#கவுச்சி/கவிதை தொகுப்பு/நயினார்/புத்தக விமர்சனம்

 #கவுச்சி/கவிதை தொகுப்பு/நயினார்/புத்தக விமர்சனம்

கவிதை தொகுப்பு

#நயினார்

#கவுச்சி

கவிதை தொகுப்பு

#நயினார்

#சுவடு_வெளியீடு

128 பக்கங்கள்

விலை. ரூ 150/-

புத்தக விமர்சனம் /கருப்பு அன்பரசன்

மனிதனால்

கட்டமைக்கப்பட்ட அனைத்துமே மாறிக் கொண்டிருக்கும். பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் நாகரீகம் ஒழுக்கம்

மரபுகள் எல்லா காலத்திலும் ஒரே வரைமுறையை வைத்துக்கொண்டு இருந்ததில்லை. எல்லாமும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களால் மாற்றப்பட்டு வந்திருக்கிறது காலத்திற்கு ஏற்றவாறு மீறப்பட்டு வந்திருக்கிறது.

கவிதை சிறுகதை புதினம் கட்டுரை இப்படி மனிதனால் எழுத்து வகைமைளில் படைக்கப்பட்ட அனைத்தும் கூட அந்தந்தக் காலத்தில் இருக்கக்கூடிய மாறுதலுக்கு, படைப்பாளிகளின் சிந்தனைக்கு, வாழும் வாழ்வியலுக்கு உட்பட்டு புரிதலுக்கேற்றபடி மாறிக்கொண்டே.

கதை சொல்லும் தன்மையில் கவிதை எழுதும் வகைமையில் புதுப்புது மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள் இளம் படைப்பாளிகள்.

கதை கவிதைகளுக்கான தளங்களும் இங்கு மாறிக்கொண்டே.

தான் சொல்ல வருவது யாருக்கு போய் சேர வேண்டும் என்பதை உணர்ந்து கடத்துவதுதான் எழுத்தின் வலிமை.

நேரடியாகவும் சொல்லலாம் பூடகமாகவும் சொல்லலாம்

அது எழுதுபவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உத்தி.

எழுத்தறிவில் புலமைப் பெற்றவர்களுக்காக எலைட் பிரிவினருக்காக எழுதி தன்னுடைய மேட்டிமையை அறிவிப்பவர்களும் உண்டு. இதற்கு எதிர்மறையாக எழுதி தன்னுடைய எழுத்தை எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்கிற சமூக அக்கறையில் இருந்து எழுதுபவரும் இருக்கிறார்கள்.

கவிஞர் நயினார் அவர்களை நான் இரண்டாவது வகையாகவே பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள் கவிஞரே.

கவிதைத் தொகுப்பின்

முகப்பு அட்டையினை நோட்டமிட்டு தலைப்பை வாசிக்கும் பொழுதே

பெரும் வாசனை கொண்டு

தன் பக்கம் இழுத்துப் போடும்

மந்திர சொல்லாக கவுச்சி. நிஜம் நிறைந்த நேர்மையான அன்பு கொண்டவர்களை கவுச்சி வாசம் மிக்கவர்களாக அத்தர் பூசி இருக்கும் மனிதர்களால் பார்க்கப்படுகிறார்கள்.

கவுச்சி ஒவ்வாமையில் பலர் நாத்தமெடுக்கும் செயற்கை சுகந்ததோடு சுற்றி அலைகிறார்கள்.

நயினாரின் வார்த்தைகள்

அன்பை சுமந்த வரிகளாக தொகுப்பிற்குள் எங்கும். சமூகம் முழுவதிலும் நிறைந்து கிடக்கும் அவலங்களுக்கும் அவமதிப்புகளுக்கும் வன்மங்களுக்கும் இடையில்

கவிஞர் பார்த்த, அனுபவித்த, கேட்டறிந்த செய்திகளையே கவிதைகளாக்கி தொகுப்பாக கொடுத்திருக்கிறார். மனித மாண்புகள் கொண்ட பலதை நாம் கண்டு கடந்து மறந்து போயிருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் பேசிடும் சொற்களை அடுக்கி அர்த்தம் கொண்ட வரிகளாக்கி தொகுப்பை கொடுத்திருக்கிறார். கவிஞரின் வலி மிகுந்த, துயரம் பேசும், எள்ளல் கொண்டிருக்கும் வார்த்தைகள் வாசிப்பவர்களின் நினைவுக்குள் புகுந்து சிந்தனைகளை கீறி விடும்.

