நீயெனதின்னுயிர் – 17 | ஷெண்பா

“தேவி! ஸ்ட்ராங்கா ஒரு காஃபி கொண்டு வாம்மா!” என்றபடி டையை தளர்த்தி விட்டுக் கொண்டே சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து, சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார் சங்கரன்.

“என்னப்பா, அம்மா ஊருக்குப் போயிருக்காங்களே… மறந்துட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே தலைவலி மாத்திரையையும், தைலத்தையும் எடுத்துக் கொண்டு வந்தாள் வைஷாலி.

“பழக்க தோஷம்டா…” என்ற தந்தையைப் புன்னகையுடன் பார்த்தபடி மாத்திரையைக் கொடுத்தவள், தைலத்தைத் தேய்த்துவிட்டு வலிக்கு இதமாகத் தலையைப் பிடித்துவிட்டாள்.

அன்னை, தந்தை இருவருக்குள்ளும் எத்தனை மனக்கசப்பு வந்தாலும், அந்தக் கோபம் அவர்களுக் கிடையில் சிறிது நேரத்திற்கு மட்டுமே நிலைக்கும். அடுத்த நிமிடமே ‘தேவி’ என்று சங்கரன் குரல் கொடுத்தால், “வந்துட்டேங்க” என்று தேவிகா ஓடுவதும்; “என்னங்க” என்று அழைத்தால், “சொல்லும்மா” என்று தந்தை ஓடுவதையும் பார்த்து வளர்ந்தவளுக்கு, தானும் தன் கணவனுடன், கடைசி வரை இப்படி அன்னி யோன்யமாக இருக்கவேண்டுமென்று நினைத்துக் கொள்வாள்.

“ரொம்ப டயர்டா தெரியறீங்களேப்பா! ஏதாவது பிரச்சனையா…?” என்று பரிவுடன் விசாரித்தாள்.

“லேபர்ஸ் மீட்டிங்டா… பிரச்சனை மேல் பிரச்சனை. நாம கொஞ்சம் முகம் கொடுத்துப் பேசினால், நம்மைக் கீழே தள்ளி மேலே ஏறி நிற்பாங்க போல…! நாம அவங்களுக்குச் செய்யும் நல்லதைப் புரிஞ்சிக்க… புத்தியும் இல்லை, எடுத்துச் சொன்னா கேட்டுக்க… நிதானமும் இல்லை!” என்று சலித்துக்கொண்டார்.

“விடுங்கப்பா… கொட்டுறது தேளோட குணம். அதுக்காக வருத்தப்பட்டு ஆகப்போறது எதுவும் இல்லைப்பா! ஒண்ணு, அது கொட்ட வருதுன்னு தெரிஞ்சா அதோட பாதையிலிருந்து விலகிப் போறதும், இல்லைனா அதோட கொடுக்கையே தூக்க முடியாமல் அடிச்சிப் போடுவதும் நம்ம கையில் தான் இருக்கு…

இதுக்கெல்லாம் கவலைப்பட்டு நீங்க உடம்பைப் கெடுத்துக்காதீங்கப்பா. நல்லதைச் சொல்லியும் அவங்க கேட்கலைனா, எக்கேடோ கெட்டுப் போன்னு விட்டுட்டு, நம்ம வழியில் போவோம்ப்பா… ஜஸ்ட் ரெண்டு நிமிஷத்திலே, ஸ்ட்ராங்கான காஃபியோடு வரேன்” என்று சொல்லிவிட்டு வைஷாலி உள்ளே செல்ல, மகளைப் பெருமையுடன் பார்த்தார் சங்கரன்.

தான் அவளிடம் சில விஷயங்களைப் பேசித் தெளிவுபடுத்த வேண்டுமென்று நினைத்திருக்க, இங்கே விஷயம் தலைகீழாக இருப்பது போல் தோன்றியது. இரு தினங்களுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் அப்போது நினைவிற்கு வந்தது.

“நான் இன்னைக்கு அண்ணியைப் போய் பார்த்துட்டு வரேன். வரச்சொல்லி ஃபோன் பண்ணாங்க. நீங்க என்னை அவங்க வீட்டில் டிராப் பண்ணிட்டு, நீங்க ஆஃபிஸ் போய்ச் சேர்ந்ததும் காரை எனக்கு அனுப்பிடுங்க. வைஷூவும் வரலைன்னு சொல்லிட்டா. தனியாதான் போறேன்… திரும்பி வரும்போது ஆட்டோவில் வந்திடுவேன். இருந்தாலும் காரில் போய் வந்தால் நமக்குத் தானே மரியாதை. நம்ம பிரஸ்டீஜை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாதில்ல” கழுத்தி லிருந்த அட்டிகையைச் சரி செய்தபடி சொல்லிக் கொண்டிருக்க, சங்கரன் அமைதியாக மனைவியைப் பார்த்தார்.

