பத்துமலை பந்தம் 5 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் 5 | காலச்சக்கரம் நரசிம்மா

5. மயங்குகிறாள் மயூரி!!

பீஜிங் நகரம்..!

மலேசியன் ஏர்லைன்ஸ் தனது ஏர் ஹோஸ்டஸ்-களைத் தங்க வைக்கும் கிராண்ட் மில்லினியம் ஹோட்டலில், தனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் ஆறாவது மாடி, ஆறாவது அறையான, எண் 600-ல் தான் மயூரி தங்கியிருந்தாள். நான்ஸி உள்பட மற்ற ஏழு விமானப் பணிப்பெண்களும் ஹோட்டலில் பல்வேறு வசதியான அறைகளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், மயூரி மட்டும் எப்போதும் இந்த அறையில்தான் தங்குவாள். அதைத் தெரிந்துதான், ரிஸப்ஷனில் பணிபுரியும், நோரா ஜிங், கூடிய வரையில் அறை எண் 600-ஐ இவளுக்காகவே ஒதுக்கி வைத்திருப்பாள்.

சிறு வயதில் இருந்தே தாத்தா நல்லமுத்துவின் போதனையால், மயூரிக்கு முருகனிடம் அதிக ஈடுபாடு. தனது ராசியான எண்ணாக ஆறுதான் வைத்திருந்தாள் . நவக்கிரகத்தில் சுக்கிரனின் எண் ஆறு..! துலாம் ராசியில் பிறந்திருந்த மயூரி, சுக்ரனின் ஆதிக்கத்தில் இருந்ததால், பேரழகு கொண்டிருப்பதாக நல்லமுத்துவின் மனைவி, காத்யாயினி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாள். காத்யாயினியின் மறைவுக்குப் பிறகு அவளுடைய முருக பக்தி, பேத்தி மயூரியிடம் பெயர்ந்தது. அதனால்தானோ என்னவோ, மயிலின் மீது பறந்த தெய்வம், அவளை விமானத்தில் பறக்க வைத்துக்கொண்டிருந்தது.

அறையின் போன் ஒலிக்க. மயூரி டிவியின் வால்யூமைக் குறைத்துவிட்டு போனை எடுத்தாள். நான்சி அல்புகர்கு -தான், தனது அறையிலிருந்து அழைத்தாள்.

“நாங்க எல்லோரும் க்ளோரி ஷாப்பிங் மால் கிளம்பிட்டு இருக்கோம். கடைசியா ஒருமுறை கூப்பிடறேன்..! வர்றியா..? அங்கேயே ஜாங்ஸ் கிச்சன்ல டின்னர் சாப்பிடலாம்.” –நான்சி அழைக்க, மயூரி உறுதியுடன் மறுத்தாள்.

“நோ வே..! நான்தான் முன்னாடியே சொல்லியிருக்கேன் இல்லே..! இன்னைக்கு எனக்கு விரதம்னு..! பழச்சாறு தவிர வேற ஒண்ணும் சாப்பிட மாட்டேன்.” — மயூரி கூற, நான்சி சிரித்தாள்.

“இதுதான் கொடுமை..! செல்லரிச்சுப் போற அளவுக்குப் பணம் வச்சிருக்கிற மில்லியனர் குடும்பம் உனது. ஆனா, உனக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியலை..! என்னோட சம்பளத்தை நம்பித்தான் என் குடும்பம் இருக்கு. ஆனா நான் எப்படித் தண்ணீரா பணத்தைச் செலவழிக்கிறேன் பாரு..! எனிவே… ஜூஸாவது நிறையச் சாப்பிடு..!” என்கிற அறிவுரையுடன் போனை கட் செய்தாள்.

தலையணைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அதன் மீது சரிந்து கொண்டாள். டிவியைப் பார்ப்பதற்கு விருப்பமில்லாமல், ரிமோட்டை எடுத்து ஆஃப் செய்தாள். மற்றத் தோழிகளுடன் க்ளோரி மால் போயிருக்கலாம்தான். ஆனால் குறும்புகாரிகள் அவர்கள். இவளது விரதத்தை எப்படியாவது உடைக்க வேண்டும் என்று பார்ப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காமல், பிடிவாதமாக அவர்களுடன் செல்வதைத் தவிர்த்திருந்தாள்.

