பேய் ரெஸ்டாரெண்ட் – 5 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 5 | முகில் தினகரன்

நகரின் முக்கியச் சந்திப்புக்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் “பேய் ரெஸ்டாரெண்ட்”டின் துவக்கம் குறித்த ஃப்ளக்ஸ் பேனர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க,

மீடியாக்காரர்கள் அதைப் பற்றிய கவர் ஸ்டோரி எழுத “பேய் ரெஸ்டாரெண்ட்” உருவாகும் கட்டிடத்தின் முன் வந்து குவிந்தனர்.

ஆனால், அவர்களால் அங்கு நடக்கும் ஏற்பாடுகள் எதையுமே பார்க்க முடியவில்லை. காரணம், கட்டிடத்தின் முன்னால் பெரிய தடுப்பு போடப்பட்டு உள்ளே மற்றும் வெளியே செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் டெக்கரேஷன் வேலைகளை ரகசியமாக வைத்திருந்தனர்.

“சார்…பொதுவா எல்லோருமே சாமி பெயரையோ இல்லேன்னா “டீலக்ஸ் ரெஸ்டாரெண்ட்”… “ப்ளூ ஸ்டார் ரெஸ்டாரெண்ட்”ன்னு ஏதாவது ஃபேன்ஸி பெயரைத்தான் ரெஸ்டாரெண்டுக்கு வைப்பாங்க!…ஆனா…நீங்க என்னடா?ன்னா “பேய் ரெஸ்டாரெண்ட்”னு வெச்சிருக்கீங்க!…அதுக்கு என்ன சார் காரணம்?” ஒரு ரிப்போர்ட்டர் ஆனந்தராஜைக் குடைய,

மெலிதாய் முறுவலித்த ஆனந்தராஜ், “அந்தக் காரணத்தை திறப்பு விழா அன்று வந்து பாருங்க…நீங்களே தெரிஞ்சுக்குவீங்க” என்றான்.

“ஒரு சின்ன க்ளூ குடுங்களேன் சார்…”கெஞ்சினாள் ஒரு பெண் ரிப்போர்ட்டர்.

“க்ளூவா?” என்றபடி மேவாயைத் தடவிய ஆனந்தராஜ், “ம்ம்ம்ம்…உங்களுக்கு பேய் நம்பிக்கை இருக்கா?” கேட்டான்.

அந்தப் பெண் ரிப்போர்ட்டர், “சுத்தமாய் இல்லை” என்றாள் புன்னகைத்தவாறே,

“அப்ப நீங்க கண்டிப்பா எங்க ரெஸ்டாரெண்டுக்கு வாங்க…அப்புறம் நம்ப ஆரம்பிச்சிடுவீங்க”

“ஆஹா…நீங்க சொல்றதைப் பார்த்தா நீங்க கேரளா போய் மாந்திரீகர்களைப் பிடிச்சு…நிறைய குட்டிச் சாத்தான்களைக் கொண்டு வந்து உள்ளார அடைச்சு வெச்சிருக்கீங்களோ?” இன்னொரு ஆண் ரிப்போர்ட்டர் கேட்க,

“அதுதான் சஸ்பென்ஸ்” என்று சொல்லி விட்டு, அங்கிருந்து லாவகமாய் எஸ்கேப் ஆனான் ஆனந்தராஜ்.


ன்றுதான் “பேய் ரெஸ்டாரெண்ட்” திறப்பு விழா.

தொடர்ந்து பேய்ப் படங்களையே பார்ட்-1, பார்ட்-2, பார்ட்-3 என்று எடுத்து சினிமா இண்டஸ்ரியில் “அமானுஷ்யத் திலகம்” என்று பெயர் வாங்கியிருந்த இயக்குனர் ரூஃபஸ் திறப்பு விழா செய்ய சென்னையிலிருந்து முதல் நாளே வந்து “ஹோட்டல் சிட்டி டவர்”ல் தங்கியிருந்தார்.

