2024-ல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் இடம்பெற்ற 3 இந்திய பள்ளிகள்..!
2024-ல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழ்நாடு, டெல்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த 3 பள்ளிகள் இடம்பிடித்துள்ளன.
லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த பள்ளிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. உலக அளவில் சிறந்த பங்களிப்பு மற்றும் புதுமை கற்பித்தல் உள்ளிட்டவற்றைக் கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனம் நிகழாண்டுக்கன சிறந்த தரவரிசைப் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இதில், இந்தியாவில் உள்ள 3 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பள்ளியும் அடங்கும்.
அதன்படி, தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள கல்வி இன்டர்நேஷனல் பள்ளி, டெல்லியில் உள்ள ரியான் இன்டர்நேஷனல் பள்ளி, மத்தியபிரதேசத்தில் உள்ள சிஎம் ரைஸ் (பள்ளிக் கல்விக்கான முதல்வரின் கிராமப்புற முயற்சி) வினோபா பள்ளி ஆகிய 3 பள்ளிகள் இந்த பட்டயலில் இடம்பெற்றுள்ளன. பழங்குடி பெண்கள், முறையான கல்வியைப் பெற வழிவகுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட சிஎம் ரைஸ் வினோபா பள்ளி, விளையாட்டு மற்றும் விழாக்களுடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் போன்ற புதுமையான நடை முறைகளுக்காக சிறந்த பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பொது வாக்கெடுப்பில் பட்டியலிடப்பட்ட 50 பள்ளிகளில் அதிக வாக்குகள் பெற்று, சமூக தோ்வு பிரிவில் மதுரையில் உள்ள கல்வி இன்டா்நேஷனல் பள்ளி வெற்றி பெற்றது. அதேபோல், டெல்லியில் உள்ள ரியான் பள்ளி, ஹைட்ரோபோனிக்ஸ் (நீரில் வேளாண்மை) மற்றும் உயிரி எரிவாயு ஆலைகள் போன்ற புதுமையான திட்டங்கள் மூலம் தண்ணீா் பற்றாக்குறை மற்றும் மாசுபாட்டை சமாளித்தல் போன்ற நடைமுறைகளுக்காக சிறந்த பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அா்ஜென்டினாவில் உள்ள கொலிஜியோ மரியா டி குவாடலூப் பள்ளி சமூக ஒத்துழைப்புக்கான உலகின் சிறந்த பள்ளி விருதை வென்றது.