வார்த்தைகளுக்குள் நிறைய வலிகளை, நிறைய அன்பினை கொடுத்து இருக்கிறார் கவிஞர்.

அவரின் கவிதைகள் குறித்து நிறைய விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடியும் ஆனாலும் என் அனுபவத்திலிருந்து அவர் எழுதிய பல கவிதைகளுக்குள் ஒரு சில கவிதைகளை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

பூனை குட்டி தன் பசியினை

மென்மையான ரோமங்கள் போர்த்தியிருக்கும் தன் உடலை வாஞ்சையோடு நம் காலில் உரசி மியாவ் என தலை நிமிர்த்திப்பார்க்கும் பசியை தன் கண்களில் சொல்லி. வளர்ப்பு நாயிலிருந்து வீதியில் அலையும் நாய் வரை நம்மை தன் விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டே கொண்டே இருக்கும் எனக்கும் பசிக்குது என்பதை வாலைக் குழைத்தாட்டி.

கன்று குட்டி கத்துவதை பசு மாடும்;

பசுமாட்டின் அழைப்பை வளர்ப்பவர்களும்.. காளையொன்றின் குரலை உள்ளங்கை கருப்பேற மோழி பிடித்தவனும் அறிவான் அதனதன் சப்தங்கள் பேசும் பசியின் வேண்டுதலை.

குழைந்த பால் சோறுகாய் பூனையும்,

மொறுமொறு பொறை

ஒன்றுக்காக நாயும்.. பால் சொட்டும் காம்பின் சுவை வேண்டிய கண்ணுக் குட்டியும்.. வாசம் வீசும் கழுநீர் பானையின் கலவை நீருக்கு சப்தமிடும்

காறாம் பாசுவும்.. மல்லாட்ட புண்ணாக்கும் தவுடும் கலந்திருக்கும் தொட்டி தண்ணி வேண்டி அழைத்த காளையும் தங்களின் குரலாலும் கண்களாலும்; குழைதாடும் வால் நுனியாலும் பசியினை சொல்லிவிடும் மனிதர்களுக்கு.

மனிதர்கள் மட்டுமே பசியை விற்று

பொருளீட்டும் பெருங்கொடுமையில்.

உழைக்கும் மனிதர்கள் உழைப்பை விற்று நேர்மையுள்ள வாழ்வினை கொண்டு அறத்தை நேசிக்கிறார்கள். இன்னல்கள் பல மனதினை சிதைத்த போதும் அன்பினை கொண்டாடி எல்லோருக்குமான வாழ்வினை வாழ்கிறார்கள். அவர்களுக்கு நேர் எதிராக அறிவை விற்று, கள்ளத்தை விற்று, வன்மத்தை விற்று, அன்பை விற்று பொருளீட்டி வாழும் மனிதர்களும் நம் கண்களுக்கு வளர்ந்தோங்கி தெரிகிறார்கள். எலும்பை மூடி இருக்கும் சதை பிண்டங்களாக எதிரில்.

உறவுகளோடு வாழ்ந்த மனிதன்; இந்த மண்ணிற்கு உறவுகளை கொடுத்த மனிதன், கெடும் காலம் ஒன்றிலே தான் சார்ந்த எல்லோரும் தன்னை உதறி விட

வீதி ஒன்றிலோ அல்லது தள்ளுவண்டி உணவுக் கடையின் அருகிலோ கூனிக்குறுகி நிற்பது பெரும் துயர் பொருந்திய கொடுமையாகும்.

