சென்னையில் இன்று தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி தொடக்கம்..!
தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி இன்று முதல் வருகிற 13-ம் தேதி வரை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது இன்று (செப்.11) முதல் 13ஆம் தேதி வரை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மேலும் இந்த தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பிய்ஷிப் போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். இதுமட்டும் அல்லாது, ஆசிய தடகள கூட்டமைப்பு தலைவரான தாளன் ஜிமான் அல்-ஹமத் இந்த தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.
மேலும், இந்தியாவில் இருந்து 62 வீரர்களும், இலங்கையில் இருந்து 54 வீரர்களும், பாக்கிஸ்தானில் இருந்து 12 வீரர்களும், பூட்டானில் இருந்து 5 வீரர்களும், நேபாலில் இருந்து 9 வீரர்களும், பங்களாதேஷில் இருந்து 16 வீரர்களும் மற்றும் மாலத்தீவில் இருந்து 15 வீரர்கள் என தெற்காசியாவின் 7 நாடுகளில் இருந்து மொத்தம் 173 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த தடகள போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவில் இருந்து கலந்துகொள்ளும் 62 பேரில் 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆவர். அதில் வருண் ஓரி மனோகரன் மற்றும் அபிநயா ராஜ ராஜன் ஆகியோர் 100 மீ ஓட்டத்திலும்; ஹரிஹரன் கதிரவன் 110 மீ தடை தாண்டும் ஓட்டத்திலும்; ஆர்.சி.ஜித்தின் அர்ஜுனன், பிரத்திக்ஷா யமுனா மற்றும் லக்ஷன்யா.என்.எஸ் ஆகியோர் நீளம் தாண்டுதலிலும்; ரவி பிரகாஷ் மற்றும் பிரதிக்ஷா யமுனா ஆகியோர் ட்ரிபல் ஜம்ப் போட்டியிலும்; கார்த்திகேயன்.எஸ் மற்றும் கனிஷ்டா டீனா ஆகியோர் 4×400 தொடர் ஓட்டத்திலும் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், இப்போட்டிகளில் பங்கேற்கும் பிற நாட்டு வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் நிர்வாகிகள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்த சர்வதேச தடகள போட்டியானது 1995ஆம் ஆண்டிற்கு பிறகு, 29 ஆண்டுகள் கழித்து அதுவும் தமிழகத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.