பேய் ரெஸ்டாரெண்ட் – 3 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 3 | முகில் தினகரன்

புதன் கிழமையன்று அட்வான்ஸ் தொகை ஒரு லட்சத்தோடு,

நண்பர்கள் மூவரும் அந்தக் கட்டிடத்தில் வந்து காத்திருக்க கணேசன் நிதானமாய் வந்தார். “என்ன தம்பிகளா…ரொம்ப நேரமாச்சா நீங்க வந்து?”

“ரொம்ப நேரமில்லை சார்…ஜஸ்ட் ஒரு மணி நேரம்தான் ஆச்சு” என்றான் விஜயசந்தர் எரிச்சலோடு.

“அது ஒண்ணுமில்லை தம்பி…நம்ம சம்சாரத்தோட…தம்பி மகள்…இன்னிக்கு பெரிய மனுஷியாயிட்டா…அதுக்காக ஒரு சின்ன விசேஷம்…அங்க போயிட்டு வர்றேன்”

“சார்…தப்பா சொல்றீங்க!…நம்ம சம்சாரம் அல்ல…உங்க சம்சாரம்” என்று திருமுருகன் சொல்ல,

“ஹா…ஹா…ஹா…”வென்று வாய் விட்டுச் சிரித்த கணேசன், “தம்பி ரொம்ப தமாஷாப் பேசறாரு” என்றார்,

அப்போது, “எக்ஸ்க்யூஸ் மீ!…இங்க…ஆனந்தராஜ்?” கேட்டவாறே வந்த அந்த நடுத்தர வயது மனிதர் அந்நியன் விக்ரம் போல் முடி வளர்த்திருந்தார். அவருடன் வந்த இளைஞன் செதுக்கப்பட்ட குறுந்தாடியுடன் அழகாயிருந்தான்.

“நான்தான் ஆனந்த ராஜ்….நீங்க?”

“சார்…ஐ யாம்…“பீனிக்ஸ் முருகேசன்”…இண்டீரியர் டெக்கரேட்டர்” என்றார் அந்த அந்நியன் தன் கையை நீட்டியவாறே.

“ஓ…வாங்க!…ராஜய்யன் அனுப்பினாரா?” கேட்டபடியே அவருடன் கை குலுக்கினான் ஆனந்தராஜ்.

உடன் வந்திருந்த குறுந்தாடிக்காரனைக் காட்டி, “சார்…இவர் டேனியல்…கிரியேடிவேடிவ் இண்டீரியர் டெக்கரேட்டர்…நாலஞ்சு மலையாளப் படங்களில் ஆர்ட் டைரக்டரா ஒர்க் பண்ணியிருக்கார்” என்றார் அந்த பீனிக்ஸ். அவருக்கும் ஒரு கை குலுக்கலைத் தந்த ஆனந்தராஜ், “நீங்க இந்த பில்டிங்கை சுற்றிப் பார்த்திட்டு இருங்க…நான் இவருடன் பேசி முடிச்சிட்டு வர்றேன்” என்றான்.

அவர்களிருவரும் உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட, கணேசனின் கையில் ஒரு லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்தான் ஆனந்தராஜ்.

“ரொம்ப சந்தோஷம் தம்பிகளா….நீங்க ஆரம்பிக்கப் போற இந்த பிசினஸ் நிச்சயம் நல்லபடியா வளர்ந்து…உங்களுக்கு நல்ல லாபத்தை தரும்” வாழ்த்தி விட்டுச் சென்றார்.

போகும் போது அந்த கணேசனின் உள் மனம், “ஹும்…இவனுக ஓட்டல் ஆரம்பிச்ச பின்னாடி இங்க என்னென்ன கூத்துகள் நடக்கப் போகுதோ?…மறுபடியும் “அது”கள் தங்களோட வேலையைக் காட்டாமலிருந்தால் சரி” என்று முணுமுணுப்பாய்ச் சொல்லிக் கொண்டது.

“டேய்…திருமுருகா…போய் அந்த இண்டீரியர் ஆட்களை வரச் சொல்லு” என்று ஆன்ந்தராஜ் சொல்ல, ஓடினான் திருமுருகன்.

அவன் அந்த ஹாலின் வாசலை நெருங்கும் போது, “திருமுருகா” என்று ஒரு பெண் குரல் அழைக்க, சட்டென்று நின்று, “விருட்”டென்று திரும்பிப் பார்த்தான்.

“என்ன முருகா?,….ஏன் நின்னுட்டே?” ஆனந்தராஜ் அங்கிருந்தே கேட்க,

“யாரோ ஒரு பொண்ணு என் பேரைச் சொல்லிக் கூப்பிட்ட மாதிரி இருந்திச்சே?”

