• தொடர்
  • விலகாத வெள்ளித் திரை – 8 | லதா சரவணன்

விலகாத வெள்ளித் திரை – 8 | லதா சரவணன்

1 year ago
305
  • தொடர்
  • விலகாத வெள்ளித் திரை – 8 | லதா சரவணன்

மறுநாள் காலை வழக்கம்போல் கண்ணன் அங்கு வந்து நின்றான் சொன்னாற் போலவே காருடன் இம்முறை கதவைத் திறந்தது வேணி….! இருவராலுமே கண்களை சில விநாடிகள் ஒருவருக்கொருவர் முகத்தை விட்டு அகற்ற முடியவில்லை. வெளியே கிளம்பத் தயாராய் இருப்பதை போல் இருந்தது அவளின் தோற்றம். நேற்றே ராமதுரை அவர்களுடன் அவளும் வருவதாய் சொல்லியிருந்தது கண்ணனுக்கு நினைவு வந்தது.

பார்வைப் பரிமாற்றங்களிலேயே கழிந்த நிமிடங்களின் முடிவில் கண்ணன் பேசியது “வீட்லே யாரும் இல்லைங்களா ?”

“மாமா பக்கத்து உள்ள கடையிலே ஊருக்கு டிரங்கால் பேச போயிருக்காங்க அம்மா அடுப்படியில இருக்காங்க உட்காருங்க ?!” வழியை விட்டாள்.

“அவரு உங்க சொந்த மாமாவா ?”

“ஆமாம் தூரத்துச் சொந்தம் ஊரிலே இருந்து என்னைக் கூட்டி வந்து சினிமாலே சேர்த்து வைக்கிறேன்னு சொல்லியிருக்கிறார்.!” பேசியபடியே அவன் கண்களைப் பார்த்தாள் ஏதோ ஏமாற்றம் தெரிந்தது. அதற்காகத்தானே வெள்ளோட்டம் பார்த்தது மனதிற்குள் சிரித்தபடியே, “அதுக்காகத்தான் யாரையோ பார்க்கணுமின்னு பாப்பாவைக் கிளம்பச் சொல்லியிருக்காரு?!” ராமதுரை அண்ணன் என்று பின்னால் இருந்து வேணியின் அம்மா பேசினார். தடதடவென்று ஆற்று மணலில் கட்டிய கோட்டைகள் சரிந்ததைப் போல சரிங்க அப்போ நான் வெளியே காத்திருக்கிறேன் என்று எழவும் ராமதுரை வரவும் சரியாய் இருந்தது.

கார் வீட்டை விட்டு கிளம்பியதும் “எல்லாம் நல்லபடியாய் நடந்தா நான் காமாட்சிக்கு விளக்கேத்தறேன்!”. வேலம்மாவின் ஸ்டாராங்கான வேண்டுதல் காரின் பின்னாலயே வந்தது. கண்ணனை ஐந்து நிமிடங்கள் காத்திருக்க வைத்துவிட்டு, முதலில் வேணியை அழைத்துச் சென்றார் ராமதுரை.

“பொம்பிளைப் பிள்ளை பாரு நம்ம கூடவே எதுக்கு அலையணும். அவ வேலையை முதல்ல முடிச்சிட்டா நல்லது முதல்ல ஜெமினில போட்டோ எடுத்துடுவோம் நம்ம ஏஜெண்ட்டைக் கூட அங்கனயே வரச்சொல்லியிருக்கேன் எந்த நடிக நடிகைகள் வேணுன்னு நீ லிஸ்ட் எதுவும் கொண்டு வந்திருக்கியா ? இங்கன டிராமா குரூப் நாலைந்து இருக்கு அவன் வரட்டும் அதுவரையில் இந்தவேலை முடியட்டும்.!” என்று அவனையும் கூட்டிக்கு கொண்டு சென்றார்.

