உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 16 | சுதா ரவி

 உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 16 | சுதா ரவி

சரியென்று விட்டு தன் இருக்கையில் அமர செல்லும் போது படகு சற்று வேகமாக ஆட நடந்து கொண்டிருந்தவன் உத்ராவின் மேல் விழுந்தான். குனிந்து கொண்டிருந்தவளின் மேல் அவன் விழுந்துதும் பாதி குனிந்த நிலையில் இருந்த உத்ரா நீருக்குள் விழுந்தாள். யாருமே எதிர்பார்க்காமல் நிமிட நேரத்திற்குள் நடந்து விட்ட சம்பவத்தில் படகில் இருந்த அனைவரும் அதிர்ந்து விட்டனர்.

நீருக்குள் விழுந்த உத்ரா கையை நீட்டி உதவியை கோரினாள். படகில் இருந்தவர்கள் பதட்டத்தில் அவளுக்கு கை கொடுக்க ஒரு புறமாக சேர படகு சாயத் தொடங்கியது. அதை பார்த்த படகோட்டி” ஐயோ என்ன பண்றீங்க.இப்படி எல்லோரும் ஒரு பக்கமா சாஞ்சா மொத்தமா எல்லோரும் தண்ணிக்குள்ள முழுக வேண்டியது தான்” என்றார் பதட்டத்துடன்.

உத்ராவின் தோழிகள் மற்றும் அவளின் ஆசிரியர் மூவரும் அழுத வண்ணம் படகோட்டியை இறங்கி அவளை காப்பாற்றும் படி கேட்டனர்.“நான் இறங்க முடியாதும்மா, இருங்க நாம இப்போ வேகமா இங்கே இருந்து போய் ஆளுங்களை அழைச்சிட்டா வந்தா காப்பாத்தலாம். ஆனா அதுக்குள்ளே அந்த பொண்ணு தண்ணியை குடிச்சிடுச்சுன்னா நாம வரதுக்குள்ளேயே முடிஞ்சு போய்டும்” என்றார்.

அவரின் பேச்சை கேட்டு உத்ராவின் தோழிகள் அழத் தொடங்க ஆசிரியருக்கும் மனதில் கலக்கம் வந்தது.. “ஐயா தயவு செஞ்சு சீக்கிரம் போங்க எங்களுக்கு அந்த பொண்ணு உயிரோட வேணும்” என்று கண்களில் கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்டார்.

உடனே அங்கிருந்து கிளம்பி கரைக்கு வந்து நிலைமையை சொல்லி ஆட்களை அழைத்து சென்று தேட ஆரம்பித்தார்கள். அதற்குள் கரையில் இருந்த அனைவரும் அந்த மாணவனை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். உத்ராவின் தோழிகளோ அழுது அழுது கரைந்தனர். ஆசிரியர்கள் அனைவருக்கும் என்ன செய்வதென்றே புரியாமல் கையை பிசைந்த வண்ணம் நின்றிருந்தனர்.

காட்டிற்குள் சென்றவர்கள் ஒரு மணி நேரம் கழித்து காப்பாற்ற முடியவில்லை என்றும் உடல் கூட கிடைக்கவில்லை என்று கூறினார்கள்.. உத்ரா விழுந்த இடத்தை சுற்றிலும் தேடியும் கிடைக்கவில்லை என்று கூறி கையை விரித்தனர். நீரை குடித்து உள்ளே சென்று பிறகு மொத்தமாக மூச்சு நின்ற பிறகு நீரின் ஓட்டத்திற்கு தகுந்தார் போல் உடல் எங்காவது சென்று

வேர்களுக்கிடையில் சிக்கி இருக்கும். இன்னும் தூரம் சென்று தேட வேண்டு கூறி விட்டனர்.

அதுவரை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள் மீனவர்கள் சொன்னதை கேட்டு விதிர் விதிர்த்து நின்றனர். எப்படி இந்த விஷயத்தை உத்ராவின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்துவது என்று பயந்து ஆலோசிக்க ஆரம்பித்தார்கள். பின்னர் ஒரு மூத்த ஆசிரியர் உத்ராவின் தந்தைக்கு போன் மூலம் நடந்த விபத்து பற்றி சிறிது சொல்லாம் என்றும் மீதி விபரத்தை இங்கே வந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்றும் கூறினார். அதை கேட்டு மற்றவர்களும் சம்மதம் தெரிவிக்க உடனே உத்ராவின் தந்தைக்கு அழைத்தனர்.

