இது தண்டனைக் காலம் சிறுகதை| முகில் தினகரன்

 இது தண்டனைக் காலம் சிறுகதை| முகில் தினகரன்

காலை பதினொரு மணி வெயில் காற்றைச் சூடாக்கி விட கோபமுற்ற காற்று தெருப் புழுதியை வாரியிறைக்க போவோர், வருவோர் முகத்திலெல்லாம் “நற…நற”வென்று சுடு மண்.

“அம்மணி…அம்மணி….”

யாரோ அழைக்கும் குரல் கேட்டு குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்த பங்கஜம் அந்த வயதான மனிதரைப் பார்த்து நெற்றியைச் சுருக்கிக் கொண்டு,

“என்னா பெருசு?….ஆரு வேணும்?” கேட்டாள். அவள் பேச்சில் ஓங்கி நிற்கும் தெனாவெட்டிற்கு அந்த ஊர் இளைஞர்; மத்தியில் ரசிகர் மன்றமே உண்டு.

“பங்கஜம்”…ங்கறது,….” நாக்கு வறண்ட பெரியவர் சப்புக் கொட்டியவாறே கேட்டார்.

“அது நாந்தேன்…என்னா வேணும்?”

அவள் அப்படிச் சொன்னதும் அந்தப் பெரியவரின் முகம் லேசாய்ப் பிரகாசமானது.

“உள்ளார போய்ப் பேசலாமா தாயீ?”

“ம்ம்ம்….” என்று இழுத்தபடி அவரை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்த பங்கஜம் “செரி..வா…” என்றாள்.

குடிசைக்குள் திரும்பி நடந்தவளின் பின்னே தள்ளாட்டமாய்ச் சென்று, உள்ளே வலப்புறச் சுவற்றைக் கைகளால் பற்றியவாறே நிதானமாய்த் தரையில் குத்துக் காலிட்டு அமர்ந்தார் அந்தப் பெரியவர்.

சில அமைதி நிமிடங்களுக்குப் பிறகு,

“ஏந் தாயீ…எங்கே…உன்ர ஆத்தா?” கேட்டார்.

“க்கும்…அது போய்ச் சேர்ந்து பொதைச்ச எடத்துல புல்லும் மண்டிப் போச்சு….” என்றவள், “அதெல்லாஞ் செரி பெருசு..நீ ஆரு?…எம்பேரைச் சொல்லிக் கேக்குறே…என்ர ஆத்தாவைக் கேக்குறே….சொந்தக்கார மனுசனா நீ?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள் பங்கஜம்.

அவளின் அந்தக் கேள்விக்கு ஒரு யோசனையுடன் மேலும் கீழுமாய்த் தலையாட்டிய பெரியவர், திடீரென்று கேவிக் கேவி அழ ஆரம்பித்தார்.

“அட..இதென்னடா வம்பாப் போச்சு?…வந்தே…உட்கார்ந்தே… “பொசுக்”குன்னு அழறே…என்னா சமாச்சாரம்? சொல்லிட்டு அழுவு…” சற்று உரக்கவே சொன்னாள் பங்கஜம்.

“சொந்தக்கார மனுசன்தான் தாயீ…உனக்கும் …உன்ர ஆத்தாளுக்கும்….ரொம்பவே நெருங்கின சொந்தக்காரன்தான் தாயீ…”

பங்கஜம் யோசனையுடன் அவரைப் பார்த்தாள்.

“என்ன தாயீ பார்க்கறே?…என்று உரக்கச் சொல்லிவிட்டு ‘ஓ” வென்று பலத்த குரலில் அழுத பெரியவர், “உன்னையும்…உன்ர ஆத்தாளையும்…இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி…அனாதைகளா நடுத் தெருவுல உட்டுட்டு ஓடிப் போன பாவி..நாந்தேன் தாயீ” என்றார் தழுதழுத்த குரலில்.

ஒரு விநாடி உள்ளுக்குள் கனன்று புறப்பட்ட ஆத்திர ஜூவாலையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்ட பங்கஜம் அவரை நேருக்கு நேர் பார்த்து “இப்ப என்னாச்சு?…திடீர்னு எங்க ஞாபகம் எப்படி வந்திச்சு?” அவள் குரல் சற்று இறுகியிருந்தது.