ஒரு இருட்டு அறையின் வெளிச்சம் பரப்பிய விளக்குளின் மத்தியில் உடலில் ஒரு வித கூச்சத்துடன் நின்றிருந்தாள் வேணி. கருப்புத் துணி மூடிய அந்த கருவி அவளை விழுங்கிக் கொண்டு இருக்க, அதோடு கண்ணனின் பார்வையும் சோத்து விழுங்கியது. ராமையா அருகில் யாரையோ பார்த்துவிட்டு வருவதாக சென்றுவிடவும் வேணி கண்ணனின் அருகில் வந்து நின்றாள்.

“மாமா எங்கே ?”

“யாரோ வரச்சொல்லியிருக்காங்கன்னு போயிருக்கார் ? நீங்க ….

சொல்லுங்க வாய் வரைக்கும் வார்த்தை வந்திருச்சி ஏன் மென்னு முழுங்கறீங்க ?”

“நீங்க…..சினிமாவிலே நடிக்கப் போறீங்களா ?”

“ஏன் ? நான் நடிக்கக் கூடாதா. நீங்க சொல்லுங்க வேணுமா ? வேண்டாமா ?” தலை சாய்த்து அவள் கேட்ட கேள்வியில் சொக்கிப் போனான் கண்ணன்.

“நான் எப்படிங்க சொல்றது ?”

“அப்ப ஏன் கேள்வி கேட்டீங்க ? அவனின் திகைப்பை பார்த்து விட்டு, தன்னால முடியாததை என்னை வைச்சு சாதிக்கணும்ங்கிறது என் அப்போவோட ஆசை வளர்த்து ஆளாக்கினவளாச்சே அதனால நானும் சரின்னு விட்டுட்டேன். எனக்கு குழந்தை குடும்பன்னு சராசரி வாழ்க்கைப் போதும் நாய் வேஷம் போட்டா குறைச்சித் தானே ஆகணும் அதுக்குத்தான் இதெல்லாம்.?!”

“நீங்க நடிக்க மாட்டேன்னு சொல்லிடலாமே ?”

“எங்கம்மா செத்தே போவா ? என்ன பாக்குறீங்க என்னையும் கொன்னுட்டுதான்.?!”

“அய்யோ ?” நெஞ்சில் வைவைத்த அவனின் மென் துடிப்பு ஆசுவாசத்தை தந்தது அவளிற்கு.

“ம்…!இதே கோடாபத்தில் (அப்போதைய கோடம்பாக்கத்தின் பெயர்) அவங்க பத்து பதினைந்து வருஷத்து முன்னாடி நிறைய அலைஞ்சிருக்காங்க எனக்கு நினைவு தெரிஞ்சி நான் கூட அம்மாகூட எப்போதாவது போவேன் யார் யார் காலிலேயோ விழுவா அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலைகாட்டுற சின்ன சின்ன வேஷம் சில நேரம் பூட்டிய அறைக்குள்ளே யாரோட பசியையோ தீர்த்துக்கப் போக, நான் பசியோட வாசல்ல கிடப்பேன் அன்னைக்கு ராத்திரி பிரியாணியோட சாப்பாடு. ஆனா மறுநாள் வழக்கம்போல பட்டினிதான். இப்போ எங்கே அவளோட இடத்துக்கு என்னைத் தள்ளிடுவாளோன்னு பயமா இருக்கு.!”

“வேணி…!”

“கண்ணா இதிலிருந்து மீள நான் வழி தேடுறேன். ஒரு உண்மையான நேசம் எனக்காக கிடைக்காதான்னு ஏங்கித் தவிக்கிறேன். 5
வருஷத்துக்கு முன்னாடி சென்னை போதுன்னு கும்பகோணத்துக்கே போயிட்டோம். போன மாசம் ஏதோ படப்பிடிப்பிற்காக வந்த ராமதுரை மாமா கண்லே பட்ட என்னோட முகம் அம்மா மனசிலே மறுபடியும் நீரு பூத்த நெருப்பா இருந்த சினிமா ஆசையை விசிறி விட்டுட்டுச்சு. இப்போ சென்னைக்கு வந்து பத்து நாளாச்சு இப்பவே நாலு சினிமா கம்பெனி ஏறியிறங்கியாச்சு.!”

