ஒரு நாள் மனைவி – தாம்பூலம் – ஓன்று | இன்பா
அடுக்கி வைக்கப்பட்ட மர துண்டுகளை சீவி தீப்பெட்டி குச்சிகளை உருவாக்கி கொண்டு இருந்த இயந்திரத்தின் அருகில்,முல்லை பூக்களை குவித்து போட்டது போல கிடந்த குச்சிகளை, இடுப்பில் சேலையை சொருகி கொண்டு, கூடையில் பேச்சி அள்ள,அருகில் வைத்த கண் வாங்காமல் பார்த்து கருப்பன் குனிந்த நிலையில் அவளின் முன்னழகை திருட்டு பார்வையில் சாப்பிட்டு கொண்டு இருந்தான். .
ஆண்களின் கண்கள் கருணையில் பார்ப்பதை விட காமத்தில் பார்ப்பதைத்தான் விரும்பும் போல, அதற்கு ரகு பார்வையும் விதிவிலக்கு அல்ல..இது காலகாலமாக நடக்கும் அத்து மீறல்…
வேலையில் கவனமாக இருந்த பேச்சியின் மனதில் ஏதோ பயம் படர்ந்து கொண்டு இருக்க, கடிகாரத்தை அடிக்கடி பார்த்து கொண்டாள்.மூன்று மணி ஆகிவிட்டால் வேலை முடித்து விடும். .இங்கிருந்து வாத்தியார் விளை வழியாக குறுக்காக சென்றால் வீட்டிற்கு அரை மணி நேரத்தில் சென்று விடலாம்.
தாசன் எப்படியும் அதற்குள் வந்து இருப்பான். இனிமேல் இப்படி பட்ட விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று அவனிடம் சொல்ல வேண்டும்.ஒவ்வொரு நிமிடமும் அவனை நினைத்து உயிர் போய் வரும் வேதனையை எப்போதுதான் புரிவானோ..? மனதிற்குள் நொந்த படி திரும்பி பார்த்தஅவளின் கண்களில் கருப்பனின் கற்பழிப்பு பார்வை விசனத்தை தர.. சே.. என்றபடி அங்கிருந்து நகர்ந்து போனாள். தினமும் இது நடக்கிறது என்றாலும் இன்று அவளுக்கு அது பெரும் வேதனை…
வேலை முடித்து அவசரமாக வீட்டிற்கு கிளம்பிய நிர்மலாவிற்கு மழை தடங்கலை பதிவு செய்ய, ஒதுங்கி நிற்க இடம் இன்றி, முந்தானையால் தலையை மூடி கொண்டு ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி விரைய தொடங்கினாள்..
வீசிய காற்றின் அசைவில் பனை ஓலைகள், தலைவிரித்து, இசக்கி அம்மன் கோவிலில் சாமியாடும் ஆடும் பெண்களை போல காட்சி தர, ஆள் ஆரவமற்ற அப் பகுதி தனிமையின் பயத்தை பேச்சிற்கு உருவாக்க பயந்தபடி, அக்கம்பக்கம் பார்த்து கொண்டே வேகமாக நடக்க தொடங்கினாள்.
அவள் அருகில் காலடி ஓசை ஓன்று தொடர்ந்து கேட்க,திரும்பி பார்க்க பயந்து இன்னும் வேகம் கட்டிய அவள் அருகில், முழுவதும் நனைந்தபடி கருப்பன் வந்து நிற்க, பயத்தில் ஆடி போனாள்.
ஏடி நிர்மலா எம்புட்டு வேகமா ஓடி வந்தேன் தெரியுமா? அங்க கிளப்பினது போல இருந்துச்சி, அதுக்குள்ள இவ்வளவு தூரம் வந்திட்டே.
அவன் பேச்சை கேட்க விரும்பாதவளாக வெறுப்பை பார்வையில் காட்டி முறைத்து பார்த்தபடி நடக்க. எதையும் கண்டு கொள்ளாதவனாக, பேச்சை தொடர்ந்தான் பேச்சி அவனை விட்டு முன்னே நடக்க ஆரம்பித்தாள்.
அட நில்லு புள்ள, சர்க்கார் அதிகாரி வந்து சொன்னாரு தாசன். ..
தாசன் என்ற வார்த்தை கேட்டதும் அப்படி நின்ற அவள் என்ன என்று பரிதவிப்பில் பார்த்தாள்.
துப்பாக்கி சூடு நடந்ததாமிடி,தாசன் தப்பி எங்கையோ ஓடிட்டானாம். அவனை தேடி வந்து கேட்டுட்டு போனாரு.நீ அவனை கொஞ்சம் உசாரா இருக்க சொல்லு. கஞ்சிக்கு வழியில்லாத நமக்கு எல்லாம் எதுக்கிடி இந்த வேலை. உங்க அப்பன் யார் தலையிலோ உன்னை கட்டி வைக்கணும்னு அவன் தலையில கட்டி வச்சாரு. .தினமும் உனக்கு நரக வாழ்வுதானடி. .
