நியூரான்கள் சொன்ன கதை… | வி.சகிதாமுருகன்

 நியூரான்கள் சொன்ன கதை… | வி.சகிதாமுருகன்

பூஜையறையிலிருந்து வெளியே வந்தாள் மனோகரி.. கணவன் பிரணவ் இன்னும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. சமயலறைக்குள் புகுந்தவள் பாலைச் சூடாக்கி ஃபில்டரிலிருந்து டிக்காஷனை இறக்கி காஃபி கலந்தாள். கோப்பையுடன் பெட்ரூமிற்குள் சென்று கணவனை உசுப்பினாள். காஃபிக் கோப்பையை டீப்பாய் மேல் வைத்தவள்..

“ஏங்க மணி ஆறாச்சு.. இன்னும் என்ன உறக்கம்? இன்னும் கொஞ்சம் முன்னாடி எழுந்துக்கப் பாருங்க. நீங்க ஜாக்கிங் முடிச்சிட்டு வரும்போது சூரியன் பல்லை இளிக்குது. அப்புறம் அடிச்சுப் பிடிச்சு வண்டியை விரட்டிட்டுப் போறது. நேத்து என் ஃப்ரண்ட் ஷாமி சொன்னா நீங்க ராஷ் ட்ரைவ் பண்ணுறீங்களாம்”

முழிப்புத் தட்டியும் கண்ணைத் திறவாமல் மனைவியின் அர்ச்சனையை காதில் வாங்கிக் கொண்டு படுத்தே கிடந்தான் பிரணவ். கண்களைத் திறவாமல் காற்றில் அவளைத் துளாவினான். அவள் அவன் கைக்குச் சிக்காமல் போக்குக் காட்டினாள். அரைவாசி கண்ணைத் திறந்தவன் அவளை வாரி பெட்டில் வீழ்த்தி அவள் உதட்டைக் கவ்வினான்..

“அய்யய்யோ என்ன அசிங்கம் இது?”

“என்னது அசிங்கமா ராத்திரி அப்படிச் சொல்லலையே நீ?”

அவள் முகம் குங்குமமாய் சிவந்தது..

“அதுக்கு நேரம் காலம் இல்லை? காலையில நான் குளிச்சாச்சு.. பல்லு கூட விளக்காம” கூறியவள் தலையணையை எடுத்து செல்லமாய் கணவனை அடித்தாள்.. காலைப் பொழுது ரம்யாமாய் ஆரம்பித்தது அந்த தம்பதியருக்கு..

ஜாக்கிங்கை முடித்துக் கொண்டு வேர்த்து விறுவிறுத்து வந்து சோஃபாவில் அமர்ந்தான் பிரணவ்.

பிரணவ் ஐந்து அடி எட்டு அங்குல உயரம், தேகாப்பியாச உடம்பு, நல்ல சிவப்பில் ஒரு ஹீரோ லுக் காண்பித்தான். அவன் வந்த அரவம் கேட்டு சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் மனோகரி. வேர்வை முகத்தில் மினுமினுக்க சோஃபாவில் அமர்ந்திருக்கும் கணவனின் அழகைப் பார்த்தவள் மனதிற்குள் எண்ணினாள். .’எத்தனை அழகான குணமான கணவனை எனக்கு கொடுத்திருக்கிறாய் இறைவா!’ அந்நேரம் இறைவனுக்கு நன்றி கூறியது அவள் மனம். இவன் எனக்குக் கிடைத்தப் பொக்கிஷம் இவனை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மனதில் கூறிக் கொண்டவள் கணவன் நெற்றி வேர்வையை புடவைத் தலைப்பால் துடைத்தாள்.. காலையில் அவள் குளித்து முடித்த வாசத்தில் அப்படியே மெய் மறந்து அமர்ந்திருந்தவனை..

“ம்ம்..பொண்டாட்டி வாசம் பிடிச்சது போதும் எழுந்து குளிச்சு ஆபீசுக்கு கிளம்பப் பாருங்க..”

மனைவி கூறியதும் ‘இப்ப தயாரானாத்தான் ஆபீசுக்கு லேட் ஆகாம போய்ச் சேர முடியும்’ எண்ணியவன் குளியலறைக்குள் புகுந்தான். அவன் வீட்டிலிருந்து அவன் அலுவலகம் இருப்பது சிட்டியை விட்டு அவுட்டர்.. தினமும் ஒன்றரை மணி நேர கார் பயணம். டிராஃபிக்கில் நீந்தி வெளியே வந்து அவுட்டர் ரோடை பிடிக்கவே ஒரு மணி நேரம் ஆகும். காலை உணவை முடித்து மனைவிக்கு முத்தம் கொடுத்து தன் ஸ்விஃப்ட்டை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் ப்ரணவ்.