“வைஷூ ஏன் வரலையாம்?” என்று முகம் இறுக கேட்டார்.

“ரெண்டு நாளைக்கு முன்னால தானே போனோம்… நீங்க வேணா போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டா, அவளுக்கு விக்ரம் இருந்தா பொழுது போகும்… அவன்தான் இல்லையே” என்று சிரித்த மனைவியைப் பார்த்து எரிச்சலாக வந்தது சங்கரனுக்கு.

“சின்னப் பொண்ணு அவளுக்குத் தெரியற விஷயம்கூட உனக்குப் புரியமாட்டேன்னுது” என்று சிடுசிடுத்தார் சங்கரன்.

திரும்பிக் கணவரைப் பார்த்த தேவிகாவின் முகத்தில் கோபம் தெரிந்தது. “என்ன புரியலை எனக்கு?” என்று வேகமாக கேட்டார்.

“ம், அவங்க நமக்கு உறவுன்னு தெரிஞ்ச இந்தப் பதினைந்து நாள்ள, நாம மூணு பேரும் சேர்ந்து அவங்க வீட்டுக்குப் போய் வந்ததைத் தவிர்த்து, நாலாவது முறையா நீ அங்கே போற… இதெல்லாம் நல்லாவா இருக்கு” என்றார்.

‘தானும் பதிலுக்குப் பதில் பேசினால் ஒன்றுக்கும் உதவாது’ என்று நன்றாக புரிந்து வைத்திருந்த தேவிகா, தனது நெஞ்சக் குமுறலை உள்ளுக்குள்ளேயே மறைத்துக் கொண்டு, கணவரைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“தூரத்து சொந்தமுன்னு தானே யோசிக்கிறீங்க… அதைப் பத்தி நீங்க சங்கடப்படவே வேணாம். அண்ணன், அண்ணி ரெண்டு பேருமே நம்மை நெருங்கிய சொந்தமாக்கிக்கணும்னு விரும்பறாங்க. அதாவது நம்ம வைஷூவை அவங்க வீட்டு மருமகளாக்கிக்க விரும்ப றாங்க…” என்றதும், சங்கரன் ‘இதை எதிர்பார்த்தேன்’ என்பது போன்ற பார்வையை, மனைவி மீது வீசினார்.

“விக்ரமுக்கும் அந்த நோக்கம் இருக்கும் போல…” என்றதும், சங்கரன் ஓய்ந்து போனவராக, அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தார்.

“நம்ம பொண்ணுக்குக் கிடைக்கப் போற வசதியான, ஆடம்பரமான வாழ்க்கை. அதனால் நமக்குக் கிடைக்கப் போற கௌரவம்… நினைச்சிப் பாருங்க…” என்று கண்கள் மின்ன, ஆவலுடன் கணவரின் முகத்தைப் பார்த்தார்.

“ஒரு அம்மாவா உன்னுடைய ஆசை நியாயமானது தான். ஆனால், வைஷூக்கு இதில் சம்மதமான்னு கேட்டியா? உன்னோட ஆசைக்காக நம்ம பொண்ணைப் பகடைக் காயா ஆக்கிடாதே…” என்றார்.

அவரருகில் வந்த தேவிகா, “இங்கே பாருங்க, என் பொண்ணு அதி புத்திசாலி இல்லைனாலும், முட்டாள் இல்ல” என்ற மனைவியை என்ன சொல்வதெனப் தெரியாமல் பார்த்தார்.

‘தேவிகாவிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசிப் பேசிப் பெரிதாக்குவதை விட, சம்மந்தப்பட்ட வைஷாலி யின் மனத்தில் என்ன இருக்கிறது? என்று, நேரடியாக பேசித் தெரிந்து கொள்வது தான் நல்லது’ என்று நினைத்தவர் மீண்டும் அதைப் பற்றி தேவிகாவிடம் விவாதிக்கவில்லை.

“அப்பா!” என்று தோளை உலுக்கி மகள் அழைத்த சப்தம் கேட்டு, பழைய நினைவுகளைக் கலைந்து கண்களைத் திறந்தார் சங்கரன்.