வேலையில் மூழ்கி இருந்த மணியை தொலைபேசி அழைத்தது. பொதுவாக அவருக்கு வேலையில் இருக்கும் போது வீட்டில் இருந்து அழைப்பு வராது. பணி சம்மந்தப்பட்ட அழைப்புகள் தான் வரும். அதனால் அன்றும் அந்த அழைப்பு என்றெண்ணி….” எஸ் மணி ஹியர்.” என்றார்.

மறுபுறம் பேசிய குரலில் சற்று பதட்டம் காணப்பட்டது.” சார்…இது உத்ராவோட அப்பா மணி சார் தானே?” என்று கேட்டார்கள்.

உத்ராவின் தந்தையா என்ற கேள்வி வந்ததும் சற்று படபடப்பானவர் மகள் டூர் போய் இருப்பது நியாபகம் வர பயத்துடன்” ஆமாம் சார்..நீங்க யாரு? எதுக்கு உத்ராவோட அப்பாவான்னு கேட்குறீங்க” என்று பதைபதைப்புடன் கேட்டார்.

“சார் நான் உங்க பொண்ணு படிக்கிற கல்லூரியில பேராசிரியர்….நாங்க இங்கே டூர் வந்த இடத்தில் ஒரு விபத்து நடந்து போச்சு.நீங்க இங்கே வர முடியுமா?” என்று கேட்டார்.

அதை கேட்டதும் பதட்டத்துடன்” என் பொண்ணுக்கு ஒன்னும் இல்லையே..அவ கிட்ட போனை குடுங்க நான் பேசணும்” என்றார்.

“சார் அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆனா நீங்க இங்கே நேரா வந்தா நல்லது…ப்ளீஸ் சீக்கிரம் கிளம்பி வாங்க.”

அவர்கள் சொன்ன பதில் திருப்தி அளிக்கவில்லை மேலும் தன்னை நேரே வர சொல்லுகிறார்கள் என்றால் தன் பெண்ணுக்கு ஏதோ நேர்ந்து விட்டது என்று உள்மனது உரைக்க அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இதயம் படபடவென்று அடிக்கத் தொடங்கியது. அவரின் பக்கத்து சீட்டில் இருந்த அவர் நண்பர் பாஸ்கரன் மணியின் நிலையை பார்த்து விட்டு என்ன ஏது என்று விசாரித்து செய்தியை அறிந்து கொண்டு அவரை தனியே அனுப்ப மனமில்லாமல் தானும் உடன் கிளம்பினார்.

பிச்சாவரம் சென்றடையும் வரை மனதிற்குள்ளேயே அனைத்து கடவுள்களையும் வேண்டிக் கொண்டு வந்தார். காரில் இருந்து இறங்கி நேரே படகு துறைக்கு வந்தவர்களை உத்ராவின் தோழிகளின் கதறல்களே வரவேற்றது. அவர்களின் அழுகையை பார்த்ததுமே விபரீதமான நிகழ்வு நடந்து விட்டது என்று புரிந்து வேகமாக சென்று ஆசிரியர்களிடம் விசாரித்தார்.

நடந்த சம்பவத்தை அவர்கள் விவரிக்க அதை கேட்டவர் பதறி போய் தலையில் அடித்துக் கொண்டு” உங்களை நம்பி தானே அனுப்பினேன் என் பெண்ணை.இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாம விட்டுடீங்களே..எங்கே என் பொண்ணு சொல்லுங்க?”என்று கோபமும் அழுகையும் கலந்த உணர்வுடன் சத்தம் போட ஆரம்பித்தார்.

