மீண்டும் – இரா.அபர்ணா, கரூர்

 மீண்டும் – இரா.அபர்ணா, கரூர்

“என்னாச்சு டாக்டர்?”

“கொஞ்சம் கிரிடிக்கல்தான். ஆப்ரேசன் பண்ண வேண்டி நெலம வரலாம்”

“என்னடா அரசு…. டாக்டர் திடீர்னு இப்டி சொல்றாங்க. இப்ப என்ன பண்றது?”

“அழாத மா… ஆப்ரேசன் பண்ணுனாலும் ஒன்னும் பிரச்சன வராது” என்று கலங்கிய விழிகளோடு தன் தாய் லட்சுமிக்கு ஆறுதல் கூறினான் அறிவரசன்.

அறிவரசன் லட்சுமியோட ஒரே மகன். சொல்லப் போனா லட்சுமிக்கு இருக்குற ஒரே உறவு ஆதரவு எல்லாமே அவன்தான்.

குடிகாரன்னு தெரிஞ்சும் சொந்த தாய்மாமனுக்கே வாக்கப்பட்டவ லட்சுமி. அவ வாழ்கைல நடந்த மிகப் பெரிய பேரழிவு அந்தக் கல்யாணம்தான். புருசன் குடிகாரனா இருந்தாலும் மாமனார் மாமியா தங்கமானவங்க. பையன் வாழ்க்கைய காப்பாத்த சொந்த பேத்தி வாழ்க்கைய, அதுவும் தாயில்லா பிள்ளைய இப்டி காவு கொடுத்துட்டோமேனு குற்ற உணர்வு எப்பவும் அவங்ககிட்ட இருந்துட்டே இருந்துச்சு.

அவ புருசன், வீட்டுக்கு சம்பாரிச்சு குடுக்கலனாலும் பரவால்ல. ஆறு மாசம் கஷ்டப்பட்டு பாங்காட்ட கொத்தி, காட்டு வெள்ளாமையா வெதச்சு அறுவட பண்ணி வெச்சத வந்து தூக்கிட்டு போய்ருவான். ஆடு மாடு வித்து காசு வெச்சிருந்தா அதயும் அடிச்சு பிடிங்கிட்டு போய்ருவான். புள்ள பொறந்ததக் கூட பாக்க வராதவன் பிள்ளைய பாக்க வந்தவங்க குடுத்த காச புடுங்கிட்டு போறதுக்கு சரியா வந்துட்டான்.

“அடேய்… பச்ச ஒடம்புகாரிக்கு கருப்பட்டி வாங்கிக் குடுக்கக் கூட கைல காசு இல்லடா… படுபாவி என் வயித்துல வந்து நீ எப்டிடா பொறந்த… அடுத்த வேல வீட்டுல சோறு பொங்கக் கூட ஒன்னும் இல்லடா… அத்தனையும் எடுத்துட்டு போகாதடா…”

“கம்முனு போ கெழவி”

“பெத்த வயிறு பத்தி எரியுதுடா… இந்தப் பாவம் உன்ன சும்மா விடாது.”
அநியாயமா அந்தப் புள்ள வாழ்கைய வீணாக்கிட்டோம்னு அவங்க அம்மா கதறி அழுதது இன்னமும் அந்த வீட்டு செவத்துல எதிரொலிக்கும்.

ஆனா தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்லுவாங்க. தாய் சாபம் அன்னைக்கே பலிச்சிருச்சு. கள்ளச்சாராயம் குடிச்சு செத்த பத்து பேர்ல லட்சுமி புருசனும் ஒன்னு. புள்ள பொறந்த மூணாம் நாளே அப்பன் உயிர எடுத்திருச்சுனு ஊரே பேசுனாங்க. ஆனா அவன் செத்ததுக்கு ஒருத்தரும் வருத்தப்படல. ஏன் அவங்க அப்பன் ஆத்தா கூட அழுவல.

“எங்க ஆத்தாதான் என்ன பாதில விட்டுட்டு போய்டானா, என்ன கட்டிட்டு வந்த ராசா நீயும் பாதில விட்டுட்டு போய்ட்டியே மாமா”னு லட்சுமியோட அழுகுரல் மட்டும்தான் அங்க கேட்டுட்டு இருந்துச்சு.


