தூரத்துப் பச்சை | விஜி முருகநாதன்

 தூரத்துப் பச்சை | விஜி முருகநாதன்

விட்றாதே..பிடி..இடிச்சுராதே..தலைவாசல் கொஞ்சம் உயரம் குறைவா இருக்கு..சாச்சுப்பிடி..”

சலசலவென்ற பலர் பேசும் குரல் நல்ல உறக்கத்தில் இருந்த மாதவனை எழுப்பி விட்டது.

பரபரப்பாக எழுந்து உட்கார்ந்தான்..பக்கத்தில் இருந்த செல் போனில் மணி பார்த்தான்..ஏழு _பதினைந்தைக் காட்டியது..

“ச்சே..! இன்னும் அரை மணிநேரம் இருக்கு..”

“சுதா..சுதா..”

“என்னங்க..” என்றபடி வந்து நின்றவள் குளித்து மங்களகரமான முகத்துடன் கூந்தலை நுனியில் முடிந்து கிள்ளுப்பூ வைத்திருந்தாள்.

இவை எதுவும் கண்ணிலோ கருத்திலோ பதியாமல் ,முகத்தை சுளித்தபடி ..”என்ன சத்தம்..”என்றான்..

“அது ஒண்ணுமில்லீங்க..ரொம்ப நாளா பூட்டிக் கிடந்த எதிர் வீட்டுக்கு குடித்தனம் வந்துருக்காங்க..”..”சாமான் இறக்கறாங்க..”

“ஓ..யாராம்..?!..”

“தெரியலீங்க..”

“எப்பத்தான் உனக்கு எதாவது தெரிஞ்சிருக்கு..?எப்பப்பாரு தெரியலைங்கற பதில்தான்..”..”சரி..சரி..காபி கொண்டா..” சிடுசிடுத்தபடி பக்கத்தில் தயாராக வைத்திருந்த பேப்பரை விரித்தான்.

“கொண்டு வர்ரேங்க..”என்றபடி திரும்பிய சுதா மெல்லிய பெருமூச்செறிந்தாள்.

“இன்றைய பொழுது தொடங்கியாச்சு..இன்னும் எவ்வளவு திட்டு பாக்கி இருக்கோ..”

கொதித்த காபியை பக்கத்தில் வைத்தவளுக்கு..,மீண்டும் வசவு காத்திருந்தது..

..”இவ்வளவு சூடாவா காபி குடுப்ப.. ஆறி நான் குடிக்கறதுக்கே அரைமணி நேரம் ஆகும் போலிருக்கு..ஆபீஸ்க்கு லேட்டாப் போனா உங்கப்பனா பதில் சொல்லுவான்..?

காப்பியை இரண்டு ஆற்று ஆற்றி வைத்து விட்டு மௌனமாக நகர்ந்தாள்..

நின்று பதில் சொல்லிக் கொண்டிருந்தால் , சூர்யாவையும் குருவையும் நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்ப முடியாது..

இருந்தாலும் ,மனது வலிக்கத்தான் செய்தது.இவ்வளவு அதிகாரம் செய்யும் மாதவன் ஒன்றும் எந்த அலுவலகத்திலும் வேலை செய்ய வில்லை..

தனியார் எலெக்டிரிக் கடையில் சூப்பர்வைசர் ..படித்ததென்னவோ பி.எஸ்.சி. என்றாலும் எப்போதுமே தான் ரொம்ப உசத்தி என்ற நினைப்பில் பெரிய உத்தியோகங்களை தேடி,கடைசியில் ஒன்றும் கிடைக்காமல் அவன் அப்பாவின் சிநேகிதர் தயவில் இந்த வேலை வாய்த்தது.

அதே போல நல்ல நிறமான தனக்கு மாநிறமான சுதா வாய்த்ததில் ரொம்பவே குறை..

இத்தனைக்கும் சுதா ஒன்றும் லட்சணமில்லாதவள்..அல்ல.. நிறம்தான் மட்டே ஒழிய அவளின் மங்களகரமான முகமும், உயரமும் யாரையும் வசீகரித்து விடும்..

மாதவன் கொண்டு வந்து தரும் சம்பளத்தில் அளவாக குடித்தனம் நடத்துவதோடு..ஒரு உண்டியல் வைத்து தினமும் பத்து ரூபாய் போட்டுக்கொண்டே வருவாள்..

