நவ பாஷாணன் -1 | பெண்ணாகடம் பா.பிரதாப்
“நவபாஷாணன் “என்பதன் பொருள் ஒன்பது வகையான பாஷாணம்”. அதாவது ஒன்பது வகையான விஷம் மற்றும் பல மூலிகைகளால் இணைத்து உருவாக்கப்பட்டது என்று பொருள். அந்தஒன்பது வகையான பாஷாணங்கள் என்னவென்று இனிப் பார்ப்போம்…
பழனிமலை அருகேயுள்ள வைகாவூர், இரவு நேரம். அன்று புத்தொளியுடன் காரிருள் வானத்திற்கு நடுவில் காட்சி தந்து கொண்டிருந்தது முழுமதி!.
புரட்டாசி மாதமான சுவாதி நட்சத்திரத்தில், முழுமதி தோன்றிய நாளில் பிறந்தவர்தான் போகர் சித்தரின் முதல் சீடர் புலிப்பாணி சித்தர். புலிப்பாணி சித்தரைப் போல்அதே புரட்டாசி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில், முழுமதியன்று 1989ஆம் ஆண்டு பிறந்தவன் தான் சிவநேசனின் மகன் சரவணன்.முருகன் பக்தனான சிவநேசனின் மனைவி பெயர் மீனாட்சி. மீனாட்சிக்கும் சிவநேசனனுக்கும் திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவன் சரவணன். சரவணன் பிறக்கும்போதே அவனது வலதுகாலின் அடிபாதத்தில் அறுகோண சக்கரமும் முதுகுத்தண்டில் முருகனின் சின்னமான வேலும் பெற்றவன் .எனவே சரவணனை அவனது பெற்றோர்கள் தெய்வக்குழந்தையாகவே எண்ணினர்.
தன் மகனை எண்ணிக்கொண்டே வானத்தைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார் சிவநேசன்.கருப்பு நிறமான சிவநேசன் பௌர்ணமியில் பளிச்சென்றே தெரிந்தார்.
வீட்டுக்குள் சமைத்துக்கொண்டிருந்த மீனாட்சி “என்னங்க வானத்தையே பாத்துக்கிட்டு இருக்கீங்க” ன்னு கேட்டாள்.
“நம்ம பையன் சரவணனைப்பத்தி தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.”
“அவனுக்கு என்னங்க?”
“சரவணன் காலேஜெல்லாம் படிச்சிமுடிச்சி மூணு வருஷம் ஆகுது.அவனுக்கொரு நல்ல அரசாங்க உத்தியோகம் கிடைச்சா அவன், அவனுடைய வாழ்க்கையை நல்லபடியா தள்ளிக்குவான். அதப்பத்திதான் யோசிக்கிறேன்.
“கவலைப்படாதீங்க. நம்ம கும்பிடுற பழனி மலை முருகன் அவனுக்கு நல்ல வழி காட்டுவான்.
“உண்மைதான். மீனாட்சி. நானும் அந்த நம்பிக்கையோடுதான் இருக்கேன்.”
“இன்னைக்கு பௌர்ணமி ! மறந்துட்டீங்களா. மூலிகைப் பறிக்க போகர் வனத்துக்கு போகலையா.?
“நினைவிருக்கு. கஞ்சி குடிச்சிட்டு கிளம்பிடுறேன். சரவணன் வந்துட்டானா.? எங்க போயிருக்கான்.?
“பக்கத்துக்கு தெருவுல இருக்குற அவன் நண்பன் கதிர்வேலு வீட்டுக்கு போயிருக்கான்.”
“என்ன விஷயம்?”
“ஏதோ புத்தகம் வாங்கப் போயிருக்கான்.”
சித்தவைத்தியனான சிவநேசனுக்கு தன் மகன் சரவணனும் தன் தொழிலில் வந்து தன்னைப் போல கஷ்டப்படக்கூடாது. என்பதில் கவனமாக இருந்தார்.
பச்சைமிளகாயைக் கடித்தவாறு கஞ்சி குடித்தார் சிவநேசன்.
கஞ்சிகுடித்ததும் ஒரு ஜோல்னா பையில் டார்ச் லைட், வெட்டு அரிவாள்,ஒரு துண்டு மற்றும் தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்தார்.
“மீனாட்சி நான் கிளம்புறேன். காலையில வந்துடுறேன்.”
“சரிங்க பாத்து போயிட்டுவாங்க”.
“எனக்கென்ன பயம் முருகன் துணையிருக்க..”
சிவநேசன் வெளியே கிளம்பவும் சரவணன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
“என்னப்பா?போகர் வனத்துக்கா?”
“ஆமாண்டா……ராசா”
“நானும் வரட்டாப்பா.?
