நன்மைகளை வாரி வழங்கும் ராம நவமி

ராம நவமியன்று விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ராமபிரானின் அருளுடன் ஆஞ்சநேயரின் அருட்பார்வையும் கிட்டும்.திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்கதாகவும், அறம் நிறைத்ததாகவும் உள்ளது ராமாவதாரம். இறைவன் தனது தெய்வீக சக்திகளைத் துறந்து சாதாரண மனிதனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் இது.

அயோத்தி தேசத்தை தசரதன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். திசைகளை எண் திசைகளாக பிரிப்பார்கள். இந்த எண் திசைகளோடு, கீழ் திசை (பாதாளம்), மேல் திசையையும் (ஆகாயம்) சேர்ந்து 10 திசைகளிலும் தன்னுடைய ரதத்தை திறம்பட செலுத்தக்கூடியவர் என்பதால் ‘தசரதன்’ என்ற பெயர் வந்தது.

அவருக்கு கோசலை (கௌசல்யா), சுமித்ரை, கைகேயி என்று மூன்று மனைவியர். இருப்பினும் தனக்கு அடுத்து நாட்டை ஆள்வதற்கு பிள்ளை இல்லாததால் தசரதர் பெரும் கவலை கொண்டார்.

குழந்தைப்பேறு கிடைக்க வேண்டி ரிஷ்ய சிங்கர் என்ற முனிவரை அழைத்து வந்து புத்திர காமேஷ்டி யாகம் நடத்தும்படி கூறினார். அதன்படியே ரிஷ்ய சிங்கரும் யாகம் செய்தார். யாக அக்னியில் இருந்து, ஒளி பொருத்திய ஒரு உருவம் தோன்றியது. அதன் கரங்களில் தங்க பாத்திரமும், அதனுள் பால் பாயசமும் இருந்தது. அந்த உருவம் தசரதரை நோக்கி “இந்த பாயசத்தை உனது மனைவிகளுக்கு பிரித்துக் கொடு. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள்” எனக் கூறி மறைந்தது.தசரத மகாராஜா, அந்த பாயசத்தில் பாதியை கோசலைக்கு கொடுத்தார். மீதமுள்ள பாதியில் அரை பங்கை சுமித்ரைக்கு கொடுத்தார். மேலும் மீதமிருந்ததில் பாதியை கைகேயிக்கு அளித்தார். அதன்பிறகும் மிஞ்சிய பாயசத்தை மீண்டும் சுமித்ரைக்கு கொடுத்தார். பாயசத்தில் பாதியை அருந்திய கோசலைக்கு சித்திரை மாதம் வளர்பிறை புனர்பூச நட்சத்திரம் கடக ராசியில் கடக லக்னத்தில் நவமி திதியில் ராமபிரான் பிறந்தார்.

கைகேயிக்கு பூச நட்சத்திரம் கடக ராசி மீன லக்னத்தில் பரதன் பிறந்தான். இரண்டு முறை பாயசம் அருந்திய சுமித்ரைக்கு ஆயில்யம் நட்சத்திரம் கடக ராசி கடக லக்னத்தில் லட்சுமணனும் சத்ருகனனும் பிறந்தனர். ராமர் பிறந்த தினம் ‘ராம நவமி’ என்று கொண்டாடப்படுகிறது. ராமர் பிறந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால், நன்மைகள் பலவும் வந்துசேரும்.விரதம் இருப்பது எப்படி?
ராம நவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசி மாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை பாக்கு, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின்போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயசம், வடை போன்றவற்றை படைக்கலாம்.

ராம நவமியன்று நாள் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிப்பது சிறந்தது. ராமரைப் பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும். அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம்.வீட்டில் பூஜை செய்து அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ராமபிரானின் அருட்பார்வையுடன் ஆஞ்சநேயரின் அருட்பார்வையும் கிட்டும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்துபோன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும், நாடிய பொருட்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!