மணியுடன் வந்த நண்பர் மணியை சமாதானப்படுத்தும் வழி அறியாது திகைத்து பின் ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு உத்ராவை மீட்க என்ன ஏற்பாடு செய்தீர்கள் என்று கேட்டார். அவர் கேட்டதும் அதுவரை அழுது கொண்டிருந்த மணியும் அங்கிருந்தவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு. “தயவு செய்து யாராவது என் பெண்ணை காப்பாற்றுங்கள்” என்று கதறினார்.

அங்கு நடந்த சம்பவத்தை பத்தி கேள்விப்பட்ட போலீஸ் குழு ஒன்றும் அக்கம்பக்கத்தில் இருந்த மீனவ கிராமத்தில் இருந்த மீனவ இளைஞர்களும்

வந்து விட நாலா புறமும் படகை எடுத்துக் கொண்டு தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.அங்கேயே பிறந்து வளர்ந்த மீனவ இளைஞர்களுக்கு ஒவ்வொரு இடமும் அத்துபடி ஆதலால் தாங்களே முன்னே வந்து தேடினர். தேடிய இடங்கள் எல்லாம் ஏமாற்ற்றமே மிஞ்ச ஒவ்வொரு படகும் திரும்பி வந்தது. அதற்குள் மாலை நேரம் ஆகி இருந்தது….கடைசியாக இன்னும் ஒரு குழு மட்டும் வராதிருக்க அவர்களின் வருகைக்காக அனைவரும் பயத்துடனேயே காத்திருந்தனர். மணியோ முற்றிலுமாக நம்பிக்கையை இழந்திருந்தார். காலையில் விழுந்த பெண் இதுவரை கிடைக்கவில்லை என்றால் உயிருடன் இருப்பதற்கு சாத்தியமில்லை என்று புரிந்த பிறகு உடலும் மனமும் தளர்ந்து போனது.

தன் மகள் உயிருடன் இல்லை என்ற நினைவு அவருக்கு மயக்கத்தை வரவழைத்தது. அவர் மயங்கி விழுந்ததும் முதல் உதவி செய்து அவரை அமர வைத்து விட்டு கடைசி படகிற்காக காத்திருந்தனர். அந்த படகும் உத்ராவின் உடலின்றி வந்தது. அதிலிருந்த மீனவர்கள் உடல் எந்த திசையில் சென்றிருக்கும் என்று தங்களால் சொல்ல முடியும் ஆனால் இப்பொழுது இருட்டுகின்ற நேரத்தில் போய் தேட முடியாது என்பதால் நாளை காலை தேடி எடுத்து விடலாம் என்று உறுதி அளித்தனர்.

“என் பொண்ணு இல்லாம நான் வீட்டுக்கு போக மாட்டேன்.பாசு நீ போய் அவங்க கிட்டே என் பெண்ணை கூட்டிட்டு வா பாசு” என்று சிறு குழந்தை போல கதற ஆரம்பித்தார்.

அவரிடம் பக்குவமாக பேசி மற்ற நண்பர்களுக்கும் தகவல் அளித்து விட்டு மணியை அழைத்துக் கொண்டு கிளம்பினார் பாஸ்கரன்.

ராஜி மாலை நேரம் விஸ்வாவின் அம்மாவுடன் சிறிது நேரம் பேசும் வழக்கத்தை வைத்திருந்தார். அதிலும் வீட்டிற்கு சென்று பேச மாட்டார். அந்த காம்பவுண்ட் சுவரிலேயே சாய்ந்து நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பார். அன்றும் அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது மித்ரா வந்து விட.” மித்து டேபில்ல கேசரியும் பக்கோடாவும் செஞ்சு வச்சு இருக்கேன் சாப்பிட்டுட்டு

அப்படியே கொல்லையில இருக்கிற செடிக்கு தண்ணியை ஊத்திடுமா” என்றார்.

அவளும் சரி என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள். விஸ்வாவின் அம்மா ” ஏன் ராஜி உத்ரா வந்தாச்சா? இன்னைக்கு டூர் போறேன்னு சொன்னாளே?”