“வேண்டாம். நான் இன்னொரு நாள் கூட்டிக்கிட்டு போறேன். உன் பிறந்த நாளுக்காக அம்மா ஆசையா பாதாம் அல்வா … செஞ்சி வச்சிருக்கா பாரு.சாப்பிட்டு தூங்கு ராசா.
அரை மனதுடன் “சரிப்பா..” என்றான் சரவணன்.
சரவணனுக்கு தன தந்தையைப் போல சித்த வைத்தியனாக வேண்டுமென்ற ஆசை!ஆனால் வெளியில் காட்டிக்கொள்வதில்லை.
சிவநேசன் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
சிவநேசன் முருக நாமத்தை சொல்லிக்கொண்டே போகர் வனத்துக்குள் நுழைந்தார்.
தான் கொண்டு வந்த பையிலிருந்த“நாகதாழி வேர்”, “ஆவாரம் புல்லுருவி” போன்ற மூலிகைகளை பறித்துப் போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
நாக தாழிவேர் உள்ளவரிடம் நாகங்கள் அணுகாது.
ஆவாரம் பூவை உண்பவர் சாகாவரம் பெறுவார். மேலும், இது சர்க்கரை நோய்க்கு சிறந்த நிவாரணி.
பௌர்ணமி அன்றே பல அபூர்வ மூலிகைகள் வெளிவரும்…பின்பு, சில மணி நேரத்திற்குள்ளே பாறை இடுக்கினுள் சென்றுவிடும்.
தற்போது சிவநேசன் போகர் வனத்திற்குள் வந்திருப்பதன் காரணம்? கரு நொச்சியை தேடி கரு நொச்சி சர்வ நோய்கள் நிவாரணி.கரு நொச்சி பெரும்பாலும் சதுரகிரியிலும், போகர் வனத்திலும் மட்டுமே காணப்படும்.
சிவநேசன் நடந்து கொண்டேஇருந்தார்.
திடீரென…ஒரு நட்சத்திரம் வானத்திலிருந்து போகர் வனத்தில் உதித்தது.
சிறிது நேரத்தில் அந்த நட்சத்திரம் சித்தராக மாறி சிவநேசன் எதிரே வந்தார்.
பெரும்பாலும் சித்தர்கள் நட்சத்திர ரூபத்தில் வானில் சஞ்சாரம் செய்வர்.
சிவநேசன் தன்னை அறியாமலே சித்தரை வணங்கினார்.
“எப்படி இருக்கிறாய் சிவநேசா”?
சாமி …நீங்க..நீங்க..?
பயப்படாதே ! நான் முருகனடிமை.பெயர் கழுகு சித்தனப்பா…!
“உங்களை தரிசிக்க நான் கோடி புண்ணியம் செஞ்சிருக்கணும் சாமி.”
“எல்லாம் அந்த முருகப்பெருமானின் திருவிளையாடலப்பா! நீ சாதாரணமானவனல்ல .அதனால் தான் என்னை உன்னால் தரிசிக்க முடிகிறது. உன் மகன் சரவணனும் சாதாரணமானவனல்ல . அவன் போகரின் ஆஸ்தான சீடரான புலிப்பாணியின் அம்சம்.”
“சாமீ……என்ன சொல்றீங்க .?
“உன்மகனால் பெரிய அதிசயங்கள் நிகழவுள்ளது.”
“அது என்ன சாமி…”
“போக போகத் தெரியும். போகரின் திருவிளையாடல்.”
“எனக்குப் புரியலைங்க .”
“நாளை சரவணனை பழனிமலைகோவில் அடிவாரத்திலுள்ள சாக்கடைச் சித்தனைப் போய் பார்க்கச்சொல்.
“சரி சாமி.”
“சிவநேசா! நான் தவமியற்றப் போகிறேன். “
“சாமீ..”
“என்னப்பா.?
“கருநொச்சி எங்கே கிடைக்கும்”
“முருகன் நாமத்தை சொல்லிக்கொண்டே போ உன் கண்ணில் தென்படும்”.
“ரொம்ப நன்றி சாமி”.
“நல்லதே நடக்கும்…சென்று வா!..
“முருக நாமத்தை சொல்லிக்கொண்டே “சிவநேசன் சென்றார். கழுகு சித்தர் சொன்னபடியேகருநொச்சிசிவநேசன் கண்ணில்பட்டது.
கருநொச்சி கருமை நிறத்தில், ஊசி போன்ற இலைகளுடன் காணப்பட்டது.
சிவநேசன் கருநொச்சியைப் பறித்து தன் பையில் போட்டுக்கொண்டு தன் வீடு நோக்கி நடந்தார்.
தொடரும்
| அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 |