வரலாற்றில் இன்று – 09.05.2021 உலக அன்னையர் தினம்

 வரலாற்றில் இன்று – 09.05.2021 உலக அன்னையர் தினம்

தாய்மையைப் போற்றும் விதமாக இன்று மே 09 ஆம் தேதி

உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

அமெரிக்காவை சேர்ந்த அன்னா மேரி ஜர்விஸ் தன்னுடைய அன்னைமீது கொண்ட அன்பின் காரணமாக அன்னையர் தினம் ஏற்பட்டது. 1914ஆம் ஆண்டு இவரின் கடும் முயற்சியால் அமெரிக்க ஜனாதிபதி வில்சன் அவர்கள் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை (மே 09) அன்னையர் தினமாக அறிவித்தார்.

தாயின் ஆரோக்கியம், கல்வி, பொருளாதார வாய்ப்பு போன்ற சிறந்த வசதிகளை செய்து கொடுப்பதே இத்தினத்தின் நோக்கமாகும். தாய் மனதிற்கேற்ப நடந்து, தாயை மகிழ்விக்கக் கிடைத்த ஓர் அரிய நாளாக எண்ணிக் கொண்டாடுவோம்.

கோபால கிருஷ்ண கோகலே

மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபால கிருஷ்ண கோகலே 1866ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்தார்.

இவர் 1889ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினரானார். திலகர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். இவர் வன்முறையைத் தவிர்த்து, அரசு நிறுவனங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவது ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்.

இவர் 1899ஆம் ஆண்டு மும்பை சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியர்களுக்குப் பொதுத்துறை விஷயங்களில் அதிக முன்னுரிமைகள் பெற்றுத்தர போராடினார்.

மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுப்படுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தை திருமண வன்கொடுமைகளைத் தடுத்திடும் நோக்கில் ஏற்புடைய சட்டத்தை விரும்பினார். 1905ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். இந்திய சேவகர்கள் சங்கம் (Servants of India Society) என்ற அமைப்பை உருவாக்கினார்.

தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையிலும் தொடர்ந்து அரசியலுக்காகவே பாடுபட்ட கோகலே 1915ஆம் ஆண்டு மறைந்தார்.

அன்னமாச்சார்யா

இசை உலகில் பல மரபுகளைத் தோற்றுவித்த அன்னமாச்சார்யா 1408ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தாளப்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவர்தான் பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்றவைகளை உருவாக்கியவர் என கருதப்படுகிறது. 32,000-க்கும் அதிகமான கீர்த்தனைகளை எழுதியுள்ளார். அதில் 14,000 மட்டுமே கிடைத்துள்ளன. மேலும், பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பும் இவருக்குள்ளது.

இவர் எழுதிய ஓலைச் சுவடிகள் திருப்பதி கோவில் உண்டியலுக்கு எதிரே ஒரு அறையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல நூல்களை எழுதியுள்ளார்.

இவரது வாழ்க்கையை வைத்து தயாரிக்கப்பட்ட ‘அன்னமய்யா’ என்ற தெலுங்கு திரைப்படம் 1997ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

எந்த வேறுபாடுகளும் இல்லாத தெய்வீகத் தொடர்புதான் இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு என்று கூறிய இவர் 1503ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1874ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1985ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...