ஆடு மாட்டையும், காட்டையும் நம்பியே அவங்க வாழ்க்க ஓடுச்சு. மாடு இழுத்து கீழ போட கல்லுல தல பட்டு நெனவு இல்லாம ஒரு வாரம் படுத்த படுக்கையா இருந்த லட்சுமியோட மாமனாரும் இறந்து போயிட்டாரு. அஞ்சு வயசு பையனோட லட்சுமியும், அவளுக்கு துணையா வயசான மாமியாரும் மட்டும் இருபத்தஞ்சு வயசு ஆகுறதுக்குள்ள லட்சுமியோட வாழ்க்கைல என்னென்னமோலாம் நடந்து முடிஞ்சிருச்சு.

ஆம்பள துணை இல்லாத வீடு. பரிதாபப்பட்வங்களோட சபலப்பட்டவங்கதான் அதிகம். அத்தனையும் சமாளிச்சு தனி ஆளா புள்ளைய வளத்துனா. பொம்பள வளத்துன பையன் கண்டிக்க ஆளில்லாம ஊதாரியா வளரும்னு எல்லாரும் பேச, பேசுனவங்க நாக்க அறுத்துக்குற மாதிரி பொறுப்பான புத்திசாலியான பையனா வளந்து நின்னான் அறிவரசன். ரெண்டு வருசத்துக்கு முன்ன லட்சுமியோட மாமியாரும் இறந்து போக, இப்ப லட்சுமிக்கு இருக்குற ஒரே ஆதரவு அறிவரசன்தான்.

பேர்ல மட்டும் இல்ல உண்மையாவே தன் புள்ள அரசனாகனும்னு லட்சுமிக்கு ஆச. அதனாலயோ என்னவோ எல்லாரும் அவன அறிவுனு கூப்ட்டாலும், லட்சுமி மட்டும் ‘அரசு’னுதான் கூப்டுவா.

“ஏ சரசு… பாத்தியா என் புள்ள ஸ்கூல்லயே மொத மார்க் எடுத்து பாஸ் பண்ணிட்டான். நீ வேணா பாத்துட்டு இரு ஒரு நாள் நம்ம ஊரு கலெக்டெரா வந்து நிப்பான் பாரு.”
“அய்யே… காலைல இருந்து உன் அலப்பற தாங்க முடில. இந்த கவர்மெண்ட் ஸ்கூல்லதான மொத மார்க்கு எடுத்தான். என்னமோ தமிழ்நாட்டுலயே மொத மார்க் எடுத்த மாரில் ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு திரிற.”

“யய்யா அரசு… அவ கெடக்குறா. நீ வாயா… சுத்திப் போடனும். இந்த ஊரு கண்ணே உன் மேலதான் இருக்கும்…”

“உங்க புள்ள பெரிய ஆளா வருவான்மா. திறமசாலி.”

இந்த வார்த்தைய அறிவோட வாத்தியார் லட்சுமி கிட்ட சொன்னதுல இருந்து லட்சுமிக்கு தான் இத்தன நாள் பட்ட துன்பம்லாம் அப்டியே காணாம போன மாதிரி ஒரு நெனப்பு.

இந்த வார்த்தை வெறும் வார்த்தை இல்ல. இப்டி ஒரு புள்ள நம்ம வீட்ல இல்லையேனு ஊரே பொறாம படுற அளவுக்கு குணத்துலயும் விவரத்துலயும் அறிவரசன அடிச்சுக்க ஆளே இல்ல.

லட்சுமியோட வம்சத்துல மொத காலேஜ் போனது அறிவுதான். அர நேரம் காலேஜ். மீதி நேரம் வேலை. தன் அம்மாவோட சுமைய தான் ஏத்துகிட்டான் அறிவு. கொஞ்சம் கொஞ்சமா சேத்த காசுல பழைய வீட்ட கொஞ்சம் கொஞ்சம் சரி பண்றது. வீட்டுக்கு தேவையானதெல்லாம் வாங்குறதுனு நல்லாதான் போய்ட்டு இருந்துச்சு.

