வாகினி – 2 | மோ. ரவிந்தர்
பதினைந்து வருடங்களுக்குப் பிறகு.
இந்த மனித வாழ்வில் தான் நாம் அனைவரும், கேள்விக்கான பதிலையும் பதிலுக்கான கேள்வியும் ஒரு நிலை இல்லாமல் தேடிக் கொண்டிருக்கிறோம். மனிதனாக ஏன் பிறந்தோம், இந்தப் பூமியில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற புரியாத புதிர் அனைவரின் நெஞ்சத்திலும், அலைகடல் போல் அலை அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவரவருக்கு என்று ஒரு பாதை உண்டு, அதில் ஒரு பயணம் உண்டு என்பதை மறந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த 15 வருடம், குழந்தைகள் காப்பகம் எனக்கு வாழ்க்கை என்னும் பாடத்தையும், ஒழுக்கத்தையும் நிறைவாகக் கற்றுத் தந்திருக்கிறது. இனி இந்த உலகில் நான் போராட அது எனக்கு வழி செய்யும். ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைத்த நல்ல தாய் தந்தையைப் போல் எங்களுக்கும் கிடைத்திருந்தால், ஒரு அழகான வாழ்க்கையும் அனாதை என்ற சொல்லும் மறைந்திருக்கும்.
ஒவ்வொரு மனிதன் நெஞ்சத்திலும் ஆசையை வைத்து, அவர்கள் அழிவதற்குப் படுகுழியைத் தோண்டி வைக்கும் இறைவன் விளையாட்டைத் தான் என்ன சொல்ல?’ என்று மனதில் ஏதோ ஒருசில கேள்விகளை எழுப்பிக் கொண்டு, சாலையோரம் வளர்ந்திருந்த மரங்களை எதர்ச்சியாகக் கவனித்தாள், வாகினி.
வானத்தையே மறைத்து நின்ற அழகான மரங்களும் அதன் கம்பீரமும் அழகாகத் தெரிந்தது. அதைப் பார்த்தவுடன் வாகினி நெஞ்சினில் கற்பனை ஒன்று உண்டானது. மனிதர்கள் எல்லாம் மரங்களாகவும், மரங்கள் எல்லாம் மனிதராகவும் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சிந்தனை அவளுக்குள் எழுந்தது.
“இயற்கை வளங்களை எல்லாம் பாதுகாக்கும் மனிதர்களை அழிக்காதே அழிக்காதே…, அழிக்காதே அழிக்காதே…” என்று. மரம், செடி கொடிகள் எல்லாம் சேர்ந்து வீதியில் இறங்கி மனிதனுக்காகப் போராடிக் கொண்டிருந்தது என்று கற்பனை செய்தாள், அந்தக் கற்பனையிலேயே தன் துயரத்தை எல்லாம் மறந்து சிரிக்கவும் செய்தாள்.
ஆவடி, காந்தி நகரில் உள்ள பிரதான சாலையைக் கடந்து, ஒரு தெரு வீதியில் தனது வீட்டைத் தேடி உச்சி வெயிலில் ஆண் மகனைப் போல ஒரு கைப்பையோடு கம்பீரமாக வந்தாள்.
எப்போதும் சந்தை போல் இருக்கும் அந்தத் தெருவீதி, இப்போது மனிதர்கள் இல்லாமல், தூரத்தில் இரண்டொரு சிறுவர்கள் ஓடிப்பிடித்தும், மட்டை பிடித்துக் கிரிக்கெட் விளையாட்டைக் குதூகலத்துடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அந்தச் சிறுவர்கள் விளையாடுவதை வாகினியும் கவனித்தாள். ஏதோ ஒரு சோகம் பெரும் துயரம் மீண்டும் அவளைப் பற்றிக் கொண்டது. அலச்சியமான பார்வையை அந்தச் சிறுவர்கள் மீது செலுத்திக்கொண்டே அந்த இடத்தை விட்டு மெல்ல நகர்ந்தாள். அத்துடன் அந்தக் காட்சி அவளின் சிறுவயது வாழ்க்கையையும் நினைவு படுத்திக் காட்டியது.
“ஏய்… வனிதா நில்லுடி ஓடாத… நீ ஆவுட்டு.. ஆவுட்டு…” என்று வாகினியும் அவளின் தங்கை வனிதாவும், ஒருசில பிள்ளைகளோடு ஓடிப்பிடித்து விளையாடிய காட்சி கணநேரத்தில் அவளுக்குத் தோன்றி மறைந்தது.
அதே நேரத்தில், அவள் வீடு இருந்த தெருவீதியை நெருங்கி விட்டாள்.
