டெல்லி இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கு:

 டெல்லி இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கு:

கும்பகோணத்தை சேர்ந்த 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை….

  டெல்லியை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கும்பகோணத்தை சேர்ந்த 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டு இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

  தஞ்சாவூர், 

     டெல்லியை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கும்ப கோணத்தை சேர்ந்த வாலிபர்கள் 4 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
   
     டெல்லியை சேர்ந்த 27 வயதான இளம்பெண்ணுக்கு கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. இதற்காக அந்த பெண் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி வந்தார்.
     திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த அவர், கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இறங்கினார். பின்னர் அவருக்கு தான் செல்ல வேண்டிய இடத்திற்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை. நள்ளிரவு 11 மணிக்கு வந்த அந்த இளம்பெண், தான் ஏற்கெனவே தங்குவதற்கு திட்டமிட்ட விடுதிக்கு செல்வதற்கு ஆட்டோ இல்லாமல் ரெயில் நிலையத்தை விட்டு காமராஜர் சாலைக்கு வந்தார்.
      அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை கையை காட்டி நிறுத்தினார். ஆட்டோ டிரைவரும் ஆட்டோவை நிறுத்தி அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டார். அந்த பெண் ஆங்கிலத்தில், தான் செல்ல வேண்டிய தெருவுக்கு செல்லுமாறு ஆட்டோ டிரைவரிடம் கூறி விட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டார்.
      ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை குறிப்பிட்ட விடுதிக்கு அழைத்துச்செல்லாமல் கும்பகோணம் புறவழிச்சாலை பகுதிக்கு அழைத்துச்சென்றார். தான் செல்ல வேண்டிய இடம் நகரின் மையப்பகுதியில் இருந்ததையும், அங்கு செல்லாமல் ஆட்டோ வேறு பகுதிக்கு செல்வதையும் அறிந்த அந்த பெண் ஆட்டோ டிரைவரிடம் ஏன் திசைமாறி செல்கிறீர்கள்? என கேட்டுக்கொண்டே தனது நண்பருக்கு போன் செய்துள்ளார்.
    அதன்பிறகும் ஆட்டோ டிரைவர் சரியான திசையில் செல்லாமல் மாற்று வழியில் சென்றதால் பயந்து போன அந்த பெண் வேறு வழியில்லாமல் ஆட்டோவில் இருந்து தனது உடைமைகளுடன் கீழே குதித்தார். இதனால் பயந்துபோன ஆட்டோ டிரைவர் அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.
    அதன்பிறகு அந்த பெண், தன்னுடைய டிராலி பேக்கை இழுத்துக்கொண்டு செட்டிமண்டபத்தில் இருந்து சாலையிலேயே நடந்து வந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரிடம் ‘லிப்ட்’ கேட்டுள்ளார். அவரும் அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார். அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் அவருடைய நண்பரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
     இருவரும் மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை நாச்சியார்கோவில் பைபாஸ் சாலைக்கு இருள் சூழ்ந்த பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அந்த இளைஞர்கள் தங்களுடைய நண்பர்கள் மேலும் இருவரை வரவழைத்து உள்ளனர்.
     அங்கு வந்த அவர்களும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வேதனை தாங்க முடியாமல் அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். உடனே அவர்கள் 4 பேரும் அந்த பெண்ணை அடித்து உதைத்ததுடன் கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் அந்த பெண் பயந்து உள்ளார்.
    அதன்பிறகு அந்த பெண்ணை நான்கு பேரில் ஒருவர் அழைத்துக்கொண்டு நாச்சியார்கோயில் மெயின் ரோட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அந்த பெண்ணும், இளைஞரும் ஏறிக்கொண்டனர். ஆட்டோவில் வரும்போது ஆட்டோ டிரைவரிடம், தான் செல்போனை மறந்து வைத்துவிட்டு வந்ததாக கூறி, ஆட்டோ டிரைவரின் செல்போனை வாங்கி அதில் தன் நண்பர்களிடம் அந்த வாலிபர் பேசி உள்ளார்.
   அப்போது அந்த பெண்ணை கும்பகோணத்தில் விட்டுவிட்டு வருகிறேன், நீங்கள் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பஸ் நிலையத்துக்கு வந்து விடுங்கள் என கூறி உள்ளார்.
    கும்பகோணம் பழைய மீன்மார்க்கெட் அருகே ஆட்டோ வந்தபோது ஆட்டோவில் இருந்து அந்த வாலிபர் மட்டும் இறங்கிக்கொண்டார். பின்னர் ஆட்டோ டிரைவர் 60 அடி சாலையில் உள்ள விடுதி ஒன்றில் அந்த பெண்ணை இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டார். இறங்கும் போது அந்த பெண், ஆட்டோவின் பதிவு எண்ணை குறித்து வைத்துக் கொண்டார்.
    விடுதியின் அறைக்கு சென்றதும் அந்த பெண்ணின் உடல் நிலை மோசமானது. மறுநாள் தனது தோழிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த பெண் கூறியுள்ளார். இந்த தகவல் வங்கி நிர்வாகத்துக்கு தெரிய வந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அவர்களும் கும்பகோணத்திற்கு விரைந்து வந்தனர்.
    இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது, தான் குறித்து வைத்திருந்த ஆட்டோவின் பதிவு எண்ணை அந்த பெண் போலீசாரிடம் கூறினார். இதனையடுத்து தாராசுரத்தை சேர்ந்த அந்த ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, தன்னிடம் செல்போனை வாங்கி ஆட்டோவில் வந்த வாலிபர் பேசியதை அவர் கூறினார். அந்த செல்போன் மூலம் பேசிய நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கினர்.
    இதில் டெல்லி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ்குமார்(வயது 26), மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் வசந்தகுமார்(23), மூப்பனார் நகரை சேர்ந்த சிவாஜி மகன் புருஷோத்தமன்(21), ஹலிமா நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் அன்பரசன்(21) என்பது தெரிய வந்தது.
 
    மேலும் அந்த பெண்ணை முதலில் ஆட்டோவில் அழைத்துச்சென்றது கும்பகோணம் திருப்பணிப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி(26) என்பதும் தெரிய வந்தது.
   இதையடுத்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் 5 பேரையும் கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த சம்பவம் நடந்து 1 ஆண்டு நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
   நீதிபதி எழிலரசி வழக்கை விசாரித்து அரசு தரப்பு சாட்சியங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். அப்போது குற்றவாளிகள் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
   இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளான தினேஷ்குமார், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசன் ஆகிய நால்வருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் இறந்த பின்பு அவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் 4 பேருக்கும் தலா ரூ.65 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
    அபராத தொகையில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் இழப்பீடு போதவில்லை என கூறினால், அரசிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவ வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.
   இதையடுத்து 5 பேருக்கும் தண்டனையின் நகல் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டதையடுத்து தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...