பத்திரிகை ஒன்றை எடுத்து புரட்டத் தொடங்கியபோது, மிகவும் மிருதுவாக அழைப்பு மணி ஒலி கேட்க, சந்தேகத்துடன் கதவை வெறித்து பார்த்தாள். இந்த ஸ்டார் ஹோட்டல்களில் இதுதான் பிரச்னை. மணி ஒலித்ததா, யாராவது வெளியே அழைத்தார்களா.? -என்பது தெரியாமல், மிகவும் மிருதுவாக ஒலிக்கும் அழைப்பு மணிகளைப் பொருத்தியிருப்பார்கள். சந்தேகம் தீராமல், எழுந்து சென்று மாஜிக் ஹோல் வழியே வெளியே பார்த்தாள். வெளியே நிழலாட, கதவைத் திறந்தாள்.

“மேடம்..! பாத்ரூம் க்ளீனிங்..!” –என்று கையில் ஒரு பக்கெட் மற்றும் பிரஷுடன் ருங்டா என்கிற பெண் நின்றிருந்தாள். அவளுக்கு வழி விட்டுவிட்டு, தான் அறையை விட்டு வெளியேறி, காரிடாரின் கண்ணாடிச் சுவர் வழியாக, பீஜிங் நகரத்து விளக்குகளுடன் ஒளிர்ந்த உயர்ந்த கட்டடங்களை வெறித்தபடி நின்றாள்.

ஏர் ஹோஸ்டஸ் பணியின் சாதகமான விஷயங்கள் இவைதான். உலகின் பெரிய நகரங்களுக்குப் பறக்கலாம். உயர்ந்த செவன் ஸ்டார் ஹோட்டலில் தங்கலாம். மகாராணி போல வளைய வரலாம்.! இஷ்டத்திற்கு ஷாப்பிங் செய்யலாம். அலங்காரப் பொருட்களை வாங்கலாம். ஒரு ஏர் ஹோஸ்டசின் அழகு கூடக்கூட, அவளுக்கு மதிப்பு அதிகம். அழகு குலையாமல் தக்க வைத்துக் கொண்டால், சர்வீஸில் பணி நீடிப்புக் கிடைக்கும்.

முகத்தில் ஒரு சிறு சுருக்கம் தோன்றினால் கூட, ஏர்ஹோஸ்டஸ் பணியிலிருந்து நீக்கி, அக்கவுண்ட்ஸ், டிக்கெட்டிங்– என்று ஏதாவது ஒரு மூலையில், கவுனை மாட்டி உட்கார வைத்து விடுவார்கள். நான்சியெல்லாம் பணி நீடிக்க வேண்டும் என்றுதான் அலங்காரச் சாதனங்களையும், முகத்தைப் பொலியச் செய்யும் கிரீம்களையும் வாங்கி அடுக்குகிறாள்.

ஏர் ஹோஸ்டஸ்களுக்குப் பாதகமான விஷயங்களும் உண்டு. விவிஐபிகள், விஐபிகளின் சில்மிஷங்கள் அடிக்கடி நடக்கும். இவர்களது அழகைக் கண்டு பொறாமைப்பட்டு இவர்களது சர்வீஸில் குறை கண்டுபிடிக்கும் பெண்கள், அடிக்கடி தொந்திரவு செய்யும் மூதாட்டிகள் என்று அவர்களைச் சமாளிப்பதே பெரிய பிரச்சனை. பணக்கார ஷேக் யாராவது பயணம் செய்தால், பார்வையாலேயே தனது ஹேரமுக்கு கடத்திக்கொண்டு போய் விடுவான். சுல்தானா என்கிற இவளது சக பணிப்பெண் இப்போது ஒரு அரபு ஷேக்கின் ஐந்தாவது மனைவியாக பாஹ்ரைனில் வசிக்கிறாள். இவர்களுடன் பேசுவதற்கென்றே அடிக்கடி விமான பயணங்கள் செய்யும் பல தொழிலதிபர்களை மயூரிக்குத் தெரியும்.

மயூரிக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த விமானப் பணிப்பெண் வேலையே அவளுக்கு அவசியமில்லை. இவளது தந்தை பாண்டிமுத்து மாவட்டச் செயலாளராக ஆளும் கட்சியில் அதிகாரத்துடன் வளைய வருகிறார். அம்மா சத்தியதேவியோ கொடைக்கானல் நேஷனல் அகாடமி என்று ஒரு போர்டிங் பள்ளியை நடத்தி, பல பிரபல புள்ளிகளின் மகன்களைத் தனது பள்ளியின் மாணவர்களாக வைத்திருக்கிறாள்.

