வாழ்வு என் பக்கம்! | ஜே. செல்லம் ஜெரினா
“எனக்கென்னமோ, எங்கமாமியார் நடிக்கிறாங்கன்னே தோணுதும்மா! “—- மஹிமா சப்பாத்தி விள்ளலை குருமாவில் தோய்த்துக் கொண்டே தாயை ஏறிட்டாள்.
” என்னடி இது இப்படியெல்லாம் பேசுற? “
“ஆமாம்மா மருமகளைதிட்டாத….கோபமா ஒரு பார்வை கூடப் பார்க்காத மாமியார் உலகத்திலே உண்டா? அன்னிக்கு அவங்களோட ஃபேவரிட் புடைவை மேல. குழம்பைக் கொட்டிட்டேன். கைத்தவறுதல் சகஜம் தானே. ட்ரை க்ளீனிங் கொடுத்தா ஆச்சுன்னு சொல்லிட்டு ஸாரி மாத்திட்டாங்க! கடிஞ்சு ஒரு சொல் இல்லை பார்வையில்லை…இன்னொருநாள்…
அவங்க ஆசையா வாங்கி வந்திருந்த பீங்கான் டீ செட்டை கீழே போட்டு உடைச்சிட்டேன்.காலில் குத்திடப் போகுதுன்னு பதறினாங்களேத் தவிர சின்னதா முகம் கூட சுருக்கலை. நீயாயிருந்திருந்தா கூட தாளிச்சுக் கொட்டியிருப்பே! இப்படி இருக்க முடியுமா சொல்லுமா? அதே போல நல்லா பார்த்து பார்த்து செய்றாங்க ….அவரையே திட்டுவாங்க வெளியே அ ழைச்சுட்டு போய் வாயேன்னு….. இது சாத்தியமா? “
” அதையேண்டி நீ நடிப்புன்னு நினைக்கிறே அவங்க இயல்பே அப்படித்தானோ என்னவோ? பொண்ணு இல்லாத குறையை மருமகள் மூலமா தீர்த்துக்கிடறாங்களோ என்னவோ …..”
“க்கும்!இதெல்லாம் உலகத்தின் ஒன்பதாவது அதிசயம் தான் போம்மா..இவரானால் மூச்சுக்கு முன்னூறு முறை என் அம்மா போல வருமான்னு ஜெபம் செய்றார்.அவருக்கு எப்பவுமே அவரோட அம்மாதான் உசத்தி. எதையெடுத்தாலும் அம்மா அம்மா தான். எந்தப்பேச்சை எடுத்தாலும் அம்மாவில் தான் வந்து நிற்கிறார். நான் ரெண்டாம் பட்சம் தான் அவருக்கு…..”ஆதங்கத்தோடு பேசிய மகளை அணைத்துக்கொண்டாள் அம்மா. கல்யாணம் முடிந்து இன்னும் வருடம் கூட பூர்த்தியாக வில்லை . குலதெய்வம் பூஜைஎன்று தாய்வீடு வந்தவள்…. இன்னும் கிளம்பிப் போகவில்லை. மாமியாரும் புருஷனும் இருந்து விட்டு வரட்டும் என்று போய்விட்டார்கள் தாய்வீட்டுச்சீராட்டலை அனுபவித்துக் கொண்டிருக்கும் செல்ல மகளின் பேச்சு தாயாருக்கு சிரிப்பை வரவழைத்தது.
ஆனால்…..
சிரித்து வைத்தால் அவ்வளவுதான்…..பெண்ணுக்கு கோபம் வந்துவிடும் எனவே மகளின் குணம் புரிந்து அமைதி காத்தாள்.