வழக்கம் போல ட்ராஃபிக்.. அதில் ஊர்ந்து புறநகர் செல்ல அன்று அவனுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகியது.. புறநகரைத் தொட்டவன் வண்டியை விரட்டினான்.. ஸ்பீடா மீட்டர் 130 ஐ தாண்டிய நேரம் குறுக்கே எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை அந்த எருமை மாடு.. உணர்ந்து பிரேக் அடிக்குமுன் அதன் மீது மோதி சாலைத் தடுப்பில் இடித்துப் புரண்டது அவன் கார்.. வேகமான மோதல் கார் அப்பளம் போல் நொறுங்கிப் போயிருந்தது. சீட் பெல்ட் அணியாமல் இருந்தான் பிரணவ். மீட்புக் குழுவினர் வந்து காரை உடைத்து பிரணவை வெளியே எடுத்து அந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அழுது அழுது மயக்கத்திற்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகியிருந்தாள் மனோகரி. விஷயம் தெரிந்து பிரணவின் குடும்பமும், மனோகரியின் குடும்பமும் மருத்துவமனையில் குழுமியிருந்தனர்..

தலைமை டாக்டர் புருஷோத்தமன் பிரணவின் தந்தை ராமநாதனை தன் அறைக்குள் அழைத்துக் கூறினார்..

“சாரி மிஸ்டர் ராமநாதன்.. அஸ் எ டாக்டர் உங்க கிட்ட சொல்லித்தான் ஆகணும்.. உங்க சன் ஒரு டீப் கோமாவுல விழுந்துட்டார்..”

டாக்டர் கூறவும் ராமநாதன் வெடித்து அழ ஆரம்பித்தார். அவர் அழுது முடிக்க அவகாசம் கொடுத்துக் காத்திருந்தார் தலைமை டாக்டர். அழுது ஓய்ந்ததும் மீண்டும் தொடர்ந்தார் புருஷோத்தமன்..

“ராமநாதன் நடந்தது மோசமான விபத்து உடம்புல பயங்கர காயங்கள்.. ஆபரேஷன் பண்ணி உயிரைப் புடிச்சுப் போட்டிருக்கறோம். ஆனா துரதிர்ஷ்டம் உங்க சன்னுக்கு தலையிலையும் பலமான அடி. மூளை தொண்ணூறு சதவீதம் செயலிழந்திடிச்சு.. இந்த கோமாவுல இருந்து எழுந்துக்கறதுக்கு 99 சதவீதம் சான்ஸ் இல்லை. இந்த கோமா நிலை எத்தனை நாள் நீடிக்குமுன்னும் சொல்ல முடியாது. இன்னர் ஆர்கன்சை ஆபரேசன் பண்ணி சரி பண்ணுன மாதிரி மூளையை சரி பண்ண முடியலை”

“இப்ப என்ன பண்ணுறது டாக்டர்?”

“அஸ் எ டாக்டர் எல்லார்கிட்டயும் கேட்கற கேள்வி தான்.. உங்க பையன் உறுப்புக்களை நீங்க தானமா கொடுக்கலாம்.. அவர் உறுப்பு தானம் பண்ணுறதால பூமியில நிறைய பேர் வாழ முடியும். இது உங்க விருப்பம், உங்க குடும்ப விருப்பம்.. முக்கியமா அவரோட மனைவியோட விருப்பம் இருந்தால் நிறைவேறும்” கூறிய டாக்டர் ராம்நாதனின் முகத்தை ஏறிட்டார்..

“நான் என் குடும்பத்தை கலந்துக்கணும் டாக்டர்”

“டேக் யுவர் ஓன் டைம்”

ராமநாதன் தளர் நடை போட்டு தலைமை டாக்டர் அறையை விட்டு வெளியே வந்தார்..

குடும்பத்தினரை சம்மதிக்க வைத்தார் ராமநாதன்.. ஆனால் மனோகரியிடம் இந்த விஷயத்தைக் கூறியதும் அவள் மீண்டும் மயங்கி விழுந்தாள்..