“பிடிவாதமா அவங்க அப்பா கிட்ட ஐஸ் பிடிச்சு கிளம்பிட்டா.இப்போ வர நேரம் தான்”என்றார்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வீட்டு வாசலில் கார் வந்து நிற்க அதில் இருந்து மணியை கையை பிடித்து அழைத்த படி இறங்கினார் பாஸ்கரன். அதை பார்த்துக் கொண்டிருந்த ராஜி மணிக்கு ஏதோ உடம்பு சரியில்லை என்று எண்ணி பதறியடித்துக் கொண்டு ஓடினார்.” என்னன்னா ஆச்சு இவருக்கு? உடம்பு சரியில்லையா” என்று வினவிக் கொண்டே அவர் கைகளை தன் தோளில் போட்டு தன்னோடு சாய்த்துக் கொண்டு உள்ளே அழைத்து கொண்டு நடந்தார்.

அப்போது டூர் சென்ற கல்லூரி பேருந்தும் வந்து நிற்க அதன் பின்னே ஒன்றன் பின் ஒன்றாக கல்லூரி ஆசிரியர்களும் விஷயத்தை கேள்வி பட்டு வரத் தொடங்கினர். அதுவரை மணிக்கு தான் உடல்நலம் சரியில்லை என்று எண்ணி இருந்தவருக்கு நிலைமையின் விபரீதம் புரிந்தது. மணியிடம் இருந்து அவசரமாக விலகி அவரை பார்த்து” எங்கே என் பொண்ணு என்ன ஆச்சு என் பொண்ணுக்கு சொல்லுங்க சொல்லுங்க” என்று கத்த துவங்கினார்.

அவரிடம் இருந்து பதில் வராமல் தலையை குனிந்து கொண்டு அழுவதை பார்த்ததுமே பெற்ற வயிறு கலங்கி துடிக்க மணியின் சட்டையை பிடித்து.”அனுப்ப வேண்டாம் அனுப்ப வேண்டாம்ன்னு தலைபாடா அடிச்சு கிட்டேனே கேட்டீங்களா? என்ன ஆச்சு என் பொண்ணு எங்கே சொல்லுங் சொல்லுங்க” என்று பித்து பிடித்தவர் போல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய ஆர்மபித்தார். ஒவ்வொருவரிடம் சென்று என் பொண்ணு எங்கே எங்கே என்று கத்தி கதறத் தொடங்கினார்..

உள்ளே இருந்த மித்ரா வெளியே கேட்ட சப்தத்திலும் அம்மா அப்பாவின் அழுகையிலும் ஓடி வந்தவள் நடந்தவைகளை கண்டு அதிர்ச்சியாகி அக்கா இறந்து விட்டாள் என்ற செய்தியில்”ஐயோ அக்கா, நீ வருவேன்னு சொன்னியே திரும்பி வாக்கா.எனக்கு உன்னை பார்க்கனும்க்கா” என்று அவளும் அழு ஆரம்பித்தாள்.

அக்கம்பக்கம் உள்ளவர்கள் சொந்தங்கள் என்று மெல்ல மெல்ல செய்தி அறிந்து அவர்களின் வீட்டு வாசலில் கூடி விட்டது. ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந்த ஆலோசனையை தெரிவித்தும் உத்ரா எவ்வளவு அற்புதமான பெண் என்று அவளின் இழப்பு குடும்பத்திற்கு மிகப் பெரிய இழப்பென்றும் பேசிக் கொண்டிருந்தனர்.

இறந்தவளின் நாயகனோ முதல் நாளின் இனிப்பான நினைவில் தன் வேலைகளை சீக்கிரம் முடித்துக் கொண்டு தன்னவளை பார்த்து அவள் சொல்லப் போகும் கதைகளை கேட்பதற்காக ஆசையுடன் வந்து கொண்டிருந்தான்.. தெருமுனையில் திரும்பும் போதே எப்போதுழுதும் இல்லாத அளவுக்கு பரபரப்பு தென்பட்டார் போல் தோன்றியது . விஸ்வாவின் வீட்டை நெருங்க நெருங்க உத்ராவின் வீட்டு வாசலில் இருந்த கூட்டத்தை பார்த்து நெற்றி சுருங்க என்னவென்று யோசித்தான். பின்னர் இதயத்திற்குள் ஏற்பட்ட ஏதோ ஒரு பதைபதைப்புடன் கூட்டத்தை நெருங்கி என்னவென்று தெரிந்து கொள்ள முற்பட்டான். பக்கத்தில் தெரிந்த முதியவரிடம் விசாரிக்க.” அவங்க பொண்ணு பிச்சாவரம் போன இடத்தில் தண்ணிக்குள்ள மூழ்கி இறந்து போச்சு பா”என்றார்.