“நீ ஏன் இதை தப்பான கோணத்திலே பார்க்கிறாய் மஹி… அவர் இயல்பே அப்படின்னு எடுத்துக்கொள்ளேன். ஒருவரால் இத்தனை மாசமும் விடாமல் நடிச்சுட்டே இருக்க முடியுமா என்ன? இப்படி அன்பான மாமியார் கிடைக்கிறது எவ்வளவு நல்ல விஷயம் தெரியுமா? சரி அவர் மருமகன் இல்லாத சமயத்திலும் கூட ஒரே மாதிரிதானே நடந்து கொள்கிறார். யோசிம்மா. “
” ம்மா!நான் சொல்லவருவதே வேற! என் புருஷன் மனசுலே நான் தான் நம்பர் ஒன்னாக இருக்கனும்.அவர் என்னைத்தான் நினைச்சுட்டு இருக்கணும் எனக்கப்புறம் தான் எல்லோரும் னு அவர் நினைக்கனும்னு ஆசைப்படுறேன் அது தப்பா? நானும் பார்க்கிறேன். எப்பப் பார்த்தாலும் எங்கம்மாவுக்கு இது பிடிக்கும் எங்கம்மா இதை அவ்ளோ அருமையா செய்வாங்க எங்கம்மா போல உண்டான்னு…. ச்சே!காதே அறுந்திடும் போல! சரியான அம்மா கோண்டு ! இவர் மனசை ஜெயிக்க முடியுமான்னே தெரியலை!”
இப்போது அம்மாவுக்கு சிரிப்பை அடக்கத்தான் முடியவில்லை…’என்ன பெண்கள் இவர்கள் என்று கூடவே அலுப்பும் வந்தது.
“என்னம்மா சிரிக்கிறே என் நிலைமை உனக்கு சிரிப்பா இருக்கா? “
” இல்லடி மஹிக்குட்டி….. நம்பர் ஒன் நம்பர் டூ வெல்லாம் என்ன கணக்குன்னு சிரிப்பு வந்தது.உனக்கும் சம்பந்திக்குமிடையே எதுக்கு போட்டி? பொறாமையெல்லாம். நீயும் அவங்களும் ஒன்றா? அம்மா அம்மாதான்!மனைவி மனைவிதான்! அம்மா ஸ்தானத்தை யாராலும் நிரப்ப முடியாது ….இந்த விஷயம் நீ அம்மாவாகிறப்போ தான் புரியும். “
“போம்மா! என் மனசே உனக்கு புரிய மாட்டேங்குது “விழியோரம் ஈரம் கசிந்தது.
அம்மா அருகில் அமர்ந்து கண்களைத் துடைத்து விட்டாள்.
” என்ன படிப்பு படிச்சு என்ன? நீயும் எல்லாப் பொண்ணுகளையும் போலத்தான்னு நிருபிக்கிறே மஹிமா. நான் வளர்த்த வளர்ப்பு வீணாப்போயிட்டுதோன்னு தோணுது. உன் கணவன் வாழ்க்கையில் உனக்கு முன்னால் வந்தவர் அவருடைய அம்மா. அவரை கருவிலே சுமந்து …பாலூட்டி… சீராட்டி…வளர்த்தி உன் கணவனா நிறுத்தியிருக்கிறார்.உன் கணவரின் வாழ்க்கையிலே நீ இப்போதான் எண்ட்ரீ ஆகியிருக்கே!
உன் மாமியார் இவரை தன் பாசத்தாலும் நேசத்தாலும் நல்ல மனுஷனா உருவாக்கியிருக்கிறாங்க.
அவங்களை நீயேன் உனக்குப் போட்டியா நினைக்கிறே. அவங்க உன் புருஷனுக்குத் தாய்……உனக்கும் கூட அம்மா ஸ்தானம் தான்.மாமியாரை அம்மாவா நினைச்சு பழகாத பெண்களால்தான் வீட்டின் நிம்மதியே குலைந்து போகிறது. உறவுச்சங்கிலி அறுபட்டு விரிசலாயிடுது. நீயும் அப்படிப்பட்ட பெண்களில் ஒருத்தியாகிடாதே.
அவரவர் இடம் அவரவர்க்கு.அவரவர் தான் நிரப்பவும் முடியும்.தாய்,தாய்தான்.பெண்டாட்டி, பெண்டாட்டி தான். ரெண்டையும் போட்டு குழப்பிக்காதே …. உன்னுடைய இடமும் தனித்துவமானது. அந்த வீட்டின் வம்சம் உன் மூலம்தான் தழைத்து பெருகப்போகுது.