எதாவது அவசரத் தேவைக்கு அந்தப் பணம்தான் கை கொடுக்கும்..

இவ்வளவு திறமைகள் இருந்தாலும்..

..”ம்ம்.. நமக்கு வந்ததும் சரியில்லை.. வாச்சதும் சரியில்லை..” மாதவன் அடிக்கடி புலம்பும் வாசகம் இது..

சுதா பதமாக விழாவி வைத்த வெந்நீரில் குளித்து..எப்போதும்
போல் காலை உணவை குறை சொல்லி.. மதிய உணவைக் கையில் எடுத்துக்கொண்டு கிளம்பி வாசல் கதவைத் திறந்தவன் அதிர்ந்தான்.

“சார்.. கொஞ்சம் சுத்தியல் இருந்தால் தர்றீங்களா..”

கேட்டவளுக்கு சுதா வயதுதான் இருக்கும்..நல்ல நிறம்..சற்று குள்ளம்தான்..ஆனால் நிறத்திற்கு தகுந்தவாறு உடுத்தியிருந்த அடர் வயலட் நிற சேலையும், அடர் லிப்ஸ்டிக்ம் கண்ணில் வழிந்த காஜலும் அவளைப் பேரழகியாகக் காட்டின..

மாதவனுக்கு படபடத்தது.. பேச்சு வராமல் வாய் திக்கியது .

“நாங்க எதிர் வீட்டுக்குக் குடி வந்திருக்கிறோம்..ஸ்டாண்ட் மாட்டணும்..” மீண்டும் அவள் தயங்கிய குரலில்..

அப்போது தான் சுரணை வந்தது மாதவனுக்கு..

“வாங்க.. வாங்க..” என்றவன் உள்ளே திரும்பி…”சுதா..சுதா..”என்று விட்டு

..”வொய்ப் வருவாங்க.. கேளுங்க ..எனக்கு ஆபீஸ் போகணும்..”என்றபடி மாட்டியிருந்த ஷோல்டர் பேக்கை தேவையில்லாமல் சரி செய்து விட்டு நடந்தவனுக்குள் ..”தம்தன..தம்தன..”இளையராஜா வின் பி.ஜீ.எம்.கேட்கத் தொடங்கியது..

எவ்வளவு அழகு..?!என்று எண்ணத் தொடங்கியவனுக்கு அவள் இன்னொருவன் மனைவி என்ற குற்ற உணர்வு எதுவும் வரவில்லை..

“என்ன பெரிய அழகி..கலர்தான்..ஆனாலும் என் கலருக்கு ஈடாவாளா..?!”என்று எப்போதும் போல நினைத்தவன் நினைப்பு அன்று இரவு வீடு திரும்பும் போதே தொலைந்து போயிற்று..

காலையில் பார்த்த அந்தப் பெண் சுதாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள்..காலையில் பார்த்ததை விட சற்று அதிக மேக்கப்புடன் நல்ல பளீர் சிவப்பில் சுடிதார் அணிந்து அவனின் உயர்வு மனப்பான்மையை தூளாக்கினாள்..

இவனைப் பார்த்ததும் மரியாதையாக ..”நான் வர்ரேங்க..”என்றபடி அவள் வீட்டுக்கு நடந்தாள்..

உள்ளே வந்த சுதா அவன் கேட்காமலேயே சொல்லத் தொடங்கினாள்..சுஷ்மா கௌதம் இருவரும் காதலித்து மணம் புரிந்து கொண்டவர்கள்.. சுஷ்மாவுக்கு டெல்லி தான் பிறந்த ஊர்.. கௌதமுக்குச் சென்னை..

காதல் மணம் புரிந்ததால் பெற்றவர்களோ,சொந்தக்காரர்களோ யாரும் வருவதில்லை .இரட்டை குழந்தைகள்.. ராகவ் ராகுல்.. கௌதம் மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரி. இப்போது இங்கே மாறுதல் வாங்கிக் கொண்டு வந்து உள்ளார்கள்..

அடுத்த நாளில் இருந்து இரு குடும்பங்களும் இழையத் தொடங்கின.

