சியாமா சாஸ்திரிகள் காலமான நாளின்று
சியாமா சாஸ்திரிகள் காலமான நாளின்று ,1827😢
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார்.🎼
திருவாரூரில் (1762) பிறந்தவர். இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா. வீட்டில் செல்லமாக ‘சியாம கிருஷ்ணா’ என்று அழைத்தனர். பின்னாளில் அதுவே நிலைத்துவிட்டது. இளம் வயதிலேயே இவருக்கு சங்கீதத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. ஆனால் தந்தை அதை விரும்பவில்லை. தாயின் ஆதரவிலும், இறைவன் அருளாலும் அவரது சங்கீதத் திறன் வளர்ந்தது.
🎼 தந்தையிடம் சமஸ்கிருதம், தெலுங்கு கற்றார். தனது தாய் மாமாவிடம் இசை பயின்றார். பின்னர் சங்கீத சுவாமி என்பவரிடம் சாஸ்திரீய சங்கீதத்தின் தத்துவங்கள், தாள, கதி, நடை பேதங்களின் கிரமங்கள் போன்ற நுட்பங்களைக் கற்றார்.
🎼 சங்கீத சுவாமி தன்னிடம் இருந்த அரிய இசைச் சுவடிகளை இவரிடம் கொடுத்து, பச்சிமிரியம் ஆதியப்பரிடம் சென்று சங்கீதம் கற்குமாறு கூறி அனுப்பிவைத்தார். பெரும் இசைஞானியான ஆதியப்பர், சங்கீதத்தின் நுட்பங்கள், ராகங்களின் தன்மைகளை வீணையில் வாசித்தும் பாடிக்காட்டியும் இவருக்கு விளக்கினார். ‘உன் வாக்கில் காமாட்சி தாண்டவம் ஆடுகிறாள்’ என்பாராம்.
🎼 சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்கு கற்ற இவர் இளமையிலேயே பாடல்கள் இயற்றத் தொடங்கினார். முதலில் சமஸ்கிருதத்திலும் பிறகு தெலுங்கிலும் இயற்றினார். தமிழிலும் சில பாடல்களை இயற்றியுள்ளார். இவரது பாடல்கள் சரணாகதி தத்துவத்தை உணர்த்துபவை. ‘தெய்வப் புலமை மிக்க வாக்கேயக்காரர்’ என்று பலரும் இவரை போற்றிக் கொண்டாடினார்கள்.
🎼 உயரமான தோற்றம் உடையவர். காதில் கடுக்கன், ஜரிகையிட்ட பஞ்சகச்ச வேட்டி, அங்கவஸ்திரத்துடன் வீதியில் கம்பீரமாக நடந்து சென்றால், ‘இதோ காமாட்சிதாசர், சங்கீத சாகித்ய கலாநிதி போகிறார்’ என்று மக்கள் மிகுந்த மரியாதையுடன் வணங்குவார்களாம்.
🎼 மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகராஜர், இவரது சமகாலத்தவர். இருவரும் சந்திக்கும்போதெல்லாம் நேரம் போவதே தெரியாமல் பாடிக்கொண்டும், இசை குறித்து பேசிக்கொண்டும் இருப்பார்களாம்.
🎼 சங்கீதத்தில் மிகவும் திறமை வாய்ந்த, அதே நேரம் ஆணவம் மிக்க பொப்பிலி கேசவய்யா என்பவர் பலரையும் போட்டிக்கு அழைத்து அவர்களை வென்று அடிமையாக்கி வந்தார். தஞ்சைக்கு வந்து சரபோஜி மன்னரிடம் தன்னை இசையில் வெல்ல யாராவது உள்ளனரா என்று சவால் விட்டார்.
🎼 அனைவரும் சியாமா சாஸ்திரியைப் பாடச் சொல்லலாம் என்றனர். போட்டி இசையில் விருப்பம் இல்லை என்றாலும் அரண்மனை சென்று பாடினார். ‘இந்த சிறுவனா எனக்குப் போட்டி?’ என்று முதலில் எக்காளமிட்ட அவர் இறுதியில் ‘காமாட்சியம்மன் அருள் பெற்ற சியாமாவே வென்றார். நான் தோற்றேன்’ என்று தோல்வியை ஒப்புக்கொண்டாராம்.
🎼 சுமார் 300 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் காமாட்சி அம்மன் பெயரில் அமைந்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் பெயரிலும் பல கிருதிகளை இயற்றியுள்ளார். அம்மன் சன்னதியில் ‘நவரத்தின மாலிகை’ என்னும் பிரசித்தி பெற்ற 9 கிருதிகளைப் பாடியுள்ளார்.
🎼 கர்னாடக இசையில் கரைகண்டு, சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகப் புகழ்பெற்ற சியாமா சாஸ்திரி 65 வயதில் (1827) மறைந்தார்.