விமான நிலையத்திலிருந்து அவரை அழைத்து வந்த திருமுருகன், விஜய சந்தரிடம் முணுமுணுப்பாய் புலம்பினான். “ஹும்…அவரு சரியில்லை விஜய்”

“ஏண்டா அப்படிச் சொல்றே?”

“அவரோட எல்லா படங்களிலும் அந்தக் கவர்ச்சி நடிகையைத்தான் ஜோடி போடுறார்..அதே மாதிரி சென்னைல நடக்கற எல்லா விழக்களுக்கு அந்த நடிகை கூடத்தான் போறார்…வர்றார்…ஆனா…நம்ம ஃபங்ஷனுக்கு மட்டும் தனியா வந்திருக்கார்” வருத்தமாய்ச் சொன்னான்.

“ஓ…அப்ப நீ அவரை பிக்அப் பண்ணப் போனது அந்தக் கவர்ச்சி நடிகையைப் பிக்அப் பண்ணத்தானா?”

“அப்படின்னு சொல்ல முடியாது…அட்லீஸ்ட் கூட நின்னு ஒரு போட்டோவாச்சும் எடுத்திருப்பேன்” என்றவனின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்த விஜயசந்தர், “அவனவன் நாளைக்கு நடக்கற திறப்பு விழாவிற்கு வர்ற வி.ஐ.பி.க்களை எப்படி ஹேண்டில் பண்றது?…அதே மாதிரி பொதுமக்கள் கூட்டமும் எக்கச்சக்கமா வரும்…அவங்களை எப்படிச் சமாளிக்கறது?ன்னு தெரியாம தவிச்சிட்டிருக்கோம்…உனக்கு கவர்ச்சி நடிகை கேட்குதா?…உனக்குத்தான் பொட்டிக்கடை ரஞ்சிதா இருக்காளே…போய் அவ கூட போட்டோ எடு” என்றான் சத்தமாய்.

காலை எட்டு மணி ஃபங்ஷனுக்கு ஆறரை மணியிலிருந்தே கூட்டம் பிதுங்கியது.

பொள்ளாச்சி ரோட்டில் அந்தக் காலை நேரத்திலேயே டிராபிக் ஜாம் ஆரம்பமானது.

ஃபங்ஷனுக்கு வரும் கார்களை நிறுத்துவதற்கென்று பக்கத்து காலி இடத்தில், அந்த இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று, பிரத்யேக “கார் பார்க்கிங்” ஏற்பாடு செய்திருந்தனர் பேய் ரெஸ்டாரெண்டின் மும்மூர்த்திகள்.

காவல் துறை உயர் அதிகாரி, உள்ளூர் தொழிலதிபர், ரோட்டரி மற்றும் லயன்ஸ் கிளப் பெருந் தலைகள், கோயமுத்தூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், என பலர் அங்கு வந்து கூடியிருக்க,

சரியாக எட்டு மணி வாக்கில்,

ரெஸ்டாரெண்டின் வாயிலில் கட்டப்பட்டிருந்த சிகப்பு ரிப்பனை “க..ர்..ர்..ர்..ர்..ர்..ர..க்” என்று வெட்டினார் பேய்ப்பட இயக்குனர் ரூஃபஸ்.

“ஹேய்ய்ய்ய்ய்ய்” என்ற கூச்சலும், “பட…பட”வென்ற கை தட்டலும் அந்த இடத்தின் அமைதியைக் குலைக்க,

“ச்சூ…சத்தம் போடாதீங்கடா” என்ற பெண் குரல் திருமுருகனில் காதருகே ஒலித்தது.

மிரண்டு போய்த் திரும்பிப் பார்த்தவன். “ஆஹா…அந்தக் குரல் மறுபடியும் கேட்க ஆரம்பிச்சிடுச்சா?” தனக்குள் சொல்லிக் கொண்டான்.

ரிப்பன் வெட்டப்பட்டதும் வி.ஐ.பி.க்களும், ஏற்கனவே அனுமதி பெற்றிருந்த மீடியா ஆட்களும், பொது மக்களில் சிலரும் உள்ளே நுழைந்தனர்.