பிரியா… அறிவ விட ரெண்டு வயசு சின்னப் பொண்ணு… சின்ன வயசுல இருந்தே ஒன்னா விளையாடி திரிஞ்சவ… பிரியாவுக்கு எப்பவுமே அறிவு மேல தனி நேசம். கொஞ்சம் கொஞ்சமா வாலிப பருவம் வந்ததும் அந்த நேசம் காதலா மாறுச்சு.

பிரியாவும் அதே காலேஜ்தான். அப்பப்ப இவங்க கண்ணால பேசிக்குறது, பேரச் சொன்னா சிரிச்சுகுறது, இதெல்லாம் அவங்க நண்பர்களுக்கு நல்லாவே தெரியும். அப்ப அறிவு மூணாவது வருசம் படிச்சுட்டு இருந்தான். காலேஜ் முடிய ரெண்டு மாசம் இருக்க தருணம். நண்பர்கள் குடுத்த உற்சாகத்துல,

“காலம் பூரா உன்ன இப்டியே பாத்துட்டே இருக்கனும்”னு அறிவு சொல்ல, “கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்தரமா பாத்துகோங்க”னு பிரியா சொல்ல கண்பேசும் காதல் செல்பேசும் காதலா மாறிடுச்சு.

‘டேய் மச்சான், லவ் சக்ஸஸ் ஆய்டுச்சு. டிரீட்டு வை டா”

“சரி வாங்க ஹோட்டல் போலாம். என்னென்ன வேணுமோ எல்லாம் ஆடர் பண்ணிக்கோங்க.”

“என்னது… ஹோட்டலா… சின்னப்புள்ளத்தனமா… டாஸ்மாக் கூட்டிட்டுப் போடா”

“டேய் என்கிட்ட என்ன வேணா கேளுங்க, அது மட்டும் முடியாது. என் குடும்பம் பாழானதுக்குக் காரணமே இந்தக் குடிதான்.

“நீ வேணா குடிக்காம இருடா. எங்களுக்கு வாங்கிக் குடு ஒரு நாள்தான. அதெல்லாம் தப்பில்ல. உங்க அப்பா கள்ளச்சாராயம் குடிச்சதால செத்தாரு. இது கவர்மெண்டே விக்குறது. ஒன்னும் ஆகாது. ஒரு இடத்துல பத்து மைனஸ் ஒரு ப்ளஸ் இருந்தா கிடைக்குற விடை மைனஸ்லதான் இருக்கும்.”

அன்னைக்கு குடிச்சுட்டு அறிவு வீட்டுக்குப் போக, லட்சுமிக்கு தன்னோட உலகமே ஒரே நாள்ல இருண்ட மாதிரி இருந்துச்சு. இனி வாழ்க்கைல இந்த தப்ப பண்ண மாட்டேன்னு அறிவு கதறி அழ, லட்சுமியோட மனம் இளகியது.


காலேஜ் முடிச்சுட்டு கெடைச்ச வேலைய செஞ்சுட்டு இருந்த அறிவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, அவன் எழுதுன விஏஓ எக்ஸாம்ல பாஸ் பண்ணுனது. இதுக்காகவே ராப்பகலா படிச்சும் பாஸ் பண்ண முடியாம பலர் இருக்க, வேலைக்குப் போய்ட்டே படிச்சு நல்ல மார்க்ல பாஸ் பண்ணுன அறிவரசன் மேல ஊர்க்காரங்களுக்கு தனி மரியாதையே வளந்துச்சு. அதுவும் இவங்க கிராமத்துக்கு பக்கத்து கிராமத்துலயே வேல. சும்மாவே லட்சுமிய கைல பிடிக்க முடியாது இப்ப சொல்லவா வேணும்.

“நான் அப்பவே சொன்னேன்ல, என் புள்ள அரசன்னு. பாத்துட்டே இருங்க இன்னும் கொஞ்ச நாள்ல இந்த ஊரு கலெக்டர் என் புள்ளதான்.”

ஊர் மக்களும் மறுக்காமல் மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக் கொண்டனர்.

எட்டிப்பிடித்த சனி விட்டுத் தொலையாதுன்ற மாதிரி அறிவ பிடிச்ச சனி
அவனோட நண்பர் கூட்டம் வெட்டியா சுத்தி திரியுற அவங்களுக்கு அப்பப்ப வாங்கிக் குடுக்க அறிவு தேவப்பட்டான். ஒரு சில நாள் இவன் குடிப்பதும் உண்டு. ஆனா தப்பித் தவறிக் கூட இது அவங்க அம்மாவுக்குத் தெரியாம பாத்துகிட்டான்.