“காஃபியைக் குடிச்சிட்டு, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரிங்கப்பா…”

“ம்… சரிடா” என்றவர் கப்பை வைத்துவிட்டு தனது அறைக்குச் சென்றார்.

வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்ட போதிலும், அப்போதெல்லாம் இல்லாத மாற்றத்தை, கடந்த சில நாட்களாகத் தந்தையிடம் உணர்ந்தாள் வைஷாலி. ‘இயல்புக்கு மாறாக, எப்போதும் ஏதோ ஒரு யோசனையிலேயே இருந்தது போலத் தெரிந்ததை, அவரிடம் முதலிலேயே கேட்டிருக்கலாமோ?’ என்று நினைத்தவளுக்கு மனம் எதிலும் ஒன்றவில்லை.

“வைஷும்மா!” என்று அழைத்தார் சங்கரன்.

”சொல்லுங்கப்பா… ஏதாவது வேணுமா?” என்று கேட்டபடி தந்தையைப் பார்த்தாள்.

சிரித்தவர், “ஒண்ணுமில்லைடா… இன்னைக்கு மணி ஃபோன் செய்திருந்தான். நம்ம ஜோதியோட பிரச்சனை எல்லாம் சரியாயிடுச்சி… வளைகாப்பு வச்சிருக்காங்களாம்” என்று விஷயத்தைச் சொன்னார்.

என்னவோ ஏதோவென்று பதறி ஓடிவந்தவள், சந்தோஷத்துடன், “அப்படியாப்பா! இப்போவே நான் ஜோதியிடம் பேசறேன்ப்பா!” என்றவள் தன் அறைக்கு ஓடினாள்.

“வைஷூ! ஆயுசு நூறுப்பா உனக்கு…” உற்சாகப் பந்தாய் துள்ளியது ஜோதியின் குரல்.

‘இத்தனைச் சந்தோஷத்தோட இவ குரலைக் கேட்டு எத்தனை நாளாச்சு!’ என்ற மனநிறைவுடன் புன்னகைத்துக் கொண்டாள் வைஷாலி. “நீ என்னை நினைவு வச்சிருக்கேன்னு நம்பிட்டேன்…!” என்று போலியான கோபத்தைக் குரலில் வரவழைத்துக் கொண்டு சொன்னாள்.

“ம்ம்” என்றபின்னர் சிரித்த ஜோதி, “எப்படியிருக்க வைஷூ!” என்றாள்.

“நல்லாயிருக்கேன். சரியான கள்ளிடீ நீ! உன் வீட்டுக்காரரோட ராசியாகி, வளைகாப்புக்குத் தேதி குறிச்சது வரைக்கும் விஷயம் வந்திருக்கு… என்கிட்டே ஒரு வார்த்தை கூடச் சொல்லாம அமுக்குணியா இருந்திருக்க…!”

“கோச்சிக்காதே வைஷூ! நான்தான் சஸ்பென்சா வச்சி சொல்லலாமுன்னு இருந்தேன்… ப்ளீஸ்டா” என்று கெஞ்சுதலாகப் பேசினாள் ஜோதி.

“என்னடி இதுக்கெல்லாம் கெஞ்சிட்டு இருக்க. நான் சும்மா விளையாட்டுக்குப் பேசினேன். ரொம்பச் சந்தோஷமா இருக்கு ஜோ. உன் பக்கத்திலே இருந்து உன்னோட சந்தோஷத்தை நேரில் பார்க்க முடியலை யேன்னு சின்ன வருத்தம்” என்றாள் நெகிழ்ச்சியுடன்.

வைஷாலி பேசிக் கொண்டிருக்கும்போது, “ஜோ! நான் கொஞ்சம் வெளியே போய் வரேன்…” என்ற ராகவின் குரல், பின்னால் கேட்டது.

“என்னடி! சிடுமூஞ்சி சாமியார் வீட்டில் தான் இருக்காரா?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் வைஷாலி.

“ஹேய்! யாரைப் பார்த்து சிடுமூஞ்சின்னு சொல்ற?” -குரலை உயர்த்தினாள் ஜோதி.

“அடேங்கப்பா! சப்போர்ட் ஓவராதான் இருக்கு…” என்று சிரித்தவள், சிறிது நேரம் பேசிவிட்டு சந்தோஷத்துடன் போனை வைத்தாள்.

(தொடரும்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 | அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 |அத்தியாயம் – 13 |அத்தியாயம் – 14 | அத்தியாயம் – 15 | அத்தியாயம் – 16 | அத்தியாயம் – 17 |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!