பத்துமலை பந்தம் | 9 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 9 | காலச்சக்கரம் நரசிம்மா

9. மாறாத எண்ணங்கள்..!

குகன் மணியின் எஸ்டேட்டை விட்டுக் கார் கிளம்பியதும், ஒருமுறை திரும்பி, பின் கண்ணாடி வழியாக தங்களை வழியனுப்பிய குகன்மணியை பார்த்தாள் மயூரி. அவள் அங்ஙனம் திரும்பிப் பார்க்கப் போவதை எதிர்பார்த்திருந்தவன் போல, குகன்மணி தனது கைகளைக் கட்டிக்கொண்டு, இவர்கள் காரையே வெறித்துக் கொண்டிருந்தான். சட்டென்று, தனது பார்வையை மயூரி திருப்பிக் கொண்டாள்.

“சம்திங் இஸ் ரியலி ராங் வித் திஸ் கய்..! அவனோட, பார்வை, நடையுடை, பாடி லாங்வேஜ் எதுவுமே சரியில்லை. எரிக்..! நாம ஏதாவது பண்ணனும். இவன் ஓட்டுற விமானத்துல, நம்பிப் போக முடியாது..!” –மயூரி கூற, எரிக் சிரித்தான்.

“இன்னமும் நீ அவனைப் பற்றின எண்ணத்தை மாத்திக்கலையா.?”

“இன்ஃபாக்ட், அவன் மேல் இன்னும் சந்தேகங்கள் அதிகமாகி இருக்கு..! மனசுல நான் நினைச்சதை அப்படியே சொல்றான். சம்பந்தம் இல்லாம என்னை பள்ளங்கிக்கு அழைச்சுக்கிட்டு போன்னு சொல்றான். அந்த ஊர்க் காரியான நானே இன்னும் போகர் பாசறைப் பக்கம் எல்லாம் முழுசாப் பார்த்ததில்லை. பத்து மலை மேலே நின்னுகிட்டுப் பார்த்தா அவனுக்கு போகர் பாசறை தெரியுதாம்… சம்திங் வியர்ட்..!” –மயூரி பொரிந்து கொட்டினாள்.

“இதையெல்லாம் வச்சு, அவன் ஓட்டற விமானத்துல நம்பிப் போக முடியாதுன்னு சொல்ல வர்றியா..? உன்னைப் பைத்தியம்னு சொல்லிடுவாங்க..! விமானத்துல ஏறிட்டா அவன் வித்தியாசமான ஆளு..! பதட்டம் அடையாதவன்..! உனக்குப் பிடிக்கலைன்னா ஒதுங்கி இரு..! அனாவசியமா பிரச்னையைத் தேடிக்காதே..!” –எரிக் கூற, அதற்கு மேல் மயூரி ஒன்றும் பேசவில்லை. ஆனால் மனதில் அவனைப் பற்றிய ஐயங்களை அலசிக் கொண்டே இருந்தாள்.

—————————–

மீண்டும் கோலாலம்பூர் புறப்படுவதற்காக விமானம் பீஜிங் கேப்பிடல் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் தயாராக காத்திருந்தது. சக விமானப் பணிப்பெண்களுடன் விமானத்தை நோக்கி நடந்தாள் மயூரி. இன்று நான்சிக்கு வேறு விமானத்தில் பணி என்பதால், பீ.பெல்ஷீபா என்கிற பெண் இவளுடன் வந்திருந்தாள். அவளை மட்டும் அழைத்துக்கொண்டு, ஏர்போர்ட் ஃபேஸ் மானேஜர் லீ வெய்-யைக் காணச் சென்றாள்.

“சார்..! இதைப் புகாராக கருத வேண்டாம். பட்… விமானம் டேக் ஆஃப் ஆறதுக்கு முன்னாடி, அதைச் செலுத்தும் தகுதியை குகன்மணி படைத்திருக்காரான்னு ஒரு தடவை சோதிக்கும்படி கேட்டுக்கறேன். காரணம், வரும்போது, அவரோட நடவடிக்கைகள் திருப்திகரமானதா இல்லை..!” –வார்த்தைகளை மிகவும் எச்சரிக்கையாகதி தேர்ந்தெடுத்து, அவனைப் பற்றி தனிப்பட்ட முறையில் எதுவும் கூறாமல், அதே சமயம் ‘அவனுடன் பயணிப்பது, காணாமல் போன எம்.எச்.70 விமானத்தைப் போன்று அனுபவங்களைத் தரலாம்’ என்பதை லீ வெய்-க்கு உணர்த்திவிட்டு பிறகு விமானத்தை நோக்கிச் சென்றாள்.

விமானத்திற்குப் புறப்படுவதற்காகக் கையில் பிரீப் கேஸுடன் புறப்பட்டுக் கொண்டிருந்த குகன்மணியைத் தேடிச்சென்ற லீ வெய், “ஜஸ்ட் ஸ்பேர் மீ ஃபைவ் மினிட்ஸ்..” என்று வழிமறித்தார்.

