ஒரு நாள் மனைவி – தாம்பூலம் – இரண்டு | இன்பா

 ஒரு நாள் மனைவி – தாம்பூலம் – இரண்டு | இன்பா

ரத்தம் கசிந்த நிலையில் பனை ஓலை பெட்டியை தோளில் தூக்கி கொண்டு இருவர் நடந்து வர, முன்னால் காவல் துறை அதிகாரிகளின் காலடிகள் .

வீட்டின் முன் படுத்து கிடந்த நாய், வந்து கொண்டு இருந்தவர்களை பார்த்து எழும்பி குரைக்க,பேச்சியின் மனதில் படபடப்பு கூடி கொண்டே போக திண்ணையில் இருந்த மாமியாரை பார்த்தாள்.

நடக்கப்போகும் விபரீத்தை புரிந்தவளாக மாமியாரிடம் விசும்பல் எழ தொடங்கி இருந்தது .

காவல்துறை அதிகாரிகளின் காலடி ஓசை அருகில் வர, விசும்பல் கிணற்றில் தண்ணீர் இறைக்கும் போது, மேல வரும் வாளி அலம்பி தண்ணீர் கொட்டுவது போல. அழுகையின் நிலையை எட்டின, .. பேச்சின் கண்களிலும் கண்ணீர் ..

ஏம்மா… தாஸ் வீடு இது தானே …

பேச்சி தலையாட்டினாள்

குலசேகரத்தில் இருந்து அருமனை போற வழியிலே ரொம்ப சிதைந்த நிலையில ஒரு பொணம் கிடைக்கிறதா தகவல் வந்துச்சி .நாங்க போவுறதுக்கும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் சம்பவம் நடந்து இருக்கணும் .

அங்க கிடந்த சைக்கிள வைச்சிதான் தாசனுனு கண்டு பிடிச்சொம் ..அடையாளம் தெரியாதே அளவிக்கு சிதஞ்சி போச்சி … அதான் ஓலையில் கட்டி இங்கே கொண்டந்தோம் ..பெட்டியை பிரிக்கிறேன் பார்த்து சொல்லு உ மாப்பிள்ளை தான்னு ? காவல் துறை அதிகாரி சொல்ல,பேச்சிக்கு உலகமே சுத்துவது போல இருந்தது ..

அப்படியே திண்ணையை தாங்கி கொண்டு இருந்த உழுத்து போன மர தூணில் சாய்ந்தாள் ..அவளுக்கு இப்போது அது சிலவை மரமாக தெரிந்தது ..

காவல்துறை அதிகாரி சொன்னதை கேட்டு,மார்பில் அடித்து கொண்டு விசும்பிய மாமியார் சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள்

ஐயோ மவ ராசா ஊர் வம்புக்கு போவதென்னு தலைபடா அடிச்சிகிட்டேனே ..ஏ மக்கா உன்ன ஓலை பெட்டியிலயா கொண்டு வரணும் ..இப்படி நீ போவவா எ வவுத்தில பிறந்தே ..கோதும தர படுபாவிக மதம் மாத்த வரலா ..எ புள்ளையை கொல்ல வந்திருக்கானுக ..

வாய மூடிட்டு இருமா..சும்மா ஒப்பாரி வைக்காதே ..முதல ஓ மவனேனு பாரு .ஏலே ஓல பெட்டிய கீழ இறங்கி வைங்கலே ..மேலாட்டமா கட்னா கவுத்த அவுருங்க ..பெட்டி திறந்திரும்லே ..

பெட்டியை கொண்டு வந்தவர்கள், அதை கீழே இறக்கி வைத்து திறக்க தயாராக தோளில் வழிந்த கொண்டு இருந்த ரத்தத்தில் ஈக்கள் மொய்க்க தொடங்கிட .தள்ளி நின்ற நாய் வேகமாக பெட்டியின் அருகில் ஓடி வந்தது

ஏலே …அந்த நாயா தொறத்திலே…தொறத்திட்டு உ தோள்ல இருக்கிற ரத்தத அந்த வாழையில காஞ்ச தார் கிடக்கு பாரு அதை எடுத்து துடைச்சிகிட்டு பெட்டிய தொறலே

காவல் அதிகாரி சொல்ல நாயை துரத்தி விட்டு வாழை தாரை எடுத்து வழிந்த ரத்தத்தை இருவரும் துடைத்து கொண்டு பெட்டியை திறந்தனர் ..

கூழ் செய்யப்பட்ட நிலையில் ஒரு உடல் …தலை எது கால் எது என்பது கூட தெரியவில்லை .சதைகளுக்குள் அங்கங்கே நீண்டு கொண்டு இருந்த எலும்புகள் .பெட்டியை திறந்தும் வீட்டின் அருகில் இருந்த குப்பை மேட்டின் பதுங்கி இருந்த நாய் முன்பை விட வேகமாக குரைத்து கொண்டு பெட்டியின் அருகில் ஓடி வந்தது ..