இவர்கள் வீட்டு பாகற்காய் குழம்பு அவர்கள் வீட்டிற்கும், அவர்கள் வீட்டு சப்ஜி இவர்கள் வீட்டுக்கும் மாறத் தொடங்கியது..

ஆனால் மாதவன் மனம் மட்டும் மாறவில்லை.. அவன் எப்போதும் போல சுஷ்மாவின் அழகை ரசித்துக்கொண்டே தான் இருந்தான்..

என்ன நறுவிசாக டிரஸ் பண்ணிக்கறா..எப்பப் பார்த்தாலும் புதுசாப் பூத்த பூ மாதிரி.. நடை உடை பாவனை எல்லாத்துலேயும் ஒரு ஹை-லுக் தெரியுது..படிச்ச பொண்ணுங்கறது முகத்துலேயே தெரியுது..ஊம் நமக்கும் ஒண்ணு வந்து வாச்சிருக்கே..!

எந்நேரமும் கசங்கின கைத்தறி புடவை..அதாவது பளிச்சுன்னு கட்றாளா..எப்பப் பாரு..எதாவது வேலை செஞ்சு வேர்த்து வடியற முகத்தோட..பக்கத்துல வந்தாலே வெங்காய வாடை..!

பலமுறைகள் அவனையும் மீறி பெருமூச்சு விடுவான்.. “சுஷ்மா மாதிரி அழகி அல்லவா அவனுக்கு வாய்த்திருக்க வேண்டும்..”

ஆனால்..

இன்னும் அதிகமாகவே சுதாவிடம் காய்வதற்கு பதிலாக மென்மையாக பேசத் தொடங்கினான். காரணம்.. ரொம்ப உரிமையாகப் பழகும் சுஷ்மாவிடம் எதாவது உளறி விட்டால்..

அவனைப் பற்றி என்ன நினைப்பாள்..?!

சுதாவிற்கே ஆச்சரியம் ..”எப்படி இப்படி மாறினான்..”?!..”சரி..நரி வலம் போனால் என்ன..?இடம் போனால் என்ன நம்மைக் கடிக்காமல் இருந்தால் போதும்..”என்று அமைதியாக இருந்து விட்டாள்..

கடை முடிந்து நண்பர்களுடன் கொஞ்ச நேரம் பேக்கரியில் உட்கார்ந்து டீ சாப்பிட்டு அரட்டையடித்து விட்டு வருபவன் இப்போதெல்லாம் உடனே வீட்டுக்கு திரும்பி விடுகிறான்.

எப்படியும் சுஷ்மா இந்த வீட்டிற்கும், அந்த வீட்டிற்கும் அலைவாள்..வரும் போதே கட்டியம் கூறும் நறுமணம் கூடவே வரும்.. இதெல்லாம் ரசிப்பதற்காக ..நண்பர்களுடன் அரட்டையைக் கூட இழக்கத் துணிந்து விட்டான்..

“அவனுக கிடக்கறானுக..எதாவது காரணம் சொல்லிக்கலாம்..என்ற அலட்சியபாவத்துடன்..

“அக்கா..ராகுலும் ராகவ்வும் இங்கே விளையாடிக் கொண்டு இருக்கட்டும்.. நாங்கள் ஷாப்பிங் போய்ட்டு வந்துர்ரோம்..”என்றபடி வந்தாள் சுஷ்மா..

ஆச்சரியமாக இருந்தது சுதாவிற்கு..அப்படி என்னதான் வாங்குவாள்..?! வாரத்தில் இரண்டு நாட்களாவது கௌதம் ஆபீஸ் விட்டு வந்ததும் கிளம்பினால் திரும்ப மணி ஒன்பதாகி விடும்..

முதலில் ராகுலும் , ராகவ்வும் கூடப் போய்க்கொண்டு இருந்தார்கள்.. இப்போது விளையாட்டு மும்முரத்தில் போவதில்லை..

அதே போல் தான் வரும் போது ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு குழந்தைகளுக்கும் வாங்கிக்கொண்டு வருவார்கள்..

ஆனால் சுதா.. குருவுக்கும், சூர்யாவிற்கும் கொடுக்கும் போதே அவர்களுக்கும் கொடுத்து விடுவதால் இப்போது வாங்கி வருவதில்லை.

