மீண்டும் துவங்கிய மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் சேவை..!
23 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பாரம்பரிய மலை ரயில் அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணித்தும், மலை குகைகளுக்குள் புகுந்தும் செல்வதால் இயற்கை அழகினை கண்டுரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்து காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மலை ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. அத்துடன் சில இடங்களில் ரயில் தண்டவாளங்களின் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த சிறிய அளவிலான பாலங்களும் மழை நீரில் சேதம் அடைந்தன. இதனையடுத்து சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி கடந்த 23 நாட்களாக நடைபெற்று வந்தது.
அப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, இன்று (செப். 1) முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து குன்னூர் மலை ரயில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. கடந்த 23 நாட்களாக மலை ரயில் போக்குவரத்துக்காக காத்திருந்த சுற்றுலா பயணிகள் இன்று முதல் இந்த போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் மிகுந்த உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடனும் மலை ரயிலில் பயணித்தனர்.