வாகினி – 13 | மோ. ரவிந்தர்

 வாகினி – 13 | மோ. ரவிந்தர்

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால். காலை முதலே வாகினி, வனிதா, இருவரின் தோழியான முத்துலட்சுமியும் சேர்ந்து வீட்டு வாசலில் சில்லு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர்.

வனிதா சில்லு விளையாட்டின் இறுதி நடையை நிறைவு செய்து கொண்டிருந்தாள். தனது நெற்றிப் பொட்டின் நடுவே மண் ஓடை வைத்துக்கொண்டு மேல்நோக்கி பார்த்தவாரே.

“சரியா… சரியா… சரியா…” என்று கூறிக்கொண்டே வீதியில் வரையப்பட்ட விளையாட்டுக் கோட்டினை ஒரு காலால் தாண்டி வந்து கொண்டிருந்தாள். இன்னும், இரண்டு கோடுகள் தான் அதை மட்டும் சரியாகத் தாண்டிவிட்டால் ஆட்டத்தில் வெற்றி பெற்று விடுவாள், வனிதா.

“சரியா…. சரியா” என்று கூறிக்கொண்டே கோட்டின் மீது இடது காலை வைத்து விட்டாள்.

விளையாட்டில் முறைப்படி வரையப்பட்ட கோட்டின் மீது காலை வைத்துவிட்டால் விளையாடிக் கொண்டிருப்பவர் ஆட்டத்தில் தோல்வி என்று அர்த்தம். அடுத்தவர் ஆட்டத்தை மீண்டும் தொடங்கலாம்.

இப்போது வனிதா தோல்வி அடைந்தவள்.

இதற்கு முன் விளையாடிய விளையாட்டில் வாகினியும், அவளது தோழி முத்துலட்சுமியும் வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தனர். அதனால், இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முனைப்புடன் விளையாடினாள், வனிதா.

ஆனால், இந்த முறையும் தோல்வியைத்தான் தழுவினாள். நெற்றிப் பொட்டில் வைத்திருந்த கல்லை கையில் எடுத்துக்கொண்டு கீழே வரையப்பட்ட கோடுகளை அவசர அவசரமாகக் காலால் அழித்துவிட்டு வேகமாக ஓட்டம் பிடித்தாள், வனிதா.

“ஏய் வனிதா… நீ தோத்துட்டடி கையில வச்சிருக்குற கல்ல கொடு…” என்று வாகினியும், முத்துலட்சுமியும் அவளைத் துரத்திக் கொண்டு பின்னாலே ஓடினார்கள்.

அவள், இப்போது இவர்கள் கையில் சிக்குவதாகத் தெரியவில்லை. வேகமாக ஓடி போய் தனது பெரியப்பா வீட்டின் கதவுக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டாள்.

பிறகு வாகினியும், முத்துலட்சுமியும் வீதியில் வேறொரு கல்லை கையில் எடுத்துக் கொண்டு விளையாட தயாரானார்கள்.

வனிதா ஒளிந்த அந்த அறையில் மகாலட்சுமி டீச்சர் கட்டில் மீது படுத்துக்கொண்டு பெரும் துயரத்தில் உறைந்துக் கொண்டிருந்தாள்.

மனிதனாகப் பிறந்த நாம் அனைவருமே அரிதாரத்தை பூசாத மனமென்னும் உள்ளத்திலே ஒன்று வைத்து. உதட்டு நுனியில் சிரிப்புடன் அடுத்தவர் இடத்தில் உறவாடிக் கொண்டு இருக்கிறோம்.

மாணவர்களுக்கு அறிவு என்னும் பாடத்தைப் புகட்டும் ஆசிரியையாக இருந்தாலும் இவளுக்கு என்று தனியாக ஒரு ஆசை வாழ்க்கை இருக்காதா என்ன?.

நேற்று கபிலன் அப்படிச் சொன்னதை எண்ணி இரவு முழுவதும் உறக்கம் பிக்காமல் போக, கட்டில் மீது போர்வையைப் போத்திக்கொண்டு புரண்டு புரண்டு படுத்ததில் கண்களில் கண்ணீர் மட்டும் தான் மிச்சம்.