என்னதான் சுஷ்மாவின் ஷாப்பிங் மீது ஆச்சரியம் வந்தாலும், ஒருநாளும் சுதா..”என்ன வாங்கிட்டு வந்தீங்க..?!”என்று கேட்டதில்லை..

சுஷ்மாவை மட்டும் அல்ல..தெரிந்த யார் விவகாரத்திலும் தலையிட மாட்டாள்.. தலையிட்டு சங்கடப்படுத்த மாட்டாள்..

அன்று மாதவன் வரும் போதே ஆச்சரியமாக மலர்ந்த முகத்துடன் ..”சுதா..சுதா..”என்றபடி வந்தான்.

“என்னங்க..”

“இந்தா..போனஸ் பதினைந்தாயிரம்.. இந்த சனிக்கிழமை அரைநாள் சொல்லிட்டு வர்ரேன்..நம் எல்லோருக்கும் துணிமணி ..உனக்கு ஒரு பட்டு சேலை எடுத்துக்க..ஒரே பட்டுச்சேலைதானே எந்தக் கல்யாணத்துக்கு போனாலும் கட்டிட்டுப் போற..”

சுதாவிற்கு தான் கேட்பது கனவா..நனவா..?!என்று சிறிது நேரம் நம்பக் கூட முடியவில்லை..

கை நடுங்க பணத்தை வாங்கிக் கொண்டாள்..

ஆனால் அவளுக்கு எப்படித் தெரியும் மாதவன் மனநிலை..

எப்படியும் இந்த விஷயம் சுஷ்மாவுக்குப் போகும்..”ஆஹா..எவ்வளவு நல்ல புருஷன் என்று நினைப்பாளே..”

அன்று இரவு கௌதம் மாதவனைத் தேடி வந்தான்..பிள்ளைகள் நால்வரும் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்கள்..

அப்படி எல்லாம் அடிக்கடி பேச வருபவன் இல்லை கௌதம்.. எப்போதாவது சுஷ்மா இருந்தால் அவளைக் கூப்பிட, இல்லையென்றால் விளையாடும் பிள்ளைகளை சாப்பிட அழைக்க இப்படி எதாவது ஒரு காரணத்துடன் தான் வருவான்..

வந்தவன் நடையில் ஒரு தயக்கம் இருந்தது.. கண்களில் கூட தடுமாற்றம்..

“வாங்கண்ணா..உட்காருங்க..”என்று சோபாவைக் காட்டினாள் சுதா.

“சுஷ்மா வரலியாண்ணா..”

டிபன் பண்ணிகிட்டு இருக்கா..இல்லை தலைவலின்னு படுத்துகிட்டு இருக்கா..”

எதுக்கு இப்படித் தடுமாறுகிறார்..?!என்று ஆச்சரியப்பட்டபடியே தண்ணீர் கொண்டு வர உள்ளே போனாள்.

அதற்குள்..

கௌதமின் குரல் கேட்டு பாத்ரூமிற்குள் இருந்து அவசரமாக வந்த மாதவனின் கண்கள்..

சுஷ்மாவைத் தேடினாலும்..

“வாங்க ..கௌதம்.. ஏதேது எங்க ஞாபகம் எல்லாம் கூட இருக்கா..?!என்று சிரித்தபடி கேட்டு நாற்காலியை எடுத்து அருகே போட்டு அமர்ந்தான்..

“சுதாம்மா..(?!)காபி கொண்டு வா..”

“அதெல்லாம் வேண்டாங்க..இப்பத்தான் குடிச்சிட்டு வந்தேன்..”

“நம்ம வீட்ல என்ன பார்மலிட்டி கௌதம்..” என்றவன் வாய் மூடுவற்குள்..

கையில் காப்பியுடன் வந்தாள் சுதா..

மௌனமாக காப்பியைக் குடித்த கௌதம் தொண்டையைச் செருமிக் கொண்டான்.

..”மாதவ்..மாதவன்..”

குரல் எங்கோ ஈனஸ்வரத்தில் கிணற்றுக்குள் இருந்து வருவது போல் மெல்லியதாக கூனிக் குறுகி சின்னதாக தடுமாறி வந்தது.

