம் போட நீ யாரு மிதுன்..? உனக்கு வேணாம்னா உன் பட டைரக்டருக்குத் தள்ளி விடுவியா..? உங்க சினிமாக்காரங்க சங்காத்தமே வேண்டாம். ” என்றவள், தனது மாமன் மகன் ஸ்ரீநிவாஸிடம் சென்று நின்றாள்.

“முன்னாடி நீ கேட்டு நான் மறுத்திட்டேன். இப்ப நான் கேட்கிறேன்… என்னைத் திருமணம் செஞ்சுக்கிறியா..?” –என்றவுடன் அவன் அவள் கையை ஆதூரத்துடன் பற்ற, அடுத்த கணம், சௌரபா, மிதுனை ஆத்திரத்துடன் நோக்கினாள்.

“எல்லா சினிமாக்காரங்களும் இங்கிருந்து பாக் அப்..! ஒருத்தன் இங்கே இருக்கக் கூடாது..!” –என்றாள்.

னிஷ்கா வெற்றியுடன் காரில் அமர்ந்திருக்க, தனது காரை ஓட்டிக்கொண்டிருந்தான், மிதுன்.

நினைத்தது போலவே செயலாற்றி, அவனது திருமண ஏற்பாட்டை நிறுத்திவிட்டாள்..! தன்னைத்தானே மெச்சிக் கொண்டாள், கனிஷ்கா.

“நிச்சயதாம்பூல மேடையில காட்டின நடிப்பை, சினிமாவுல காட்டியிருந்தாலாவது, தேசிய விருது கிடைச்சிருக்கும். இந்த பிசாசு கிட்டே வகையாச் சிக்கிக்கிட்டோமே..!” -மனதினுள் நினைத்தபடி கொடைக்கானலை நோக்கிக் காரைச் செலுத்திக்கொண்டிருந்தான் மிதுன்.

தனது வெற்றியைச் சிலாகித்து கொண்டிருந்த கனிஷ்கா மௌனமாக வர, அவள் இன்னும் சோகத்தில் ஆழ்ந்திருப்பதாக நினைத்த மிதுன் அவளைச் சமாதானம் செய்தான்.

“இந்த மூடுலே இருந்து வெளியே வா..! நான் உனக்கு பிடிச்ச கொடைக்கானல் குணா குகை பகுதிக்குத் தான் வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கேன். அங்கே தானே முதல்ல நாம ”ஐ லவ் யு” சொன்னோம். அங்கேயே போய் நம்ம காதலைப் புதுப்பிச்சுப்போம்.” –என்றான் மிதுன் ரெட்டி.

இரவெல்லாம் பயணித்து மறுநாள் காலை குணா குகையை அடைந்ததும், கனிஷ்கா அவனை பரவசத்துடன் பார்த்தாள்.

“மிதுன்..! நேத்து நடந்த மாதிரி சம்பவங்கள் இனிமே நம்ம வாழ்க்கையில் நடக்கக்கூடாது. சஷ்டி சாமி மாதிரி ஆளுங்க சொல்றதையெல்லாம் நாம மதிக்கவே கூடாது..” –கனிஷ்கா கூறினாள்.

“அவர் என் அப்பாவோட பழைய கிளாஸ்மேட்..! ரஷ்யாவுல சயன்டிஸ்ட்டா இருந்து இப்பத் துறவியா இருக்கார். அவர் சொல்லித்தான் அப்பா க்ரானைட் பிசினஸ்ல பெரிய ஆளா இருக்கார். அவர் சொல்லித்தான் நானும் சினிமாவுல நுழைஞ்சேன். இப்ப அவரு உன்னை கல்யாணம் செஞ்சுக்க வேணாம்னு சொல்லும்போது அதை மட்டும் கேட்காம எப்படி இருக்க முடியும். அதனாலதான் சௌரபாவை கல்யாணம் செஞ்சுக்கச் சம்மதிச்சேன்.” –மிதுன் கூறினான்.

“மிதுன் என்னோட வாயேன்..!” என்றவள் ஒரு உயரமான பகுதிக்கு அவனை அழைத்துச் சென்றாள்.

“மிதுன்..! இந்தப் பகுதியின் பெயர் நம்பிக்கை முனை..! டிரஸ்ட் பாயிண்ட்..! இந்த பெரிய பாறை சுவற்றுக்கும், இந்த மலை உச்சி யோட விளிம்புக்கும் இடையே ஆறு அடி தான் இருக்கு. இந்த ஆறு அடியில நாம ஒரு விளையாட்டு விளையாடப் போறோம். நீ அந்த பாறையில் சாய்ந்துட்டிரு. நான் இந்த விளையாட்டை விளையாட போறேன் .

மிதுன் அவளை விசித்திரமாகப் பார்க்க, கனிஷ்கா தொடர்ந்தாள் .