“ஏன்டி மகா… விடிஞ்சி பத்து மணிக்கு மேல ஆகுது இதுக்கு மேலயும் தூங்கிட்டு இருந்தா எப்படி?, எழுந்திரு. எழுந்து குளிச்சு முடிச்சிட்டு வீட்ல இருக்குற வேலையப் பாருடி” என்று தாய் திலகவதி வீட்டுக்கு வெளியே இருந்து குரல் கொடுத்தாள்.

அந்தக் கூக்குரலைக் கேட்டு எழுந்து கொள்ளலாமா? வேண்டாமா? என்று நினைத்தாள். ஆனால், அவளால் எழுந்து கொள்ள முடியவில்லை. இரவு முழுவதும் காதல் கண்ணீரில் சிக்கிக் கொண்டவளுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை.

ஜன்னல் திறக்கப்படாததால் அந்த அறையே இருட்டுக்குள் அடைபட்டிருந்தது. அவள் படுத்திருந்த கட்டிலுக்கு வலது புறத்தில் ஜன்னலின் கதவின் வழியே சூரியனின் வெளிச்சம் சிறிதாக சற்று எட்டிப்பார்த்தது.

கதவு திறந்திருந்ததால் வனிதா வந்து கதவுக்குப் பின்னால் ஒளிந்ததை மகா கவனிக்கவில்லை. உண்மைதான், சோகத்தில் இருப்பவளுக்கு நிகழ்கால வாழ்க்கை எப்படித் தெரியும்?

இப்படியே படுத்துட்டு இருந்த அம்மா மீண்டும் ஏதாவது திட்ட போறாங்க என்று நினைத்துக் கொண்டு போர்த்தியிருந்த போர்வையை விலகிக் கொண்டு எழுந்தாள், மகாலட்சுமி.

திடீரென, வீட்டின் கதவை கவனித்தாள். கதவுக்குப் பின்னால் யாரோ நிற்பதைக் கண்டு பெரும் பயத்துடன் “ஐயோ…” என்று பெரிய சத்தமிட்டாள்.

அவள், அப்படிக் கத்தியதைக் கண்டு, கதவு பக்கத்தில் ஒளிந்து கொண்டிருந்த வனிதா பயத்தால் அலறி அடித்து மயங்கி விழுந்தாள்.

பிறகுதான் மகாவிற்குத் தெரிந்தது. வனிதாதான் கதவு பின்னால் ஒளிந்து இருக்கிறாள் என்று.

கட்டில் மீது இறங்கி அவசர அவசரமாகக் குழந்தை இருந்த இடத்திற்கு ஓடி வந்தாள்.

கதவுக்குப் பின்னால் வனிதா மூச்சடைத்து கிடந்தாள்.

அவளை அப்படியே வாரி அணைத்து பெரும் பயத்துடன் அறையை விட்டு வேகமாக வெளியே ஓடி வந்தாள், மகாலட்சுமி.

இப்படி ஒரு சத்தம் வீட்டுக்குள் கேட்க திலகவதியும், அக்கம் பக்கத்து மனிதர்களெல்லாம் வீட்டுக்குள் ஓடி வர அதற்குள் மகாலட்சுமி குழந்தையுடன் வெளியே வந்தாள்.

“உனக்கு என்னடி ஆச்சு எதுக்கு இப்படிக் கத்துற?” என்று திலகவதி கேள்வி எழுப்பினாள்.

“அம்மா குழந்தை பயத்துல மயங்கி விழுந்துட்டா” என்றாள், மகா.

மகாலட்சுமியின் மடியில் வனிதா மயங்கி கிடப்பதைக் கண்டு பக்கத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த நேரம் பார்த்து, அந்த வழியே சென்றுக்கொண்டிருந்த கபிலனும் இந்தப் பெரும் கூட்டத்தைப் பார்த்து அந்த இடத்திற்கு வேகமாக வந்து சேர்ந்தான்.

ஒரு நிமிடம்தான் மகாலட்சுமியின் வீட்டு வாசல் பெரும் மனிதர்களால் நிரம்பி வழிந்தது.

தகவல் அறிந்து கஸ்தூரியும் அங்கு ஓடோடி வந்தாள்.