மங்கலான வெளிச்சத்தில் ஒரு மர்ம குகை போலிருந்த அந்த ஹாலுக்குள், “ஹூஊஊஊஊஊ” என்று எங்கோ ஒரு ஓநாய் ஊளையிடுவது போன்ற ஓசை கேட்டுக் கொண்டேயிருந்தது. திடீர் திடீரென்று ஒரு பெண்ணின் அடிவயிற்று “வீல்” அலறல் ஒலித்து அங்கிருப்பவர்களை அச்சமுற வைத்தது.

சுவற்றில் ஆங்காங்கே தீவட்டிகள். அதைச் சுற்றி செயற்கை நைலான் ஒட்டடைகள்.

மேல் கூரையில் மூன்று பெரிய தொடை எலும்புகளால் செய்யப்பட்ட சீலிங் ஃபேன், நிதானமாய்ச் சுழன்று கொண்டிருந்தது.

மனிதக் கால்கள் போன்றே வடிவமைக்கப்பட்ட வெண்ணிற பிளாஸ்டிக் கால்கள் கொண்ட மேஜைகள் மற்றும் சேர்கள் அந்த ஹாலில் நிறைந்திருக்க,

அதன் மேல் தட்டில் மண்டை ஓடு போன்ற வாட்டர் ஜக்.

சீலிங்கில் அவ்வப் போது ஒளிர்ந்து மறையும் பேய் முகங்கள்.

எல்லோரும் கிலி அப்பிய முகத்தோடு, அகல விரிந்த விழிகளோடு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்க,

“தொத்”தென்று ஹாலின் மத்தியில் வந்து விழுந்தது ரத்தச் சிவப்புடன் ஒரு மனிதக் கை.

“அய்யோ” என்று கத்தியபடி ஓடினாள் ஒரு பெண்.

நெற்றியைச் சுருக்கிக் கொண்டு காவல்துறை அதிகாரி அதை எடுக்கப் போக, “சார்…ஒன் மினிட்…அதை நீங்க எடுக்க வேண்டாம்!…அதை எடுப்பதற்கென்று ஒருத்தர் வருவார்” என்று சொல்லி விட்டு ஆனந்தராஜ் கிச்சன் ஏரியாவைப் பார்க்க,

“ஹி…ஹி…ஹி..”என்று சிரித்துக் கொண்டே வந்தது ஜகன்மோகினி படத்தில் வருவது போன்ற வெள்ளை நிறப் பிசாசு. தலையை விரித்துக் கொண்டு, ரத்தக் கறை படிந்த பெரிய பெரிய பற்களைக் காட்டிக் கொண்டே வந்த அது, குனிந்து அந்த மனிதக் கையை எடுத்து அதிலிருந்த சிவப்பு நிறக் குருதியைத் தொட்டு நக்கியது.

எல்லோரும் முகச் சுளிப்போடு அதைப் பார்க்க, சிரித்தபடியே அந்த மனிதக் கையை தான் வாங்கிக் கொண்ட ஆனந்தராஜ், அந்தப் பிசாசைப் பார்த்து, “உள்ளே போ” என்று பாட்ஷா ரஜினி போல் இரும்புக் குரலில் சொல்ல,

அது மறுபடியும் கறைப் பற்களைக் காட்டிச் சிரித்தவாறே ஓடியது.

தன் கையிலிருந்த மனிதக் கையை அந்தக் கூட்டத்தினரிடம் காட்டி, “இது உண்மையில் மனிதக் கை இல்லை!…அதே போல் செய்யப்பட்ட ஒரு கேக்…இதன் மீது இருக்கும் ரத்தம் சிகப்பு கிரீம்” என்று விவரிக்க எல்லோரும் ஓங்கிக் கைதட்டி தங்கள் பாராட்டைத் தெரிவித்தனர்.