“பொண்ணா?…ஏண்டா…உனக்கு பைத்தியம் கியித்தியம் பிடிச்சிடுச்சா?..இங்க இருக்கற எல்லோருமே ஆம்பளைக…உனக்கு பெண் குரல் கேட்குதா?” கோபமாய்ச் சொன்னான் ஆனந்தராஜ்.

“நேத்திக்கு தம் அடிக்கற மாதிரி போய்…அந்த பெட்டிக்கடை ரஞ்சிதா கூட ரொம்ப நேரமா நின்று கடலை போட்டுட்டு இருந்தான்…அதன் பாதிப்பாய் இருக்கும்” சொல்லி விட்டு சிரித்தான் விஜய்சந்தர்.

“டேய்…அவ ஏற்கனவே கல்யாணம் பண்ணி…புருஷனை டைவர்ஸ் பண்ணின கேசு…அவகிட்டப் போய்ப் பேசி…அவ வலைல விழுந்திடாதடா” சத்தமாய்ச் சொன்னான் ஆனந்தராஜ்.

“போங்கடா…போங்கடா” என்று அவர்களிருவரையும் பார்த்து பழிப்புக் காட்டி விட்டு நகர்ந்தான் திருமுருகன். ஆனாலும், அவன் மனத்தில் அந்த நெருடல் இருந்து கொண்டேயிருந்தது. “சந்தேகமேயில்லை…ஒரு பெண் குரல் “திருமுருகா”ன்னு என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டிச்சு”

கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த இண்டீரியர் டெக்கரேட்டர் இருவரையும் அழைத்துக் கொண்டு வந்து ஆனந்தராஜ் எதிரில் நிறுத்தினான் திருமுருகன்.

தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்த ஆனந்தராஜ், தங்களுடைய புது ரெஸ்டாரெண்ட பற்றியும், அதன் பேய்க்குகை இண்டீரியர் பற்றியும் சொல்லச் சொல்ல, கண்களை அகல விரித்தான் அந்த இளைஞன். “சாரே…ஞான் மலையாளத்தில் ஒரு ஹாரர் மூவிக்கு ஆர்ட் டைரக்ஷன் பண்ணிக் கொடுத்து!…எனிக்கு ஹாரர் டெக்கரேஷனிலாயிட்டு வளர இஷ்டமானு…”

“அப்ப பிரச்சினையே இல்லை!… நீங்க உங்க கிரியேடிவிட்டியை அள்ளி வீசுங்க!…எனக்குத் தேவை…பேய்க் குகை எஃபெட், அங்கங்கே எலும்புக் கூடுகள், பிசாசு உருவங்கள், ரத்தம் கக்கும் பொம்மைகள்” என்றான் ஆனந்தராஜ்.

இடையில் புகுந்த விஜயசந்தர், “அப்புறம்…தலை கழண்டு தட்டில் விழும் பிசாசு உருவ சர்வர்களை நாங்களே அப்பாயிண்ட் பண்ணி…மேக்கப் போட்டுடுவோம்!……ம்ம்ம்ம்…கை கழுவும் வாஷ் பேசின் இருக்கும் இடத்தில் ஒரு பேய் உருவம்…அது கை கழுவ வர்றவங்களை திடீர்னு கட்டிப் பிடிச்சு…அவங்க கழுத்தைக் கடிக்கற மாதிரி நடிக்கும்…கூடவே தன் கையில் இருக்கும் சிவப்பு சாயத்தை அவங்க கழுத்திப் பூசி அவங்களை மிரள வைக்கும்…அதுக்கும் ஒரு ஆளை நாங்களே அப்பாயிண்ட் பண்ணிடுவோம்” என்றான்.

“பட…பட”வென்று கை தட்டிய ஆனந்தராஜ், “டேய்…விஜயா… நீ பயங்கரமா இன்வால்வ் ஆயிட்டே போலிருக்கு?” மகிழ்ச்சியோடு சொல்ல,

“என்னடா…நீ?…உன்னைத் தனியா கஷ்டப்பட விடுவேனா நான்?” என்றான் விஜயசந்தர்.

“ஹும்…நாம ரெண்டு பேரும் தயாராயிட்டோம்…இந்த திருமுருகன் மட்டும்தான் இன்னமும் சீரியஸ்னஸ் வராம இருக்கான்” என்று திருமுருகனைப் பார்த்து ஆனந்தராஜ் சொல்ல,

“அப்படிச் சொல்லாதீங்கப்பா…நானும் என் வேலையை நேத்திக்கே ஆரம்பிச்சிட்டேன்” சின்னக் கோபத்தோடு சொன்னான் திருமுருகன்.

“அட…அப்படியென்ன செஞ்சே?”