எல்லாம் இப்டியே நல்லா போய்ட்டு இருக்கேலதான் வந்தது கல்யாணப் பேச்சு. பெரிய கலவரம் எதும் நடக்கல. சுமூகமா முடிஞ்சுது. ஏன்னா பிரியா ஒருவகைல அறிவுக்கு மொறப் பொண்ணுதான். அதவிட இவ்ளோ தங்கமான பையனுக்குப் பொண்ணு குடுக்க அந்த ஊர்ல பலர் காத்துட்டு இருந்தாங்க.

இப்படியாக இருவர் மட்டும் இருந்த அந்தக் குடும்பம் பிரியாவோட மூவர் ஆகி இன்னும் கொஞ்ச நேரத்துல புது உயிரோட நால்வர் ஆகப்போகுது.


“ஆப்ரேசன் தேவையில்ல, நார்மல் டெலிவரி ஆய்டுச்சு. பையன் பொறந்திருக்கு. அம்மாவும் கொலந்தையும் நல்லா இருக்காங்க. எந்த பிரச்சனையும் இல்ல இன்னும் ஒரு மணி நேரத்துல ரூம்க்கு மாத்திடலாம்.”

என்னதான் மருமகளா இருந்தாலும் லட்சுமி பிரியாவ மக மாதிரிதான் பாத்துகிட்டா. கொழந்தைய பாக்கனும்ங்கற ஆசையவிட பிரியா நல்லாருக்காங்கற செய்திதான் லட்சுமிய உயிர்பிக்கச் செஞ்சுச்சு.

பிரியா மாதிரி கண்ணு… அறிவோட மொகச்சாட அப்டியே கைய கால ஆட்டிட்டு இருக்க பொம்ம மாதிரி இருந்துச்சு கொழந்த

“கொழந்தைய பாத்த சந்தோஷத்துல தலகால் புரியாம திரியுறான் இந்த பையன். இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணணும்னு தெரியும்ல எங்க போனான்?”

“அவங்க பிரண்ட்ஸ்லாம் வந்திருந்தாங்கல அத்த, விட்டுட்டு வரேன்னு போனாரு.’

“அவன் வந்தோனே இவனுங்க கூடலாம் சேரக் கூடாதுனு சொல்லி வைக்கனும். இவனுங்க ஆளும் மண்டையும்.”

“என்ன பிரியா இன்னும் அவனக் காணோம்.”

“வந்திருவாருங்க அத்த” என்று சொன்னாலும் ஒருவேள டிரீட்டு கிரீட்டுனு டாஸ்மாக் போய்டாங்களோனு ஒரு பயம்.

“போன எடு, அவனுக்குப் பண்ணி பாக்கலாம்.”

“டேய் அறிவு எங்கடா இருக்க?”

“ஹலோ யாருமா பேசுறது? நான் அமராவதி நகர் இன்ஸ்பெக்டர் பேசுறேன். ஒரு ஆக்ஸிடண்ட். ஒன்னுமில்ல பயபடாம ஜி.எச்-க்கு வாங்க.”

“ஐயோ பிரியா என்னென்னமோ சொல்றாங்க மா.. நீ இரு, நா நம்ம மணிய கூட்டிட்டுப் போய் பாத்துட்டு வரேன்.”

“பதறி ஓடிய லட்சுமி உயிரோடு சவமானாள்.”

“குடிச்சுட்டு வண்டிய வேகமா ஓட்டி கட்டைல கொண்டு போய் இடிச்சிருக்கான். ஆளு ஸ்பாட் அவுட்.”

அன்று லட்சுமி மட்டும் அழுதாள். இன்று ஊரே கூடி அழுதது. இன்று லட்சுமி மட்டும் கண்ணீர் இன்றி இருந்தாள். சில நேரம் சிரித்தாள். வாய் ஏதோ ஒன்றை திரும்பத் திரும்ப சொல்லியது.

“என் புருசன் கள்ளச்சாராயம்…. என் மவன் நல்ல சாராயம்…”

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...