“இது பொய்க்கை…உண்மைக் கை ஒரு நாள் வரும்” என்று திருமுருகனின் காதோரம் அந்தப் பெண் குரல் சொல்ல,

திரும்பி மேலும், கீழும் பார்த்து விட்டு, வடிவேலுவைப் போல், “அவ்வ்வ்வ்வ்வ்” என்று சத்தமில்லாமல் அழுதான் அவன்.

அங்கிருந்த ஏற்பாடுகளில் மிகவும் ஆர்வமாகிப் போன காவல்துறை அதிகாரி, “ஃபண்டாஸ்டிக் மிஸ்டர் ஆனந்தராஜ்!” என்று பாராட்டி விட்டு, “சர்வ் பண்ணும் ஆட்களாவது மனிதர்களா?…இல்லை அதுவும் பிசாசுகளா?” சிரித்தவாறே கேட்டார்.

“அவர்களையும் உங்களுக்கு இப்பவே அறிமுகப்படுத்துகிறேன்” என்ற ஆனந்தராஜ், விஜயசந்தரைப் பார்த்து கண் ஜாடை காட்ட,

அவர் கிச்சன் பகுதிக்குச் சென்று அவர்களை…இல்லை…இல்லை…அதுகளை அழைத்து வந்தான்.

வரிசை கட்டி வந்து நின்றன பத்து எலும்புக் கூடுகள்.

கொஞ்சமாய் பயத்திலிருந்து விலகியிருந்த கூட்டத்தினர், அந்த எலும்புக் கூடுகளைக் கூர்ந்து பார்த்தனர்.

“அவங்க எல்லோருமே மனிதர்கள்தான்!…கறுப்பு நிற உடை! அதன் மேலே பளீரென்று ஒளி வீசும் வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட எலும்புக் கூடு படங்கள்!…இங்கே பின்னணியில் இருட்டே அதிகம் இருப்பதால் அவர்களது கருப்பு உடை கண் பார்வைக்கு மறைந்து விடும்…அந்த ஒளிரும் வெள்ளை நிற எலும்புக் கூடுகள் மட்டுமே தெரியும்!…அவ்வளவுதான்” விளக்கினான் ஆனந்தராஜ்.

“அபாரம்யா” வாய் விட்டே பாராட்டினார் காவல் துறை அதிகாரி.

“ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்” என்று சொல்லியவாறே இடையில் புகுந்த ஒரு ரிப்போர்ட்டர்ஸ், “சார்…ரெஸ்டாரெண்ட்டோட இன்டீரியர் டெக்கரேஷனிலேயும்…இங்கு வேலை பார்க்கும் ஆட்களிலேயும் தான் இந்த ஃபேண்டஸியா?…இல்லை…நீங்க சப்ளை பண்ணப் போற ஐட்டங்களிலும் கூட ஃபேண்டஸி உண்டா?” கேட்டான்.

“நிச்சயமா” என்று சொல்லி அவர்களை கிச்சன் நோக்கி அழைத்துச் சென்றான் ஆனந்தராஜ்.

அங்கிருந்த ஒரு எலும்புக் கூடு சர்வரிடம், ஒரு பெரிய வாணலியைக் காட்டி, “ம்…ஓப்பன் திஸ்” என்று ஆனந்தராஜ் சொல்ல,

எலும்புக் கூடு செய்தது.

உள்ளே, வாணலி நிறைய கையளவு மண்டையோடுகள்.

“அய்ய….இதென்ன சார்?”

சிரித்துக் கொண்டே குனிந்து ஒரு குட்டி மண்டையோட்டைக் கையிலெடுத்து காவல்துறை அதிகாரியிடம் தந்து, “ஒண்ணுமில்லை…நாம ரெகுலரா சாப்பிடற இட்லிதான்…சும்மா ஒரு ஜாலிக்காக மண்டையோடு மாடல்” என்றான் ஆனந்தராஜ்.

எல்லோரும் “கல…கல“வெனச் சிரித்தனர்.

“இன்னும் இருக்கு” என்ற ஆனந்தராஜ் மற்ற ஐட்டங்களையும் காட்டினான்.