மீண்டும் அவள் கண் திறந்து பார்க்கும் பொழுது ஒரு இளம் டாக்டர் அவள் பெட்டின் அருகில் நின்றிருந்தார்.. தாடி மீசையை செம்மையாக வைத்திருந்தவன் பிரேமம் நிவின் பாலியை நினைவுக்குக் கொண்டு வந்தான். .தீட்சண்யமான அவன் கண்களில் ஒரு தேடல் இருந்தது. கண்ணைத் திறந்தவளை..

“ஐயாம் டாக்டர் தருண்” தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டான். அதற்கு என்ன என்பதாய் இருந்தது அவள் அவனைப் பார்த்த பார்வை. அவள் பார்வையை உணர்ந்து அவளுக்குப் பதில் கூறினான்..

“உங்க கூட கொஞ்சம் பேசணும் அது இங்க முடியாது மெதுவா நடந்து ஆஸ்பிடலுல இருக்கற காஃபி ஷாப்புக்கு வர முடியுமா?’

“எதுக்கு?”

“உங்க கணவன் விஷயமா உங்க கூட கொஞ்சம் பேசணும்”

கணவன் விஷயம் என்றதும் அவள் உடம்பில் தெம்பு ஏறியது. தருணை வினவினாள்.

“தம்பி கூட இருப்பான் பரவாயில்லையா?’

“நான் சொல்லப் போறது ஒரு ரகசியம் அதை உங்க தம்பி காப்பாத்துவாருன்னா அவர் கூட இருக்கிறதுல எனக்கு ஆட்சேபனை இல்லை”

ஸ்டூலில் அமர்ந்திருந்த அவள் தம்பி ஆதவ் அவளை கைத்தாங்கலாய் பெட்டிலிருந்து எழுப்பினான். அவளால் நடக்க முடிந்தது. மெல்ல எட்டு வைத்து தம்பியுடன் நடந்து காஃபி ஷாப்பிற்குள் வந்தாள். அவர்களை பின் தொடர்ந்து வந்தான் டாக்டர் தருண். மூன்று காஃபி ஆர்டர் செய்தான் ஆதவ்.. காஃபியை பருகியபடியே ஆரம்பித்தான் தருண்..

“மிஸ்சஸ் பிரணவ்.. எங்க தலைமை டாக்டர் உங்க கணவாரோட ஆர்கன்சை டொனேட் பண்ணச் சொல்லியிருப்பாரே?”

“ஆமாங்க”

“அதுக்கு ஒத்துக்காதீங்க”

“ஏன் டாக்டர் ஏமாத்துக்காரரா?”

“இல்லை”

“அப்புறம் ஏன்?’

“டாக்டர் சொல்லுறது நூற்றுக்கு நூறு உண்மை, உங்க புருஷன் ப்ரெய்ன் டெத் கண்டிஷனுலதான் இருக்கறார், ஆனா என்னால அவர் மூளை நியூரான்களை ஓரளவு உயிர்ப்பிக்க முடியும்”

“அப்படின்னா என் பிரணவ் பிழைச்சுக்குவாரா?”

“இல்லை.. பிரணவை பிழைக்க வைக்க முடியாது.. ஆனா அவரோட மூளையை ஒரு பத்து சதவீதம் பிழைக்க வைக்க முடியும் என்னால”

“என்னைக் குழப்புறீங்க டாக்டர் நீங்க”

“நான் தெளிவா சொல்லுறேன் மிஸ்சஸ் பிரணவ்.. உங்க கணவரோட இன் ஆர்கன்ஸ் இனி செயல்படாது.. எல்லாம் செயலிழந்து போயிடிச்சு.. மூளை ஒரு பத்து சதவீதம் செயல்படுது அது உள்ளுறுப்புக்களை இயக்கப் போதுமானதா இல்லை.. அந்த பத்து சதவீத மூளையை என்னோட கண்டுபிடிப்பால உங்க கூட கம்யூனிக்கேட் பண்ண வைக்க முடியும்”

தருணை ஒரு நம்ப முடியாத பார்வை பார்த்தவாறு கூறினாள் “என்னால இதை நம்ப முடியலை”

“உடலுறுப்புகளை தானமா குடுத்து உங்க கணவனை இந்த உலகத்துல இருந்து அகற்றப் போறீங்க. என் ஆராய்ச்சி மிருகங்கள் மேல சக்சஸ் ஃபுல்லா முடிஞ்சுது.. மனித குலத்துக்கு வருங்காலத்துல என் ஆராய்ச்சி மிகப் பெரிய உபயோகமா மாறப் போகுது.. மெடிக்கல் கவுன்சில் இந்த மாதிரி ஆராய்ச்சிக்கு பர்மிஷன் தர மாட்டாங்க.. இதனால உங்களுக்கு எந்த இழப்பும் இல்லை.. உங்க கணவருக்கு எந்த வலியும் இருக்கப் போறதில்லை.. யோசிங்க மிஸ்சஸ் பிரணவ்”