அது மட்டுமா.! மயூரியின் பெயரில் தாத்தா நல்லமுத்து போட்ட பணங்கள் எல்லாம் வட்டியுடன் கள்ள உறவு வைத்துக் குட்டி போட்டிருந்தன. அந்த வட்டிப் பணத்தில், சானிடைசேர் தொழில் ஒன்றை மயூரி தொடங்கினாள். கொரோனாவுக்கு முன்பே அந்த நிறுவனத்தைத் தொடங்கியிருந்தாள். ஆனால் சீனாவின் புண்ணியத்தில், அவளது சானிடைசேர் தயாரிக்கும் நிறுவனம் இந்த ஒரு வருடத்தில் பெரும் லாபத்தைச் சம்பாதித்திருந்தது. இவளுடைய அத்தை தேவசேனையின் மகன் கார்த்திக்தான் அந்த நிறுவனத்தை பார்த்துக் கொள்கிறான்.

நிறுவனத்தோடு, மயூரியையும் லவட்டுவதற்கு அத்தையும், அத்தை மகனும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆக, அவளுக்குப் பணத்தைப் பற்றிய கவலையே இல்லை. ‘சீக்கிரம் அத்தை மகனைத் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விடு’, என்று சென்ற முறை தைப்பூசம் போனபோது தாத்தா கூறியிருந்தார்.

“நவபாஷாணக் கட்டைவிட ஆபத்தானது அத்தை மகனைக் கட்டுவது. ஒரு நல்ல கணவனாக நானே தேடிக்கொள்கிறேன்.” –என்று மயூரி அப்போது தாத்தாவுக்கு பதில் கூறியிருந்தாள். எளிதாக கூறிவிட்டாளே தவிர, நல்ல கணவனை எங்கே தேடுவது..? அதுவும், உலகமே மாஸ்க் அணிந்து நடமாடும் இந்த வேளையில்..!

யோசித்துக்கொண்டே கண்ணாடிச் சுவர் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த, மயூரியின் நாசியில் ஒரு விசித்திர நெடி வீசியது. மூக்கை ஒரு முறை உறிஞ்சினாள். அது என்ன நெடி..? நுகர்வதற்கு மிக ரம்மியமாக இருந்தது. ஒருவிதக் கிறக்கத்தை மனதில் ஏற்படுத்தியது. அந்த நெடியை அவள் ஏற்கனவே பலமுறை உணர்ந்திருக்கிறாள். எங்கே..? எப்போது..? எங்கிருந்து அந்த வாசம் வீசுகிறது..?

அப்போது—

டக்… டக்.. டக் –என்று தனது பூட்ஸ் ஒலிக்க, ஒருவன் அவளைக் கடந்து அந்தக் காரிடாரில் நடந்து சென்றான். ஒரே சீராக ஒலித்தது அந்த பூட்ஸ் ஒலி. ஒரு ராணுவத் தளபதி அல்லது ஒரு போலீஸ் கமிஷனருக்கு உரிய மிடுக்கு நடையுடன் அந்த உருவம் கடக்க, சட்டென்று மயூரி திரும்பிப் பார்த்தாள், அலுங்காமல் குலுங்காமல், திடீரென்று திருவாரூரின் பிரம்மாண்ட ஆழித்தேர் ஒரு வீதியில் இருந்து இன்னொரு வீதியில் திரும்பும்போது, தெருவையே அடைத்துக்கொண்டு, நிலத்துக்கும் ஆகாயத்துக்குமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் போதினில், உடலில் ஒரு சிலிர்ப்பு தோன்றுமே..! அத்தகைய சிலிர்ப்புதான் அந்த உருவத்தைப் பார்க்கும்போது, மயூரியின் மேனியில் தோன்றியது.

உயரமாகவும், கம்பீரமாகவும் காட்சியளித்த விமானி குகன்மணிதான் அவளைக் கடந்து மிடுக்குடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனுடைய உயரமும், நிறமும், கட்டழகும், சுறுசுறுப்பு நடையும், மயூரியின் மூச்சைத் திணற வைத்தன. நல்ல கணவனை எங்கே தேடுவது என்று இவள் மனதினுள் நினைக்க, அதே சமயம் அவன் அவளைக் கடந்து செல்வது அவளுக்கு நல்ல சகுனமாகப் பட்டது.

