மனிதராய் மலர்ந்த தெய்வப் புலவர் | முனைவர் பா.சக்திவேல்

 மனிதராய் மலர்ந்த  தெய்வப் புலவர் | முனைவர் பா.சக்திவேல்

நம்   பாரதம்,  புகழ் கொடி வீசி உலக அரங்கில்  பீடுநடை போடுவதற்கான காரணங்கள் இயற்கை அமைப்பு,  எழில் வளங்கள், ஆன்மிக அருட்பேராற்றல், பண்பாடு, கலாச்சாரம், நாகரீகத் தொட்டில் என எத்தனையோ. அத்தனை  சிறப்பியல்புகளையும்விட  முக்கியமான ஒன்று அறத்தையும், நீதி நன்னெறிகளையும், சிறந்த வாழ்க்கை முறையையும் வழிமொழிந்து கொண்டே வந்த மகான்கள் இருப்பு. சீரான கால இடைவெளிகளில் பல ஆயிரம் ஆண்டுகளாக அறிவின் செறிவும், எதிர் காலத்தின் தெளிவும் கொண்ட தீர்க்கதரிசிகள் அவதரித்துக் கொண்டே  வந்தது இந்த மண்ணின் மகத்துவம்.

உணவுக்குப்  பஞ்சம் வர வாய்ப்பில்லாத பாரதம், அப்படியே ஒருவேளை வந்தாலும் மனித உணர்வுக்கும், மானுட வாழ்வியலின் நகர்வுக்கும் குறைவில்லாமல் அன்பு தழைத்து  வளரும் வண்ணம் உரங்களாகவும்,  வரங்களாகவும் தோன்றிய, தோன்றும் நவரத்தினங்கள்போல அறிவுச் சுடர்விடும் ஆன்மபலம் கொண்ட ஆசான்களின் எண்ணிக்கை அளவற்றது. அப்படி உதித்த உயர் பிறவிகளில் வள்ளுவப் பெருந்தகை தனிச்  சிறப்பு  வாய்ந்தவர்.

இவரின் பிறந்த காலத்தையும், பெயரையும்,  வாழ்ந்த இருப்பிடத்தையும் இன்னும் பிற தேடல்களையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர் உலக ஆய்வாளர்கள். அப்படியிருக்க பள்ளி குழந்தைகளின் மனப்பாட செய்யுள் தொடங்கி பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்து வரை  திருக்குறளை எப்படியாவது மக்களின் மனதில் நிலைநிறுத்திட வேண்டும் என்பது தீவிர முயற்சியாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதராகப்  பிறந்து, நூல் பல கற்றுத் தெளிந்து, அவற்றை உணர்ந்து அறிந்து, நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் முதன்மையாக சொல்லப்பட்டக்  கூறுகளை  ஆய்ந்து, அதில்  தாம் மெய்யாகக்  கண்டவற்றை வரும் தலைமுறையினருக்கு மட்டும் அல்லாமல் அனைத்து காலத்திற்கும் பொருந்தக்  கூடிய, உலக வரைபடத்தில் ஏன் அண்ட சராசரத்தில் மனிதன் வாழ்வு எங்கெல்லாம் சாத்தியமாகுமோ அங்கு இனி வாழப்போகிறவர்களுக்கும் சேர்த்து எழுதி வைத்த நூல் திருக்குறள்.

முப்பாலில் அளந்த விழுமியங்கள் அப்பாலில் இல்லை எனும்படி, சர்வகலைகளைப் போதிக்கும் பல்கலைக்கழகங்கள் வைத்திருக்கிற, இனி உருவாக்கப்போகிற  அத்தனை துறைகளுக்கும்  ஒரே படைப்பில் உள்ளங்கை நெல்லிக் கனியாய் பாடத்தை அமைத்து உண்மை  அறியச் செய்தவர். உலகில் தோன்றியுள்ள, இனி தோன்றப்போகின்ற  மதங்களும்,  மார்க்கங்களும் தங்களின் சரத்துகளைப்  பொருத்திப் பார்த்து வியக்கும் உலகப் பொதுமறை தந்த வள்ளுவரின் பிறந்த நாள் இன்று.

“தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்” என்ற பாரதியின் விம்மலில் வெளிப்படுவது ஒன்றுதான்: வள்ளுவர் தெய்வத்திற்கு நிகரானவர், அவரை, அவரது குறளை, குறளின் பொருளை,  குறள்  சமைத்ததற்கான குறிக்கோளை அறியாமல் உள்ளோம். அதனால் அவர் புகழ் பாட ஊரெங்கும் சிலைகள், அவரது கொள்கைக்கு உலை வைப்பதுபோல அருகிலேயே மதுபாணக் கடைகள், புலால் மண்டிகள், சுய ஒழுக்கமற்ற, அறத்தைப்  பேணாத  பேராசை வாழ்க்கை முறைகள் என அத்தனை அத்துமீறல்களையும் மனதார செய்கிறோம்.

ஒருவேளை தெய்வப் புலவர் என்று சொல்வதால் துணிந்து விட்டோமா? அங்கிங்கெனாதபடி பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனுக்கே திரை போட்டுவிட்டு தனது இச்சைகளை ஈடேற்றிக்கொள்கிற சாதுர்ய பிறவியாய் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டான். தெய்வப் புலவர் என்ன செய்வார்?