“வெள்ளைச் சோளமா இருந்த உன்ர ஆத்தாளையும்…வெள்ளரிப் பிஞ்சாட்டம் இருந்த உன்னையும் உட்டுப் போட்டு நாடகக்கார கழிசடையை நம்பிப் போனேன்…அந்தப் தப்புக்கு படாத கஷ்டங்களையெல்லாம் பட்டுட்டேன் தாயீ… இன்னிக்கு அந்த நாடகக்காரி…வயசாகிப் போன இந்தக் கட்டையை ஆவாத பொருளைத் தூக்கி எறியறாப்புல எறிஞ்சுட்டா! தாயீ….ஆயிரந்தான் இருந்தாலும்…“நெஜ சொந்தம்தான்…நெரந்தர சொந்தம்!”ன்னு இப்பப் புரிஞ்சுக்கிட்டேன் தாயீ…” சொல்லும் போது அவர் குரலிலிருந்த சோகம், அவரது அவல அனுபவங்களின் அளவுகோலாய்த் தெரிந்தது..

“அதான்…அங்க தொரத்தினதும் இங்க வந்துட்டியாக்கும்?” உடனே கேட்டாள் பங்கஜம்.

“ஆமாம் தாயீ!….பாவி அவ…உன்ர ஆத்தா போன சமாச்சாரத்தைக் கூட எனக்குத் தெரிவிக்காம உட்டுட்டா தாயீ”

“தெரிஞ்சிருந்தா…வந்து…வாய்க்கரிசி போட்டுட்டு வக்கனையா எழவூட்டுச் சோத்தை தின்னுட்டுப் போயிருப்பியாக்கும்,?” வெறுப்பாய்க் கேட்டாள்.

அவள் ‘வெடுக்’ கென்று அப்படிக் கேட்டு விட, பதிலேதும் பேச இயலாத பெரியவர், தலை குனிந்து மௌனத்தில் ஆழ்ந்தார்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, மெல்லத் தலையைத் தூக்கியவர், “தாயீ….சாப்பிட்டு மூணு நாளாச்சு தாயீ….வயித்துக்கு ஏதாச்சும் காட்டு தாயீ” நடுங்கும் கைகளால் பரிதாபமாய்க் கும்பிட்ட அவரை அலட்சியமாய்ப் பார்த்த பங்கஜம்,

“ம்…இப்பத்தான் ஒலை கொதிக்க ஆரம்பிச்சிருக்கு…சித்த நாழி பொறு சுடச்சுடத் தாரேன்” என்றாள்.

உட்கார்ந்த நிலையிலேயே கண்களை மூடித் தூங்கிய பெரியவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பங்கஜம்.

உலை உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருந்தது.

தோள்களை யாரோ தட்டுவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்த பெரியவர், எதிரே நின்று கொண்டிருந்த பங்கஜத்தை அண்ணாந்து பார்த்து, “ஏந் தாயீ?” என்றார்.

“சாப்பாடு ஆச்சு…திங்க வர்றியா?” கேட்டாள்.

அவர் “சரி”யெனத் தலையாட்ட அலுமினியத் தட்டில் சாதத்தைப் பரிமாறி அதன் மேல் கீரை மசியலைக் கொட்டி, “ம்ம்ம்…தின்னு…” என்றாள்.

அவர் அள்ளிப் புசித்த வேகத்தை ஒரு குரூர திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தவள், “போதுமா…இன்னுங் கொஞ்சம் கொட்டட்டுமா?” கேட்டாள்.

அவர் வாயால் சொல்லாமல் மறுபடியும் தட்டைத் தூக்கி நீட்ட,

கொட்டினாள்.

“உன்ர ஆத்தா கைப் பக்குவம் அப்பிடியே உனக்கும் வந்திருக்கு தாயீ” ஒவ்வொரு விரலாக நக்கியபடியே சொன்னார் பெரியவர்.

வயிறார உண்டு முடித்த பின் கையைத் தட்டிலேயே கழுவி விட்டு, வாயைத் துடைத்தபடி, “ஏந்தாயீ…உன்ர கிட்ட ஒரு சமாச்சாரம் கேக்குலாமா தாயீ?” மிகவும் தயங்கிபடியே கேட்டார்.

“என்ன சமாச்சாரம் கேளு…கேக்கறதுககென்ன காசா? பணமா?”

“அதில்ல தாயீ….ஊருக்குள்ளார உன்ர குடிசைக்கு வழி கேட்டப்ப…ஆளாளுக்கு ஏதேதோ சொன்னாங்களே…அதெல்லாம் நெசமா தாயீ?” கேட்டு விட்டு அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தார்.

“என்ன சொன்னானுவ?….சிறுக்கி மவனுவ?”

