குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி..!
வெள்ளப்பெருக்கு குறைந்து நீர் வரத்து சீரானதால் குற்றாலம் அருவிகளில் மூன்று நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அக். 22-ம்தேதி பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்துவந்தது.
குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குறிப்பிட்ட மூன்று அருவிகளிலும் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்து அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்நிலையில், மழையின் தாக்கம் குறைந்ததாலும், வெள்ளப்பெருக்கு குறைந்ததாலும் குற்றாலம் மெயின் அருவியில் மூன்று நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பணிகள் குளிக்க இன்று (அக். 27) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நீர் வரத்து சீரானதால் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.