பிலிப்பைன்சில் எரிமலை குமுறல்:
பிலிப்பைன்சில் எரிமலை குமுறல்: 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் !!
பிலிப்பைன்ஸ் பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய நாடாகும். நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் இந்த நாட்டில், பல எரிமலைகளும் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க பெரிய எரிமலைகளில் லூசன் தீவில் உள்ள தால் எரிமலையும் ஒன்று. தலைநகர் மணிலாவில் இருந்து தெற்கே 66 கி.மீ. தொலைவில் ஏரியின் நடுவே அமைந்துள்ள அந்த எரிமலை நேற்று குமுறத் தொடங்கியது. அதில் இருந்து லார்வா குழம்புகள் வெளியேறியதால், ஏற்பட்ட கரும்புகை வானுயர எழுந்தது. அந்த எரிமலை சில மணிநேரத்தில் அல்லது சில நாட்களில் வெடித்து சிதறலாம் என்று அந்த நாடு அரசு அறிவித்து உள்ளது. மேலும் நிலநடுக்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த எரிமலையை சுற்றி அமைந்துள்ள 8 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரம் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு தெரிவித்துள்ளது. இதையொட்டி சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டது. இதனால் 240 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டார்களா? என்று கண்காணிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 1911-ம் ஆண்டு தால் எரிமலை வெடித்து சிதறியதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 1977-ம் ஆண்டு அந்த எரிமலை வெடித்தது. 43 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தால் எரிமலை வெடிக்கத் தொடங்கி இருக்கிறது.