“ஒருத்தன்… “இந்த வயசுல உனக்கு பங்கஜா ஊடு தேவையா பெருசு?”ங்கறான்!….அதுக்கு இன்னொருத்தன் “டேய்…பெருசு…அவ ஆத்தாளோட வாடிக்கையாளுடா…அவ போனப்பறம் மகள்தாண்டா அந்த எடத்துக்கு” ங்கறான்…என்ன தாயீ இதெல்லாம்?”

“ம்…நீ என்ன நெனைச்சுக் கேக்கறியோ அதேதான்…” என்றாள் சற்றும் கூச்சமில்லாமல்,

அதைக் கேட்டதும் மௌனமாய்க் குலுங்கிக் குலுங்கி அழுத பெரியவர், “ஏந்தாயீ…இப்படியொரு பொழப்பு வேணுமா தாயீ?…இப்படி ஆத்தாளும்…புள்ளையும் ஊரறிஞ்ச வேசிகளா பொழைக்கறதைப் பாக்கவா தாயீ…இத்தினி வருசங் கழிச்சு நா வந்தேன்?” என்று கேட்க,

எரித்து விடுவது போல அவரைப் பார்த்த பங்கஜம், “யோவ்…எழுந்திரிய்யா மேல…எழுந்திரிய்யா…” என்றாள் அதிரடியாய்.

அவர் திடுக்கிட்டு நோக்க,

வேகமாய் வந்து அவர் கையைப் பற்றித் தூக்கி அவரை எழுப்பி வாசல் வரை இழுத்து வந்து வெளியெ தள்ளினாள்.

மண் தரையில் விழுந்த பெரியவர், “தாயீ…நான் என்ன கேட்டுட்டேன்?னு இப்படிக் கொதிக்கறே? நானென்ன தப்பாவாக் கேட்டுட்டேன்,?” மெல்ல எழுந்தபடியே பெரியவர் சொல்ல,

“பின்னே,…வாலிபத்துல இருக்கற பொண்டாட்டியக் கைக்குழந்தையோட உட்டுட்டு எவளோ நாடகக்காரி பின்னாடியோ போனியே…அப்ப யோசிச்சியா அவ எப்படிப் பொழைப்பாள்?னு…இந்த ஊரு அவளை உத்தமசீலியா பொழைக்க உடுமா? அதான்…அவ முந்திய உதறி விரிக்க ஆரம்பிச்சா…ஆத்தாக்காரி அப்படி இருக்கறப்போ…வயசுக்கு வந்த புள்ளை மட்டும் ஒழுக்கசீலியா இருக்க முடியுமா?…அட இருக்கத்தான் உடுவானுகளா ஊருக்காரப் பயலுவ?”

கைகளால் முகத்தை “சொத்…சொத்” தென்று அடித்துக் கொண்டு அழுத பெரியவர், “என் தப்புத்தான் தாயீ…என் தப்புத்தான்…ஒத்துக்கறேன்…அதுக்கு எனக்கு என்ன தண்டனை வேணாலுங் குடு தாயீ…ஏத்துக்கறேன்..இப்படி வசவு பேசிக் கொல்லாத தாயீ…” என்றார்.

திடீரென்று பெருங்குரலில் சிரித்த பங்கஜம் “தண்டனைதானே?…அதான் குடுத்தாச்சே” என்று சொல்ல,

பெரியவர் அவளைக் குழப்பமாய்ப் பார்த்தார்.

“இப்ப வழிச்சு வழிச்சுத் தின்னியே கீரை மசியல்?…அது என்னன்னு நெனைச்சே?…வயித்துல இருக்கற கொடலையெல்லாம் அரிச்சு…ரத்தத்தைச் சுண்ட வெச்சு…உன்னோட உசுரை இன்னுங் கொஞ்ச நேரத்துல புடுங்கப் போற விஷத் தழை!….ஏன்யா..என்ர ஆத்தாளும்…நானும்…வேசியாப் போனதுக்குக் காரணமானவன் நீ….உனக்காகத்தான் இத்தினி நாளு காத்திட்டிருந்தேன்…நீயா வந்து உனக்கான தண்டனையை… வாங்கிக்கிட்டே…. போ…போய்ச் சேரு…எங்கப்பன் வரவே இல்ல…நான் அவனைப் பார்க்கவே இல்ல…”

சொல்லிவிட்டு குடிசைக் கதவை ஓங்கிச் சாத்தியபடி உள்ளுக்குள் திரும்பினாள் பங்கஜம். மனசுக்குள் வந்து போன அவள் ஆத்தாவின் உருவம், “பங்கஜா….நீ எதைச் செஞ்சாலும் சரியாய்த்தாண்டி செய்வே” என்றது.

முற்றும்…

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...