—————————–

கொடைக்கானல் நேஷனல் அகடெமி –பள்ளியின் முதல்வர் சத்தியவதி பாண்டிமுத்து, தனது காரில் இருந்து ஒய்யாரமாக இறங்கினாள். மூலிகை வைத்தியர் நல்லமுத்துவின் மருமகள், ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளரின் மனைவி, விமானப் பணிப்பெண் மயூரியின் அம்மா என்பதையெல்லாம் விட, பள்ளியின் முதல்வராகத் தனக்கென்று ஒரு செல்வாக்கை அந்தப் பகுதியில் கொண்டிருப்பவள். இந்தப் பள்ளியில் தனது பெயரனுக்கு சீட் கேட்டு, ஹிமாச்சலப் பிரதேச முதல்வரே, விமானத்தில் பறந்து வந்து, சத்தியவதியைச் சந்தித்தார் என்றால், பள்ளியின் நல்ல பெயரையும், சத்தியவதியின் செல்வாக்கையும், கற்பனை செய்து பார்க்கலாம்.

பள்ளிக்குக் கிளம்பும் போது மாமனார் நல்லமுத்துவைக் காண்பதற்காக, பள்ளங்கி பவனத்திற்குச் சென்றுவிட்டுதான் வந்திருந்தார்.

“சத்தியவதி..! உன்னை அவசரமாக் கூப்பிட்டு அனுப்பினதுக்குக் காரணம் இருக்கு. இந்த வருஷம் தைப்பூசம் பூஜை நடக்க போறதில்லை. போகர் பாசறைல ஒரு பிரச்சனை. அதுக்கு பதிலா, நம்ம குடும்பத்தினர் எல்லோரும் சென்னை போறோம். நம்ம குறிஞ்சி பார்ம் ஹவுஸ்ல, ஒரு முக்கிய முடிவு எடுக்கணும். ஒருத்தர் விடாம அந்த மீட்டிங்கில் கலந்துக்கணும்..! சால்ஜாப்பு எதுவும் சொல்லாம, நீ சென்னை வரணும்.

எல்லோரும் வர ஒத்துக்கிட்டாங்க. மயூரி கூட, கோலாலம்பூர்ல இருந்து வரேன்னு போன் பண்ணி சொல்லிட்டா. நீதான் கடைசி நிமிஷத்துல பள்ளியில பரீட்சை அது இதுனு வராம இருந்துடுவே..! அதனாலதான் உன்னை நேரே வரச் சொன்னேன்..!” –என்றதும், சத்தியவதி திகைப்புடன் அவரைப் பார்த்தாள்.
.
“பூஜை நடக்க போறதில்லையா..? வழக்கத்துக்கு மாறா இருக்கே..! நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுல காலடி வச்ச நாளுல தொடங்கி, வருஷா வருஷம் நடந்து வரும் பூஜையாச்சே..! அப்படி பூஜை நடக்க முடியாதபடி என்ன பிரச்சனை..?” –சத்தியவதி கேட்க, நல்லமுத்து ஜன்னல் வழியாகத் தோட்டத்தை வெறித்தார்.

“இப்ப ஒண்ணும் கேட்காதே..! சென்னையில எல்லாத்தையும் விலாவரியா சொல்றேன். போன தடவை பூஜையின் போது, குடிச்ச மூலிகைக் கஷாயத்துல ஏதோ குறையுதுன்னு நீதானே சொன்னே. அங்கேதான் பிரச்சனை ஆரம்பம். இப்போதைக்கு நீ இவ்வளவு தெரிஞ்சுக்கிட்டாப் போதும். ஆனால் ஒரு விஷயம்…! எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்க..! மயூரிகிட்ட விமானத்துல பறக்கறப்ப எச்சரிக்கையா இருக்க சொல்லு..! கொஞ்சம் நாளைக்கு அவள் வேலைக்குப் போகாம இருந்தா நல்லா இருக்கும். உன் புருஷன் கிட்டேயும் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு..! அரசியல் எதிரிகள் கிட்டே வாய் கொடுக்க வேண்டாம்.” என்று ஆயிரம் ஜாக்கிரதைகளைக் கூறி எச்சரித்திருந்தார்

“சொல்றேன் மாமா..!” என்று அசட்டையுடன் பதில் கூறிவிட்டு, ஒப்புக்கு குசலம் விசாரித்துவிட்டு, காரை நோக்கி மீண்டும் நடந்து பள்ளிக்குப் புறப்பட்டு விட்டாள்.

“என்ன பெரிசா பிரச்சனை வந்துடப் போகுது..?” –தனது நாத்தி குணசுந்தரியின் குடும்பத்திற்கு ஏற்கனவே பிரச்னைகள் தொடங்கிவிட்டது என்பது இன்னமும் அவளுக்கு தெரியவில்லை, பாவம்..!

செல்போன் மணி அடிக்க, நல்லமுத்துவின் சகோதரி தேவசேனையின் மகன் கார்த்திக் போன் செய்தான்.

“எஸ் கார்த்திக்..!” –தனது கம்பீரக் குரலில், சற்றே அவசரத்தை காட்டி, தான் மிகவும் பிசியாக இருப்பது போன்று பாவ்லா செய்தாள், சத்தியவதி.

