விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை

 விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை

1.சோள ரவை கொழுக்கட்டை


தேவையான பொருட்கள்: –
மக்காசோள ரவை ‌‌ – 1கப்
கடுகு -1 ஸ்பூன்
கடலைப் பருப்பு -1ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை. – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – அரை கப்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: –

கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும். (இந்த ரவை வேக, தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்ளும்) இதில், பெருங்காயத்தைத் தண்ணீரில் கரைத்து ஊற்றி, தேங்காய்த் துருவல், உப்பு போட்டு தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் ரவையைப் போட்டு அடுப்பை `சிம்’மில் வைக்கவும். அடிக்கடி திறந்து கிளறிவிடவும். மாவு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும், இறக்கி ஆறவைக்கவும். ஆறிய மாவு, பிடிக்கும் பதத்தில் வந்ததும், கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடங்கள்வைத்துஎடுத்தால் சுவையான கொழுக்கட்டை தயார்.

2.சீரகக் கொழுக்கட்டை


தேவையானவை:-
புழுங்கல் அரிசி மாவு -1கப்
கொழுக்கட்டை மாவு -1 கப்
இடியாப்ப மாவு – 1 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – 1/3 டீஸ்பூன்

வெங்காயம் – பொடியாக நறுக்கியது -1
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
வெந்நீர் – தேவையான அளவு.

செய்முறை:-

சீரகம், வெங்காயம், தேங்காய், உப்பை மாவில் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசையவும்.
விரலால் கிள்ளி சீடை அளவு எடுத்து உருட்டி தண்ணீரைக் கொதிக்க வைத்து கொழுக்கட்டைகளைப் போடவும்.10 நிமிடம் வேக விடவும். 5 நிமிடம் வெந்தபின்பே கரண்டியால் கிளறி விடவும். ( போட்ட உடன் கிளறினால் மாவு வெந்நீரில் கரைந்து விடும்.)
10 நிமிடம் கழித்து வடித்து எடுத்தால் சுவையான சீரக கொழுக்கட்டை தயார்.

3.பனீர் கொழுக்கட்டை


தேவையான பொருட்கள் –
அரிசி மாவு -2கப்
தண்ணீர். – 2 கப்
உப்பு – ஒரு சிட்டிகை
நல்லெண்ணை -2 ஸ்பூன்

செய்முறை :-
ஒரு அடிகனமான பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்கும்பொழுது உப்பு, எண்ணை விட்டுமாவைக்கொட்டிகிளறவும்.
அடுப்பைலேசானதீயில்வைக்கவும்.
மாவின் நிறம் மாறி கையில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கி விடவும்.பிறகு ஒரு வெள்ளைத் துணியை நனைத்துப் பிழிந்து மாவின் மேல் மூடி வைக்கவும். மாவு காயாமல் இருக்கும்.

செய்முறை:-
தேவையான பொருட்கள் – பனீர் உளுந்து பூரணம் :

வெள்ளை உளுந்து – 1 டம்ளர் (1/2 மணி நேரம் ஊறவைக்கவும்)
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கடுகு -1/2ஸ்பூன்
தேங்காய் துருவல். – 5 ஸ்பூன்
துறுவிய பனீர் – 1 ஸ்பூன்
நல்லெண்ணை – 2 ஸ்பூன்

செய்முறை :-
உ.பருப்பு, ப.மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சியில் கொஞ்சம் கரகரப்பாக
தண்ணீர் விடாமல் தெளித்து அரைக்கவும்.
பிறகு அதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக விடவும்.
பிறகு ஆற வைத்து கையால் உதிர்த்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு போட்டு பொரிந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள உளுந்து கலவை மற்றும் துறுவிய பனீரை போட்டு தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி எடுக்கவும்.
இது பனீர் உளுந்து பூரணம்.