வந்து போகும் பலரிடம் இரு கை கூப்பி தன் பசியினை விற்கு முயலும் அந்த வயது முதிர்ந்தவர் பார்ப்பவர் மனதிற்கு ஒவ்வாமை கொண்டவராக அவர் உடுத்தியிருக்கும் கிழிந்த உடுப்பு நிகழ்த்தியிருக்கும். அப்படியானவர் நம்மை நெருங்கி வரும் பொழுது பல நேரங்களில் தொந்தரவாக கூட உணர்ந்திருப்போம். எந்தப் பொழுதிலும் அவர் நிலையில் நம்மை நிறுத்தி; நம் உறவுகளை நிறுத்தி சிறிதளவும் யோசித்து இருக்க மாட்டோம். அப்படி மனதில் இருந்து யோசிக்கத் தொடங்கிவிட்டால் ஆகப்பெரிய துயரினை நமக்குள் நிகழ்த்திவிட்டு கண்களுக்குள்ளேயே நின்று கொண்டிருக்கும் பசியினை விற்க முயலும் வலி தரும் அந்தக் காட்சி.

அந்தப் பெரியவர் தம் பசியினை கொள்வார் இன்றி தொடர்ந்து கையேந்தி தவிக்கும் கணமதில் அவரின் கண்களும் மனமும் ஆர்ப்பரித்து அழுதிருக்கும் தான் வாழ்ந்த காலம் நினைத்து. இப்படியான எவரும் சுயமாக பூமியைப் பிளந்து வெளி வந்தது கிடையாது. எல்லாவிதமான உறவுகளையும் பார்த்து கண்டு மகிழ்ந்து அழுது வாழ்வின் கடைசி பொழுதுகளில் இப்படி ஆகி இருப்பார் அல்லது ஆக்கப்பட்டிருப்பார். நல் மனிதர் ஒருவர் அவரின் நிலைகண்டு பசியினை வாங்கிடும் பொழுது சக்தியற்றுக் கிடக்கும் அவரின் சுருங்கிய வயிறு கொண்டாட்டத்தில் கூத்தாடும். உமிழ்நீர் இல்லை என்றாலும் தொண்டைக்குழி ஏறி இறங்கும். இப்படியான பொழுதுகளூடாகவே தன் இறப்பு வரை வயிறு பசிக்கும் ஒவ்வொரு

வேளைகளிலும் செத்து செத்து உயிர் வாழ்வார். முதியவரின் மரணம் பலருமே அறியாமல் மண்மீது எங்கேயாவது நடந்து முடிந்திருக்கும்.

வழக்கம் போல் ஒரு நாள் மாலை ஆறு மணி அளவில் என்னுடைய மூத்த மகன் பாரதியை அழைத்துக் கொண்டு கேகே நகர் காமராஜர் சாலை முருகன் தேநீர் கடைக்கு வந்திருநதேன். அவனை தினமும் அழைத்துக் கொண்டு வருவதற்காகவே மாலை வேலைகளில் வீட்டிற்கு வந்த பிறகு என்னுடைய வேலையை நான் திட்டமிட்டுக் கொள்வேன். மக்கள் நடமாட்டம் மிகுந்த மாலை வேளையில் மகனை அழைத்துக் கொண்டு வெளியில் வருவது அவனுடைய மனதை இலகுவாக வைத்துக் கொள்ளும். 32 வயது குழந்தையான அவனுக்கு அங்கு நண்பர்கள் எப்பொழுதும் இருப்பார்கள். வயதில் மூத்த மனிதர்களும் அவனோடு அவன் பேசும் மொழியிலேயே உரையாடுவார்கள் அவன் பேசுவதை புரிந்து கொண்டு. இதற்காகவே இரவு நேரம் என்றாலும்கூட மகனை அழைத்துக் கொண்டு அந்தக் கடைக்கு வந்து விடுவேன். இது என்னுடைய அன்றாட வேலைகளில் ஒரு கடமையாகும். அன்பு கொண்டு மனிதர்கள் அங்கு அவனோடு உரையாடி எப்பொழுதும் சிரிக்க வைத்து ரசிப்பார்கள் அவனை. பாரதியும் எல்லாவற்றையும் மறந்து அவர்களோடு உரையாடுவான் அவன் அறிந்த மொழியில். இப்படியான மகிழ்ச்சிக்காகவே ஒவ்வொரு நாளும் குடியிருப்பின் நுழைவாயிலில் எனக்காகவே காத்துக் கொண்டிருப்பான். குறித்து நேரத்திற்குள் நான் அங்கு வந்து சேரவில்லை என்றால் மனதில் கொஞ்சம் வருத்தத்தோடு வீட்டுக்கு சென்று விடுவான். காலதாமதமாக நான் வீட்டிற்கு சென்று அவனை பார்த்தால் கொஞ்சம் கோபம் இருக்கும் ஆனால் நிறைய மகிழ்ச்சி இருக்கும் அவனுக்குள். தேநீர் கடைக்கு புறப்பட அவனாகவே தயாராகி விடுவான் விரைந்து.