விரதம் இருக்கும் நாளில், ஆறாவது மாடியில், அவளது அறை எண் 600க்கு எதிரே, தனது பெயரை உடையவனையே இவளுக்குக் காட்டினான், அந்த ஆறுமுகன்.! மனதில் உற்சாகம் ஜிவ்வென்று மலேசிய ஏர்லைன்ஸ் விமானமாகக் கிளம்ப, அவளது கண்கள் அவனைத் தொடர்ந்தன.

திடீரென்று ஒரு சந்தேகம். அது குகன்மணிதானா அல்லது அவனைப் போன்ற வேறு ஒருவனா..? குகன்மணியாக இருந்தால் அவள் நிற்பதைக் கண்டதும், ‘ஹாய்’ என்று சொல்லாமலா போயிருப்பான்..? ஒருவேளை, யூனிபார்மில் இல்லாமல், லெக்கிங்ஸ் டாப்ஸ் போட்டிருந்ததால், அவளை அவனுக்கு அடையாளம் தெரியவில்லையா..? இவள் விமானத்தில் அவனைப் பார்த்தபோது அவன் காக்பிட்டில் அமர்ந்திருந்ததால், அவனது உயரம் இவளுக்குத் தெரியவில்லை. இப்போது நடந்து சென்ற அவனது உயரம் இவளைப் பிரமிக்க வைத்தது.

சாதாரண வெள்ளை ஜீன்சும், சாக்லேட் நிறச் சட்டையும் அணிந்திருந்தான். மயூரி, அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சீன மதில் சுவரை போன்ற அகன்று விரிந்த முதுகு.! இரண்டு மலைகளாக இருபுறமும் புஜங்கள். பிடரியை மறைக்கும் முடி முடிவில் சுருண்டு, அவனது சட்டையில் தார்ச் சாலையில் வழுக்கியோடும் டயரைப் போன்று மேலும் கீழும் உருண்டோடின. கண்ணிமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

காரிடாரின் கோடிக்குச் சென்றதும் திருப்பத்தில் திடீரென்று நின்றவன், அங்கிருந்து இவளை நோக்கினான். ஆனால் முகத்தில் புன்சிரிப்போ, அல்லது அவளை இனம்கண்டு கொண்ட உணர்வோ இல்லை. கையசைப்பும் இல்லை. இவளையே சில வினாடிகளுக்கு வெறித்துப் பார்த்தவன், தொடர்ந்து நடக்கத்தொடங்கி, இவளது பார்வையில் இருந்து மறைந்தான்.

மயூரி திகைத்துப் போய் நின்றாள். காரிடாரில் நிற்பது இவள்தான் என்பது தெரிந்திருந்தால், இங்கேயே இவளது கவனத்தைத் திருப்பி ‘ஹாய்’ என்று கூறிவிட்டுச் சென்றிருக்கலாம். ஒருவேளை, இவளைக் கவனிக்காமல் நடந்திருந்தால், தன்பாட்டில் தொடர்ந்து திரும்பி நடந்து சென்றிருப்பான். இவள் இங்கு நிற்பதை கவனித்தே, இவளைக் கடந்து சென்றிருக்கிறான். இவளைத் தவிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால், எதற்கு திருப்பத்தில் நின்று இவளையே வெறிக்க வேண்டும்..? இவள் கவனிக்கிறாள் என்பது தெரிந்தும் தொடர்ந்து வெறித்து பார்த்தான் என்றால்..?

“மேடம்..! யு கேன் கோ இன்..!” – ருங்டா கூற, யோசனையுடனே உள்ளே நடந்த மயூரி, கதவைத் தாளிட்டாள். தனது நாசியில் வீசிய நெடி அவன் பூசியிருந்த பெர்பியூம்-மாக இருத்தல் வேண்டும். இவளது ஜாய் பெர்பியூமை அலர்ஜி என்றவன், தனது பெர்பியூமினால் இவளது மனதைக் கிறங்க வைத்திருந்தான்.

