ஸ்டார்லைனர் விண்கலம், பூமிக்குத் திரும்பியது..!
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை கடந்த ஜூன் மாதம் ஏற்றிச் சென்ற ஸ்டார்லைனர் விண்கலம், பூமிக்கு காலியாகத் திரும்பியது.
அமெரிக்காவின் போயிங் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபர்களை ஏற்றிச் சென்ற இரண்டாவது தனியார் நிறுவன விண்வெளி ஓடம் ஆகும். அதை முதல்முறையாக விண்ணில் செலுத்துவதாக இருந்த திட்டம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இன்னொரு நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோருடன் ஸ்டார்லைனர் விண்கலம் கடந்த ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவர்களால் திட்டமிட்டபடி அதே விண்கலம் மூலம் ஜூன் 14-ம் தேதி பூமி திரும்ப முடியவில்லை. இந்நிலையில், ஸ்டார்லைனரில் ஆள்களை அழைத்துவருவது அச்சுறுத்தல் நிறைந்தது என்பதால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதாவும் பட்ச் வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா இந்த வாரம் அறிவித்தது.
இந்நிலையில், யாரையும் ஏற்றாமல் ஸ்டார்லைனா் விண்கலம் மட்டும் தற்போது பூமி திரும்பியுள்ளது.