முதல்வன் பட பாணியில் களத்தில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
‘முதல்வன்’ திரைப்படத்தில் வருகின்ற காட்சியைப் போல் ஒரு சம்பவம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
“முதல்வன்” திரைப்படத்தில், முதல்வராக இருக்கும் நடிகர் அர்ஜுன் மக்களின் பிரச்சினைகளை நேரடியாகச் சென்று கேட்டு, அந்தந்த இடத்திலேயே அதற்கான தீர்வுகளைச் செய்து முடிப்பார். இந்தப் படத்தின் காட்சி பொதுமக்களிடம் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றது.
தற்போதுள்ள கொரோனா நெருக்கடி சூழ்நிலையில், பொதுமக்கள் பெரிய அளவில் மருந்துக் கடைகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை – நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்மணி, மருத்துவ உதவி கேட்டு போன் செய்தபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே அந்த போன் அழைப்பை “அட்டெண்ட்” செய்து, உதவினார்.
கொரோனா காலத்தின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக சென்னை – டி.எம்.எஸ் அலுவலகத்தில் ‘வார் ரூம்’ (போர்க்கால நடவடிக்கைப் பிரிவு) என்னும் ஒரு புதிய பிரிவு உருவாக்க்கப்பட்டு பொது மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இதில ஒரு மிகப்பெரிய குழுவினர், காலநேரம் பார்க்காமல் செயல்பட்டு வருகின்றனர்.
இந்தக் குழு சிறப்பாகச் செயல்படுகிறதா என்பதை மேற்பார்வையிடுவ தற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரவு 11 மணிக்கு அந்த “War Room” க்குச் சென்றார்.
அப்படி அவர் பார்வையிட வந்த போது, பொதுமக்களிடம் இருந்து வந்த சில தொலைபேசி அழைப்புகளை, தானே எடுத்துப் பேசி உதவி இருக்கிறார்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்மணியிடம் தானே நேரில் பேசி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். அதன்பிறகு அந்தப் பெண் கேட்ட உதவிகள் அனைத்தையும் செய்து தந்துள்ளார்.
ஒரு முதல்வர், பொதுமக்களுடன் இத்தனை எளிதாக பேசக்கூடிய நிலை தமிழகத்திற்கு முற்றிலும் புதிதாக இருக்கிறது.
இது பற்றி அர்ச்சனா நெகிழ்ந்து போய் கூறியதாவது: கொரானா நெருக்கடி அவசரகால உதவி மையத்தை நான் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, உடல்நலமில்லாத என்னுடைய உறவினருக்கு படுக்கை வசதி செய்துதரும்படி உதவி கோரினேன்.
மறுமுனையில் பேசியவர், “நான் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன்” என்று கூறிவிட்டு ‘என்ன வகையான பெட் வேண்டும்?’ எனக்கேட்டார்.
‘ஓ-2 வகை பெட் வேண்டும்’ எனக்கூறினேன். உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
அப்போது அவர், ‘உங்களுக்கு வேறு என்ன விதமான உதவி தேவை?’ என்பதையும் கேட்டறிந்தார். அவர் பேசும்போது என்னிடம், ‘ஸ்டாலின்’ என்று தன்னுடைய பெயரைக் குறிப்பிட்டிருந்தார். இன்னொரு முறை கேட்டபோதும் அவர் தன்னுடைய பெயரைக் கூறினார்.
எனக்குத் திடீரென சந்தேகம் வந்து விட, மீண்டும் போன் செய்து, “என்னுடன் பேசியவர் யார் ?’என்று கேட்டேன்.
அப்போது, “தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் அவர்கள்தான் உங்களுடன் பேசினார்” என்று கூறினார்கள்.
அப்படி அவர் கூறியதும் எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை,
இரவு 11 மணி அளவிலும் விழித்திருந்து அவர் மக்கள் பணியாற்றுவது என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
இப்படி ஒரு முதல்வரை தமிழகம் இதுவரை கண்டிருக்குமா என்ற கேள்விக்குறி என் மனதில் ஆச்சரியமாக எழுந்தது.
திடீரென கிடைத்த இந்த இன்ப அதிர்ச்சியில் என்னால் பேச முடியவில்லை திக்குமுக்காடிப் போனேன்.
நெருக்கடி மிகுந்த இப்படிப்பட்ட நேரத்தில் சாதாரண மக்களும் தொடர்பு கொள்ளக் கூடிய எளிய முதலமைச்சராக அவர் இருப்பது எனக்கு பெரும் ஆறுதலை அளித்தது.
இப்படிப்பட்ட முதல்வரைத்தான் நாங்கள் இத்தனை நாளாக தேடிக் கொண்டிருந்தோம். அவர் எங்களுக்கு கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி’ – என்று கூறினார்.