கொழுக்கட்டை செய்முறை :-
சிறிது மாவை எடுத்து நன்றாக பிசைந்துஉருட்டிசொப்புபோல்செய்யவும்.அதனுள் பூரணத்தை வைத்து மூடி ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சத்தான சுவையான பனீர் கொழுக்கட்டை தயார்.

4.*பால் கொழுக்கட்டை *


தேவையானவை:-
பச்சரிசி மாவு – 1 கப்
வெல்லம் – 1/2 கப்
பால் – 1/2 கப்
ஏலக்காய் – 3
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

பச்சரிசி மாவில் ஒரு தேக்கரண்டியளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து அதில் நன்றாக கொதிக்கவைத்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.பச்சரிசி மாவை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி கொதிக்கும் நீரில் போடவும்.

தண்ணீர் கொதிக்கும் முன்பு உருண்டைகளை போட்டால் கரைந்து விடும் உருண்டைகள் நன்றாக வெந்ததும் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி ஊற்றவும்.

இதில் பால் சேர்த்து நன்கு கலக்கி விட்டு
ஏலக்காய் தட்டி போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்.

5.சிவப்பு அரிசி காரக் கொழுக்கட்டை


தேவையானவை:-
வறுத்த சிவப்பு அரிசி மாவு – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2தேக்கரண்டி
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1/2டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்

செய்முறை:-

பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாத்திரத்தில் சிவப்பு அரிசி மாவுடன் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஊறவைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து மாவுடன் கலக்கவும். மாவு கலவையுடன் வெதுவெதுப்பான நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

6.ஜவ்வரிசிக் கொழுக்கட்டை


தேவையானவை:-
மாவு ஜவ்வரிசி – 1கப்
அரிசி மாவு – 1டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
உப்பு – 2 சிட்டிகை
பூரணம் செய்யத்தேவையானவை
தேங்காய்த் துருவல் – 1 கப்
ஏலக்காய்த்தூள் – 2 பொடித்தது
சர்க்கரை – கால் கப்

செய்முறை:-

மாவு ஜவ்வரிசியைச் சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீரை வடிக்கவும். அதனுடன் ஜவ்வரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். பூரணம் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக்கொள்ளவும். ஜவ்வரிசி மாவைச் சிறிய கிண்ணங்களாகச் செய்து, நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி பூரணம் வெளியே வராதவாறு உருட்டவும். பின்னர் கொழுக்கட்டைகளை ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்.

விநாயகர் தனக்குப் பிடித்தமான மோதகத்தை ஒரு கையில் வைத்திருப்பார். மோதகத்துக்குள் இருப்பது இனிப்பான பூரணம். மோதகம், ஆவியில் வேகவைக்கப்படுவதால் அனைத்து வயதினருக்கும் உகந்த சுவை உணவாக வரவேற்கப்படுகிறது

தேவையான பொருள்கள்:-

அரிசி மாவு – அரை கப்

உப்பு – 2 சிட்டிகை

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

பூரணம் செய்யவதற்கு:-

தேங்காய்த் துருவல் – கால் கப்

வெல்லத்தூள் – கால் கப்

நெய் – ஒரு ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை:-

தண்ணீரை நன்கு கொதிக்கவைக்கவும். இடியாப்ப மாவு (அ) அரிசி மாவுடன் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெந்நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

வாணலியில் நெய்விட்டு சூடாக்கி தேங்காய்த் துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துச் சுருள கிளறி இறக்கவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாக்கவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை மோதக அச்சில் வைத்து அழுத்தவும். அதன் நடுவில் தேங்காய்த்துருவல் வெல்லப் பூரணத்தை வைத்து மாவால் மூடவும்.
(மோதகத்தை நன்றாக மூடவில்லையென்றால் வேகும்போது பூரணம் வெளியே வந்துவிடும்). பிறகு மோதகங்களை இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான இனிப்பு பூரண கொழுக்கட்டை தயார்.

மஞ்சுளா யுகேஷ்.துபாய்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...