உன் மாமியாரோட நல்ல குணங்களை கத்துக்கோ! அதை…..உன் பேச்சில் நடத்தையில்….செயல்களில் பிரதிபலிச்சுக்காட்டு. தன் தாயின் சாயலை உன்னிடம் கண்டு அதை மாப்பிள்ளை உணரும்போதுஅவர் மனத்தராசுலே சமமா வந்து நிற்பாய்…. அவருடைய மனசுலே ஒரு உன்னதமான இடம் கிடைக்கும்.நீ தாயாகி….அவர் தந்தையாகும் போது உன்னுடைய இடம் முன்னுக்கு வந்துவிடும். இதுதான் இனிய தாம்பத்தியத்தின் சூட்சூமம்.
இது புரியாம புகுந்த வீட்டைப் போர்க்களமாக்கி புருஷன் வீட்டாரை எதிரிகளாக்கி நிம்மதியில்லாமல் செய்து வாழ்க்கையை குட்டிச்சுவராக்கி விடுகிறார்கள் பலர்.
மனுஷமனசு அத்தனை சீக்கிரம் பழகினதை விடாதுதான். ஆனால் மாறவும் செய்யும் பொறுமையாயிருக்கனும். மெல்லதான் மாற்றம் வரும்
மனசை பூ மாதிரி மலர்த்தி வச்சுக்கோ! அன்பால ஆகாதது எதுவுமேயில்லை. உன் வாழ்வு உன் கையில்…. உன் பக்கம்தான். வாழ்க்கையை சந்தோஷமாக எடுத்து கிட்டு வாழப்பழகு. வாழ்க்கையிலே யாரும் யாருக்கும் எதிரியில்லை. அதிலும் கணவரின் தாய் உனக்கு எதிரியேயில்லை. அவர் உன் அத்தை உனக்கு அம்மா….அத்தையம்மா…. புரியுதா?அம்மாவை நேசிக்கிற பையன்…..மனைவியையும் உயிராய் நேசிப்பான். இது ஒரு மனோதத்துவம். இன்னொரு ரகசியம் சொல்லவா …? தன் அம்மாவை மதிச்சு நடத்துற….. அன்பு செலுத்துற பொண்டாட்டியை எல்லாப்புருஷனுக்குமே பிடிக்கும். இதுதான் வாழ்க்கை ரகசியம். பொறுமையாயிருக்கனும். வாழ்க்கை ப்ளே கிரவுண்டு இல்லை நம்பர் ஒன் டூன்னு ஸ்டேஜ்ல நிக்க …..! இது தான் தாம்பத்யத்தின் ரகசியம்! “அம்மா புன்னகைத்தாள்.
சில நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தன.
மஹிமா சாப்பிட்டத்தட்டை சிங்க்கில் போட்டு கை கழுவினாள்.
சற்று நேரம் கழித்து…..
காபி கப்புடன் வந்த அம்மாவைக்கட்டிக்கொண்டாள் மகள்.
“புரியுதும்மா!எப்படி அப்பாவோட பெரிய குடும்பத்தைஆதரிச்சு பாதுகாத்து நல்ல மருமகளா பேரெடுத்து அப்பா மனசை ஜெயித்து வாழ்வு என் பக்கம்தான்னு நின்னு காண்பிச்சியோ நானும் உன் பொண்ணு தான்னு ஜெயிச்சுக்காட்டுவேன்.வாழ்க்கையை பெருமிதமாக எதிர் கொள்வேன் மா ” …..
அம்மா மகளைக்கட்டிக்கொண்டாள்.
எங்கோ பெய்கிற
மழையின்மண்வாசனை … ஜன்னல் வழியே வீட்டை நிறைத்தது……. நிறைவான சிரிப்பொலி எழுந்துமகிழ்ச்சியை இறைத்தது.***
சுபம்.