மாலை வேளையில் முருகன் தேநீர் கடையில் சூடான வெங்காய போண்டாவும் மிளகா, வாழக்கா பஜ்ஜியும் அதனோடு கொடுக்கக்கூடிய காரச்சட்னியும் பலரும் விரும்பி உண்ணும் பலகாரம் அந்த கடையில். அருகிலேயே வேளாங்கண்ணி சர்ச் அதற்கு அருகில் பள்ளிக்கூடம். திரைப்பட துணை இயக்குநர்கள் பலர் சந்தித்து ஆங்காங்கே நின்று கலந்துரையாடல் நடைபெறும் இடமாக முருகன் தேநீர் கடை. மக்கள் திரள் எப்பொழுதும் நிறைந்து இருக்கக்கூடிய கடை அது.

அப்படித்தான் ஒரு நாளில் கடைக்கார தம்பி கொண்டு வந்து கொடுத்த தேநீரை குடித்துக் கொண்டு நின்றிருக்கிறோம் நானும் பாரதியும். தேனீர் குடித்துக் கொண்டே பாரதி அவனுடைய வலக்கை பக்கம் இருக்கும் என்னை பார்க்கிறான்

தேநீர் குடிக்கிறான்.. என்னை பார்க்கிறான் தேநீர் குடிக்கிறான்.. இது வழக்கமான பார்வையல்ல என்பதை நான் அறிகிறேன். எனக்கு பின்னால் ஏதோ நடக்கிறது என்பதை நான் உணர முடிந்தது. பின்னால் திரும்பி பார்க்கிறேன். அழுக்கேறிய சட்டை, முகம் முழுவதும் தாடி, கிழிந்த லுங்கி

காய்ந்து நரைத்துப் போன தலை முடியோடு அந்த முதியவர். அருகில் இருக்கும் நபர் ஒருவரிடம் கையேந்தி கொண்டிருந்தார். சாப்பிட ஏதாவது வாங்கி கொடுங்கள் என கைகளாலும் பார்வையாலும் வேண்டி நிற்கிறார்.

அந்த வீதி முழுவதிலும் நிறைய டீக்கடை இருக்கிறது எத்தனை டீக்கடை வாசலில் அவர் நின்று இப்படி கேட்டிருப்பார் எனத் தெரியவில்லை. முதியவர் இங்கே வயிற்று பசிக்காக ஒருவரிடம் கையேந்தி நிற்கும் போது தான் தெரிந்தது எந்த கடையிலும் அவருக்கு டீ கூட வாங்கிக் கொடுக்க எவருமே இல்லை என்பது. இங்கேயும் அவர் கெஞ்சிக் கொண்டிருந்தார் ஒருவரிடம். இதைப் பார்த்துதான் பாரதி டீ குடித்துக்கொண்டே என்னை பலமுறை பார்த்ததை நான் உணர்ந்தேன். அவனிடம் கேட்டேன் ‘அவருக்கு டீ வாங்கி கொடுக்கணுமாடானு”, அவன் வேகமாக “ஆமாம்” என்று தலையாட்டினான். அவரை அழைத்து டீயும் அவருக்கு விருப்பப்பட்ட பலகாரத்தையும் வாங்கி கொடுத்தேன் அன்று பாரதி கவனித்து சொல்லியதால். சாப்பிட்டுக் கொண்டே பாரதியோடு அவர் பேச ஆரம்பித்து விட்டார். பாரதி அவரோடு பேசுவதற்கு கொஞ்சம் தயங்கினான். வீட்டுக்கு கிளம்பி வரும் பொழுது அவருக்கு கை அசைத்து விட்டு வந்தான். அவரும் நாங்கள் இருவரும் அங்கு இருக்கும் வரை அங்கேயே நின்று கொண்டு இருந்தார். அவர் கண்களில் சந்தோஷத்தை பார்த்தோம்.

