பண்ணை வீடு, நாடகம் முடிந்து ஆசுவாசத்தில் நடிகர்கள், மாடியில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டு, “தம்பி கிராமமாச்சே சாப்பாடு எல்லாம் எப்படியிருக்குமோன்னு பயந்தோம் ஆனா உண்மையில் வீட்டுச் சாப்பாடு மாதிரி அம்சமா இருந்தது. அம்மாவின் கைப் பக்குவம் ரொம்ப அருமையா இருந்தது.!” வெத்திலை சீவலை மடித்து கொடுத்துக் கொண்டிருந்த கண்ணனிடம் பாராட்டிக் கொண்டு இருந்தார்கள்.
“நாங்களும் நன்றி சொல்லணுங்க ரொம்ப அற்புதமா நீங்க எல்லாரும் சிறப்பா செய்து கொடுத்திட்டீங்க ?” வேணி எல்லாருக்கும் பொதுவாய் தண்ணீர் குவளையும் கூடவே இரண்டு மூன்று லோட்டாகளையும் வைத்துவிட்டு கண்ணனைப் பார்த்து ஜாடை செய்தாள் தனியே வரும்படி, வந்த இரண்டு நாட்களில் அவளால் அவனிடம் பேசவே முடியவில்லை, ஏதாவது வேலையென்று அவன் அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருந்தான்.
அவளும் வந்திருந்தவர்களுக்கு முகப்பூச்சிற்கும் உடைகளை தேர்வு செய்வதற்கும் அடுத்த காட்சிக்கு தேவையான முன்னேற்பாடுகளைக் கவனிப்பதிலேயே முனைப்பாக இருந்ததால் அவளாலும் அவனிடம் பேச முடியவில்லை, இந்த ராத்திரியையும் விட்டால் இதோடு நாளை மெட்ராஸீக்கு செல்ல வேண்டிவந்துவிடும் அதனால் அன்றைய பேச்சின் பதிலை கண்ணனிடம் கேட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் வேணி, “அப்போ கண் அசறுங்க நான் காலையிலே வர்றேன் இப்போ ஏதாவது வேணுமா ?” கண்ணன் குறிப்பறிந்து கிளம்பினான்.
“இல்லைப்பா ஏதும் வேண்டாம்?!”
“என்ன மாமா காலையிலே இருந்து தொண்டைக் கரகரங்குதே நமக்கெல்லாம் தொண்டையும் குரலும்தானே ஆதாரம் கொஞ்சம் மிளகுபால் காய்ச்சி பனங்கற்கண்டு போட்டு தரச்சொல்லுங்க வாசலில் இருந்து வேணியின் குரல் நாதமாய். மற்றவர்கள் படுக்கைக்குத் தயாராக…!?”
“அம்மா தூங்கிட்டாங்க !”
“பரவாயில்லை அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் நான் பாலைக் காச்சி எடுத்திட்டு வர்றேன் நீங்க போங்க,?”
“இல்லை நீ சின்னப்பொண்ணு கையிலே கால்லே போட்டுகிட்டின்னா அம்மா என்னைத்தான் திட்டுவாங்க.”
“என்னையென்ன வீட்டுவேலை செய்யத்தெரியாதவன்னு நினைச்சிட்டீங்களா ? நானும் கிராமத்திலே இருந்தவதான் அம்மா சூட்டிங்குக்கு போகும் போதெல்லாம் நான் தான் சமைப்பேன், மாமா நான் போய் எல்லாருக்கும் பால்காய்ச்சி எடுத்துட்டு வர்றேன்!” என்று அவனுடன் நடந்தாள்.
“நளபாகமா ?”
“கிண்டலா ?!”
“இல்லை வேணி நான் உண்மையைத்தான் சொல்றேன் அழகு, குணம், பாங்குன்னு எல்லாமே உனக்கு இருக்கு சினிமா உலகம் உன்னை ராணி மாதிரி வைத்துக்கொள்ள காத்திருக்கு !”
“அப்படியொரு நினைப்பே எனக்கில்லைன்னு அன்னைக்கு நான் பேசினதில் இருந்தே உங்களுக்குப் புரிஞ்சிருக்கணுமே. நிறைய யோசனைகள் மனதைப் போட்டு அரிக்குதுங்க ?!” அவளின் வார்த்தைகளும், முகமும் அந்த விழிகளும் கண்ணனுக்கு எதையோ உணர்த்தியது.
“நான் சொன்னதை யோசீங்களா ?” கண்ணனின் முன் வீசப்பட்ட கேள்வியில்,
“வேணி உண்மையை உடைச்சி சொல்லணுன்னா எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு இதே கொட்டகையில் தான் என் வாழ்க்கை தொடங்கிடுச்சி இப்போ என் நேசத்தை காலையிலே அங்க வைச்சித்தான் பேசணுன்னு நினைச்சேன். முதல் நாள் பார்த்தவுடனேயே வேணியை எனக்குப் பிடிச்சிப் போச்சு. ஆனா நீ சினிமாவிலே நடிக்கப் போறேன்னு தெரிஞ்சதோ அப்பவே மனசில நொறுங்கிட்டேன்.”