இந்த ஆண்டில் இவரது அனுமானிக்கப்பட்ட புறத்தோற்றம் குறித்தும், ஆடை, அணிகலன்கள் குறித்தும்  அலசி ஆராய்ந்தவர்கள் அநேகம் பேர். இது போன்ற செயல்பாடுகள், செய்பவர்களுக்கு எளிதாகவும் சுயலாபம் தருவதாகவும் அமைந்துவிடுகிறது. மாறாக அவர் மொழிந்த நற்கருத்துகளை, நன்னெறிகளை படித்து உள்வாங்கி, வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்ந்து காட்டுதல் அல்லவா திருவள்ளுவர் மீது வைத்துள்ள உண்மையான பக்திக்கும் பற்றுக்கும் சாட்சி, முக்கியத்துவத்தை அதற்கல்லவா கொடுத்திருக்கவேண்டும்.

இவைகளை செய்வதற்கு “நானை” மாற்றி “மகானின்” மனதின் குரல் (குறள்) நம் இதயத்தில் இடையறாது ஒலிக்க வேண்டும். அதற்குச்  சில தியாகங்களைச் செய்ய வேண்டுமே!. சிலையை  விழுந்து வணங்குவதும், மாலை அணிவிப்பதும், மண்டபம் கட்டுவதும், மங்களம் பாடுவதும் எளிதானது. ஆனால் இதன்மூலம் திருவள்ளுவர் எண்ணிய இலக்கினை நாம் எட்ட முடியுமா?

திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுகிற அதே நேரத்தில் பண்டிகைக்கால மதுவிற்பனை இலக்கு, மறைமுகமாக நிர்ணயிக்கப்படுகிறது. சிற்றின்பத்தில் லயித்து நிற்பவர்களுக்கு திருவள்ளுவரின் குறள் மட்டுமல்ல பெரிய உரல் கொண்டு இடித்தால் கூட உண்மை உரைக்கப்போவது இல்லை.

திருவள்ளுவர் தெய்வப்புலவர் என்று அழைக்கப்படினும் அவர் தெய்வமாகவே அவதரித்தவரில்லை, சக மனிதராகப் பிறந்து சுக துக்கங்களை அனுபவித்து, அறிவு முதிர்ச்சியால், விடாதத்  தேடலால்  தெய்வநிலையை எட்டியுள்ளார். இது எல்லோரும் அடையக்கூடிய ஒன்று என்பதைத்தான் தன்னுடைய குரலில் ஒப்புதலைப் போல தானே வழிமொழிந்திருக்கிறார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்  வானுறையும் 

தெய்வத்துள் வைக்கப் படும். (குறள் :50)


கையில் விளக்கை வைத்துக் கொண்டு ஊர் முழுவதும் தீயைத் தேடுவது போல, திருவள்ளுவரின் குறள் எனும்  அரிய பொக்கிசத்தை வைத்துக்கொண்டு அதை பயன்படுத்தாமல் வீணடிப்பது ஒரு புண்ணிய  ஆன்மாவின் பிரபஞ்சத்  தேடலுக்கான உழைப்பை மதிக்காத பாவம்.  எந்த ஒரு தமிழருக்கும் இந்த பழி வந்துவிடக்கூடாது. குழந்தைகளாக இருக்கும் போதே திருக்குறளைப் படிக்கத் தொடங்கிவிடுகிறோம், அதன் படி வாழவும் தொடங்கிவிட்டால் திருவள்ளுவரின் ஆத்மா மகிழ்வுறும் அல்லவா.

பகட்டைவிட பக்குவத்தைதானே திருவள்ளுவர் விரும்புவார். விளம்பரத்தை விட விவேகத்தையும் அதனால் கிடைத்த உண்மை விளைச்சலையும் கண்டுதானே மகிழ்வார். வட  துருவத்தில் வாழ்ந்த டால்ஸ்டாய் அறிந்திருந்த திருவள்ளுவரை மண்ணின் மைந்தர்களான  நாம் ஏன் அறிந்திருக்கவில்லை. அர்த்தமற்ற வேறுபாடுகளையும், விவாதங்களையும், விமர்சனங்களையும் தூக்கி வீசிவிட்டு ஆக்கபூர்வமாக திருவள்ளுவத்தை  கடைபிடிப்போம், அது தான் அவர்மீது உரிமை கொண்டாடுவதற்கான அடிப்படையாக இருக்க முடியும்.

உலக நாடுகள் கண்டு வியக்கிற அரிய நூல் திருக்குறள். இந்த ஒரு நூல் பல ஆயிரம் புத்தங்களை தன்னகத்தே வைத்திருக்கிற நூலகத்திற்குச் சமம். ஆம். அத்தனையையும் திருவள்ளுவர் தன்னுடைய உழைப்பினாலும் தவத்தினாலும் தேடி உலக நன்மைக்காக தந்தருளியிருக்கிறார். அவரின் தூல உருவத்திற்கு உரிமை கோரி பெருமை கொண்டாடுகிற நாம், ஞான மொழிகளுக்கும் கருவியாக வேண்டும்.

அப்போதுதான் இந்த மன்னுயிரெல்லாம் தொழும் உன்னத நிலையை மனிதன் அடைய முடியும். ஐம்பொறிகளும், அதன் தொழில்களும், உலக இயக்கமும் இயல்பாக இருக்க, மனிதனின் நெறிசார்ந்த நிலைத்தல் அவசியம், அதைத்தான் வள்ளுவர் 1330 பாக்களாக, பூக்களாக மாற்றி நமக்கு வாரி வழங்கியுள்ளார். பாதுக்காக்க வேண்டியதும் நம்மை பவித்ரம் நிறைந்தவர்களாக மாற்றிக் கொள்வதும் நம் கைகளில். வள்ளுவரை நேசிப்போம், வள்ளுவத்தை வாசிப்போம், யோசிப்போம், வாழ்ந்து காட்டுவோம்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...