மூன்றரை நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்..!
சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்க மூன்றரை நிமிடங்களுக்கு ஒரு ரயிலை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தீபாவளி நெருங்கிய நிலையில் வெளியூர்களில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்களையும், கூடுதல் பேருந்துகளையும் அரசு இயக்கி வருகிறது. மேலும் இன்று மாலை முதல் கூட்ட நெரிசல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மூன்றரை நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. நாள்தோறும் 2.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது 3 லட்சம் பேர் வரை மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இரு வழித்தடங்களிலும் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருவதாகவும், கூட்ட நெரிசலுக்கு ஏற்ற வகையில் அதிகபட்சமாக மூன்றரை நிமிடங்களுக்கு ஒரு ரயிலை இயக்க தயாராக இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகலுக்கு மேல் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து படிப்படியாக மெட்ரோ சேவை அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், மெட்ரோ ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறி கொண்டு சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.