அன்று தொடங்கிய அந்த சந்திப்பு அடிக்கடி அந்த தேநீர் கடைகளில் நிகழ ஆரம்பித்தது. குறிப்பிட்ட நேரத்தில் நான் அங்கு செல்லும் பொழுது அவர் இருப்பார் அவருக்கும் சேர்த்தே ஆர்டர் சொல்லி நாங்கள் தேநீர் வெங்காய போண்டா சாப்பிட ஆரம்பித்தோம்..

கொஞ்ச நாள் தான் அவரோடு நாங்கள் பயணப்பட்டு இருந்தோம். அவர் இல்லாத நாட்களில் பாரதியும் சுற்று மற்றும் பார்ப்பான் எங்கேயாவது கண்களில் அந்தப் பெரியவர் என்று.

இப்படியான அந்த முதியவர் கடந்த ஆறு மாதங்களாக அங்கு வருவது கிடையாது.

இப்பொழுதும் தேடிக் கொண்டே இருக்கிறோம் ஒவ்வொரு நாளும் நானும் என்னுடைய மகனும். காலம் எதையும் நிகழ்த்தி சென்று இருக்கலாம். எல்லோர் வாழ்க்கையிலும் நிகழ்த்திக் கொண்டிருப்பது போல் அவர் வாழ்க்கையிலும் நிகழ்த்தி போய் இருக்கலாம்.

அடுத்த நொடி என்னவாக போகிறோம். யாருக்கு எதை வைத்து எதை கொண்டு போகப் போகிறோம் என்கிற எண்ணமே இல்லாத பாரதியைப் போன்றவர்கள் தான் இந்த சமூகத்திற்கு நிறைய தேவைப்படுகிறார்கள். குழந்தை மனது கொண்ட அவனுக்கு எவரும் சொல்லிக் கொடுக்கவில்லை பசியின் வலியை. எதிரில் இருப்பவரின் செய்கையால் அவரின் பசியை இவனால் உணர முடிந்திருக்கிறது என்பது எனக்கு நிறைய மகிழ்வை கொடுத்தது. அன்று முதல் தேநீர் கடைக்கு செல்லும் பொழுது அருகில் யாராவது நம்மை உற்று நோக்குகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்கிறேன். முடிந்தவரை இப்படியானவர்கள் யாராவது இருந்தால் குறைந்த பட்சம் ஏதேனும் ஒன்று அவருக்கு செய்து விட வேண்டும் என்கிற எண்ணத்தை பாரதி எனக்குள் உருவாக்கி விட்டான். அப்படியானவர்களுக்கு நாம் தான் அன்பானவர்கள். அவர் இருக்கும் காலத்தில் அவருக்கு உயிரானவர்கள்.

நையினார் எழுதிய கவுச்சி கவிதை தொகுப்புக்குள்

#அவர் என்கிற கவிதையில்

//கைநீட்டி தன் பசியை வாங்கிக் கொள்ள கேட்டார்

அந்த முதியவர்

எவரும் வாங்காமலே

முகத்தை திருப்பிக் கொண்டார்கள்//

எளிய வார்த்தைகள் தான்..

ஆனால் உயிர் நரம்பை அறுத்து போடும் வலி கொண்டதாக கவிதை.

அந்தக் கவிதையின் முடிவில் வரக்கூடிய நான்கு வரிகள் பெரும் வலி சுமந்து இருந்ததாக தெரிந்தது எனக்கு..