“அம்மா மாடிப்படியில் தவறி உருண்டு விழுந்துட்டாங்க. டிரினிட்டி ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன்.” –என்றதும், குரலில் பதட்டத்தை பரவ விட்டாள்.

“ஓ மை காட்..! ஸ்கூல் முடிஞ்சதும் வந்து பார்க்கறேன்..! ஏதாவது ஹெல்ப் வேணுமின்னா போன் செய்..!” –என்று சொல்லிவிட்டு, அலைபேசியைத் துண்டித்தாள்.

அப்போது கூட, மாமனார் நல்லமுத்து விடுத்த எச்சரிக்கைகளுக்கும், இந்த விபத்திற்கும் அவள் முடிச்சுப் போடவில்லை.

“நமது குடும்பத்திற்குப் பெரிதாக பிரச்சனை என்ன வந்துவிடப் போகிறது..?” -என்றுதான் இன்னமும் நினைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்திருந்தாள்.

காரை விட்டு இறங்கும்போதே, அவளுடைய பி.ஏ. தீபரேகா, கைகளைப் பிசைந்து கொண்டு, கண்களில் அச்சத்துடன் அவளை வரவேற்றாள்.

“மேடம்..! ஒரு முக்கியமான நியூஸ்..!” –என்றவள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, சத்தியவதியின் காதில் ஏதோ கிசுகிசுக்க, சத்தியவதியின் முகம் விகாரமாக மாறியது.

“ஐயோ..! பத்திரிக்கைகளுக்குத் தெரிந்தால் பெரிய விபரீதம் ஆகிடுமே..! யார்க்கும் மூச்சு விடாதே..! பேரெண்ட்ஸுக்கும், ஸ்டூடென்ட்ஸுக்கும் இது தெரியவே வேண்டாம்..! நான் சமாளிக்கிறேன்..!” –என்றபடி விருட்டென்று உள்ளே போகத்தான் நினைத்தாள். ஆனால் கால்கள் மரத்துப் போய் அவளை சுமக்க மறுத்தன. கால்கள் துவள, இதயத்தை அச்சம் கவ்வ, கண்கள் இருட்டிக்கொண்டு வர, அப்படியே தனது இன்னோவா காரின் மீது சரிந்தாள். அவளது நிலையைப் பார்த்த தீபரேகாவுக்கு இன்னும் அச்சம் அதிகரித்தது. “மேடம்… மேடம்..!” என்று அலறினாள்..!

கண்களை மூடி, காரின் மீது சாய்ந்திருந்த, சத்தியவதியின் காதில், தனது மாமனார் நல்லமுத்து செய்திருந்த எச்சரிக்கை எதிரொலித்தது..!

“இந்த வருஷம் தைப்பூசம் பூஜை கிடையாது. காரணம் ஒரு பிரச்சனை உண்டாகி இருக்கு. அதனால நம்ம குடும்பத்திற்குப் போதாத காலம் உண்டாகலாம். எல்லா விஷயத்துலயும் ஜாக்கிரதையாக இருங்க.” –என்று கூறியது செவிகளில் மோத, தீபரேகா கூறிய தகவலால் தங்கள் குடும்பத்திற்குப் போதாத வேளை தொடங்கி விட்டதை உணர்ந்தாள். இவள் குடும்பத்திற்கு மட்டுமா போதாதா வேளை..? பார்த்துப் பார்த்து ஒவ்வொரு செங்கலாகத் தேர்தெடுத்து அவள் கட்டியிருந்த அந்த கொடைக்கானல் நேஷனல் அகடெமி பள்ளியின் மவுசுகூட அடிபடும். மாடியில் இருந்து உருண்டு விழுந்த தேவசேனை அத்தையைப் போன்று, இவளும், சமுதாயத்தின், உச்சியில் பெரிய கல்வியாளர் என்கிற மதிப்பில் இருந்து உருண்டு கீழே விழக்கூடும்..! –என்பது அவளுக்கு புரிந்தது.

“மேடம்..!” இந்த முறை தீபரேகாவின் குரலில் கவலையைவிடப் பதட்டம் ஒலிக்க, தன்னைச் சுதாரித்துக்கொண்டு, பார்வையை அவளை நோக்கி உயர்த்தினாள் சத்தியவதி.

ஒரு பரதநாட்டியக் கலைஞரைப் போன்று, தீபரேகா கண்களை அகலமாக்கி, பள்ளியின் வாயிலை நோக்கி உணர்த்த, திரும்பிப் பார்த்தாள், சத்தியவதி.

ஒரு போலீஸ் ஜீப் பள்ளியின் வளாகத்தினுள் நுழைந்து கொண்டிருந்தது.

–தொடரும்…

< எட்டாவது பகுதி

கமலகண்ணன்

6 Comments

  • Semma.பரபரப்பு ! விறுவிறுப்பு!

  • Super…

  • Nice but short one sir

  • Arumai sir

  • விறுவிறுப்பாக செல்கிறது

  • How to go to next episode?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...