தம்பியுடன் கலந்து கொண்டாள் மனோகரி.. அவன் ஒரு மெடிக்கல் ஸ்டூடண்ட் ஆனதால் அவனும் ஒத்துக் கொண்டான். முடிவில் மனோகரி இளம் டாக்டர் தருணின் வழிக்கு வந்தாள்.

“சரி டாக்டர் நான் இனி என்ன செய்யணும்?”

“ஆர்கன் டொனேஷனுக்கு ஒத்துக்காதீங்க.. நீங்க கையெழுத்துப் போட்டாத்தான் அது செல்லுபடியாகும். கோமாவுல இருந்து என் புருஷன் எழுந்து வருவாரு எனக்கு நம்பிக்கை இருக்குதுன்னு சொல்லிடுங்க”

“சரி டாக்டர் நீங்க என் புருஷன் கூட என்னை கம்யூனிக்கேட் பண்ண வைக்கிறதா சொல்லுறீங்களே அதைப் பற்றிச் சொல்லுங்க”

“ப்ரெய்ன் டெத் ஆனவங்ளோட மூளையை உயிர்பிக்க நான் ஒரு சீரம் கண்டு புடிச்சிருக்கறேன்.. அதை மூளையில செலுத்தினா அவங்க உடல் உறுப்பை இயங்க வைக்கற அளவுக்கு மூளையால செயல்பட முடியாட்டாலும் மத்தவங்க கூட தொடர்பு கொள்ள முடியும்.. நீங்க உங்க கணவர் கூட பேசலாம் அவரால வாய் திறந்து பேச முடியாது.. அவர் மூளையோட நான் இணைச்சிருக்கற கம்ப்யூட்டர் மூலமா உங்களுக்கு அவரோட மூளையில இருந்து பதில் வரும்.. சில கருவிகளை நான் உங்க கணவர் தலையில ஆபரேஷன் பண்ணி இணைப்பேன் அதுல இருந்து சில வயர்கள் வெளியே சில கருவிகளோட இணைப்பேன்.. அப்புறம் நீங்க பேசுறதை கிரகிச்சுக்கிட்டு அவர் உங்களுக்கு பதில் சொல்லுவார். அது கம்பூட்டரில் டைப் ஆகும். வெளியே உள்ள கருவிகளின் இயக்கம் நின்றால் உங்கள் கணவரின் மூளையின் இயக்கமும் நின்னுடும்!”

பிரமித்துப் போய் அமர்ந்திருந்தாள் மனோகரி.. இது நடந்தால் நன்றாக இருக்கும்.. என் கணவனுடன் நான் இருப்பேன் அவர் இந்த உலகத்தை விட்டு போக வேண்டாம் நான் இருக்கும் வரை அவரும் இருப்பார்.. அவள் தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்..

“மூளை கொஞ்சம் இயங்கும் உடல் இயங்காதுன்னீங்க.. அப்ப உடல் கெட்டுப் போகாதா?”

“இவ்வளவு கண்டு பிடித்தவன் அதைக் கண்டு பிடிச்சிருக்க மட்டேனா?.. மூளையின் செயல் பாடு இருக்கும் காலம் வரை உடல் கெட்டுப் போகாமல் இருக்கவும் ஒரு சீரம் கண்டு பிடிச்சிருக்கிறேன். அதையும் உடலில் செலுத்திவிடுவேன்”

குடும்பத்தினருடன் போராடி கணவன் உடலை உறுப்பு தானத்திற்கு கொடுக்காமல் வீட்டிற்கு கொண்டு வந்திருந்தாள் மனோகரி. அவள் தம்பி ஆதவ் அவளுக்கு உற்ற துணையாய் இருந்தான்.