அவர் கவிதைகளை வசித்தால் உங்களுக்கும் நிறைய நிறைய சம்பவங்கள் நினைவுக்கு வரலாம்

எனக்கு வந்ததைப் போன்று.

அன்பு எனும் போதை

பெருந்தொற்றாகமல் இருக்க

மௌனமாகி நிற்கும் வேளையில்..

மௌன அஞ்சலி செலுத்தி விடுகிறார்கள்

எதிரில் இருப்பவர்கள்.

#அன்பு

கவிதையின் உள்ளடக்கம் மேலே சொன்னவை தான்.

அன்பு எல்லாவற்றையும் கொடுக்கிறது

நல்லவர்களை பண்பானவர்களை

மாண்புக்குரியவர்களை

போற்றத்தக்கவர்களை

அன்பு அடையாளம் காட்டிச் செல்கிறது.

வஞ்சகர்களை வன்மம் கொண்டவர்களை வியாபாரிகளை இப்படி நிறைய..

#அன்பு என்கிற கவிதையில் அர்த்தங்களோடு பேசியிருக்கிறார் கவிஞர்.

#தாய்பசு கவிதை

அன்பின் வழி நின்று ஏமாற்றும் பண்பாளர்கள் பலர் வந்து போவார்கள்..

இறந்து போன தன் கன்றின் தோலுக்குள் வைக்கோலை நிறைத்து

காம்பிலிருந்து பாலை உறிஞ்சும்

நல்ல மனிதர்களில் நோக்கத்தை பசு நன்றாகவே அறியும். ஆனாலும் சக்தி மிகுந்த பாலை கரப்பவனின் தேவை உள்ளவரை கொடுத்துக்கொண்டே இருக்கும் நினைவுகளில் இருக்கும் தன் கன்றினை நினைத்தபடி.

ஏமாந்தவர்கள் மனிதர்கள் தான்.

அன்பின் சுகம் காண நேரத்திற்கான முகமூடிகளோடு பார்க்கும் பலவிடங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அன்பை விற்பவர்கள் இப்படி கன்று குட்டியின் தோலுக்குள் வைகோலை நிறைத்தபடி.

//ஒற்றைச் சொல் தான்

ஓராயிரம் செல்களைத்

தட்டி எழுப்பி கட்டிக் கொள்ளும்

மந்திரம் கொண்டது//

சாப்பிட்டாயா என்கிற ஒற்றை வார்த்தையில்

நிறைந்து இருக்கும் ஆதரவு அன்பு பிரியம் நேசம்..

#சாப்பிட்டாயா என்கிற கவிதையில் எல்லோரும் அறிந்த தெரிந்த

எந்த ஜாலமும் இன்றி

வார்த்தைகளை நேசத்துடன் வாசகருக்கு பரிமாறி இருக்கிறார் கவிஞர்.

#இருட்டு என்கிற கவிதைக்குள்

மகனை இழந்த பெற்றோர்கள்

கவிதைகளாகப் பேசிடும்

கண் தெரியாத மனிதன்

விரல் பிடித்து அழைத்து வரும் நண்பர்,

கார் ஓட்டுநர்

இவர்களின் உரையாடலுக்குள்

தெறித்து விழுகிறது நம் மீது வெளிச்சம்.

128 பக்கங்களுக்குள்

நிறைய மனிதர்களை வாசிப்பவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் கவிஞர். கவிதையில் நாம் கண்டறியும் பலர் நம்மோடு பழகி இருக்கிறார்கள்.. பேசியிருக்கிறார்கள். வெகு சிலரை தூரத்தில் இருந்தும்

அருகில் இருந்தும் சந்தித்திருக்கிறோம். பல நேரங்களில் அவர்களிடம் பேசாமல் கடந்து போய் இருக்கிறோம். கவிதை தொகுப்பிற்குள் சமூக அவலங்களையும் சீண்டிப் பார்த்திருக்கிறார் நையாண்டி வார்த்தைகளால்.

வடிவான முறையில் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் சுவடு நிறுவனத்தார்.

கவிஞருக்கும் புத்தக வெளியீட்டாளருக்கும் என்னுடைய அன்புகள்.

கருப்பு அன்பரசன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...