“ஐய்யோ… என் குழந்தைக்கு என்ன ஆச்சு? இப்படி மயங்கிக் கிடக்கிறாளே…” என்று மயங்கிக் கிடந்த வனிதாவை பார்த்து அழுதுக்கொண்டே தலையில் அடித்துக் கொண்டாள்.

“அழாத… கஸ்தூரி அழாத…” என்று அங்கு இருந்தவர்கள் அனைவரும் அவளைச் சமாதானப் படுத்தினார்கள்.

“அழாதீங்கக்கா…” குழந்தைக்கு என்ன ஆச்சுன்னு நான் பார்க்கிறேன் என்று கூறிக்கொண்டே முதல் உதவி செய்யத் தொடங்கினான், கபிலன்.

குழந்தையின் மூக்குத் துவாரத்தைப் பிடித்து இரண்டொரு முறை அவளது வாயை வேகமாக ஊதினான். பிறகு, அவளின் இதயத்தில் இரண்டு மூன்று தடவை கையை வைத்து மெதுவாக அழுத்தம் கொடுத்ததில். மெல்ல அவளுடைய உயிர் அவளிடத்தில் வந்து சேர்ந்தது.

சற்று நேரத்தில் குழந்தை கண் திறக்க சுற்றி இருந்தவரின் கண்ணில் உயிர் வந்து. இப்போதுதான் மகாலட்சுமியும் உயிர் பெற்றாள். அவள், அவனைப் பார்த்து மெல்ல சிரிக்கத் தொடங்கினாள்.

‘கடைக்கண் பார்வைதனை

கன்னியர்கள் காட்டிவிட்டால்

மண்ணில் மாந்தர்கு

மாமலையும் ஓர் கடுகாம்!’

என்பதைப் போல். குழந்தையை வைத்துக்கொண்டிருந்த மகாலட்சுமியின் உதட்டில் புன்னகை பிறந்ததை அவனும் அறிந்தான்.

அனைவரும் குழந்தை எப்படி மயக்கம் அடைந்தாள் என்று கேட்க ஆரம்பித்தனர்.

“ஏன்டி… என்னடி நடந்தது? ரெண்டு பேருமா இப்படிக் குத்துயிர், கொலை உயிருமா இருக்கீங்க” என்று ஒருத்தி கேட்டாள்.

அதைச் சொல்ல அவளுக்கு வெட்கமாக இருந்தது. இருந்தும், அனைத்தையும் ஒருவரியில் சொல்லி முடித்தாள்.

“கதவு ஓரமாக யாரோ இருக்க மாதிரி இருந்தது. அதான், பயத்தில் அப்படிக் கத்துனே” என்றாள் வெட்கத்துடன், மகாலட்சுமி.

கூடியிருந்த அனைவரும் வானம் இடியும் அளவுக்குச் சிரிக்கத் தொடங்கினார்கள்.

“அதான், நேர நேரத்துக்குத் தூங்கன்னும் சொல்றது. விடிய விடிய முழுச்சிட்டு இருந்தா, இப்படிதான். கண்ட கண்ட விஷயம் எல்லாம் நடக்கும்” என்று மகாலட்சுமியை திட்ட ஆரம்பித்தாள், அம்மா திலகவதி.

கூடியிருந்த அனைவருக்கும் இன்று கூடிப்பேச ஒரு விஷயம் கிடைத்து விட்டது என்று மெல்ல அந்த இடத்தைவிட்டுச் சிரித்துக்கொண்டே கலையத் தொடங்கினர்.

“டீச்சரம்மா, நீங்க இப்படி இருந்தா உங்கக்கிட்ட படிக்கிற பிள்ளைகலெல்லாம் எப்படிப் படிக்கப் போறாங்க?” என்று கேலி செய்தார்கள்.

மகாலட்சுமி, குழந்தையைக் கஸ்தூரியின் கையில் கொடுத்துவிட்டு வெட்கத்தால் தலை குனிந்தவாறு வீட்டுக்குள் ஓடினாள்.

கபிலன், அவளின் அன்னநடையையும், வெட்கத்தையையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

–தொடரும்…

< பன்னிரண்டாவது பகுதி

கமலகண்ணன்

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...