அப்போது காணப்பட்ட ஓலை வீடுகள் எல்லாம் இப்போது மெத்தை வீடுகளாகவும், பெரும் கட்டிடங்களாக மாறி இருந்தது. இடது புறத்தில் இருந்த அவளது வீடும் அவள் பார்வைக்குத் தென்பட்டது.
15 வருடங்களுக்கு முன் செம்மண் ஓடுகளால் நிரப்பப்பட்ட தனது வீடு, இன்று அதன் அழகையெல்லாம் இழந்து எந்த ஒரு பராமரிப்புமின்றி ஒரு மணல் மேட்டில் தன்னந்தனிமையில் அனாதையாக நின்றிருந்தது.
வீட்டின் கூரையின் மீது நிரப்பப்பட்ட ஓடுகள் பெருமளவில் உடைந்தும் சிதைந்தும் சீரழியும் தறுவாயில், ஒருசில செங்கல்லும் சில கூரைகளும் அந்த வீட்டினை தாங்கி பிடித்திருந்தது.
மனிதர்களின் போக்குவரத்து அந்த வீட்டின் பக்கம் முழுவதுமாக நின்றுவிட்ட காரணத்தினால், அந்த வீட்டிற்குப் போகும் பாதை கூட அடர்த்தியான புல்வெளிகளால் நிரம்பி புதர்களாகவும் தென்பட்டது.
வீட்டின் முன் பகுதியில் பல வருடங்களாக இருக்கும் வேப்பமரம் ஒன்று அவளின் வருகையைக் கண்டு காற்றில் தலையாட்டி வரவேற்றது. அதன் கீழே உடைந்த தண்ணீர் தொட்டியும், அதன் பக்கத்தில் உடைந்த மண் பானையின் ஓடுகளும் பூமியில் புதைந்து சிதறிக்கிடந்தன. அந்த உடைந்த தண்ணீர் தொட்டியின் மீது ஒரு காகம் அமர்ந்து யார் வரவையோ எதிர்பார்த்ததைப் போல்.
“கா…கா… கா…கா…எனக் கரைத்துக்கொண்டிருந்தது.
வீட்டின் பாதையில் வளர்ந்திருந்த புல்வெளியெல்லாம் தனது கைகளினாலே விலக்கிவிட்டுக் கொண்டே மெதுவாக முன் வாசலுக்குச் சேர்ந்தாள், வாகினி.
பல வருடங்களாக வீடு திறக்காமல் இருந்ததால், வீட்டு கதவின் நாதங்கில் துருப்பிடித்த நிலையில் பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தன, அதைக் கையில் பிடித்துப் பார்த்தாள்.
‘என்னைப்போலவே பராமரிப்பதற்கு யாரும் இல்லாமல் நீயும் துருப்பிடித்து அனாதையாக நிற்கிறாய்’ என்று நினைத்துக்கொண்டு
‘காட்டில் வாழும் ஆண் சிங்கத்தை விடப் பெண் சிங்கத்திற்குத் தான் வலிமை அதிகம், சில சமயம் பெண் சிங்கம் வேட்டையாடி ஆண் சிங்கத்திற்கு இறை தேடி வருமா.? ஒரு வகையில் என் தாயும் பெண் சிங்கம் தான் !.
இந்த நாட்டில் வாழும் மிருகங்களுக்கு நடுவே போராடிய ஒரு பெண், நான் ஏன் உங்களை இழிவுபடுத்தி நினைக்க வேண்டும்.’ என்று நினைத்துக் கொண்டே கீழே கவனித்தாள். ஒரு மூலையில் கருங்கல் ஒன்று மண்ணில் சற்று புதைந்தவாறு இருந்தது.
அதை அவசரமாக எடுத்து வந்து நாதங்கியில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டை வேக வேகமாக ஓங்கி அடித்தாள். இரண்டு மூன்று அடியில் பூட்டு விடுபட்டது.
பாழடைந்த வீட்டிற்குள் செல்ல போகிறோம் என்று எண்ணாமல் கதவை அவசரமாகத் திறந்து விட்டாள் வாகினி.
– தொடரும்…
9 Comments
நான் மெய் மறந்து கதைக்குள் சென்று விட்டேன்..
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அம்மா
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அம்மா
Super very nice in the chapter next week waiting thank you for in the release minkaithadi and all the best all
வர்ணனைகள் அருமை நண்பா..வாகினி வாழ்வில் வசந்தம் வீசட்டும் !
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அம்மா
எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. தொடரட்டும். நன்றி
நன்றி தோழர்