அலைகள் பாடும்பெயர் வ.உ.சி/.*பிருந்தா சாரதி

 அலைகள் பாடும்பெயர் வ.உ.சி/.*பிருந்தா சாரதி

அலைகள் பாடும்
பெயர் வ.உ.சி.
*
பிருந்தா சாரதி
*
நிலம் மட்டும் அல்ல
நீரும் எமது உரிமை எனக் கடலிலும் நீங்கள்
சுதந்திரக் கொடி பறக்கவிட்டீர்கள்.

கப்பல் ஓட்டிய
உங்கள் கம்பீரம் இன்னும் பட்டொளி வீசிப் பறக்கிறது பாரெங்கும்.

நீதிமன்றத்தில் மட்டும்
வழக்காடி வாழ்ந்திருந்தால்
கப்பல் கப்பலாய் நீங்கள்
பொருள் ஈட்டியிருக்கலாம்.

மக்கள் மன்றம் வந்து
உரிமைக் குரல் கொடுத்ததால்
நீதிமன்றம் கொண்டுபோய்
நிறுத்தினார்கள் உங்களை.

ஆம்…
வழக்கறிஞராகப் போகவேண்டிய நீதிமன்றத்துக்குக்
குற்றவாளியாகக் கொண்டு போய் நிறுத்தியது காலம்.

கண்ணை மூடிக்கொண்டு
தண்டனையும் கொடுத்தாள்
அன்று கோலோச்சிய
ஆங்கில நீதி தேவதை…

நீதி தேவதையா?
அநீதி தேவதையான அவள் வழங்கியதோ இரட்டைத் தீவாந்திரம்.

அத்தோடு மூழ்கியது
உன் வாழ்க்கைக் கப்பல்.

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்
என்பதால்
கப்பலில் வந்த வெள்ளையனைக் கப்பலோட்டியே
கப்பலேற்றலாம் என நீங்கள் நினைத்தீர்கள்.

சட்டம் படித்த உங்கள் நெஞ்சில் இருந்தது நீதி
அதனால் உங்கள்
முள் கூட த்
தராசு முள்ளாகத்தான் இருந்தது.

வணிகம் செய்ய வந்து ஆட்சியைப் பிடித்த
வெள்ளையன் வைத்திருந்ததோ
விஷம் தடவிய முள்.

ஆயுள் தண்டனை விதித்து
சிறையில் அடைத்து
உங்கள் சிறகுகளைப் பிய்த்து எறிந்தது
ஆங்கில ஏகாதிபத்தியம்.

செக்கிழுத்து செக்கிழுத்து
சிறையிலேயே
சிதைந்து போனீர்கள்.

விடுதலை அடைந்து வெளியே வந்ததும்
உங்கள் துடுப்புகளையும்
உடைத்துப் போட்டது
எமது அலட்சியம்.

ஏற்கனவே உடல் தேய்ந்திருந்த நீங்கள்
உள்ளமும்
ஓய்ந்து போனீர்கள்.

அடியோடு வீழ்ந்துபோனது
அரசோடு போட்டி போட்ட உங்கள்
அகண்ட பொருளாதாரம்.

அன்றாட வாழ்க்கைக்கே
தள்ளாடும் நிலைக்குப் போனது
உங்கள் வாழ்வாதாரம்.

பின் உயிர் வாழ்ந்த நாளெல்லாம்
கொடும் வெயிலானது
கடன்காரர்கள் பட்டியலே
உங்கள் உயிலானது.

கடிதம் எழுதி எழுதியே காலாவதி ஆனதுங்கள் காலம்.

கணக்குப் பார்த்தா
தீர்க்க முடியும் உங்கள் தியாகத்தை?

கடலில் கரைத்த பெருங்காயமானது உங்கள் தியாகம்
கண்ணீராலும் ஆறாத பெருங்காயமானது
எங்கள் இயலாமை.

காந்தி கணக்கானது உங்கள் வாழ்வு.

மன்னிக்கச் சொல்லி
உங்கள் முன் மன்றாடுவதன்றி
வேறொன்றும் தோன்றவில்லை எனக்கு.

இவ்வளவு நெருக்கடிகளுக்கிடையே எப்படி உங்களுக்குள்
அப்படி ஒரு இலக்கிய தாகம்?

கடலையே குடித்துவிடுவதுபோல் எழுதித் தள்ளியிருக்கிறீர்கள்?

பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தீர்கள்
ஆங்கில நூல்களை மொழிபெயர்த்தீர்கள்
செய்யுள் எழுதினீர்கள்
உரை எழுதினீர்கள்
அறையிலும் எழுதினீர்கள்
சிறையிலும் எழுதினீர்கள்.

எங்கள் பாரதியின் தோழனே
உங்களை எழுதாமல் இன்று நான்
வேறு யாரை எழுதி
என்ன பயன்?

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கே
ஒன்றை மட்டும் யாரும் மறைக்கமுடியாது.

எங்கே எப்போது கப்பலைப் பார்த்தாலும்
உங்கள் ஞாபகம் தான்
எங்கள் நெஞ்சில் எழும்.

ஏனெனில்
தேசத்தின் முதல் சுதந்திரக் கப்பல் உங்களுடையதல்லவா?
அதில் பட்டொளி வீசிப் பறந்தது
இந்த மண்ணின் மானம் அல்லவா?

அதிகாரத்துக்கு அஞ்சாமல்
நெஞ்சு நிமிர்த்திய
வீரனே
சட்டத்தால் போராடிய சூரனே

சதிகாரத்தால் நீ வீழ்ந்திருந்தாலும்
இந்திய
விடுதலை வரலாற்றில்
என்றென்றும் ஒளிவீசும் அத்தியாயம்
உங்கள் சரித்திரம்.

உங்கள் வாழ்க்கையை விடவா உலகில்
ஒரு சத்திய சோதனை?

காலக் கடலில்
கரைந்து போகும்
எத்தனையோ
மனித வாழ்க்கையில் ஒன்றா உங்களுடையது?

என்றென்றும்
கரையாமல் வாழும்
சரித்திர கம்பீரம்
உங்களுடையது.

இந்தியப் பெருங்கடல்
அலைகள்
உங்கள் பெயரை
ஓயாமல்
பாடிக்கொண்டே இருக்கும்.

எங்கள் நெஞ்சின் அலைகளும்…
*
செப்டம்பர் 5 வ.உ.சி. பிறந்தநாள்
*

VOC #kappalottiyathamizhan #vavuci

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...