“கேட்கிறேன்னு தயவுசெய்து தப்பா நினைச்சுராதீங்க..”

“என்ன கௌதம்.. எதுக்கு இதெல்லாம்..சொல்லுங்க..”

“வந்து.. வந்து.. ஒரு ஐயாயிரம் பணம் இருக்குமா மாதவன்..ஒண்ணாந்தேதி திருப்பித் தந்துர்ரேன்..ப்ளீஸ்..”

கேட்டபடி தலையைக் குனிந்து கொண்டான்.

ஐம்பதாயிரம் சம்பளம் வருவதாக சுஷ்மா சொல்லி இருக்கிறாள்..அவ்வளவு சம்பாதிப்பவனுக்கு பண முடையா..?!

ஆச்சரியமாக இருந்தது.. மாதவனுக்கு.. ஏன் உள்ளே நின்று கொண்டிருந்த சுதாவிற்கும் கூட..

அவன் ஆச்சரியத்தை உணர்ந்தவன் போல் சொல்லத் தொடங்கினான் கௌதம்..

“மனைவியைக் குறை சொல்றேன்னு நினைக்காதீங்க..ஆனா யார் கிட்டயாவது சொல்லலைன்னா தலை வெடிச்சிடும் போல இருக்கு..”

“சரியான ஆடம்பரப் பிரியைங்க..எப்போது பார்த்தாலும் எங்கேயாவது சுத்தணும்.நினைச்சத வாங்கிக் குவிக்கணும.. லிப்ஸ்டிக்,காஜல் ன்னு மட்டும் அவ்வளவு பிராண்டு வச்சிருப்பா..அப்பவும் என்ன புதுசா வருதோ உடனே ஓடிப்போய் வாங்கிரணும் ..புடவை, நகைகள் னு ரொம்ப ஆசைங்க..”

நானும் நம்மளை நம்பி எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவளாச்சேன்னு..ரொம்ப இடங் கொடுத்துட்டேன்..இவ்வளவு சம்பளம் வாங்கியும்..பத்தாதற்கு கடன் வாங்கி சமாளிக்க வேண்டி இருக்கு..”

பண்டிகை நெருங்கிட்டு இருக்கறதுனால யாரும் இந்த மாசம் கடன் கொடுக்க மாட்டேனுட்டாங்க..

நமக்கு இல்லைன்னாலும் பசங்களுக்காவது ..துணி…என்றவனின் குரல் கம்மி கண்ணீர் கரை கட்டியது..

ச்சே.. பணக்காரப் பெண்ணைக் காதலிச்சதுக்கு நல்லா அனுபவிக்கிறேன்..” மீண்டும்..

கசந்த குரலில்..

கேட்டுக் கொண்டிருந்த மாதவனுக்கு பகீரென்றது..பணம் கொடுக்காவிட்டால் சுஷ்மாவிற்கு விஷயம் தெரிந்தால் அவள் மதிப்பில் அவன் கீழே இறங்கி விடுவான்..

கொடுத்தாலோ பண்டிகை பட்ஜெட்டில் குறை விழும்..என்ன செய்வது..?என்று மனதிற்குள் திண்டாடியவனை உள்ளிருந்து அழைத்தாள் சுதா..

“ஒரு நிமிடம்..”என்ற படி உள்ளே போனான்.

“என்னங்க.. இந்தாங்க..பட்டுப்புடவைக்காக நீங்க கொடுத்த பணம்..இப்ப இல்லைனா மறுபடி எடுத்துக்கலாம்.. அந்தக் குழந்தைங்க ரெண்டும் ஏங்கிரக் கூடாது..”

“மன்னிச்சுக்கங்க.. உங்களைக் கேட்காமல் நானே முடிவெடுத்தற்கு ..”

என்றபடி தன் கையில் பணத்தை திணித்த சுதாவின் முகத்தையே பார்த்த மாதவனின் மனம் முதன் முறையாக சுஷ்மாவை சுதாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தது..

காலையில் கட்டிய கசங்கிய நூல் புடவையுடன் அலுத்துக் களைத்த முகத்துடன் அங்கே நின்ற அவன் மனைவியைக் கண்ட அவன் கண்களில் ..

முதன்முறையாக

“ஒரு தேவதை ” .. தெரிந்தாள்..

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...