டாக்டர் தருண் எல்லா உபகரணங்களையும் அவள் வீட்டில் அவர்களின் பெட் ரூமில் பொருத்தினான்.. அவர்கள் பெட் ரூம் ஒரு ஐசியூ யூனிட்டாய் மாறிப் போயிருந்தது. ஒரு சிறிய மைக் போன்ற கருவியை பிரணவின் தலையை திறந்து ஆபரேசன் செய்து பொருத்தினான்.. கூடவே சில கருவிகள்.. வெளியே சில கருவிகள் அதனை ஒரு சூப்பர் கம்ப்யூட்டருடன் இணைத்தான்.. மின்சாரத்தை பேட்டரி உதவியுடன் இணைத்தான்.. காரணம் வெளிமின்சாரம் கட் ஆனால் செயல்பாடுகள் நின்றுவிடும் சாத்தியக்கூறு இருப்பதால். கருவிகளை இயக்கினான்.. பச்சை வெளிச்சம் மானிட்டரில் கோடு கோடாய் புழுக்களாய் நெளிந்தது.. ஒரு விஷேஷ கருவியை இயக்கினான் அது பிரணவின் மூளையில் உயிர்ப்புடன் இருந்தது பத்து சதவீத நியூரான்களை நிரட ஆரம்பித்தது.. இப்பொழுது மானிட்டரில் அலையடித்தது..

“சக்சஸ்..” சத்தமிட்டு கூவினான் தருண்..

“மேடம் இப்ப அவர் தலைப் பக்கம் வந்து பேசுங்க.. பேசுங்க” மனோகரியிடம் கூறினான்..

அவள் மெல்ல பிரணவின் தலைக்கு அருகில் வந்து..” என்னங்க.. எப்படியிருக்கறீங்க..” என்றாள்.

எந்தச் சலனமும் இல்லை பிரணவிடமிருந்து. தருணை நம்பிக்கை இல்லாமல் பார்த்தாள் ..

“மேடம் மனசை விட்டுராதீங்க.. தொடர்ந்து பேசுங்க”

“என்னங்க எப்படி இருக்கறீங்க?. நான் உங்க மனோ..மனோ..”

கம்ப்யூட்டர் மானிட்டரையே பார்த்தான் தருண்.. மூன்று பேர் பார்வையும் அதிலேயே நிலைத்தது. வினாடிகள் யுகமாய் கரைந்தது..

கம்ப்யூட்டர் மானிட்டரில் எழுத்துக்கள் துளிர்க்க ஆரம்பித்தது..

‘ந ல் லா இருக் கறேன் மனோ..’

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான் தருண்.. கண்ணீரில் மிதந்தாள் மனோகரி.. நம்ப முடியாமல் திகைத்து நின்றான் ஆதவ்.. கணவன் மேல் விழுந்து அழ ஆரம்பித்தாள் மனோகரி..

அவள் அழுகைச் சத்தம் அவன் மூளைக்கு எட்டவும் கம்பூட்டரில் எழுத்துக்கள் தோன்றின..

‘அழாதே மனோ’ இப்பொழுது கோர்வையாய் வந்தது வாக்கியங்கள்.

இப்பொழுது டாக்டர் தருண் பேசினான்..பிரணவிற்கு நடந்த விபத்து.. இப்பொழுது அவன் நிலை.. அவனை அவன் மனைவியுடன் எப்படி பேச வைத்திருகிறான் என்பதை எல்லாம் விவரித்தான்.. அதற்கு அவனுக்கு நன்றி கூறினான் பிரணவ்..

‘என் மனோ கூட என்னை சேர்த்து வச்சதுக்கு நன்றி டாக்டர்..’

நாட்கள் ஓடியது.. தருண் அவ்வப்பொழுது வந்து பிரணவை கவனித்துக் கொண்டான். இது போன்ரற ஆராய்ச்சிகள் செய்ய சட்டத்தில் இடாமில்லாததால் இந்த வெற்றியை உலகிற்குச் சொல்ல தருணால் முடியவில்லை. அவன் மூளைச்சாவிலிருந்து முழுவதுமாய் மனிதர்களை காப்பாற்றும் ஆராய்ச்சியில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான்.

மாதங்கள் ஓடியது.. அன்று காலை கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.. அதில் கண்ட வாக்கியம்..

‘ஏன் மனோகரி இந்த மாமிசப் பிண்டத்துடன் உன் வாழ்க்கையை உன் இளமையை தொலைக்கிற.. கொஞ்சம் நாள் உன்னோட பேசிட்டு இருக்கற இந்த நிலை எனக்குப் புடிச்சுது. .உன்னோட நிலையில இருந்து பார்த்தா இது பெரும் கொடுமை.. நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு மனோ..”