முழுவதும் நனைந்த அவளிடம் புறப்பட்ட கண்ணீர் மழை நீரோடு கலந்து கொள்ள, கருப்பனிற்கு தெரிந்து விட கூடாது என முந்தானையை கொண்டு இறுக்கமாக முகத்தை மூடிபடி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்
செம்மண் சாலைதான் அன்றைய கிராமத்தின் அடையாளம், எப்போதாவது செல்லும் மாட்டு வண்டிகள் போடும் தடம், வளர்ந்து இருக்கும்
புல் மீசைகளை சவரம் செய்து, அரும்பு கோடுகளை பதிவிடும். கொரோனா முழுவதும் அரித்த நுரையீரல் போல சாலையில் ஓரத்தில் நிற்கும் மின்சார
கம்புகள் வெளிச்சத்தை தருவதை விட நாய்களுக்கு கால் உயர்த்தி கழிவிறக்கம் செய்யவும், பெருசுகள் வெற்றிலை போட்டு சுண்ணாம்பு தடவும் உதவும். அப்படி பட்ட செம்மண் சாலை பகுதியில் வீடுகள் சற்று உயரமாக அமைக்கபட்டு இருக்கும். மழை நீர் வீட்டிற்குள் புகுந்து விடக்கூடாது என்கின்ற பாதுகாப்பு.
பேச்சியின் வீடும் சாலை ஓரத்தில் கொஞ்சம் உயரமாக இரண்டு விளை தாண்டி அமைந்து இருந்தது. விளை என்பது மனையை குறிக்கும் சொற்றோடர். நாஞ்சில் பகுதிகளில் மனையை விளை என்பார்கள்.
அழுதபடி நடந்து வந்து கொண்டு இருந்த பேச்சியின் கண்கள் தூரத்தில் இருந்து வீட்டை நோட்டமிட, பதில் வழக்கம் போல. வெறுமை காட்டியது. தாசன் வீட்டில் இல்லை என்பது புரிய, அழுகை கோபமாக மாறி, ஆத்திரமாக முகத்தில் எதிரொலிக்க, மூடிய முந்தானையை வேகமாக விலக்கி விட்டாள்.
முற்றத்தில் வெட்டி போட பட்டு இருந்த தென்னை ஓலைகள் ஈரமாக கிடக்க, அதனை காலால் கிளறி, இரை தேடிய கொண்டு இருந்த சேவலின் அருகில் நின்ற பெட்டை கோழி சிறகு அடித்து திண்ணையில் ஏறி எச்சத்தை அடையாளமாக்கிட,
திண்ணையில் ஒரு ஓரமாக அமர்ந்து ஓலை கீற்றுகளை கீறி, குச்சிகளை எடுத்து கொண்டு இருந்த முருகேஸ்வரி, சு…. என்று கோழியை விரட்ட, அது சபாநாயகரின் அனுமதியை மீறும் சட்டமன்ற உறுப்பினர் போல நடந்தது.
வந்த வேகத்தில் பேச்சி, உமவ வந்தானா? என மாமியாரை பார்த்து கத்த. .
ஏண்டி வரமெனிக்கே கத்திக்கிட்டு வாறே.. அவன் என்ன சீமைக்கா போய் இருக்கான். ராத்திரிகுள்ள வருவான், ஈர துணியை மாத்திக்கிட்டு, கிழங்கும் மீனும் வைத்து இருக்கேன். முதல்ல சாப்பிடு. .
அது ஒன்னுதான் குறைச்சல். உன் புள்ள, துப்பாக்கி சூடு வாங்காம தப்பி இருக்கான். அவனை சுட சொல்லி சர்க்கார் ஆடர். என் தாலி எப்போ எறங்குமான்னு தினமும் நான் சாகிறேன். .சே. . என்ன புழப்போ எனக்கு. .
எ புள்ள என்ன தப்ப செய்ஞ்சான். .அவன குறை சொல்லலான உனக்கு தூக்கம் வராதே. .
இங்கிட்டு பார். ..எதுவும் தெரியாதுபோல நடிக்கிற வேலை வேணாம். உ பாம்படத்தை வச்சி அந்த இழவு கோயில்ல வரி கட்ட வைச்ச. .அப்பமே மனசு பதறறிச்சி, ஒத்த பனைகிட்ட இருக்கிற கோவில் ஒறவு வேணாம்னுனே. .நீ கேக்கல. .
அதுக்கு இப்போ ஏனடி. .
போன வாரம் பரஞ்சோதி பொண்டாட்டி விஷம் குடிச்சி கோயில் பக்கத்தில செத்து போன. ..இதுக்கு முன்னால ஏழு பேர் செத்து இருக்காங்க. ..சாமி குத்தம் சாவு வாங்குதுனு ஊர் பயக வாய் மூடி கிடக்க,உ மவன் யோக்கியன் போல ஏசு பாதிரியாரு மேல பழிய போட்டு போராடுன விடுவாங்களா..? வெள்ளைக்கார துரைக ஆட்சியில நடக்குமா ?முலையை மூட கூட நாம வக்கத்து இருக்கோம்.
யார் செத்தா இவனுக்கு என்ன. .?
என்னடி சொல்லுதே… நா வேணா அந்த பாதிரியாருகிட்ட மன்னிப்பு கேக்கிறேன். எ புள்ள எனக்கு வேணும்டி…
துரைகிட்ட நா வேல செய்றதால சீல கட்ட விட்டு இருக்காங்க. .நீ வேணாம் நா போறேன். எல்லாம் எ நேரம். ..பேசி கொண்டு இருக்கும் போது,பனை ஓலையில் செய்த ஒரு பெட்டியை தூக்கி கொண்டு சர்க்கார் அதிகாரிகள் பேச்சியின் வீட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள். ஓலை பெட்டியில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டு இருந்தது. ..
ஒரு நாள் மனைவி…. தொடர்கிறாள். … வரும் நாள் ரத்தம் பேசும். .
—தொடரும்