“ஹோட்டலுக்கு பில்டிங் ஓ.கே.ஆயிடுச்சு!…இண்டீரியர் ஆட்களுக்கும் சொல்லியாச்சு!…அடுத்தது என்ன?…வேலைக்கு ஆட்களை எடுப்பதுதானே?…எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் பிரைவேட் எம்ப்ளாய்மெண்ட் செண்டர் நடத்திட்டிருக்கார்…அவர்கிட்டே நம்ம ஹோட்டலுக்கு…சப்ளையர்ஸ்…கிச்சன் ஆட்கள்…இன்னும் மத்த ஆட்களும் வேணும்!னு சொல்லி வெச்சிட்டேன்…ரெண்டு மூணு நாள்ல நிறைய பேர் இண்டர்வியூவுக்கு வரப் போறாங்க!” பெருமையாய்ச் சொன்னான் திருமுருகன்.

“ஆஹா…இதைக் கேட்கவே சந்தோஷமாயிருக்கு!…டேய்…முருகா..அப்படி வேலைக்கு வர்ற ஆட்களை இண்டர்வியூ பண்ணி அப்பாயிண்ட் பண்ற வேலை உன்னோடது…என்ன…ஓ.கே.வா?”

“தாராளமாய்ப் பண்ணிடறேன்” தோள்களைக் குலுக்கிக் கொண்டு சொன்னான்.

“அப்புறம் இதுல ஒரு முக்கியமான விஷயம் இருக்கு…வேலைக்கு வர்றவங்க எல்லோர் கிட்டேயும்…அந்த மாதிரி கெட்டப்லதான் இருக்கணும்!னு ஸ்டிரிக்டா சொல்லிடு…அப்புறம் வேலைக்கு வந்துட்டு… “மாட்டேன்”னு சொல்லப் போறாங்க”

“ஓ.கே!…ஓ.கே!…நான் பார்த்துக்கறேன்” என்றான் திருமுருகன்.

“நீ எப்படி பார்க்கறேன்னு…நானும் பார்க்கறேன்” என்ற பெண் குரல் அவனுக்கு மிகச் சமீபத்தில் ஒலிக்க,

அனிச்சையாய்த் திரும்பி தன் நண்பர்களின் முகத்தையும், வாயையும் கூர்ந்து பார்த்தான்.

“என்னடா?…எதுக்கு இப்படிப் பார்க்கறே?” விஜய்சந்தர் கேட்க,

“இப்ப…உங்க ரெண்டு பேர்ல யாராவது…பெண் குரல்ல பேசினீங்களா?” கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டான் திருமுருகன்.

“பெண் குரலிலா?…ஏண்டா நாங்க என்ன இங்க மிமிக்ரி பிராக்டீஸா பண்ணிட்டிருக்கோம்…பெண் குரலில் பேச…பேய்க் குரலில் பேச?” கோபமானான் ஆனந்தராஜ்.

“இல்லை ஆனந்து…இப்ப அந்தக் குரல் கேட்டிச்சு…இதோ இந்தப் பக்கத்திலிருந்து கேட்டிச்சு” என்றான் திருமுருகன் தன் இடப் புறத்தைக் காட்டி,

“இல்லையே!…நாங்களும் உன் கூடத்தானே நிற்கிறோம்?…எங்களுக்குக் கேட்கலையே?”

“ஆனா…எனக்கு கேட்டிச்சே?” திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அவன் சொல்ல,

“சரி…என்ன சொல்லிச்சு?”

“நீ எப்படி பார்க்கறேன்னு…நானும் பார்க்கறேன்” ன்னு சொல்லிச்சு”

“டேய்…முருகா…நீ இன்னும் அந்த பெட்டிக்கடை ரஞ்சிதா நெனப்பிலேயே இருக்கே…அதான் உனக்கு அந்தக் குரல் காதுல ஒலிச்சுக்கிட்டேயிருக்கு” என்றான் விஜயசந்தர் அவன் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமலே,

“டேய் நான் சத்தியமா சொல்றேண்டா…இப்பக் கேட்டிச்சுடா”

“நம்ம பேய் ரெஸ்டாரெண்டுக்கு இப்பவே இவன் அட்வர்டைஸ்மெண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாண்டா” என்றான் விஜயசந்தர்.

விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு இருவரையும் மாறி மாறிப் பார்த்த திருமுருகன், “ஹும்…இன்னிக்கு இல்லாட்டி என்னிக்காச்சும் ஒருநாள் நீங்க நான் சொன்னதை ஒத்துக்கத்தான் போறீங்க” என்று கோபமாய்ச் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

< இரண்டாவது பகுதி | நான்காவது பகுதி>

கமலகண்ணன்

1 Comment

  • Super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...