பிசாசு முக “மாஸ்க்”கைப் போல் தோசைகள். நல்லி எலும்புகளைப் போல் பணியாரங்கள். வெட்டப்பட்ட விரல்களைப் போல் வடைகள்.

அப்போது…

கை கழுவும் வாஷ் பேசின் இருக்கும் ஏரியாவிலிருந்து வினோதமான அலறல் வர எல்லோரும் அவசரமாய் அங்கே ஓடினர்.

பாதி எரிந்த நிலையில், சிதையிலிருந்து எழுந்தோடி வந்த ஒரு பிணமொன்று, கை கழுவ வந்த ஒரு சிறுமியின் கழுத்தைக் கடிக்க, பீச்சியடித்த ரத்தம் தரையைச் சிவப்பாக்கியது.

அதைப் பார்த்து “கல…கல”வென்று சிரித்த காவல்துறை அதிகாரி, “இது என்ன வித்தை மிஸ்டர் ஆனந்தராஜ்?” கேட்டார்.

அந்தப் பிணத்தின் பக்கம் திரும்பி, “சிவா…வெளிய வா” என்று ஆனந்தராஜ் சொல்ல,

வெளிநாட்டுத் தயாரிப்பான அந்த ரப்பர் உடைக்குள்ளிருந்து வெளியே வந்தான் சிவா.

எல்லோரும் தரையில் கிடக்கும் சிறுமியையும், ரத்தத்தையுமே பார்க்க,

“குட்டி குணா…கம் அவுட்”

சிறுமி போன்ற ரப்பர் உடைக்குள்ளிருந்து வெளியே வந்தான் குள்ளமான இளைஞன்.

தொடர்ந்து அதிரடி இசையோடு அந்தரத்தில் பறந்த மனிதக் கைகளையும், எலும்புக் கூடு சர்வரின் கழண்டு விழும் தலையையும், மியூஸிக்கிற்கு தகுந்தாற் போல் ஆடும் எலும்புக் கூட்டையும் வெகுவாய் ரசித்தனர் வந்திருந்த விருந்தாளிகள்.

நிகழ்ச்சி முடிந்து விடை பெறும் போது அந்தக் காவல் துறை அதிகாரி, “மிஸ்டர் ஆனந்தராஜ் அண்ட் பார்ட்னர்ஸ்!….இங்க நான் பார்த்த எல்லாமே ரசிக்கும்படி இருந்தாலும்…என் மனசுக்குள்ளார ஏதோ ஒரு இனம் புரியாத நெருடல் இருந்துக்கிட்டேயிருக்கு!…எதுக்கும்…கேர்ஃபுல்லாவே டீல் பண்ணுங்க!…ஏன்னா…இளகிய மனதுக்காரர்கள் பாதிக்கப்படக் கூடாது!…அதே மாதிரி உங்க ஹாரர் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு கோபத்தை உண்டாக்கி விடக் கூடாது!…” என்று அறிவுரை கூறி விட்டுச் சென்றார்.

“சரியாய்ச் சொல்லி விட்டான் சகாதேவன்” என்ற பெண் குரல் திருமுருகன் காதோரம் கொஞ்சம் சத்தமாகவே கேட்க,

மிரண்ட திருமுருகன், “ஏய்…யாரு நீ?…எங்கிருந்து பேசறே?” சத்தமாகவே கேட்டான்.

யாருமேயில்லாத வெற்றிடத்தைப் பார்த்து அவன், பேச அங்கிருந்தோர் அவனை வினோதமாய்ப் பார்க்க,

“ஹி…ஹி…ஒண்ணுமில்லை…சும்மா…இதுவும் ஒரு ஜாலி நிகழ்ச்சிதான்” என்று அசடு வழிந்தான்.

(தொடரும்)

< நான்காவது பகுதி  | ஆறாவது பகுதி >

கமலகண்ணன்

1 Comment

  • Really nice very interesting. Congrats ❤️💐 keep it up

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...