நாயின் குரைப்பை கேட்டு, கட்டு சுவரில் நின்று கொண்டு இருந்த சேவல் சிறகு அடித்தது பக்கத்து விளைக்குள் பயந்து ஓடியது

ஏலே ஒரு கல்லு எடுத்து அந்த நாயா நாலு சாத்து சாத்து…ஏம்மா நீ இங்க வாம்மா..வந்து ஓ புருஷனா பாரு ..இடுப்பில் இருந்து இறங்கிய கால் சட்டை மேல தூங்கி போட்ட படி காவல்துறை அதிகாரி சொன்னான்

பேச்சி மனதுக்குள் கடவுளை வேண்டிக்கொண்டு பதைபதைப்பில் பெட்டியின் அருகில் வந்தாள்.

மாமியாரும் முந்தானையில் மூக்கை சீந்தி கொண்டு திண்ணையில் இருந்து இறங்கினாள்..வயோதிகத்தில் சுருங்கி போன அவளின் தோலினை போல அவளின் மனது மகன் ஏற்படுத்திய வேதனையில் சுருங்கி போய் இருந்தது ..ஆனாலும் பாசம் விடவில்லை

பெட்டியை பார்த்த பேச்சி அதில் நீட்டி கொண்டு இருந்த கட்டை விரல் ஒன்றை பார்க்க ரத்தத்தோடு இணைந்து தெரிந்த அந்த வளையம் தாசனின் உடல் என்பதை சொல்லாமல் சொல்லிட . ஏப்பா..நீ போய்டியா என பேச்சி கத்த..இறந்தது தாசன் தான் என்பதை காவல் துறை அதிகாரி புரிந்து கொண்டான் ..

எ பிள்ளையை காட்டுங்கய்யா என மாமியார் கத்த,

ஏல கிழவிகிட்ட காட்ட வேணாம் ..பெட்டிய மூடி அந்த கவுத்திலே காட்டுங்கலே காவல் துறை அதிகாரி சொல்ல காரியம் படபடவென முடிந்தது

இங்க பாருங்கம்மா பாடிய போஸ்ட்மார்ட்டம் பண்ணிதான் தரமுடியும் சொல்லும்போது சர்க்கார் ஆசுபத்திரிக்கு வாங்க …சொல்லி கொண்டே காவல்துறை அதிகாரி போக,தாசன் உடல் தாங்கிய ஓலை பெட்டியும் போக தொடங்கியது ..அதில் இருந்து சிந்திய ரத்த சொட்டுகள் முற்றத்தில் இறுதி உறவாக

குவித்து போட்டு இருந்த வைக்கோலில் அப்படியே உட்கார்ந்த பேச்சின் கண்களில் தாசனின் இழப்பு பெரிய வலியை கொண்டு வந்தாலும், கட்டை விரலில் தெரிந்த வளையம் ..கதை ஒன்றை மனதில் நிழலாட செய்தது

பேச்சி இந்த பெயர் பார்வதி புரத்தின் அடையாளம் என்று கூட சொல்லாம்.. இப்படி ஒரு தேவதை கிராமத்தில் இருக்குமா? என்ற ஐயம் ஏற்படுகின்ற அளவிற்கு அழகில் ரதியையும் மிஞ்சும் பேரழகியாய் இருந்தாள்.

பக்கத்து கிராமங்களில் இருக்கும் இளைஞர்கள் கூட ஏதாவது காரணம் சொல்லி பார்வதிபுரம் வந்து பேச்சியின் கடைக்கண் படாதா என ஏங்கி கொண்டு அலைவார்கள் ..

தாவணி கட்டி கொண்டு அவள் நடந்து வந்ததால், மெல்லிய கோடு போல வெளியே தெரியும் அவளின் இடை வானவில்லை பிரசவிக்கும் .குழிக்குள் இருந்து எட்டி பார்க்கும் முசல்குட்டியின் அழகிய வடிவத்தை அவளின் முன்னழகு காட்டி, பிரஞ்ச அழகியின் அவயம் நான் என்று நெஞ்சு நிமிர்த்தும். நிலவு தொலைந்து விட்டதாக வானம் பார்வதிபுரத்தில் தேடுதல் நடத்தி பேச்சியின் காலில் சரணாகதியாகும் ..அத்தனை அழகு அவள் ..

எப்போதுமே அழகான பெண்கள் சுமாரான ஆண்களிடம் மயங்கி விடுவார்கள் இந்த நியதி பேச்சின் வாழ்விலும் நடந்தேறியது .பனையேறி குடும்பத்தை சேர்ந்தவன் தாசனிடம் மயங்கி போனாள் .