அவள் பேசுவதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் ஒவ்வொரு வார்த்தையின் முடிவிற்கும் முரசு கொட்டவதைப் போல அவள் காதோரம் நடனமாடியது நேத்து காலையிலே உங்களைப் பார்த்ததும் என் மனசிற்குள்ளே ஏதோவொரு உணர்வு. “நான் இத்தனை நாழி அறிமுகம் இல்லாதவங்களோட பேசினது கூட கிடையாது. ஆனா பாருங்க உங்ககிட்ட குலம் கோத்திரம்ன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்கேன். ஒண்ணு மட்டும் நிச்சயம் நீங்க யாரோ எவரோ எனக்குத் தெரியாது. ஆனா ஏதோ பிடிப்பு ஏற்பட்டு போச்சு. உங்க முன்னாடிதான் முதமுறையாக நின்னேன். என் மனசுக்கு அது பொண்ணு பார்க்கும் நிகழ்வாதான் தெரிந்தது!”.

“ராமையா மாமாகிட்டே பேசி ஏதாவது ஏற்பாடு செய்யுங்க ?!” என்று பேசியவள் டக்கென்று பேச்சை முடித்துக் கொண்டாள். வீட்டில் பார்த்த மனிதருடன் வந்து கொண்டடிருந்தார் ராமதுரை.

“தம்பி அப்போ நாம போகலாமா ? இந்த பிள்ளையை அப்படியே வீட்டுலே இறக்கி விட்டுவோம். கம்பெனி காரை முதலாளி தர்றேன்னு சொன்னார். வேணிக்கு எந்த பதிலும் அவனால் சொல்ல முடியவில்லை அய்யோ போகலாம்?” என்று வண்டி பறந்தது.

கண்ணனின் மெளனத்திற்கு மட்டும் சக்தி இருந்ததால், அவன் மனதில் வேணியின் மேல் உள்ள அன்பை பறைசாற்றி இருக்கும். “ஆனால் என்ன செய்வது ?” கார் பயணம் மெளனமாகவே முடிந்தது. வந்த வேலை சிறப்பாக முடிந்தவுடன் ராமதுரை அவனை சொந்த ஊருக்கே வண்டியேற்றி விட வர, அவனாலும் வேணியைப் பற்றி ஏதும் கேட்க முடியவில்லை. ஊருக்கு வந்த நாட்களில் இருந்தே வேணியைப் பற்றிய தவிப்புகளும் நினைவுகளும் ஏதோ ஒரு வகையில கண்ணனை இம்சித்துக் கொண்டே இருக்க, மறைத்து வைத்திருந்த நேசம் கொஞ்சம் கொஞ்சமாய் பூத்து குலுங்கிட ஆரம்பிக்க, அதை தணித்துக் கொள்ள வழிதெரியாமல் தவித்தான் கண்ணன்.

ராமதுரை சொன்னாற் போல நாடகத்திற்கு நடிகர்களை அழைத்து வந்து விட்டார் சென்னையில் கொடிகட்டிப் பறக்கும் நாடகக்குழு அவர்களுடன் கூடவே வேணியும் பதுமையினைப் போல வந்ததைக் கண்டதும் உயிரே வந்தாற்போல இருந்தது கண்ணனுக்கு. ரசித்தாலும் அவளிடம் நெருங்காமல் தன்வரையில் ஒரு கோடு போட்டுக்கொண்டுதான் இருந்தான் கண்ணன். நேற்றைய நாடகத்தில் கதாநாயகன் பேசிய வசனம் கடலைப் போன்ற அகன்ற விழிகளில் நான் தொலைந்து விடுவேனோ என்று பயங்கொண்டேன் என்பது வேணிக்கு அழகாய் பொருந்தியது அவனும் அவளைக் கண்டதில் இருந்து தொலைந்து தானே போயிருக்கிறான்.

(தொடரும்)

பகுதி – 1 | பகுதி – 2 பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930