“சினிமா எனக்குப் பிடிக்கும்தான். ஆனா குடும்பம் அதைக் கண்டிப்பா ஏத்துக்காது. ஆனா நீ மறுநாள் உண்மையை உடைச்சி சொன்னப்போ அதுக்கு பதில் சொல்லக்கூட சூழ்நிலை சரியில்லை. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு வேணி. இது குக்கிராமம் நீங்க வேற ஆளுங்க, சாதி மறுப்பு எல்லாம் தடையாக இருக்கு, ஆனா எனக்கு முதலியார் அய்யா மேல நம்பிக்கை இருக்கு அவருக்கு எம்மேல கொள்ளைப் பிரியம்.”
“அவரு காதுலப் போட்டுட்டா எல்லாம் நல்லபடியா நடக்கும் அப்பா இல்லாம வளர்ந்தவன் நான். அம்மாவும் தம்பி தங்கைதான் உலகம். இப்ப நீ ? அம்மாவை சமாளிக்கணும். அதே நேரம் உன்னை சினிமாவுலே நடிக்க வைச்சே தீருவேங்கிற உங்க அம்மாவோட நினைப்பு இன்னும் பூதாகரமா பயமுறுத்துது!”
“கண்ணா என்னைப் பெத்தவளை சமாளிக்க வேண்டியது எம்பொறுப்பு. நீங்க நல்ல முடிவா சொல்லுங்க. எனக்கு அப்பா யாருன்னே தெரியாது. சினிமா மேல உள்ள ஆசையை விடவும் அம்மாக்கு எம்மேல பாசம் அதிகம். இந்த ஊருக்கு ராமதுரை மாமா கூட எடுபிடி வேலைக்கு வந்ததுக்குக்கு காரணம் கூட உங்களைப் பார்க்கத்தான். காரணம் நான் சொல்லித் தெரியவேண்டியிதில்லை என்று நினைக்கிறேன்!”. அவளின் குரலில் இருந்த உறுதியும், நினைத்ததை முடிக்க எத்தனை வேலை செய்து இருக்கிறாள் என்ற எண்ணமும் வேணியின் மேல் காதலைக் கூடுதலாகவே பொழிய வைத்தது.
“எனக்கு சம்மதம் வேணி ரொம்ப நேரம் ஆச்சு எல்லாரும் காத்திருப்பாங்க வா போகலாம் நாளைக்கு நீ கிளம்பறதுக்குள்ளே நான் அம்மாகிட்டே பேசிட்டு பதில் சொல்லிடறேன்?!”.
பால் கொதிப்பதைப் போல, இருவரின் மனதும் கொதித்தது. காதல் என்றாலே தயக்கம்தான் முன்னால் முந்திக்கொண்டு நிற்கும். அப்படித்தான் திகைப்பினைப் பூசிய விழிகளோடு, மெளனமாய் வேலைகள் தொடர்ந்தது. அவர்களின் உதடுகளுக்குப் பதில் டம்ளர்களும் அதில் வார்க்கப்பட்ட பாலும்தான் பேசியது. மிளகைப் பொடித்து மஞ்சளும் கலந்து தூவி இருவரும் ஒன்றாகவே மாடியேறினார்கள்.
காலிப் பாத்திரங்களை ஒழித்து வைக்க வேணி கீழே இறங்கினாள் ஆனால் இம்முறை கண்ணனின் அம்மா முன் நின்றார். “விடும்மா உனக்கெதுக்கு சிரமம் ? நான் பார்த்துக்கறேன் !”
“பரவாயில்லைம்மா நான் இப்போ மேல போய் என்ன பண்ணப்போறேன். அதுக்கு உங்களுக்கு உதவியாவாது இருக்கலாமே ?!”
அவர் ஏதும் பேசாமல் அமைதியாய் வழியை விட்டார். சுத்தமாய் காரியங்களை செய்யும் அந்த பளிங்கு விரல்களை ஆசையோடு பார்த்தார் கண்ணனின் அம்மா பத்மா, இந்த பொண்ணு மட்டும் சினிமாவிலே இல்லாம இருந்திருந்தா நான் எப்பாடுபட்டாவது இவளை மாதிரியே….! சற்று நேரத்திற்கு முன்பு உறங்குவதைப் போலவே மகனும் இந்த பெண்ணும் பேசியதை கேட்டுக் கொண்டுதானே இருந்தார்.
ஆனால் இந்தக் கூட்டம் விட்டில் பூச்சிகள் போல் குடும்பத்திற்கு ஆகாதே, ஒருவேளை அவளுடன் சேர்ந்து இதில் மகன் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று தவிப்பில் மெல்ல அந்த பெண்ணிடம் இந்த பிடிப்பை விடச் சொல்ல வேண்டும் ஆனால் இதைப் போய் அவனிடம் எப்படி சொல்வது கதைக்கு ஆகாது என்றதும் கழட்டிவிடுவதுதானே சிறந்தது. அந்தப்பெண்ணிடமே நேரம் வாய்க்கும்போது பேசிவிடலாம் என்று அந்த நேரத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார் அந்தத்தாய்.
(தொடரும்)
பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 |