“மிதுன்..! நான் பின்னாடியே திரும்பிப் பார்க்காமல் நடக்கப் போறேன்..! விளிம்பு வரைக்கும் அப்படியே நடக்கப் போறேன். உன் மேல முழு நம்பிக்கையை வச்சு, நீ ‘நட’ னு சொன்னா ஒரு அடி பின்னாடி எடுத்து வைப்பேன். நீ நில்லுன்னா அப்படியே நின்னுடுவேன். என்னோட வாழ்க்கையே இப்ப உன் கையில இருக்கு. மொத்தம் ஆறு அடிகள்தான் நடக்கணும்னு எனக்கு தெரியும். இருந்தாலும், நீ சொல்ற கட்டளையைத் தான் நான் ஏற்பேன். ஆறு அடிகள் முடிஞ்சப்புறம் கூட, நீ நட-ன்னு சொன்னா நான் நடப்பேன். என்னோட பகுத்தறிவைக் காட்டிலும், உன்னோட சொல்லுக்குத்தான் நான் மதிப்புத் தருவேன்..!” என்றவள், அவனை நோக்கித் தயாராக நின்றாள்.

“இந்த விபரீத விளையாட்டு தேவையா..?” -மிதுனின் குரலில் லேசான நடுக்கம்.

“என் மேல உனக்கு நம்பிக்கை வரணும்னா, நாம இந்த விளையாட்டை விளையாடி தான் ஆகணும். நான் உன்னைக் கொலை செய்வேன்னு ஜாதகம் சொல்றது உண்மையா இருந்தா, அது நடக்குதான்னு பார்க்கலாம். நான் உன்னையும், நீ என்னையும் எவ்வளவு தூரம் நம்பறோம்னு நாம தெரிஞ்சுக்க வேண்டாமா..?”

மிதுன் ரெட்டி தயக்கத்துடன் சுவற்றுப் பாறையில் சாய்ந்தபடி அமர்ந்தான். தனது முன்பாக ஆறு அடிகளுக்கு மட்டுமே இருந்த நடமாடும் பாதையை அச்சத்துடன் கணக்கிட்டான். பிறகு அவளை நோக்கி கட்டளைகளைக் கூறத் தொடங்கினான்.

“நட..!” -என்றதும், கனிஷ்கா ஓர் அடியைப் பின்பாக எடுத்து வைத்தாள். அவளது கண்கள் மிதுனையே வெறித்தன.

சரியாக ஐந்தடிகள் முடிந்து, ‘நட’ என்றதும் தனது ஆறாவது அடியை எடுத்து வைத்து, கனிஷ்கா மலையுச்சியின் விளிம்பில் நின்றாள்.

“நில்லு..!” என்று பதட்டத்துடன் மிதுன் கூறியதும், திரும்பி பார்த்தாள் கனிஷ்கா. கீழே அதள பாதாளம்..! இந்தப் பகுதியின் பெயர் தற்கொலை முனை..! வேண்டுமென்ற, அதை மறைத்து, நம்பிக்கை முனை என்று மிதுன் ரெட்டியிடம் கூறியிருந்தாள், கனிஷ்கா..!

“இப்ப நீ நட..! நான் கட்டளைகளைச் சொல்றேன்..! நான் செஞ்ச மாதிரி , உன்னோட பகுத்தறிவைக் காட்டிலும் நீ என்னோட கட்டளைகளுக்குத் தான் மதிப்புக் கொடுக்கணும், சரியா..?” — என்றதும், வேண்டாவிருப்பாக எழுந்து நின்றான் மிதுன். நடப்பதற்குத் தயாராக நின்ற மிதுனின் கண்கள், கனிஷ்காவின் மனநிலையை அறிய முயல்வது போன்று பம்பரமாகச் சுற்றின. மிதுனின் காதில், சஷ்டி சாமியின் குரல் ஒலித்தது.

“மிதுன், வேண்டாம்..! இந்த பெண் கையால்தான் உன் மரணம் நேரப் போகிறது.”

“நட..!” –கனிஷ்கா கூறியதும் மிதுன் முதல் அடியை எடுத்து வைத்தான். இதோ..! ஐந்து அடிகளை எடுத்து முடித்து விட்டான். ஒரு வேளை, ஆறாவது அடியை எடுத்து வைத்ததும், தொடர்ந்து நட என்று கூறி, இவன் கதையை முடித்து விடுவாளா..?

மிதுனின் பிடரியில் வேர்க்கத் தொடங்கியது.

ஆறாவது அடியை மிதுன் எடுத்து வைத்ததும், கனிஷ்காவின் மனதில் ஒரு குரல் ஒலித்தது.

“என்னையாடா ஏமாற்றப் பார்த்தே மிதுன்..?” — கனிஷ்காவின் கண்கள் மிதுனின் ஷுஸ் அணிந்த கால்களையும், அவன் பின்பாக விரிந்திருந்த விண்வெளியையும், அப்பால் கிடந்த அதள பாதாளத்தின் விளிம்பையுமே வெறித்தன.

அடுத்த கட்டளையைக் கூறுவதற்காக வாய் திறந்தாள் கனிஷ்கா.

அதே வேளையில்–

கோலாலம்பூர் ஓட்டலில் தங்கியிருந்த மயூரியின் அறையில் போன் ஒலித்தது.

போனை எடுத்த மயூரியின் காதில் ரிஷப்ஷனிஸ்ட்டின் குரல் கேட்டது.

“மேடம்..! உங்களுக்குப் போன் கால்..! கனெக்ட் செய்யலாமா..?” –என்றதும், ‘எஸ்’ என்றாள், மயூரி.

சிறிது அமைதிக்குப் பிறகு, அந்த கம்பீரக் குரல் கேட்டது.

“நான்தான் குகன்மணி பேசறேன்..!”

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...