அவர் சொன்ன செய்தியின் தீவிரம் இதயத்தை தீண்ட யாரை காண, யாரிடம் கதை பேச, யாரை நெஞ்சோடு வாரி அனைத்துக் கொள்ள வந்தானோ அவளின் மரண செய்தி செவி வழி பாய்ந்ததில் உலகமே சுழற்சியை நிறுத்திக் கொண்டதாக உணர்ந்தான். அனைத்தும் செயலற்று போனது போல் எண்ணி இந்த செய்தி உண்மையாக இருக்காதா என்று எல்லோர் முகத்தையும் பார்த்த்தான். அதில் தெரிந்த துக்கத்தில் இது உண்மை தான்

என்று உணர்ந்து அழ கூட இயலாமல் நின்றான். அப்போது அந்த பெரியவர்…” பாவம் உடம்பு கூட கிடைக்கலப்பா”என்றார்.

அதை கேட்டது…” என்ன சொல்றீங்க…உடம்பு கிடைக்கலையா?”

அவர் தலையாட்டி……”ஆமாம் பா…..நகர்ந்து நகர்ந்து போய் வேர்களுக்கிடையே மாட்டி இருக்கும் போல நாளை காலையில தான் எடுத்து தருவேன்னு சொல்லிட்டங்களாம்” என்றார்.

அதை கேட்டதும் என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே காரை எடுத்துக் கொண்டு வேகமாக பிச்சாவரதிற்கு சென்றான். அங்கு சென்று கரையோரம் ஓடி ஓடி ஒவ்வொரு இடமாக தேடினான். என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அங்கும் இங்கும் ஓடிக் களைத்தான். மனமோ தவிப்புடன் அழுது கொண்டிருந்தது நேற்று என் கைகளில் இருந்தவள் இன்று இல்லாமல் போனாளே. எங்கே தேடுவேன் அவளை, இப்படி ஏமாற்றி போகவா அத்தனை கதைகளை பேசினாய் ? மனம் கவர்ந்தவளின் இழப்பை எண்ணி எண்ணி ஓடியவனுக்கு மனமும் உடலும் தொய்ந்து போனது அப்படியே சோர்ந்து அமர்ந்து விட்டான்.

முந்தைய இரவு அவர்களின் காதலை ரசித்த நிலவுக்கு அவனின் இழப்பை காண மனமில்லாமல் ஓடி ஒளிந்து கொண்டது. அடுத்த நாளும் உணவின்றி உறக்கமின்றி உத்ராவின் உடலை தேடுபவர்களின் பணியை பார்த்துக் கொண்டு அங்கேயே இருந்தான். ஆனால் அன்றும் உடல் கிடைக்கவில்லை. அவர்களுக்குமே அதிசயமாக இருந்தது, என்னதான் நீரின் வேகத்தில் அடித்துசென்றாலும் இப்படி உடல் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பே இல்லையே என்று பேசிக் கொண்டனர்.அதற்கு அடுத்த நாள் தான் மீனவர்கள் இன்னும் சற்று தள்ளி இருந்த இடத்தில் தேட சென்று அங்கு ஒரு பெரிய குறுமரத்தின் வேர்களில் சிக்கி இருந்த உடலை எடுத்துக் கொண்டு வந்தனர்.

அவர்கள் உடலை கொண்டு வந்த நேரம் உத்ராவின் குடும்பத்தினர் அனைவரும் அங்கேயே தான் இருந்தனர். படகில் இருந்து உடலை கொண்டு வந்து கரையில் போட்ட போது அதை பார்த்தது ராஜியும் , மித்ராவும்…

(தொடரும்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 | அத்தியாயம் – 13 | அத்தியாயம் – 14 | அத்தியாயம் – 15 | அத்தியாயம் – 16 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...