குகன்மணியும், இந்த ஹோட்டலில் இதே, தளத்தில்தான் தங்கியிருக்கிறானா..? அந்த நினைப்பே அவளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஷ்டி சாமி முதன்முறையாக நல்லமுத்துவின் பள்ளங்கி பவனத்திற்கு வந்திருந்தார். வழக்கமாக, வெள்ளக்கவி காட்டை விட்டு வெளியே செல்லவே மாட்டாதவர், இந்த முறை சூழ்நிலையின் அவசரத்தையும், அவசியத்தையும் கருதி, பள்ளங்கி பவனத்திற்கு வந்திருந்தார்.

விடியல் வரை போகர் பாசறை குகையில் நிறுவப்பட்டிருந்த நவபாஷாணச் சிலையை ஆராய்ந்தவர், சூரியன் உதிக்கும் போதுதான் ஒன்றுமே பேசாமல் குகையை விட்டு வெளியேறி, மௌனமாக நின்றார். அவர் பின்பாகவே நடந்துசென்றார் நல்லமுத்து.அப்போதுதான் உதித்துக்கொண்டிருந்த சூரியன், குளிர்ந்த அருவி நீரின்மீது தனது கிரணங்களைப் பாய்ச்ச, ஒளிர்விடும் வைரங்களாக நீர்த்திவலைகள் கண்களைக் கூசச்செய்ய, சற்றே கண்களை மூடிய நல்லமுத்து, பிறகு சஷ்டி சாமியின் முகத்தை ஏறிட்டு பார்த்தார்.அவரும் கண்களை மூடிக்கொண்டு யோசனையில் இருந்தவர், திடீரென்று, அவற்றை திறந்து, நல்லமுத்துவை உறுத்துப் பார்த்தார்.

“மூன்றில் இரண்டாவது சிலை இனி ப்ரயோஜனப்படாது. ஒன்றல்ல. மூன்று பாஷாணங்கள் கட்டுகள் தளர்ந்து விட்டன. சங்குப் பாஷாணம், கச்சாலப் பாஷாணம், தொட்டிப் பாஷாணம் மூன்றும் தளர்ந்து விட்டன. மற்ற பாஷாணங்களையாவது தேடிக் கண்டுபிடிக்கலாம். இந்த மூன்று பாஷாணங்களைப் போகர் எங்கே இருந்து எடுத்தார் என்பது தெரியாது. எனவே, இப்போதைக்கு இந்த சிலைக்கு வீர்யத்தை திருப்பி அளிப்பது கஷ்டம்.” –என்றார், சஷ்டி சாமி.

“அப்படியானால் நான் என்ன செய்வது..?”

“என்ன செய்ய முடியும்..? உனது குடும்பத்தினருக்கு, உலகில் பல இடங்களில் சிதறிக்கிடக்கும் பெயரன், பெயர்த்திகளுக்கு போன் செய்து இந்த முறை தைப்பூசம் பூஜை நடக்கப் போவதில்லை. ஆகையால் யாரும் பள்ளங்கி பவனத்திற்கு வரத்தேவையில்லை என்று சொல்..! அதற்குப் பதிலா, ஒரு ஞாயிற்றுக்கிழமை எல்லோரையும் அவசரமா சென்னை வரச்சொல்லு..! அவங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்..!”

“சிலை கட்டுத் தளர்ந்த விஷயம்தானே..?” –நல்லமுத்து கேட்டார்.

“ஆமா..! நீ இவ்வளவு நாள் அவங்ககிட்டே விஷயத்தை சொல்லாதது தப்பு. உனக்கும் வயசு ஏறிக்கிட்டே போறது. உனக்கு வாசியா ஏதாவது ஒரு பெயரன் கிட்டே, நவபாஷாணக் கட்டு சங்கல்பத்தை இந்நேரம் செஞ்சிருக்கணும். இப்பப் பாரு… சிலைக்கே வீர்யம் போயிடுச்சு. திருப்பி சிலைக்கு வீர்யம் வரணும்னா, சங்குப் பாஷாணம், கச்சாலப் பாஷாணம், தொட்டிப் பாஷாணம் மூணையும் தேடிக்கண்டு பிடிக்கணும்..! உலகம் முழுக்கத் தேடி அது எங்கே கிடைச்சாலும் எடுத்து வந்து, இந்த சிலையைவச்சு மீண்டும் நவபாஷாணக் கட்டு கட்டினா, சிலைக்கு வீர்யம் வரும்..!” –சஷ்டி முனி சொன்னார்.

