வங்க கடலில் திடீர் மாற்றம்..!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் ஆவணி மாதம் ஆரம்பித்துள்ள நிலையில், பல பகுதிகளில் இப்போதே காற்று பலமாக வீசீ வருகிறது.. அத்துடன் நல்ல மழையும் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்கள், கொங்கு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.. வடமாநிலங்களிலும் பலத்த மழை கொட்டி வருகிறது.
ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பரவலாக கனமழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் அலர்ட் செய்திருக்கிறது.. அதிலும், ராஜஸ்தானில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ராஜஸ்தானின் தெற்கு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும், 28ம்தேதிக்கு பிறகு மழையின் தீவிரம் குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் என்றில்லாமல், கேரளா, தெற்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக தென்மாநில பகுதிகளின் மேல் வளி மண்டல காற்று சுழற்சி தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. எனவே, தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை நீடித்து காணப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
அதன்படி, இன்று முதல் 1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வரும் 31ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 29ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு, மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.. மீனவர்கள் இந்த பகுதிகளில் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என்று வானிலை மையம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இதனைடயே, தமிழகம், புதுச்சேரியில் இயல்பான அளவை விட, 71 சதவீதம் கூடுதலாக, இந்த ஆண்டில் தென் மேற்கு பருவ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிக அளவு மழை பெய்துஉள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பான அளவாக, 5 செ.மீ., மழை பெய்ய வேண்டிய நிலையில், 28 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, 438 சதவீதம் அதிகமாகும்..
சென்னையில் இயல்பான அளவான, 28 செ.மீ., மழையை விட, 44 செ.மீ., பெய்துள்ளது. இது, 56 சதவீதம் அதிகமாகும்.. விருதுநகரில் 167; திருப்பூரில் 155, தேனியில் 151, கரூரில் 121, ராணிப்பேட்டையில் 103 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.