கிறித்தவ மதத்தை பரப்பும் நோக்கோடு வந்தவர்கள் இளைஞர்களுக்கு கல்வி அறிவு ஊட்டுவதாக கூறி கொண்டு கோதுமையை கொடுத்து மதத்தை திணித்தார்கள்.

சாப்பாட்டுக்கு வழயில்லாத பல குடும்பங்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளை இங்கு அனுப்பி வைத்து, ஒரு வேலை பசியாவது ஆறட்டும் என தங்கள் இயலாமையில் மத அடிமைக்கு விலை போனார்கள்.. .தாசனும் பேச்சியும் இங்கு சந்தித்து கொண்டார்கள் .

சாத்தான் செய்த பாவம் காதல் என சொல்லபட்ட காலம் என்பதால் காதலிப்பது பெரிய தவறாக திணிக்கப்பட்டது.தமிழ் இலக்கியங்கள் பல காதலை குறித்து எழுதி இருந்தாலும் சமுதாயம் காதலை பாவமாக பார்த்து கொண்டு இருந்தது

பேச்சிக்கும் தாசனுக்கும் இடையே ஒரு ஈர்ப்பு இருந்தது என்றாலும் அது காதலா என்பதை அவர்கள் அறியவில்லை ..அறிகின்ற அறிவையும் சமுதாயம் அவர்களுக்கு தரவில்லை.

பனை ஓலைகளால் வேயப்பட்ட குடிசையில் தாசன் குடும்பம் வாழ்ந்து கொண்டு இருந்தது காலையில் ஐந்து மணிக்கு எழுந்து போய் அறுபது பனைகளில் ஏறி பதநீர் எடுத்து வந்து காய்த்து கருப்புக்கட்டி தயார் செய்து விற்பதுதான் அவனின் அப்பா வேலை

பாதி பின்புறம் தெரிய துண்டு ஒன்றை இடுப்பில் கட்டி கொண்டு பனை பூவை சீவும் வெட்டு கத்தி,சுண்ணாம்பு தடவும் கம்பு போன்ற பொருட்களை குடுவை போன்ற வடிவ தாங்கியில் வைத்து இடுப்பில்அதனை லாவகமாக உடைபோல அணிந்து கொண்டு, பனையேற உதவும் கால் நரை கொண்டு விடியற் காலையில் தாசனின் அப்பா பனையேறும் காட்சி கிராமத்தின் அழகியலை சொல்லும் அற்புத கவிதை ..

வறுமையின் கோடுகள் உடம்பில் வரைகலை எழுதினாலும் அத்தனையும் மீறி சிரிக்கும் கவிதை கிராமத்துக்கார்களின் கள்ளமில்லா சிரிப்பு .

ஒரு நாள் தாசனின் அப்பாவிற்கும் உடல் நிலை சரியில்லாமல் போக பனையேறும் வேலை தாசனிடம் வர ..அப்பாவின் அடையாளத்தை வாங்கி கொண்டு பனையேற கிளம்பினான்

விடியற்காலை ..சூரியன் போதை மயக்கத்தில் கடல் காதலியின் இதழில் கிடைத்த சிவப்பை வாங்கி கொண்டு மெதுவாக மேக மிதிவண்டியில் வான சாலைக்கு வந்து கொன்டு இருந்தான் ..

பனைமர பொந்துகளில் கூடு கட்டி இல்லறம் நடத்தி கொண்டு இருந்த பச்சை கிளிகள் இரவு முழுவதும் பெய்த பனியின் குளிரில் இதம் கண்டு, காமம் கொண்டு களித்ததை குரலில் பாடலாக பாடி சொல்லி கொண்டு இருக்க, அக்கா நானும்தான் என கூட்டமாக பறந்த காக்கைகள் எதிர் பதில் சொல்ல, இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி ஒரு கோழியும் கிட்ட வில்லை என் நரி கோபத்தில் நாறடித்து கொண்டு போக, ரம்மியமாக இருந்த அந்த காலை பொழுதினை தாசனின் காலடிகள் பாதித்தன…

கொடுக்கரின் பானையை முதலில் ஏறு என அப்பா சொல்லி விட்டதால் கொடுக்கரின் விளையை தேடி போய், முதல் பானையை ஏற தொடங்கும் போது அந்த பகுதியே அதிரும்படி வீல் என்று ஒரு பெண்ணின் அலறல்

< முதல் பகுதி | மூன்றாவது பகுதி >

கமலகண்ணன்

1 Comment

  • படிக்க, படிக்க மிக ஆவலாய் இருந்தது.. பேச்சியை பற்றிய வர்ணனை நேரில் பார்த்தது போல இருந்தது.. மிகவும் அருமை.
    நா.ரமேஷ்பாபு, மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...