இடிந்து போய் அமர்ந்தாள் கணவன் உடலின் அருகில்.. சற்று நேரம் கழித்து பேச ஆரம்பித்தாள்..

“இந்த ஜென்மத்துல நீங்க மட்டும் தான் என் கணவன்..

அவனிடமிருந்து பதில்..

‘இது பத்தாம் பசலித்தனம்.. ’மனோ உனக்கு இளமை இன்னும் நிறைய இருக்குது .. வெறுமனே பேசிட்டிருக்க கொஞ்சம் மூளை மட்டும் தான் என்கிட்ட இருக்குது, அதுவும் எத்தனை நாள் வருமுன்னு தெரியாது..இந்த மூளையை கட்டிக்கிட்டு மாரடிக்காதே’

“இல்லை.. இல்லை நீங்க வெறும் மூளை இல்லை. என் முன்னாடி முழு உருவமா இருக்கறீங்க”

‘நான் இருக்கறேன் என்னால உன்னைப் பார்க்க முடியாது, தொட முடியாது, உன்னைக் கட்டிப் பிடிக்க முடியாது, உன் உதட்டுல முத்தமிட முடியாது.. வேற எந்தா சுகமும் குடுக்க முடியாத இந்த மூளை உனக்கு எதுக்கு?’

“உடல் சுகம் மட்டும்தான் வாழ்க்கையாங்க?”

‘அதுவும் இணைஞ்சதுதான் வாழ்க்கை’

“இந்தப் பேச்சை இத்தோட விடுங்க” என்றவள் அந்த இடத்தை விட்டு அகன்றாள் மானிட்டரில் மனோ.. மனோ என்று டைப் ஆகிக் கொண்டிருந்தது!

நாட்கள் ஓடியது பிரணவின் மூளை திரும்பத் திரும்ப அவளை மறுமணம் செய்ய நிர்ப்பந்தித்து. அவளால் இன்னொரு ஆடவனுடன் கட்டிலில் இருப்பது போல் நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. பிரணவ் அவளிடம் இப்பொழுது வேறு எதுவும் பேசுவதில்லை. கணவன் பிடிவாதத்தை இனி மாற்ற முடியாது என்று தெரிந்து போனது அவளுக்கு.. முடிவெடுத்தாள் மனோ..

‘எந்த உடல் சுகமும் அனுபவிக்க முடியாது, ஒரு தீக்குச்சியால் சுட்டாலும் வலி என்பதை அறிய முடியாத மூளை.. ஏதோ கொஞ்சம் கம்யூனிக்கேட் பண்ண மட்டும் முடியும் மூளை.. ஆனால் இது என் கணவனின் மூளை அதனுடன் பேசிக்கொண்டே இந்த வாழ்வை முடித்துவிடலாம் என்றால் அவன் மூளை இப்பொழுது வேறு விதமாய் சிந்திக்க ஆரம்பித்து விட்டது.. என்னுடன் இயல்பாய் பேச மாட்டேங்கிறான் கணவன்.. என்னை மறுமணம் செய்ய வற்புறுத்துகிறான் என்னால் இன்னொரு ஆடவனுடன் வாழ முடியாது..’

முடிவெடுத்தாள்.. இறைவா என்னை மன்னித்துவிடு. .முப்பத்தி முக்கோடி தேவர்கள் சாட்சியாய் வைத்து என் கழுத்தில் தாலி கட்டிய என் கணவனே என்னை மன்னித்து விடு என்று மனதில் மன்னிப்பு கேட்டுக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தாள்.. அவன் தலைப் பகுதிக்குச் சென்று அவன் தலையுடன் பொருத்தப்பட்டிருந்த கருவிகளை இணைப்பிலிருந்து பிரித்தாள்.. அடுத்த வினாடி ஓடிக் கொண்டிருந்த மானிட்டரின் அலைகள் தரையில் படுத்தன நீள வாக்கில்!

முன்னறைக்குச் சென்றவள் டாக்டர் புருஷோத்தமனுக்குப் போன் செயதாள்..

“டாக்டர் என் புருஷன் இறந்துட்டாரு அவர் உடம்புல இருந்து எதாவது ஆர்கன்ஸ் நோயாளிகளுக்குப் பயன்படுமானா எடுத்துக்கங்க!” கூறியவள் கணவன் அருகில் வந்து அவன் உதட்டில் முத்தமிட்டாள்.. கணவன் உடலின் அருகில் அமர்ந்தாள் டாக்டரின் வருகையை நோக்கி!

முற்றும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...