தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 13 | ஆரூர் தமிழ்நாடன்
காவேரியின் பரிதவிப்பு!
காவேரியம்மாள் நிலைகொள்ளாமல் தவித்தார். மகள் அகிலாவின் நினைவு அவரது புத்தியில் ஏறி உட்கார்ந்துகொண்டது. ஒரு வேலையும் புரியவில்லை.
அகிலா, தனது கல்யாணக் கனவு பற்றி சொன்னதிலிருந்து ஒருவித பரவசப் பரபரப்பு
அவரைத் தொற்றிகொண்டது.
அகிலாவின் திருமணம் பற்றிக் கேட்டபோது ஜோதிடர், இறுக்கமாக மாறி அதுபற்றி எதுவும் சொல்லமுடியாது என்று சொனாரே அது திடீரென ஞாபகத்துக்கு வர, மனதை
குபீரென பீதி கவ்விக்கொண்டது.
வேலையைப் போட்டுவிட்டு அப்படியே உட்கார்ந்துவிட்டார்.
மனைவியின் முகவாட்டத்தை அறிந்துகொண்ட ஞானவேல் ‘என்ன காவேரி?’ என்றார் வாஞ்சையாய்.
‘அது ஒண்ணுமில்லைங்க. அகிலா பத்தி நம்ம ஜோதிடர்
ஒரு மாதிரி குழப்பமாச் சொன்னதிலிருந்து பயமா இருக்குங்க’ என்றார் காவேரி. குரலில் கவலை பொங்கியது.
‘என்ன காவேரி? சின்னபிள்ளை மாதிரி. உனக்கு இன்னும் குழப்பம் இருந்தா சொல்லு. அந்த ஜோதிடரை மறுபடியும் பார்த்துடலாம்’ என்ற
ஞானவேல்… மனைவியின் முகத்தை ஒருகணம் கூர்ந்து பார்த்தார். பின்,
’ஜோதிடத்தை முழுசா நம்பறது தேவையில்லை என்பது என் எண்ணம். எந்த ராசிக்கும் ஜோதிடர்கள் ஒரே மாதிரி பலன் சொல்றாங்களான்னு பாரு. ஒவ்வொரு ஜோதிடரும் ஒரு பலனைச் சொல்வாங்க. உதாரணத்துக்கு தினசரிகள்ல அவங்க எழுதும் பலன்களைப் பார்த்தாலே உனக்கு உண்மை புரியும். உதாரணத்துக்கு மேஷ ராசின்னு எடுத்துக்கிட்டா, ஒரு பத்திரிகைல இன்னைக்கு தொழில் மேன்மைன்னு பலன் இருக்கும். இன்னொரு பத்திரிகையில் எச்சரிக்கைன்னு எழுதியிருக்கும். வேறொரு பத்திரிகையில் கை நஷ்டம்ன்னு எழுதியிருக்கும். சரி இணையதளத்தில் பார்க்கலாம்ன்னா, உடல்நலத்தில் கவனம் தேவைன்னு இருக்கும் இதில் எது உண்மை, நாம இதில் எதை நம்பறது? இன்னொன்னையும் யோசிச்சிப்பார். நம்ம ஜாதகத்தை பார்க்கிற எந்த ஜோசியராவது, உங்களுக்கு இன்னைல இருந்து நல்ல நேரம் தொடங்கிடிச்சி. போனவாரமே உங்களுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பிச்சிடிச்சின்னு சொல்றாங்களான்னு பார்.
சொல்லமாட்டாங்க. வர்ற ஆடி போய் ஆவணி வந்தாதான் உங்களுக்கு நல்ல நேரம்ன்னு சொல்வாங்க. அப்ப போய்ப் பார்த்தா, மார்கழி போகனும், தை 15-ந் தேதியில் இருந்து நல்ல காலம்ன்னு சொல்வாங்க. அந்த நேரத்தில் போய்ப் பார்த்தோம்ன்னா, இப்ப நேரம் சரியில்லை. உங்க ராசி படாதபாடு படுத்தியிருக்கும். பங்குனி 6-ல இருந்து பாருங்க. ராஜயோகம்தான். அப்புறம் உங்களைக் கைலயே பிடிக்கமுடியாதுன்னு சொல்வாங்க. இப்படி நம்மள காரட்டைக் கட்டிவிட்ட மாதிரி ஓடவிடுவாங்க. அதனாலதான் சொல்றேன். இதையெல்லாம் பெருசா எடுத்துக்கக் கூடாது. ஒரு லிமிட்டுகு மேல ஜோதிடத்தையே பிடிச்சித் தொங்கிக்கிட்டு இருக்கிறது சரியில்லை’ என்றார் ஞானவேல்.
காவேரியோ ‘நீங்க என்னதான் சொன்னாலும், ஏனோ மனச்சு கொடந்து அடிச்சிக்கிது. இப்பதான் அகிலா, கனவு கண்ட சாக்கில் கல்யாணம்கிற வார்த்தையையே நம்மக்கிட்ட சொல்லியிருக்கா. இந்த நேரத்தில் அவளுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னுதான் பயமா இருக்கு. போனமுறை போனப்ப ஜோசியரோட பேச்சி சரியில்லை. வழக்கத்துக்கு மாறா, அகிலா ஜாதகத்தைப் பார்த்துட்டு இறுக்கமா ஆய்ட்டார். அவர் அப்படி நடந்துக்கிறவர் இல்லை. என்னமோ இடறுது’ சொல்லும்போதே காவிரியின் குரலில் பீதி தெரிந்தது.
காவேரியின் பதட்டமும் பயமும் ஞானவேலை யோசிக்கவைத்தது. அவர் நிம்மதிக்காகவாவது மறுபடியும் ஜோதிடரை பார்ப்பது என்ற முடிவுகுவந்த ஞானவேல், ‘சரி, கிளம்பு காவேரி. மறுபடியும் ஜோதிடரைப் பார்த்து விபரமா கேட்டுடலாம்’ என்றார் ஞானவேல்.
1 Comment
I am truly glad to glance at this wblog posts which includes lots of helpful information, thaznks for providing these data. Magdalen Cyril Siegler