அதற்காகத்தான் இருவரும் அவசரமாக பள்ளங்கி பவனத்திற்கு வந்திருந்தனர்.சென்னையில் உள்ள மருமகன் சரவணப் பெருமாளுக்குப் போன் செய்தபோதுதான், திடீரென்று நல்லமுத்துவின் சிந்தையில் ஒரு யோசனை உதித்தது. அவர் சிந்தையில் உதித்த யோசனை குறித்து சஷ்டி சாமிக்குத் தெரிய வந்திருந்தால்,

“வேண்டாம்.. நல்லமுத்து…! இந்த யோசனை பெரிய விபரீதத்தையும், அனர்த்தத்தையும் உண்டு செய்துவிடும்.” என்று அப்போதே நல்லமுத்துவை தடுத்திருப்பார். எச்சரித்திருப்பார். தனது சிந்தையில் உதித்திருந்த அந்த யோசனையை, சஷ்டி சாமி யூகித்துவிடப் போகிறாரே என்கிற படபடப்பில், அதனைத் தனது மனதின் ஆழத்தில் புதைத்து வைத்தார் நல்லமுத்து.மாப்பிள்ளை சரவணப் பெருமாளின் அலைபேசி எண் அடித்துக்கொண்டே இருக்க, எரிச்சலுடன், தனது மகள் குணசுந்தரியின் வீட்டு லேண்ட் லைனுக்கு போன் செய்தார் நல்லமுத்து.

-தொடரும்…

< நான்காவது பகுதி | ஆறாவது பகுதி >

.

ganesh

11 Comments

  • அந்த மூன்றாவது நவபாஷண சிலை எங்க இருக்குன்னு எனக்கு மட்டும் சொல்லுங்க சார்!
    போகர் அதை மதி கெட்டான் சோலையில் மறைச்சு வைத்திருப்பதாகவும், அதன் பாதுகாப்புக்காகத்தான் அந்த சோலையையே மதி கெட்டான் சோலையாகவே மாற்றி வைத்திருப்பதாக சொல்கிறார்களே, அதன் உண்மைத் தன்மை என்ன?

  • நல்லமுத்து சஷ்டி சாமியின் பேச்சை கேட்காமல் தவறுக்கு மேல் தவறு செய்கிறாரோ என்று தோன்றுகிறது இந்த நவபாஷாண சங்கல்பம் செய்ய மயூரி தான் தகுதியான ஆளாக தெரிகிறது உலகின் பல நாடுகளுக்கும் செல்வதால் இந்த மூன்று காரணங்களையும் கண்டுபிடிக்க அவளுக்கு சான்ஸ் இருக்கு அதைத் தவிர தீவிர முருக பக்தை ஹோட்டல் காரிடாரில் நடந்து சென்றது புவனா குகன் மணியா அல்லது அப்படி ஒரு மயூரி கண்ணுக்கு தோன்றியதா குகன் நிச்சயமாக இந்த பாஷாணங்களைக் கட்டுவதற்கு மைசூருக்கு உதவுவான் என்றே தோன்றுகிறது நல்லமுத்து எந்த விஷயத்தை மருமகனிடம் சொல்லப்போகிறார் ஆவலோடு காத்திருக்கிறோம்

  • மயூரியால்தான் ஒரு விடிவு கிடைக்கும் போல அவர்கள் குடும்பத்திற்கு!

  • நவபாஷாணம் பற்றிய கருத்துக்கள் அருமை ஐயா….மயூரீ பற்றிய பகுதி மிக யதார்த்தமாக இருந்தது…. நவபாஷாண முருகன் சிலையை போகரைத் தவரி எவராலும் உருவாக்க இயலாது என்பது என் கருத்து.மிக்க நன்றி.

  • Yes. I did not say it can be made. He says it is useless because three herbs cannot be found

  • சார் அருமையாக கதை உள்ளது

  • Getting really interesting!! Making it difficult to wait for the next issue

  • Interesting one sir
    Maybe Mayuri can handle it
    Hope not informing the swami turns into major problems

  • அருமையாக கொண்டு செல்கிறீர்கள் ஸ்வாமி!

  • Interesting… Nice story

  • பாஷாணங்கள் கிடைத்தாலும் மீண்டும் அது போன்றதொரு சிலையை உருவாக்குவது முடியாத காரியமாகத்தான் இருக்கும். அருமையாக செல்கிறது தொடர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...